Chapter 23
அது எப்படி.. ஒரே நாளில் ஒரு மனிதன் முற்றிலுமாக திருந்தி நல்லவனாக முடியும்..? அதுவும்.. அந்த ஒருநாள் கூட முழுமையாகக் கழியவில்லையே…
மாளவிகாவின் வீடே பிரமிப்பில் ஆழ்ந்திருந்தது.. கங்காதரன் பூமிகாவைத் தாங்காத குறையாக கையோடு அழைத்துக் கொண்டு கிளம்பிப் போய்விட்டான்..
சிதம்பரம்தான் தயக்கத்தோடு அவனை தடுத்து நிறுத்தி…
“மாப்பிள்ளை.. இந்த வீடு..” என்று மென்று விழுங்கி விட்டு அஸ்வினின் உக்கிரப் பார்வைக்கு ஆளானாள்…
“இது உங்க வீடு மாமா.. எனக்கும் இதுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை..”, கங்காதரன் அலறினான்..
‘எதுக்காக மனுசன் வீட்டைப் பத்திப் பேசினா.. பேயைப் பத்திப் பேசினதப் போல இப்படி அலறிவைக் கிறான்..’ சிதம்பரத்துக்கு ஒரு மண்ணும் புரியவில்லை..
“அதெப்படி மாப்பிள்ளை.. இது உங்க மாமனார் வீடு..”
“அதைத்தான் நானும் சொல்றேன் மாமா..”
“நீங்க எப்பவும் போல வந்து போக இருக்கனும்..”
“கட்டாயம் மாமா.. முதல்ல நீங்க கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்துட்டு.. அதுக்கப்புறமா வந்து போறேன்..”
“அதெல்லாம் வேணாம் மாப்பிள்ளை..”
“நீங்க அப்படிச் சொல்லக் கூடாது மாமா.. நான் கொடுப்பேன்.. நீங்க வாங்கிக்கிட்டுத்தான் ஆகனும்..”
இவன் எதைக் கொடுப்பான் என்ற யோசனையுடன் பூமிகாவைப் பார்த்த சிதம்பரம்.. அவளின் தலைக் கட்டைக் கண்டு அரண்டு போனார்..
‘மகளை அடிக்கிறது பத்தாதுன்னு.. அவளப் பெத்த அப்பனையும் அடிக்கக் கிளம்பிட்டானோ..’
“ஐயோ.. மாப்பிள்ளை.. நீங்க கொடுத்தா நான் தாங்க மாட்டேன்..”
“அதுக்காக கொடுக்க வேண்டியதை நான் கொடுக்காம இருக்க முடியுமா மாமா…?”
‘விட மாட்டேங்கிறானே..’ சிதம்பரத்திற்கு வியர்த்தது..
“நீங்க கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கலைன்னா நான் நிம்மதியா தூங்க முடியாது மாமா..”
‘அப்பாடி.. இவன் பணத்தைத்தான் சொல்றான்..’ நிம்மதியாக மூச்சு விட்டார் சிதம்பரம்..
ஒருவழியாக.. பெண்டாட்டி பிள்ளைகளுடன் கங்காதரன் போய்விட.. அந்த வீட்டில் புயலுக்குப் பின் நிலவும் அமைதி நிலவியது..
“நம்பவே முடியலைடி மதுரா..” சிதம்பரம் வாய்திறந்த போது…
“அந்த ஆளே.. எதுவும் வேணாம்ன்னு அக்கா காலில விழுந்து கூப்பிட்டுக்கிட்டுப் போறான்.. அவனை நிப்பாட்டி.. இந்த வீடுன்னு இழுவை இழுக்கறிங்களே.. அவன் மறந்தாலும் நீங்க இந்த வீட்டை எழுதிவாங்காம விடாதேடான்னு அவனுக்கு நினைவு படுத்துவீங்க போல இருக்கே..”, என்று பாய்ந்தான் அஸ்வின்…
“யாருடா இவன்..? அவன் வீட்டைப் பத்தின நினைப்போட இருந்தா.. அதை மறந்திருன்னு.. கட் அன்ட் ரைட்டா பேசி முடிச்சிரலாம்ன்னுதான் அந்தப் பேச்சை எடுத்தேன்..”
“கட் அன்ட் ரைட்டா..? நீங்க பேசுவீங்க..? ம்ஹீம்.. நீங்க பேசின லட்சணத்தைத்தான் நாங்க பார்த்தோமே..”
“விடுடா.. மனுசனுக்கு நாக்கு ஸ்லிப் ஆகறது சகஜம்தானே…”
“அதுசரிப்பா.. உங்க மருமகன் அரண்டு போய் வந்து நின்னதைப் பாத்தா யாரோ அவனை வாங்கு வாங்குன்னு வாங்கி அனுப்பினதைப் போலவே இருக்கே.. அது என்னவா இருக்கும்..?”
“அதானே.. எனக்கும் அதுதான் புரிய மாட்டேங்குது..”
“ஏண்டி மதுரா.. உனக்கு ஏதாவது புரியுதா..?”
