Chapter 01

0Shares

‘கௌசல்யா சுப்ரபாதம்..’

டேப்பிகார்டரில் பாடிக் கொண்டிருக்கும் பாடல் வரிகளில் மனம் செலுத்தியவளாய் கரம் குவித்து விழிகள் கசிய பாரளந்த மகாவிஷ்ணுவை மனதில் அழைத்து வேண்டுதல்களைச் சொல்லிக் கொண்டிருந்த மைதிலி,

“விசாலாட்சி.. ஏய் விசாலாட்சி..” என்ற கத்தல் கேட்டுக் கண் திறந்தாள்.. பூஜை அறையிலிருந்து திரும்பி உள்ளே பார்த்தாள்..

“இதோ வந்திட்டேங்க..” என்று பதறியபடி அம்மா விசாலாட்சி ஓடி வருவது தெரிந்தது.. தனக்குள் சிரித்துக் கொண்டவள் மீண்டும் நாராயணனை தஞ்சம்புகுந்தாள்..

“ஏண்டி.. மனுசன் மாடாட்டம் கத்திக்கிட்டு இருக்கேன்.. இப்படி ஆடி அசைந்து திருவாரூர் தேர் போல வர்றியே.. உன் மனசில என்ன நினைச்சுக்கிட்டிருக்கே..?”

‘ஏன் பகவானே இந்த மனுசன் கிட்ட என்னை மாட்ட வைத்தேன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்..’ என்று மனதில் ஓடிய எண்ணங்களை மறைத்தவளாய்,

“அடுப்படியில் வேலையாய் இருந்தேங்க.. இப்பச் சொல்லுங்க.. எதுக்கு இப்படிக் கத்தினீங்க..” என்று கேட்டாள் விசாலாட்சி..

“கத்தறேனா..? ஏண்டி சொல்ல மாட்டே.. புருசன் கூப்பிட்டால் என்னன்னு உடனே வந்து கேட்கிற காலமெல்லாம் வள்ளுவன், வாசுகி காலத்தோட மலையேறிப் போச்சுடி.. இது கலிகாலம் அதான் நான் பேசினால் உனக்கு கத்தலாயிருக்கு..”

“அடடா.. குக்கர் விசில் வந்திருச்சு.. இறக்கி வைச்சுட்டு அடுப்பை அணைச்சிட்டு வந்தேங்க.. காஸ் விற்கும் விலையில் அடுப்பை வீணாய் எரிக்கலாமா..? அதுதான் வந்து விட்டேனில்ல.. என்னன்னு சொல்லுங்க..?”

அலுப்பாய் கூறினாள் விசாலாட்சி..

“ஏண்டி.. சொல்லாட்டி கோதண்டத்தில் போட்டு விடுவாயா..?”

‘ராமா..’ என்று மானசீகமாய் தலையில் அடித்துக் கொண்டாள் விசாலாட்சி..

“ஏங்க காலங்கார்த்தாலேயே அபசகுனமாய் பேசறீங்க..?”

“உன்னை மாதிரி ஒருத்தி பெண்டாட்டியா வாய்த்தால் எப்படிடீ சுப சகுனமாய் பேச வரும்..?”

‘நானா ஆசைப்பட்டேன்..’ என்று மீண்டும் மனதிற்குள் கேள்வி கேட்டவள் வெளியே, “சரி சரி.. எனக்கென்ன பேசத் தெரியும்..? நீங்கள் சொன்னால் சரிதான்.. நான் என்னவோ தெரியாமல் பேசிட்டேன்.. விட்டுத் தள்ளுங்க.. இப்போ எதுக்குக் கூப்பிட்டிங்கன்னு சொல்லுங்க..” என்றாள் தன்மையாய்…

வேறுவழி? வைத்தீஸ்வரன் பேச்சை ஆரம்பித்து விட்டால் அவராக மனது வைத்து நிறுத்தினால்தான் உண்டு.. வேறு யாராலும் நிறுத்த முடியாது.. ‘ஊம்’ போடாமல் நகரவும் முடியாது..

“காலையில் போன் அடித்ததே யாருடி பேசினது..?”

