Chapter 25

0Shares

இதுவரை இப்படிப்பட்ட தொரு அறிமுகத்தை கார்த்திக் கேள்விப்பட்டதே இல்லை.. அவனுடைய உறவினர் வட்டாரத்தில் தான்..

‘இவர் எப்படிச் சொந்தமாகனும்..?’ என்று கேள்விக்கு..

‘இவரோட தாத்தாவோட ஒன்னு விட்ட மச்சினனோட ரெண்டு விட்ட தம்பிக்குத்தான் என் பாட்டியோட பெரியம்மா பேரனுக்குப் பொறந்த பொண்ணோட கொளுந்தியாளோட நாத்தனாரைக் கொடுத்திருக்கு..’ என்ற பதில் வரும்..

அடுத்து அந்தக் கேள்வியை கார்த்திக் கேட்கவே மாட்டான்…

‘இவர் உனக்கு என்ன முறையாகனும்னு நீதான் சொல்லேன்..’ என்று பதிலை அவன் தலையில் கட்டி விடுவார்களே..

ஆதலால்.. சமர்த்துப் பிள்ளையாக.. இவர் உனக்கு அண்ணன் முறையாக வேண்டும் என்றால் ‘அப்படிங்களா அண்ணா..’ என்றும் மாமன்.. மச்சான் முறையாக வேண்டும் என்றால் ‘அத்தான்’ என்று அன்புடனும் அழைக்கப் பழகியிருந்தான்..

இப்படியாகத்தானே சங்கிலித் தொடர் போன்ற உறவு முறைகளின் வம்சாவழி வரை படங்களை மனதுக்குள் வரைய முடியாமல் தத்தளித்து தடுமாறிக் கொண்டிருந்த வனிடம் நட்பைப் பற்றியும் ஒரு வரைபடத்தை மனதுக்குள் வரைந்து பார் என்று மாளவிகா சவால் விட்டால்.. அவன் பாவம் என்னதான் செய்வான்…

எப்படித் தெரியும் என்ற கேள்விக்கு.. இப்படிப்பட்ட பதிலை எதிர்பார்க்காத திகைப்பு அவன் முகத்தில் தெரிந்தது.. அதை அவதானித்த மாளவிகா மனதுக்குள் சிரித்துக் கொண்டவளாக…

“நான் என் பிரண்டுகிட்ட பூமிகாவோட விசயத்தைச் சொன்னேனா.. அவ அவளோட அண்ணன் காதில அதைப் போட்டு வைச்சிருக்கா.. அந்த அண்ணன் அவரோட பிரண்டுக்கு போன் போட்டு இந்த விசயத்தைக் கடத்தினாராம்.. அந்த பிரண்ட் என்ன செஞ்சாருன்னா.. சாப்பிடறப்ப தம்பியோட காதில இந்த விசயத்தை போட்டு வைச்சாராம்.. அந்த தம்பி என்ன செய்தாருன்னா..” என்று கண்களை உருட்டி கையைக் காலை ஆட்டி அவள் கதைசொல்ல ஆரம்பித்ததில் கார்த்திக் அரண்டே போனான்..

“அம்மா.. தாயே.. இனி அந்த ரமணனை உனக்கு எப்படித் தெரியும்ன்னு கேள்வியே கேட்கமாட்டேன்.. ஆளை விட்டால் போதும் சாமி..” என்று ஜகா வாங்கி விட்டான்…

‘யாரு கிட்ட..?’ கண்களில் வெற்றிக் குறியோடு நமட்டுச் சிரிப்பு சிரித்த மாளவிகாவைக் கண்டதும் என்ன தோன்றியதோ.. புருவங்கள் சுருங்க…

“நிஜமாவே உனக்கு ரமணனைத் தெரியுமா..?” என்று விசாரித்தான்..

“எனக்குத் தெரியாது.. என் பிரண்டோட அண்ணனோட..” மாளவிகா மறுபடி ஆரம்பிக்க..

“போதும்.. போதும்..” என்று அலறிவிட்டான்…

“நீங்கதானே கேட்டிங்க..?”

“அதில்லை மாளவிகா.. அவன் பக்கா ரௌடி..”