“உங்க ரெண்டு பேருக்குமே புரியலைங்கிறப்போ எனக்கு மட்டும் எங்கேயிருந்து புரியுமாம்..?”
அதைப் புரிந்தும்.. தெரிந்தும் வைத்திருந்த மாளவிகாவை விட்டுவிட்டு அவர்களுக்குள்.. அவர்கள் பேசிக் கொண்டார்கள்…
மாளவிகா மௌனப் புன்னகையுடன் நகர்ந்தாள்.. அறைக் கதவைத் திறந்து கட்டிலில் படுத்த போது அவன் முகம் மனதில் வந்தது…
‘தேங்க்ஸ்..’ மானசீகமாக அவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தபோது.. போன் மணியடித்தது.. எடுத்துப் பார்த்தாள்… அறியாத நம்பர் என்று போன் அறிவுறுத்தியது..
‘யாரா இருக்கும்..?’ போனை காதுக்கு கொடுத்தாள்..
“ஹலோ..”
“என்ன ஆச்சு..? உன் அக்கா புருசன் வந்து உன் அக்காவை கூப்பிட்டுக்கிட்டுப் போயிட்டான் போல இருக்கு..?” என்று போனில் கேட்டான் ரமணன்..
“நீங்களா..?” மாளவிகா மலர்ந்து போனாள்..
“நானேதான்..”
“என் செல் நம்பர் உங்களுக்கு எப்படித் தெரிஞ்சது..?”
இதைக் கேட்கும் போதே.. இவனுக்குத் தெரியாதது எது இருக்கப் போகிறது என்ற நினைவில் உதட்டைக் கடித்துக் கொண்டாள் மாளவிகா..
அவன் சிரித்தான்..
“எனக்குத் தெரியாம இருக்குமா..?”
“இப்பத்தான் மனசுக்குள் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு இருந்தேன்..”
“அதை போனில் சொல்லட்டுமேன்னு தான் போன் பண்ணினேன்.. இதான் என்னோட நம்பர்.. என்கிட்ட ஏதாவது பேசனும்னு தோணினா இந்த நம்பருக்கு கூப்பிடு..”
“ம்ம்ம்..”
“வீட்டில் எல்லோரும் சந்தோசமா இருக்காங்களா..?”
“ரொம்ப சந்தோசமா இருக்காங்க..”
அவன் சிறிது நேரம் பேசிவிட்டு போனை அணைத்தான்.. மாளவிகாவிற்குள் உற்சாக ஊற்றெடுத்தது…
மிகவும் சந்தோசமாக.. ‘லாலா..’ என்று பாடியபடி அறையை விட்டு வெளியே வந்தவளின் பாட்டு வாய்க்குள்ளேயே புதைந்து போனது…
அங்கே ஹாலில் கால்மேல் கால் போட்டு தோரணையாக அமர்ந்திருந்தான் கார்த்திக்..
“கேட்டியா மாளவிகா.. பூமிகாவோட புருசனைக் கண்டிச்சு அனுப்பி வைச்சது கார்த்திக்தானாம்..”, என்று வாயெல்லாம் பல்லாகச் சொன்னார் சிதம்பரம்…
“என்னது..?” மாளவிகாவுக்கு தூக்கிவாரிப் போட்டது..
‘இதென்ன புதுக் கதை..?’
“ஆமாம்மா.. கார்த்திக் வந்தப்போ அஸ்வின் ஜோக்கடிச்சுக்கிட்டு இருந்தானா.. நாங்க அதைக் கேட்டு சிரிச்சுக்கிட்டு இருந்தோமா.. என்ன எல்லோரும் சந்தோசமா இருக்கீங்க போல இருக்கேன்னு கார்த்திக் கேட்டாரு.. நாங்க விசயத்தைச் சொன்னோம்.. பூமிகா ஹஸ்பெண்டை யாரோ அரட்டி வைச்சிருக்காங்க.. அது யாருன்னுதான் தெரியலைன்னு அஸ்வின் சொன்னான்.. அப்பத்தான் கார்த்திக் அவர்தான் கூப்பிட்டு அரட்டி வைச்சதா சொன்னாரு..”
‘அதானே பார்த்தேன்.. இவனாவது.. பூமிகாவோட புருசனை கண்டிச்சு வைக்கிறதாவது.. இன்னும் கொஞ்சம் படுத்தி எடுன்னு சொல்லியில்ல கொடுப்பான்.. வீட்டுக்குள்ள வந்து இவங்க வாயிலேயே விசயத்தைக் கறந்துட்டு.. அதைத் தான்தான் செய்தேன்னு பொய் சொல்றானே.. இவனையெல்லாம் என்னன்னு சொல்றது..?’
கார்த்திக்கை இகழ்ச்சியாகப் பார்த்தாள் மாளவிகா.. ஆண்மை ததும்பும் தோற்றத்துடன் நிமிர்ந்து நிற்கும் ரமணன் அவள் மனதில் வந்தான்..
‘அவனெங்கே.. இவனெங்கே..’
அவளின் பார்வையில் தெரிந்த இகழ்ச்சியில் கார்த்திக்கின் முகம் சுருங்கி விட்டது…
Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.