“நம்ம பெரிய பொண்ணு சாவித்திரி..”

“என்னத்துக்குப் போன் பண்ணினா..?”

“இது என்னங்க அர்த்தமில்லாத கேள்வி கேட்கறீங்க..? பிறந்த வீட்டுக்குப் போன் பண்ண நேரம் காலம் பார்க்கணுமா..? நல்லாயிருக்கு நீங்க கேள்வி கேட்கிற லட்சணம்..”

“லட்சணத்தைப் பத்தி நீ பேசாதே.. அதை நினைத்துப் பார்த்திருந்தால் உன் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டிருக்க மாட்டேன்..”

‘நானும் தப்பித்து இருப்பேன்’ என்று மனதிற்குள் நிறுத்திக் கொண்ட விசாலாட்சிக்கு ஆற்றாமையாய்  இருந்தது.. மனதில் நினைப்பதை கணவரைப் போல் அவள் சொல்லிவிட முடியுமா என்ன..? எனவே,

“உங்க தலைவிதி என்னைக் கல்யாணம் பண்ணிக்க வேண்டியதாப் போச்சு.. இப்ப அதுவா பிரச்சனை..? சாவித்திரி எதுக்குப் போன் பண்ணினான்னு சொல்லவா வேண்டாமா..? நான் சமையல் பண்ணப் போகணும். எனக்கு வேலையிருக்கு..” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறினாள்..

“அப்போ.. உனக்குத்தான் வேலையிருக்கு.. எனக்கு இல்லை..?”

“ஈஸ்வரா.. உங்களுக்கு ஏங்க புத்தி இப்படி குயுக்தி யாவே யோசிக்குது.. சரி.. நீங்க இப்போதைக்கு பேச்சை முடிக்க மாட்டீங்க.. நானே சொல்றேன்.. போன தீபாவளிக்கே நாம சரியா சீர் அனுப்பலியாம்.. இந்த தீபாவளிக்காவது ஒழுங்கா உங்க அப்பா வீட்டில் சீர் செய்வாங்களான்னு அவ மாமியார் குத்திக் காட்டறாங்களாம்.. ‘ஓ’ன்னு அழுதாள்…”

“வேற என்ன செய்வா..? நாமதான் பேரு வச்சிருக்கோமே.. ‘சாவித்திரி’ன்னு.. அடிக்கடி அழுது புலம்பினாத்தானே அந்தப் பேருக்கு மதிப்பு..?” 

“ஆமாங்க.. அவதான் பிறந்து மண்ணில் விழுந்ததுமே ‘இந்தப் பெயரை வையுங்க’ன்னு கேட்டா.. நல்லாத்தான் வந்திரும் வாயில்.. ‘நடிகையர் திலகம்’ சாவித்திரின்னா எனக்கு உயிர்.. அவ பேரைத்தான் வைப்பேன்னு பிடிவாதம் பிடிச்சு வச்சது நீங்க.. பேச வேணாம்ன்னு பார்க்கிறேன்..”

“பேச வேணாம்ன்னு நினைக்கும்போதே இவ்வளவு பேசுறயே.. இன்னும் பேசணும்னு நினைத்தால் எவ்வளவு பேசுவ..? புருசன்கிற பயம் கொஞ்சம் கூட இல்லாமப் போச்சு..”

‘புருசன்னா பயம் மட்டும்தான் இருக்கணுமா..? அன்பு இருக்கக் கூடாதா..?’ என்று இதையும் மனதிற்குள் நினைத்தவள்,

“உங்ககிட்ட பயப்படாமல் இந்த உலகத்தில் யாருகிட்ட பயப்படப் போறேங்க..” என்றாள் உண்மையாக..

