Chapter 15
“டாட் இவர்தான் கிருஷ்ணன்.. கிருஷ்ணமூர்த்தி..” என்று அறிமுகப்படுத்தினான் வினய்.. அவனது தந்தை ரங்கநாதன் ஆறடி உயரத்தில் வினய்யின் உயரம் தன்னிடமிருந்து வந்தது என்பதை உணர்த்துகிறவராய் இந்தி சினிமாக்களில் வரும் பணக்கார அப்பாவைப் போல் இருந்தார்..
“வாங்க மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி.. நீங்கள் எங்களைப் பார்க்கணும்ன்னு சொன்னதால் நான் சூப்பர் மார்க்கெட்டிலிருந்து உடனே கிளம்பி வந்து விட்டேன்.. இது என் மனைவி ஜானகி.. உங்களுக்காக லேடிஸ் கிளப் மீட்டிங்கை கேன்சல் பண்ணிவிட்டு வந்திருக்கிறாள்.. வினய்யோட அம்மாவாச்சே.. மகன் கல்யாணத்தை சீக்கிரம் பார்த்துவிட வேண்டுமென்று என்னைவிட இவளுக்குத்தான் தவிப்பு அதிகம்..”
ஜானகி அழகாய் கவர்ச்சியாய் வினய்யின் அழகும், கவர்ச்சியும் கலந்த வனப்பு தன்னிடமிருந்து வந்தது என்பதை தன் தோற்றத்திலிருந்து உணர்த்தினாள்.. புன்சிரிப்புடன் கை குவித்து வணக்கம் சொன்னாள்.. பதிலுக்கு வணக்கம் சொன்ன கிருஷ்ணமூர்த்தி,
“என் அப்பா ரிட்டயர்டு..” என்று ஆரம்பித்தான்..
“வெயிட் மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி.. நீங்கள் சொல்லும் ஸோ அன்ட் ஸோ விவரங்கள் அனைத்தும் எங்களுக்குத் தெரியும்.. எங்கள் மகனுக்கு தன் மனம் விரும்பிய பெண்ணை மணக்க சம்மதம் தெரிவித்திருந்தோம்..” என்று ரங்கநாதன் கூற ஜானகி தொடர்ந்தாள்..
“இருந்தாலும் மனதுக்குள் ஒரு சிறு பயம் இருந்தது.. வினய்யின் மனைவியாக வரப் போகிறவள் இந்தக் குடும்பத்திற்கு ஏற்றவளாக அதே சமயம் வினய்யை அவன் பணத்துக்காக விரும்புகிறவளாக இருக்கக் கூடாதுன்னு நினைத்துப் பயந்தோம்..”
இப்போது ரங்கநாதன் பேசினார்..
“வினய் உங்களைத் தொடர்பு கொண்டு பெண் கேட்டதும் நீங்கள் சொன்ன முதல் தகவல் உங்களது குடும்ப நிலைமை.. அடுத்து வினய் அதைப் பற்றி அக்கறை காட்டாமலிருந்தாலும்.. குடும்பப் பெரியவர் களிடம்.. பெற்றவர்களிடம் சம்மதம் கேட்கச் சொன்னீர் களாமே.. அப்போதே எங்களுக்கு உங்கள் குடும்பத்தை மிகவும் பிடித்து விட்டது.. வினய் சொன்னதிலும் திருப்தியில்லாமல் எங்களை நேரில் பார்த்து சம்மதம் கேட்டபின்தான் முடிவு சொல்வேன் என்று கிளம்பி வந்து இருக்கிறீர்களே.. பெற்றவர்களுக்கு இதைவிட மன அமைதி தரும் செயல் வேறு எதுவாக இருக்க முடியும்..?”
“உங்கள் தங்கையும் உங்களைப் போல்தானே பெரியவர்களை மதிக்கும் குணமுடையவளாக இருப்பாள்.. ஸோ.. எங்களுக்கு இந்தத் திருமணத்தில் பரிபூரண சம்மதம் தம்பி.. அத்தோடு கூடுதல் சந்தோசமாக நீங்கள் எங்கள் இனம் என்று வேறு ஆகி விட்டீர்கள்..” என்றாள் ஜானகி பெருமையுடன்..