‘நீ பெரிய ஜென்டில் மேன்..’ மனதுக்குள் மாளவிகா பொரும.. கார்த்திக் பேச்சை நிறுத்தி..

“ஏதோ சொன்னாப்புல இருந்துச்சே..” என்று சந்தேகமாக கேட்டான்..

“இல்லையே..” மாளவிகா மறுத்தாள்…

“அப்படியா.. எதுக்கும் அவனிடம் இருந்து தள்ளியே இரு..”

‘நான் தள்ளி நின்னாலும்.. அவன் தள்ளி நிற்க மாட்டான்..’

“இப்ப என்ன சொன்ன..?”

“இதென்னங்க.. வம்பாப் போச்சு.. நான் என்னவோ ஸ்கூல் சில்ரன் போல நீங்க டியுசன் எடுத்துக்கிட்டு இருக்கீங்க.. நானும் ஆன்னு உங்க வாயைப் பார்த்துக் கிட்டு அதைக் கேட்டுக்கிட்டு இருக்கேன்.. என்னைப் போய் நீ என்ன சொன்ன.. நீ என்ன சொன்னன்னு கேட்டுக்கிட்டே இருந்தா எப்படி..?”

“நிஜமாவே நீ எதையும் சொல்லலையா..?”

“வாயைத் திறந்து சொல்லலை..”

மாளவிகா கடுப்பாக பதில் சொன்னாள்.. அப்படி யென்றால் மனதுக்குள் எதையும் நினைத்தாயா என்று கேட்கலாமா என்று நினைத்த கார்த்திக் அவசரமாக அந்த யோசனையை கைவிட்டான் ஆமாம்.. மனதுக்குள் உன்னைப் பொறுக்கியென்று நினைத்தேன் என்று அவள் சொல்லி விட்டால் என்ன செய்வது என்ற தற்காப்பு உணர்வுடன் வாயை இறுக மூடிக் கொண்டான்…

மாளவிகா அப்படிச் சொல்லி விடுகிற ஆள்தான்.. அவள் பூமிகாவைப் போல பயந்த ரகமல்ல.. அஸ்வினும்.. அவளும்.. சரவெடிகள்.. எக்குத்தப்பாக வாய் விட்டு விட்டால் சராமரியாக வெடித்து விடுவார்கள்.. அதனால் தான் அஸ்வினிடம் வாய் கொடுக்காமல் தள்ளியே நின்று வந்தான்.. மாளவிகாவிடம் தான் அதைக் கடைபிடிக்க அவனால் முடியவில்லை..

மாளவிகா பூமிகாவை விட அழகியாக இருந்தாள்.. பூமிகா பட்டப் படிப்பை பாதியிலேயே விட்டவள்.. மாளவிகா அப்படியில்லை.. என்ஜனியரிங் படிப்பை முடித்து.. கெட்டிக்காரத்தனமாக கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வும் ஆகி வேலைக்குப் போகப் போகிறவள்..

‘இவ சம்பளம் எவ்வளவுன்னு கேட்டு வைச்சிக்கனும்..’

கார்த்திக் மனதுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டான்.. வரதட்சணை.. நகையென்று வருகின்ற பெண் ஒருமுறைதான் சீர் வரிசையோடு வருவாள்.. திரும்பத்திரும்பக் கேட்டு விட்டால் பூமிகாவின் கணவன் கங்காதரனின் கதிதான் வந்து விடும்..

அதற்குப் பதிலாக இப்படிச் சுளையாக எடுத்த எடுப்பில் அரை லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் பெண்ணை திருமணம் செய்து கொண்டால் ஆயுளுக்கும் சீர்வரிசை கிடைத்துக் கொண்டேயிருக்குமே…

மாளவிகாவை கை நழுவ விடக் கூடாது.. எதற்கும் இதைப்பற்றி பெற்றவர்களிடம் பேசி வைத்துக் கொள்ள வேண்டும் என்று மனதுக்குள் குறித்துக் கொண்டான் கார்த்திக்..

“உன்னை அம்மா கேட்டாங்க மாளவிகா..”