அவள் பேச்சில் இருந்த எள்ளலைப் புரிந்து கொள்ளாத வைத்தீஸ்வரன்,

“ஏண்டி.. இந்த சாவித்திரி என்ன நேற்று இந்நேரம் கல்யாணம் பண்ணிப் போன மாதிரி சீர் செனத்தின்னு இன்னும் கறக்கிறா.. கல்யாணம் பண்ணிக்கொடுத்து ஆறு வருசமாச்சு.. இரண்டு பிள்ளைகள் பெற பிரசவம் பார்த்து அதற்கும் சீர்வரிசை செஞ்சு அனுப்பியாச்சு.. இன்னும் அவ மாமியார்காரி கறக்க நாம் என்ன கறவை மாடுகளா..? மாட்டுக்கே ஒரு ஸ்டேஜுக்கு மேல் பால் வற்றிப் போகும்.. மனுசப் பயல் என்ன பண்ணுவான்னு நினைப்பு வேணாம்..? எல்லாம் நீ பெத்த பெண் திலகத்தைச் சொல்லணும்.. இந்த மாப்பிள்ளையைப் போய் கட்டிக்கிட்டாளே..”

“அபாண்டமா பேசாதீங்க.. ஏதோ அவள் ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டது மாதிரியில்ல பேசுகிறீங்க.. ‘பத்து மாப்பிள்ளை பெண் பார்க்க வந்து வேண்டாம்ன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க.. இது பதினொன்னாவது மாப்பிள்ளை.. இந்த மாப்பிள்ளை உலக அதிசயமா பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொல்லியிருக்கார்.. ஒழுங்காய் உன் பெண்ணை சம்மதம்ன்னு தலையாட்டச் சொல்லு.. இல்லைன்னா நடக்கிறது வேறன்னு நீங்க மிரட்டி அவளை சம்மதிக்க வைச்சுட்டு.. இப்ப அவளைச் சொல்றீங்களா.. அப்பவே அவ மாட்டேன்னு கெஞ்சினாள்.. இரக்கப்பட்டிங்களா..? ‘எதிர்த்தா பேசுற…’ன்னு எகிறின்னீங்க… இப்ப அனுபவியுங்க..” ஆத்திரத்தில் மூச்சு இறைத்தது விசாலாட்சிக்கு..

“சரிடி.. நான்தான் கல்யாணம் பண்ணி வச்சேன்.. சும்மாவா கல்யாணம் பண்ணி வச்சேன்.. பணம், நகைன்னு என் கிராஜுவிட்டி பணம் பூராவும் செலவு பண்ணித்தானே கட்டி வைத்தேன்.. அதுக்கப்புறமும் சாகும்வரை நான் படியளக்கணும்னு எதிர்பார்த்தால் எப்படி..?”

“இவளா எதிர்பார்க்கிறாள்..? மாமியார் பிடுங்கினால் இவள் என்ன செய்வாள்..?”

“இவளுக்கு சாமர்த்தியம் பத்தாதுடி..”

“என் வயித்திலே வந்து பொறந்திருக்கே..! அப்படித்தான் இருக்கும்..”

“சரி இவதான் இப்படின்னா தல நாளையிலே பெத்தயே ஒரு தவப்புதல்வன்.. அவன் கதை இருக்கே.. இன்னைக்கு பூராவும் சொன்னாலும் தீராதுடி..”

“அவன் என்னங்க செய்தான்..?” ஏக்கத்துடன் சமையலறையைப் பார்த்தபடி கேட்டாள் விசாலாட்சி.. போட்டது போட்டபடி சமையல் பாதியில் கிடந்தது.. வைத்தீஸ்வரன் அவளை விடுவதாக இல்லை..

“ஒண்ணுமே செய்யலைனுதாண்டி சொல்றேன்..”

“இது ஆண்டவனுக்கே அடுக்காதுங்க.. அவன் ஒண்ணுமே செய்யலையா.. மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க.. சாவித்திரி கல்யாணத்துக்கு உங்க கிராஜுவிட்டி பணம் மட்டும் போதுமானதா இருந்துச்சா.. சும்மா இருக்காம மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கேட்டதை யெல்லாம் செய்யறோம்ன்னு ஜம்பமா வாக்குக் கொடுத்திங்க.. தேவையான பணத்தில் கால்வாசி கூட உங்களால் சமாளிக்க முடியலை.. முக்கால்வாசிச் செலவு என் மகன் தலையில் விழுந்தது.. இன்னும் அந்தக் கடனைக் கட்டியே ஓயறான் என் பிள்ளை.. மகன் ஒண்ணுமே செய்யலைன்னு நீங்க மனச்சாட்சி இல்லாமப் போறீங்க..”