“வினய் ஜாதி மதம் பார்ப்பதில்லை.. ஆனால் நானும், ஜானகியும் கொஞ்சம் பார்ப்போம்.. ஜானகி என் பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்த நம் இனப் பெண்தான்.. வினய்யின் மனதுக்குப் பிடித்தவள் நம் இனப்பெண் என்பதில் எங்களுக்க கொள்ளை மகிழ்ச்சி..” என்றார் ரங்கநாதன்..
வேலையாள் காபி, சிற்றுண்டி வகைகளைக் கொண்டுவர கிருஷ்ணமூர்த்தியை வாய் நிறைய உபசரித்தனர்.. அந்தப் பணக்கார தம்பதியினர்.. வினய் ஈமெயிலில் வந்த மைதிலியின் போட்டோவை இரண்டு, மூன்று பிரதி எடுத்துக் கொண்டு வந்திருந்தான்.. ரங்கநாதனும், ஜானகியும் அதை வாங்கிப் பார்த்தனர்..
“பெண் குடும்பப் பாங்காய், குல விளக்குப் போல் இருக்கிறாள்..” என்றாள் ஜானகி..
“புத்திசாலிப் பெண்ணாய், அழகாய் தெரிகிறாள்..” என்றார் ரங்கநாதன்..
பின்னர் அவர்கள் மைதிலியின் படிப்பு, வேலை, வைத்தீஸ்வரனின் குடும்பம் பற்றிப் பேசினர்.. பேச்சின் போக்கில் ஏதோ ஒரு சுற்றில் அவர்கள் சொந்தம் என்று தெரிய வர வினய்யின் பெற்றோர் மகிழ்ந்தே போயினர்..
“எல்லாம் கூடி வரும்போது தானே நடக்கும்ன்னு சும்மாவா சொன்னாங்க..? வினய்யின் கல்யாணம் தள்ளிப் போனது நன்மைக்குத்தான் போலிருக்கே..” என்றார் ரங்கநாதன், ஜானகியைப் பார்த்து..
அவள் ஆமோதிப்பாய் தலை அசைத்தாள்..
“அப்போ நான் கிளம்புகிறேன் சார்.. அப்பாவிடம் இன்றைக்கே பேசி விடுகிறேன்.. நீங்கள் ஒரு நல்ல நாள் பார்த்துப் பெண் பார்க்க வந்து விடுங்கள்..”
“நாளைக்கு நல்ல நாள் தான் தம்பி.. நாளையே கிளம்பி விடலாமே..” என்றாள் ஜானகி..
“நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.. நான் அப்பாவிடம் தகவல் சொல்லிவிட்டு இன்று இரவே ஊர் போய் விடுகிறேன்..”
“எதற்காக நீங்கள் தனியாக நாங்கள் தனியாகப் போக வேண்டும் கிருஷ்ணமூர்த்தி.. வீட்டில் ஒன்றிற்கு நான்கு கார்கள் சும்மாதானே நிற்கிது.. ஒரு காரை அனுப்புகிறோம்.. உங்கள் குடும்பத்தோடு கிளம்பி எங்களோடே வந்து விடுங்கள்.. அப்பாவிடம் போனில் பேசிக் கொள்ளலாம்..” என்றார் ரங்கநாதன்..
“வெல் செட் டாடி.. கிருஷ்.. நீங்களும் எங்களுடனே வந்து விடுங்கள்.. சேர்ந்து போகலாம்.. ஐ லைக் யு வெரிமச்..” என்றான் வினய், கிருஷ்ணனையும் சுருக்கி ‘கிருஷ்’ என்று விளித்தவனாய்..
கிருஷ்ணமூர்த்தியோ தான் காண்பது கனவா இல்லை நனவா என்ற சந்தேகத்தில் இன்னும் இருந்தான்.. பூம்பூம் மாடு மாதிரி அவர்கள் சொன்னதற்கெல்லாம் தலை ஆட்டினான்… அதே மயக்கத்தோடு வீடு திரும்பியவன் உடனே தந்தைக்குப் போன் செய்தான்..
“ஹலோ.. யாரு பேசறது..” என்றார் போனை எடுத்த வைத்தீஸ்வரன்..