“என்னையா..? உங்க அம்மாவா..? ஆச்சரியமாயிருக்கே..”

“இதில ஆச்சரியப்பட என்ன இருக்கு..? உன்னைப் பத்தி என்கிட்ட ரொம்ப விசாரிப்பாங்க.. ‘நீ’ன்னா.. அவங்களுக்கு உயிர்..” என்று சொன்னவன் அடுத்ததாக..

‘எனக்கும்தான்..’ என்று சொல்லப் போனான்…

அதற்கு இடம் தராமல் மாளவிகா அவன் பேச்சை இடைமறித்து விட்டாள்…

“இந்த வேடிக்கையை எங்கேயும் கண்டதில்ல.. நேத்துத்தான் உங்க அம்மாவ கோவிலில் பார்த்தேன்.. கூட யாரோ ஒரு ஜட்ஜ் வீட்டு லேடி இருந்தாங்க.. 

எப்படி இருக்கீங்க அத்தைன்னு விசாரிச்சேன்.. அதுக்கு என்னவோ எதிரியைப் பார்க்கிறதைப் போல என்னை முறைச்சுப் பார்த்துட்டு ‘ம்ம்’ன்னு உறுமினாங்க.. கூட இருந்தவங்க இது யாருன்னு என்னைப் பார்த்துக் கேட்டாங்க.. அதுக்கு உங்க அம்மா துரத்துச் சொந்தம்ன்னாவது சொல்லியிருக்கலாம்.. அதை விட்டுட்டு தெரிஞ்சவங்க வீட்டுப் பொண்ணு.. பொது இடத்திலே தள்ளி நின்னு பேசுவோம்ன்னு இல்லாம சரிக்குச்சரியா உரிமையெடுத்துக் கிட்டு பக்கத்தில வந்து நின்னு பேசுதுன்னு முகத்தில் அடிச்சதைப் போலச் சொன்னாங்க.. உங்க அம்மாவைப் போய் நலம் விசாரிச்சு வைச்ச எனக்கு அது தேவைதான்னு நானும் பேசாம வீடுவந்து சேர்ந்திட்டேன்.. அவங்க என்னைப் பத்தி உங்ககிட்ட விசாரிச்சாங்களா..? குட்ஜோக்.. “

மாளவிகாவின் நையாண்டியில் கார்த்திக் நொந்து போய் விட்டான்.. ‘ஒரு மனுசன் எத்தனை நேரம்தான் அடிமேல அடி வாங்கிக்கிட்டு வலிக்காததைப் போலவே பாவ்லா பண்றது..’ அவனுக்கு இம்சையாக இருந்தது…

கார்த்திக்கின் அம்மா கோதாவரிக்கு அவளது சிநேகிதியின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலிருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதியின் மகளை தன் மகனுக்கு திருமணம் முடித்துவிடும் ஆசை இருந்தது.. அவளும் சிநேகிதியின் மூலமாக காய் நகர்த்தி.. அந்த நீதிபதியின் மனைவியை சிநேகிதம் பிடித்து விட்டாள்.. அவளுடன் கோவிலுக்கு போய்வர பகீரதப் பிரயத்தனம் செய்து.. அதிலும் வெற்றி கண்டவளை கோவிலில் பார்த்து மாளவிகா நலம் விசாரித்திருக்கிறாள்.. அப்போது போய் அவள் மாளவிகாவிடம் பல்லைக் காட்ட முடியுமா..? அப்படிக் காட்டினால்.. அந்த நீதிபதியின் மனைவிக்கு சந்தேகம் வந்து விடாதா.. மாளவிகாவை ஒன்று விட்ட நாத்தனாரின் பெண் என்று அறிமுகம் செய்து வைத்தால் இந்தப் பெண் எதற்காக உங்க மகனைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிவிட்டது என்பது போன்ற எக்குத் தப்பான கேள்விகளை அந்த நீதிபதியின் மனைவி கேட்டு விட மாட்டாளா…?

இவையெல்லாம் மக்கு மாளவிகாவின் மண்டைக்கு உறைக்கவில்லையே என்று கோபப்பட்டான் கார்த்திக்..

0Shares

Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link