“ஆமாடி.. அவன் எல்லாம் செஞ்சான் செஞ்சான்னு சொல்றயே.. கல்யாணம் செய்துகிட்டதை சொல்ல மாட்டேங்கற..?”

“ராமா.. ஏங்க நீங்க பேசறதை நாலு பேர் கேட்டா என்ன நினைப்பாங்க தெரியுமா..? நம்ம பிள்ளை தானா காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திட்டான்னு அசிங்கமா நினைப்பாங்க..”

“ராமான்னு ராமனைக் கூப்பிட்டுட்டு ஏண்டி ‘காதல் கருமாந்திரம்’ன்னு கண்ட கழிசடை வார்த்தைகளை யெல்லாம் சொல்றே.. அவனுக்கு நாமதான் பொண்ணு பாத்துக் கல்யாணம் பண்ணி வச்சோம்.. இல்லேங்கலை.. அதனால் ‘பொண்டாட்டி பின்னாடியே தனிக்குடித்தனம் போடா’ன்னா சொன்னோம்..?”

பூஜையறையில் விஷ்ணுவுடன் மானசீகமாய் பேச விடாமல் மைதிலியின் காதில் வந்து விழுந்தன இத்தனை வார்த்தைகளும், இனி வேண்ட முடியாது என்று உணர்ந்தவள் கடவுளைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டாள்..

லட்சம் லட்சமாய் கொட்டி மாப்பிள்ளையை விலைக்கு வாங்கினாலும் வாங்குவார்களே தவிர காதல் கல்யாணத்திற்கு அனுமதிக்க மாட்டார்கள்.. ஜாதி, மதம், அந்தஸ்து என்ற ஆயிரம் மேடு பள்ளங்கள் சொல்லப்பட்டாலும் உண்மையில் தானாய் தன் வாழ்க்கைத் துணையை பெண்ணோ, ஆணோ தேர்வு செய்யக்கூடாது என்ற பிடிவாதம் தான் மேலோங்கி நிற்கிறது.

மைதிலியின் மனக்கண்ணில் நந்தகுமாரன் வந்து நின்றான்.. ஒல்லியான அப்பா, அண்ணனிற்கு எதிர் மாறான ஆஜானுபாகுவான தோற்றம்.. மைதிலியின் பரம்பரையே சிவந்த நிறமுடையவர்கள்.. நந்தகுமாரனின் பரம்பரை கண்ணனின் கருமை நிறமுடையது.. மைதிலியின் பக்கமுள்ள ஆண் மகன்கள் சிறிய மீசை வைத்தவர்கள்.. நந்தகுமாரனின் பக்கமுள்ள ஆண் குலம் ‘கடா மீசை’ வைத்தது.. நந்தகுமாரனே பெரிய மீசை கொண்டவன்.. மீசைக்கார பரம்பரையான நந்தகுமார் மைதிலியின் மைவிழியில் சிக்கித் தவிப்பதை வைத்தீஸ்வரன் அறிந்தால் என்ன சொல்லுவார்..?

வெட்டிக் கொல்லுவார் என்பதில் ஐயம் சிறிதளவு கூட இல்லை மைதிலிக்கு… ஆனால் அதற்காக நந்தகுமாரனை மறக்க முடியவில்லை.. ‘அதற்குப் பதில் இறந்து விடலாமே..’ என்று எண்ணியவள் மௌனமாகக் கடவுளை சேவித்து பூஜையறையை விட்டு வெளியே வந்தாள்..

வைத்தீஸ்வரனுக்கும், விசாலாட்சிக்கும் இடையே மூண்டிருந்த பஞ்சாயத்து இன்னும் முற்றுப் பெற வில்லை..

“அவன் என்ன உள்ளூரிலயா தனிக்குடித்தனம் போனான்.. சென்னைக்கு மாற்றல் வந்தால் பெண்டாட்டி புள்ளையை விட்டு விட்டா போக முடியும்..?”