“அப்பா.. நான் கிருஷ்ணமூர்த்தி பேசுகிறேன்..”
“எந்த கிருஷ்ணமூர்த்திப்பா.. வட்டிக்கடை செட்டி மகனா.. பெண் பிள்ளைகளைப் பெற்றவன் வட்டி கட்டித்தானே ஆகணும்.. கொஞ்சம் தவணை கொடுப்பா.. இரண்டு நாளில் கட்டிடறேன்..”
கிருஷ்ணமூர்த்தி எரிச்சல் பட்டான்..
“அப்பா.. இந்த நடிக்கிற வேலையை விட்டு விட்டு நான் சொல்கிறதை கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்க.. பெரிய வட்டி கட்டுகிறாராம்.. யாருகிட்ட விளையாட்டு காட்டறீங்க.. பெண்ணைப் பெற்றால் தான் கடன் கட்டணுமா.. கூடப் பிறந்தாலும் கடன் கட்டணும்.. நானும் கடன் கட்டிக்கிட்டுத்தான் இருக்கிறேன்..”
“என்னத்தடா கட்டறே.. அதையே இன்னும் எத்தனை காலம் சொல்லுவ..? இன்னும் ஒரு தங்கை.. இருக்கா.. அவளையும் கரையேத்தனும்.. அந்தப் பொறுப்பை தட்டிக் கழிச்சிட்டு பொண்டாட்டி, பிள்ளை முக்கியம்ன்னு தனிக்குடித்தனம் போனவன்தானேடா நீ..? பெரிசா பேச வந்திட்டான்..”
“பெண்டாட்டி பிள்ளையோட திருச்சியிலயா தனிக்குடித்தனம் போய்டேன்..? சென்னைக்கு டிரான்ஸ்பர் பண்ணினால் நான் என்ன பண்ணுவேன்..?”
“இதோ பார்.. உன்கிட்ட நான் விளக்கம் கேட்டேனா..? இப்ப எதுக்கு போன் பண்ணின.. அதைச் சொல்லு முதலில்..”
“எங்கே.. என்னைச் சொல்ல நீங்கள் விட்டால் தானே..”
“விடாமல் உன்னை இறுக்கிப் பிடித்தா வைத்திருக்கிறேன்.. அதுதான் எப்படியோ போன்னு தனிக்குடித்தனத்திற்கு விட்டு விட்டேனே..”
“அடடா..” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.. மகன் பேசுகிறான் என்றதும் ஆவலாய் கணவனின் அருகே வந்து நின்ற விசாலாட்சி..
“உங்க புத்தி உங்களை விட்டு எங்கே போகும்..? அவனே போனில் பேசிக்கிட்டு இருக்கான்.. என்னவோ நேரில் பேசுகிற மாதிரி வம்புக்கு இழுக்கறீங்களே.. போன்பில் ஏறாதா..? ஒருத்தர் வாய் கொடுத்திரக் கூடாதே உங்ககிட்ட.. போனை இங்க கொடுங்க..” என்று போனைப் பிடுங்கியவள்..
“நீ சொல்லுடா..” என்றாள் மகனிடம்..
“ஏம்மா அப்பா இப்படி இருக்கிறார்..?”
“அதை இப்ப வந்து கேளு.. என்னமோ புதிதாய் இன்னைக்கு மட்டும் இப்படி இருக்கிறாப்புல.. நீ பிறந்ததிலிருந்து இப்படித்தானேடா இருக்கிறார்..?”
“மாறவே மாட்டாரா..?”
“இப்ப அதுவாடா பிரச்னை..? ஏண்டா நீயும் அப்பாவுக்குத் தப்பாத பிள்ளையாய் இருக்கிறாய்..? விசயத்துக்கு வாடான்னால் ‘அ’வுக்கு அடுத்து ‘ஆ’ ஏன் வருகிறதுன்னு கேட்கிறான்.. அது அப்படித்தாண்டா இருக்கும்.. மாறவே மாறாது..”
“சரி விடுங்கம்மா.. நம்ம மைதிலிக்கு நல்ல இடத்திலிருந்து வரன் வந்திருக்கு.. மாப்பிள்ளை வீட்டாரை நாளைக்குப் பெண் பார்க்க அழைச்சிட்டு வரேன்..”
