Chapter 24

0Shares

‘என்ன இப்படிப் பாக்கிறா..’ கார்த்திக் யோசனையானான்..

அவனின் வசதியிலும்.. பதவியிலும் மயங்காத மாளவிகாவின் மீது அவனுக்குள் கோபம் துளிர்த்தது…

‘பெரிய இவளைப் போல அலட்டிக்கிறா.. இந்த ஓட்டைவீட்டில பிறந்ததுக்கே இந்த அலட்டல்ன்னா.. இன்னும் வசதியான வீட்டில் பிறந்திருந்தான்னா இவளைக் கையில பிடிக்கவே முடியாது…’

“என்ன மாளவிகா.. காலேஜீக்குப் போகலையா…?” எரிச்சலை காட்டிக் கொள்ளாமல் அமர்த்தலாகக் கேட்டான் கார்த்திக்…

“அவளுக்குத்தான் படிப்பு முடிஞ்சிருச்சே..” வழக்கம் போல காபியுடன் வந்த மதுரா சொன்னாள்…

“அப்படியா..? ரிசல்ட் வந்ததும் சொல்லு.. எனக்குத் தெரிஞ்ச கம்பெனியில வேலைவாங்கித் தரேன்..” அலட்டலாகச் சொன்னான் கார்த்திக்…

“நீங்க வேற அத்தான்.. ஒரு வருசம் போனா.. அவளே பத்து பேருக்கு வேலை வாங்கித் தந்துருவா.. அம்மணி.. படிக்கிறப்பவே கேம்பஸ் இன்டர்வியூவில செலக்ட் ஆகிட்டாங்கள்ல.. ஹைடெக்.. இன்டர் நேசனல் கம்பெனி.. அடுத்த வாரமே வேலையில ஜாயின் பண்ணப் போறாங்க.. அதுக்கடுத்த மாசம் கனடாதான்…”

அஸ்வின் “ஸ்ஸ்ஸ்..” என்ற சப்தத்துடன் வலது கையை விமானம் பறப்பதைப் போல அசைத்துக் காட்டினான்..

அப்படியா என்றுகூட கார்த்திக்கினால் கேட்க முடியவில்லை.. அவனுக்கு முகம் விழுந்து விட்டது.. சமாளித்துக் கொண்டவனாக..

“ஆல் தி பெஸ்ட்..” என்று சொன்னான்..

மாளவிகா பதில் சொல்லாமல் லேசாக தலையை மட்டும் அசைத்தாள்.. கார்த்திக் பல்லைக் கடித்தான்..

‘சும்மாவே இவளைப் பிடிக்க முடியாது.. இதில மல்ட்டி இன்டர் நேசனல் கம்பெனியில வேலையா..?’

பொதுவாக பேசிக் கொண்டிருந்தவன் கிளம்பின பாடாக இல்லை.. கொஞ்ச நேரத்துக்கு மேல் அஸ்வினால் பொறுமை காக்க முடியவில்லை.. அவன் ரிமோட்டை கைப்பற்றி டிவியில் ஆழ்ந்து விட்டான்.. சமையலறையில் ஏதோ தீய்வதைப் போன்ற வாசனையை உணர்ந்த மதுரா சமையலறைக்கு விரைந்து விட்டாள்.. சிதம்பரத்திற்கோ செல்போன் வந்து விட்டது.. மாளவிகா உன்னையெல்லாம் கண்டு கொள்வேனா 

என்று அஸ்வினுடன் பேசியபடி டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.. அந்த வீட்டில் தன்னை ஆறாவது விரலாக உணர்ந்தான் கார்த்திக்..

“அப்ப நான் கிளம்பறேன் மாமா..” எழுந்து கொண்டான்..

ஒருழியாய் கிளம்பிட்டானே என்ற சந்தோசப் புன்கையுடன் வாசல் பக்கமாக போயிருந்த சிதம்பரத்தை..

“அப்பா… அத்தான் கிளம்பறாராம்..”, என்று அழைத்தபடி போய்விட்டான் அஸ்வின்…

தனித்து நின்ற மாளவிகாவின் முகத்தை மன்மத பார்வை பார்த்தான் கார்த்திக்…

‘சகிக்கலை..’ மாளவிகாவின் முகம் அஷ்ட கோணலாக விளக்கெண்ணை குடித்ததைப் போல மாறியது…

“நான் எதுக்காக பூமிகாவோட ஹஸ்பெண்டைக் கூப்பிட்டு மிரட்டி வைச்சேன் தெரியுமா..?” கார்த்திக் காலரை தூக்கி விட்டுக் கொண்டான்..

‘அடப்போடா.. நீயா அவனை மிரட்டின..?’

“உனக்காகத்தான் மாளவிகா.. உன் சந்தோசத்துக் காகத்தான்..”

‘வேணாண்டா.. வெறுப்பேத்தாதே..’

“அவன் முரடன்தான்.. யாருக்கும் அடங்காதவன் தான்..”

‘நீயே உசுப்பேத்தி சொல்லிக் கொடுத்திருவ போல..’