“அதுதானே..! தாய், தகப்பன், தங்கையை விட்டு விட்டுப் போகலாம்.. பொண்டாட்டி, புள்ளையை விட்டு விட்டுப் போக முடியுமா..? வந்திட்டாள் மகனுக்கு வக்காலத்து வாங்க..”

மைதிலியின் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி மத்திய சுங்கவரி இலாகாவில் வேலை பார்க்கிறான்.. தாய், தந்தை, தங்கைகள் எல்லோரிடமும் பாசமானவன்.. இத்துடன் மனைவி தனலட்சுமி மீதும் மகன் ஹரீஷின் மீதும் பாசம் வைத்திருந்ததுதான் வைத்தீஸ்வரனுக்கு மிகப் பெரிய குற்றமாகத் தோன்றியது.. சென்னைக்கு மாற்றலானபோது கிருஷ்ணமூர்த்தியை மட்டும் போகச் சொல்லிவிட்டு மருமகளையும், பேரனையும் திருச்சியில் தன் வீட்டிலேயே நிறுத்தப் பார்த்தார் வைத்தீஸ்வரன்.. தனலட்சுமியின் மௌனமான கண்ணீர்.. இரவானால் தகப்பன் மேல் காலைத் தூக்கிப் போட்டுத் தூங்கும் மகனின் பிரிவாற்றாமை.. இதைக் கனவில் கூட நினைத்துப் பார்க்க விரும்பாத கிருஷ்ணமூர்த்தி மனைவியையும், மகனையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்னைக்குக் குடிபோய் விட்டான்..

“என் மகன் என்ன தப்புப் பண்ணினான்..? நான் வக்காலத்து வாங்காமல் ஒதுங்கிப் போக..?”

“பெண்டாட்டி முந்தானையைப் பிடிச்சுகிட்டு போனது தப்பேயில்லையா..?”

‘ம்ஹூம்.. போகாமல் உங்களோடு இருந்திருந்தால் வாழ வந்த மருமகளுக்கு வாழ்வே வெறுத்துப் போயிருக்கும்..’ என்று தன் வழக்கமாய் மனதிற்குள் கூறிக் கொண்டே விசாலாட்சி பூஜையறையில் இருந்து வெளியே வந்த மகளைக் கண்டதும்,

“மைதிலி.. என்னம்மா.. கிளம்பிட்டியா..?” என்றபடி ‘தப்பித்தேன் பிழைத்தேன்..’ என்று சமையலறைக்குள் பாய்ந்தாள் விசாலாட்சி..

சமையலறைக்குள் தட்டில் இட்லியை எடுத்து வைத்துச் சாப்பிட ஆரம்பித்த மைதிலி.. “என்னம்மா ஒரு வழியா தப்பிச்சுட்டு வந்திட்டிங்க போல..” என்றாள்..

“ஆமாம்டி.. காலையில் பேச ஆரம்பித்தால் ராத்திரி பனிரெண்டு மணிக்குத் தான் நிறுத்துகிறார்.. எவ்வளவு நேரம் ‘ஊம்’ போட முடியும் சொல்லு..”

“பேசாமல் ஒரு ‘ஊம்’ போட்டு பதிவு பண்ணி டேப்ரிகார்டரை அப்பா பக்கத்தில் வைத்து விட்டால் அது பாட்டுக்கு ‘ஊம்’ போடும்.. அப்பாவும் உங்களை தொந்தரவு பண்ண மாட்டார்..” என்று கலகலவென்று சிரித்தாள் மைதிலி..

மகளின் சிரிப்பை ரசித்த விசாலாட்சி..

“என்னவோ போ மைதிலி.. உன் அழகுக்கும், குணத்துக்கும் நல்ல இடத்தில் மாப்பிள்ளை அமைந்து விட்டால்.. எனக்கு நிம்மதியா இருக்கும்..”

“ஏம்மா கவலைப்படறீங்க.. நானும் சாவித்திரியைப் போல் கழுத்தில் தாலி ஏறியவுடன் மறு வீடு வரக்கூட யோசிச்சுக்கிட்டு மாமியார் வீட்டில் செட்டிலாகலைன்னா.. இத்தனை கவலை..?”