விசாலாட்சிக்கு மகிழ்ச்சி பொங்கியது..
“என்னப்பா சொல்றே.. திடீர்ன்னு நல்ல செய்தி வந்திருக்கே பெருமாளே..! நீ கண் திறந்திட்டயா..” என்று அவள் நாத்தழுதழுக்க கூற,
“கடவுள் கண் திறந்திட்டாரா.. என்னடி சொல்ற.. இங்கே போனைக் கொடு..” என்று வாங்கிய வைத்தீஸ்வரன்..
“ஏண்டா பெருமாள் கண் திறந்த செய்தியை நான் கேட்கக் கூடாதா..?” என்றார்..
“நீங்கதானே முக்கியமாய் கேட்கணும்.. அப்பா.. மைதிலியை பெரிய இடத்திலிருந்து பெண் கேட்கிறாங்க..”
“ம்ம்.. மாப்பிள்ளை என்ன வேலை பார்க்கிறார்..?”
“ஐநூறு பேருக்கு அவர் வேலை கொடுத்திருக்கிறார்.”
“என்னடா சொல்கிற..”
“அப்பா.. அவங்களுக்குத் தேயிலை எஸ்டேட், சூப்பர் மார்க்கெட்டுன்னு குடும்ப சொத்து நிறைய இருக்கு.. மாப்பிள்ளை வெளிநாட்டில் படிச்சவர்.. சென்னையில் பெரிய எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு சொந்தக்காரர்..”
“என்னடா.. என்னவோ சினிமாக் கதை மாதிரி இருக்கு.. அவங்க எப்படிடா நம்ம வீட்டில் பெண் எடுப்பாங்க..?”
“எனக்கும் அதே சந்தேகம்தான்ப்பா.. மாப்பிள்ளை மைதிலியின் போட்டோவைப் பார்த்ததும் ஆசைப்பட்டு பெண் கேட்டார்.. நான் அவங்க அப்பாம்மா கிட்ட பேசிட்டுத்தான் முடிவு சொல்வேன்னு அவங்களையும் போய் பார்த்து விட்டேன்.. அவங்களுக்கு இந்தக் கல்யாணத்தில் ரொம்ப ஆர்வம்ப்பா..”
“அவங்க என்ன ஜாதின்னு விசாரிச்சயா.. ஏன் சொல்றேன்னா அவங்க எவ்வளவு பெரிய பணக்காரங்களா இருந்தாலும் நம்ம ஜாதியா இருக்கணும்.. இல்லாவிட்டால் முடியாதுன்னு சொல்லிவிடு..”
“ஏன்ப்பா.. நான் உங்கள் மகன்.. அதை விசாரிக்காம இருப்பேனா..? மாப்பிள்ளையோட அப்பாவுக்கும், அம்மாவுக்கும் நாம் அவங்க இனம்கிறதில் ரொம்ப சந்தோசம்.. அப்புறம் சொல்ல மறந்து விட்டேனே.. அவங்க நம்மளுக்கு சுத்தி வளைச்சு சொந்தமா வர்றாங்கப்பா..”
“ஏண்டா வாரதும் வர்றாங்க.. நேரே வர வேண்டியது தானே.. ஏன் சுத்தி வளைச்சுச் சொந்தமா வர்றாங்க..”
“அதுதானே பார்த்தேன்.. என்னடா என்னைப் பெற்ற தகப்பனா இவ்வளவு அருமையாய், பொறுமையாய், பொறுப்பாய் பேசுகிறார்ன்னு ஆச்சரியமாக இருந்தது.. ஆரம்பிச்சுட்டீங்களா..”
“ஏண்டா மனுசன் ஒரு சந்தேகத்தைக் கேட்டால் பதில் சொல்ல முடிஞ்சா சொல்லு.. அதை விட்டு விட்டுக் குறை ஏன் சொல்றே.. அவங்க எந்த வழிச் சொந்தம்ன்னு சொன்னே..?”
“எங்கே சொல்ல விட்டீங்க..?”
“நான் என்ன உன் வாயையா பொத்தினேன்..? விசயத்தை சொல்லுடா..”