“விட்டா உங்க வீட்டைப் பிடுங்கிட்டு வெளியே துரத்தி விட்டிருவான் தான்…”

‘அதான் உன் ஆசை போல…’

“ஆனாப் பாரு.. நான் சொன்னா அவன் கேட்டுக்குவான்..”

‘ஆமாமா.. நீயும் சொல்கிறவன்தான்.. அவனும் கேட்டுக்கிறவன்தான்.. எனக்கு உங்க ரெண்டு பேரோட லட்சணமும் தெரியும்டா.. வாயை மூடிக்கிட்டு போயிரு..’

“இனிமே அவன் வாலாட்ட மாட்டான்னு நினைக்கிறேன்..”

‘நீ எதை நினைப்பன்னு எனக்குத் தெரியாதா..?’

“மீறி வாலாட்டினான்னா எங்கிட்டச் சொல்லு…”

‘அது எதுக்குடா..? நீ வந்து அவனுக்கு இன்னும் கொஞ்சம் போட்டுக் கொடுத்து கிளப்பி விடறதுக்கா..? என்னையென்ன எங்க அப்பாவையும்.. அம்மாவையும் போல கேணைன்னு நினைச்சியா..?’

“நான் அவனைக் கண்டிச்சு வைக்கிறேன்..”

‘நீ தானே.. செய்வ.. செய்வ…’

“இன்னைக்கு நான் போட்ட போட்டையே ஆயுசுக்கும் அவன் மறக்கமாட்டான்…”

விட்டால் அதையே அவன் நிலைநாட்டி விடுவான் என்று புரிந்துபோக.. மாளவிகா அவனைக் கூர்மையாக பார்த்தாள்…

“என்ன..? அப்படிப் பார்க்கிற..?”

“இன்னைக்கு நீங்கதான் பூமிகாவோட ஹஸ்பெண்டை கண்டிச்சு வைச்சீங்களா..?”

“பின்னே இல்லையா..?”

“இல்லை..”

“மாளவிகா…”

“சும்மா கத்தாதீங்க.. இந்த வீட்டில இருக்கிற மத்தவங்களுக்குத்தான் அக்காவோட ஹஸ்பெண்டை கண்டிச்சு வைச்சது யாருன்னு தெரியாது.. எனக்குத் தெரியும்..”

“உனக்குத் தெரியுமா…”

கார்த்திக்கிற்கு முகத்தை எங்கே போய் வைத்துக் கொள்வது என்று தெரியவில்லை.. அதுவரை மாளவிகா பார்த்த இகழ்ச்சிப் பார்வைக்கான காரணம் புரிந்தவனாக மனதிற்குள் குன்றிப் போனான்..

“யார்..?” என்று கேட்கும் போதே அவன் குரல் இறங்கி விட்டது…

“ரமணன்..” மாளவிகா அவன் முகத்தையே பார்த்தபடி அழுத்தமான குரலில் சொன்னாள்…

“வாட்..?” கார்த்திக் அதிர்ச்சியாகப் பார்த்தான்..

“என்ன அப்படிப் பார்க்கறிங்க..? ரமணன் சொன்ன பின்னாலும் பூமிகாக்காவோட ஹஸ்பெண்ட் மத்தவங்க பேச்சைக் கேட்பாருன்னா நினைக்கறிங்க..?” அழுத்தமாக கேட்டாள் மாளவிகா…

கார்த்திக் அப்படித்தான் நினைத்து வைத்திருந்தான்.. கங்காதரனைக் கூப்பிட்டு.. தோள் மீது கை போட்டு.. நட்பு பாராட்டி அவனுக்கு துணையாக ஆவன செய்வதாகவும்.. அவன் அந்த வீட்டை பூண்டோடு அழிப்பதற்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் அளிப்பதாகவும் சொல்லிக் கிளப்பி விடுவதாகத்தான் இருந்தான்…

‘இது இவளுக்கு எப்படித் தெரியும்..?’ கார்த்திக் யோசிக்க…

‘உன்னை எனக்குத் தெரியாதா..?’ என்ற இகழ்ச்சிப் பார்வையை பார்த்தாள் மாளவிகா..

“ரமணனன்தான் சொல்லி வைச்சான்னு உனக்கு எப்படித் தெரியும்..?” தாடையைத் தடவியபடி கேட்டான் கார்த்திக்..

“ஏன்னா.. அவர்கிட்ட உதவி கேட்டதே நான்தான்..” குண்டைத் தூக்கிப் போட்டாள் மாளவிகா..

“நீயா..? உனக்கெப்படி அவனைத் தெரியும்..?” குறுக்கு விசாரணையை ஆரம்பித்தான் கார்த்திக்..

‘என்னக் கேட்க நீ யார்..’ மனதுக்குள் வெகுண்ட போதும் அவனுக்கான பதிலைக் கூறாவிட்டால் அவன் மதுராவிடம் பற்ற வைத்து விடுவான் என்பதை உணர்ந்தவளாக பதில் சொல்ல ஆரம்பித்தாள் மாளவிகா..

“அவர் என் பிரண்டோட அண்ணனோட பிரண்டுக்கு தம்பியோட பிரண்டுக்கு பிரண்டாம்..”

0Shares

Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link