கிருஷ்ணமூர்த்திக்கு நேர் இளையவளான சாவித்திரி, மைதிலிக்கு அக்கா.. திருமணமானவுடன் மறு வீட்டிற்கு மாப்பிள்ளையும் பொண்ணும் வந்தபோது வழக்கம் போல் வைத்தீஸ்வரன் வாயைத் திறக்க அன்றே ஊர் திரும்பி விட்ட சாவித்திரியின் கணவன் விநாயகமூர்த்தி அதன் பின்னால் மாமனார் வீடு வருவதையே தவிர்த்து விட்டான்.. கணவன் இல்லாமல் வரவிருப்பமில்லாத சாவித்திரி பிறந்த வீடே வருவதில்லை.. ஆனால் சீர்வரிசையை மட்டும் மறக்காமல் போனில் அழுது வாங்கி விடுவாள்..

“அதைச் சொல்லு.. உன் அப்பா மாதிரி மாமனார் அமைந்தால் மாப்பிள்ளை மறுவீடு வரவே பயப்படத்தான் செய்வார்..” என்று அலுத்துக் கொண்டாள் விசாலாட்சி..

‘என் நந்தகுமாரனைப் பார்த்தால் அப்பாதான் பயப்படுவார்.. அதுவும் என் நந்துவின் பெரிய மீசையைப் பார்த்தால் மொழு மொழுவென்ற முகத்தையுடைய அப்பா அலறப் போகிறார்..’ என்று எண்ணியவள் மனதிற்குள் அந்தக் காட்சியை கற்பனை செய்து பார்த்து ரசித்துச் சிரித்தாள்..

‘நந்து.. என் நந்தகுமாரா.. இதுதான் என் குடும்பம்.. காதல் என்றால் பிடிக்காத அப்பா.. அம்மா.. தன் குடும்பத்தை நேசிக்கும் அண்ணன்.. மாமியார் பெயரைச் சொல்லி பணம் கறக்கும் அக்கா.. இங்கேதான் நான் பிறந்து வளர்ந்திருக்கிறேன்.. உன் மைதிலியின் பிறந்த வீடு இதுதான்.. நீ பெண் கேட்டு வந்தால்.. தங்கத் தாம்பாளம் கொண்டு இங்கு வரவேற்க மாட்டார்கள்.. நீ தான் பிருத்விராஜன், சம்யுக்தையை தூக்கிப் போனது போல்.. என்னைக் கவர்ந்து செல்ல வேண்டும்.. கவர்ந்து செல்வாயா..? நீதான் என் உள்ளத்தையே கவர்ந்து சென்ற கள்வன் ஆயிற்றே..’

“மைதிலீ..” என்று விசாலாட்சி உலுக்க, அவள் தன்னிலைக்கு வந்து,

“என்னம்மா..?” என்றாள்..

“எவ்வளவு நேரமாய் கூப்பிடுகிறேன்..? எங்கேடி ஞாபகம்..? மதியத்திற்கு தக்காளி சாதம் போதுமா.. இல்லை  தயிர்சாதம் கொஞ்சம் வைத்து விடவா..?”

“தக்காளி சாதமே போதும் அம்மா..”

வாசலுக்கு வந்து செருப்பை மாட்டியவள் அங்கே நின்று கொண்டிருந்த வைத்தீஸ்வரனைப் பார்த்து வேறு வழியின்றி,

“வருகிறேன்ப்பா..” என்றபடி,

“ஆபிசுக்கு போற நேரத்தைப் பார்.. இந்த நேரத்துக்குப் போனால் விளங்கினது மாதிரிதான், பஸ்ஸுக்கு லேட்டாகுதுன்னு அறிவு வேண்டாம்..” என்று ஆரம்பித்த வைத்தீஸ்வரனின் குரல் காதில் விழுகாதது போல் அலுவலகத்திற்கு விரைந்தாள்..

0Shares

Reviews — Kadalin Pon Vethiyle / காதலின் பொன் வீதியிலே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link