“உங்க சித்தப்பா மகன் யாரோ டெல்லியில் இருக்கிறார்ன்னு சொல்வீங்கள்ல..”
“ஆமாம்..”
“அவரோட ஒண்ணுவிட்ட அக்காவோட பேத்தியை மாப்பிள்ளையோட பாட்டியின் பெரியப்பாவோட பேத்தியின் பேரனுக்கு கல்யாணம் முடிச்ச வகையில் அவங்க நம்ம சொந்தமாம்..”
வைத்தீஸ்வரன் திகைத்தார்.. அருகில் நின்று கொண்டு ஒட்டுக் கேட்டுக் கொண்டு இருந்த விசாலாட்சியைப் பார்க்க, அவள் முகமெல்லாம் மலர,
“ஆமாங்க.. மாப்பிள்ளையோட அப்பா எனக்கு அண்ணன் முறையாகிறார்..” என்றாள் மகா சந்தோசமாய்..
வைத்தீஸ்வரன் குழப்பமாக,
“எப்படிடீ இப்படி ஒரு முடிவுக்கு வந்தே..” என்றார்..
“உங்களுக்குத்தான் ஒரு மண்ணும் புரியலை.. எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் சரியாத்தான் வருது.. நீ சொல்லுடா கிருஷ்ணா.. நாளைக்கு எப்போது வர்றீங்க..”
அடுத்து தாயும் மகனும் மறுநாளைய ஏற்பாட்டைப் பற்றி உற்சாகமாய் பேசி முடித்தனர்.. சந்தோசமாய் போனை வைத்தவள்,
“நாளைக்குக் காலையில் கிளம்பி சாயந்திரம் வர்றாங்களாம்.. நம்ம கிருஷ்ணாவுக்கு மட்டும் தனிக் கார் கொடுத்து கூட்டிக்கிட்டு வர்றாங்களாம்..” என்று கணவனிடம் கூறினாள்..
மனைவி சொல்வதை கவனிக்காமல் வைத்தீஸ்வரன் விரலால் காற்றில் கணக்குப் போடுவதும் நெற்றிப் பொட்டில் தட்டிக் கொள்வதுமாக இருந்தார்.. விசாலாட்சி கணவனை விசித்திரமாகப் பார்த்தாள்..
‘இந்த மனிதனுக்கு என்ன ஆச்சு..?’ என்று வெகுண்டவளாய் அவர் முதுகில் ஒன்று போட்டாள்..
“ஏங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க..?”
“அது எப்படிடீ அவ்வளவு கரெக்டா அந்த மனிதர் உன் அண்ணன் முறையாகணும்னு சொல்கிறாய்..? நான் யோசிச்சு யோசிச்சுப் பார்க்கிறேன் எனக்கு ஒண்ணும் புரியவே மாட்டேங்குது..”
“அது அப்படித்தான்.. முதலில் எழுந்து சாப்பிட வாங்க.. உங்க பொண்ணு அவங்க ஆபிசர் வீட்டுத் திருவிழாவுக்கு ஆபிஸே வேன் பிடிச்சுப் போறாங்க, நானும் போயிட்டு வரேன்னு போனாள்.. இன்னும் காணவில்லை.. நாளைக்கு அவளை ஆபீசிலிருந்து சீக்கிரம் வீட்டுக்கு வரச் சொல்லணும்..”
“வீட்டு வாசலில் வந்து கூப்பிட்டுப் போனாங்க.. திரும்பவும் வீட்டில் வந்து விட்டு விட்டுத்தான் போவாங்க.. சொல்லித்தானே கூப்பிட்டுப் போனாங்க.. நீ வா.. வந்து சாப்பாட்டைப் போடு..”
கணவனும், மனைவியும் தங்கள் வாழ்நாளில் முதன் முறையாக இணக்கமாகப் பேசிக் கொண்டே சாப்பிட அதே நேரத்தில் மைதிலி தன் வருங்கால புகுந்த வீடு என்ற நினைவுடன் வேம்பூரில் நந்தகுமாரனின் வீட்டில் சோலையம்மாளின் அருகே அமர்ந்து அவளுடன் பேசிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்..
Reviews — Kadalin Pon Vethiyle / காதலின் பொன் வீதியிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.