Chapter 32
அதற்கு முன்னால் அப்படிப்பட்ட ஆற்றங்கரையை அனுபவித்துப் பார்த்தறியாத மாளவிகா.. ஜன்னலின் கீழ்பக்கமாக பார்த்தாள்.. அவள் மாடியறையில் இருப்பது தெரிந்தது.. கீழ்பக்கமாக தெரிந்த தோட்டத்தின் அழகு ஒரு பூங்காவைப் போல இருக்க.. ஆற்றை மறந்து.. தோட்டத்தை ரசிக்க ஆரம்பித்தாள்…
அறைக்கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டதும் திரும்பிப் பார்த்தாள்.. கூர்மையான பார்வையுடன்.. ரமணன் உள்ளே வந்தான்.. அவன் கையில் டிரே இருந்தது.. அமைதியாக அங்கே இருந்த டீப்பாயின் மீது டிரேயை வைத்தவன்…
“வா.. காபி சாப்பிடலாம்..” என்று கூப்பிட்டான்…
“ரமணன்..?” மாளவிகா விழி விரித்தாள்…
“வேற யாரா இருக்கும்ன்னு நினைச்ச..? உன் கார்த்திக்குன்னு நினைச்சியா..?” கண்கள் இடுங்கக் கேட்டான் ரமணன்..
“அவன் என் கார்த்திக்கில்லை..” வெடித்தாள் மாளவிகா…
“ஊஹீம்..? அப்ப.. நான் உன் ரமணன்தானே..?” நிதானமாக கேட்டான் ரமணன்…
இல்லையென்று பதில் சொல்ல முடியாமல் ஜன்னல் பக்கமாக திரும்பி நின்று கொண்டாள் மாளவிகா.. ரமணனின் கண்கள் மின்னின…
“காபி சாப்பிட வான்னு கூப்பிட்டேன்…”
“நான் எப்படி இங்கே வந்தேன்..”
“உனக்கு தலை வலிக்கும்.. காபியைச் சாப்பிடு..”
“வலித்தா வலிக்கட்டும்.. உங்களுக்கென்ன வந்தது..?”
மாளவிகா கண் கலங்கினாள்.. அவளுக்குள் பதட்டம் வந்திருந்தது.. அந்த வீட்டின் அழகும்.. ஆற்றங்கரையின் அழகும் மறந்து போக.. சென்னையிலிருந்த அவளுடைய பழைய வீடும்.. அந்த வீடு இருந்த புழுதியான.. சந்தடி நிறைந்த தெருவும் நினைவுக்கு வந்தன…
ரமணன் எழுந்தான்.. அவளருகில் வந்தான்.. அவன் தொட்டால் என்ன ஆகும் என்பதை அனுபவத்தில் உணர்ந்திருந்த மாளவிகா முன் ஜாக்கிரதையாக தள்ளி நின்று கொண்டாள்.. அதைக் கவனித்த ரமணனின் கண்களில் சிரிப்பு வந்தது…
“கற்பைக் காப்பாத்திக்கிறயா..?” அழுத்தமாக கேட்டான்…
மாளவிகாவின் முகம் சிவந்தது.. உதடுகளை அழுத்திக் கடித்தபடி.. விரல் பார்த்தாள்…
“கவலைப்படாதே.. அந்த உத்தேசம் எனக்கில்லை..” சிரிப்பு மாறாமல் அவன் சொன்னான்..
“இங்கே எப்படி வந்தேன்..?” மாளவிகா அழுத்தமாக கேட்டாள்…
“இதென்ன கேள்வி..? என் கூட வந்த..” நிதானமாக பதில் சொன்னான் ரமணன்..
“அதுதான் எப்படின்னு கேட்டேன்..?” விடாமல் அந்தக் கேள்வியிலேயே நின்றாள்..
“அதைத்தான் நானும் சொன்னேன்..” என்றான் அந்த அழுத்தக்காரன்..
“ரமணன்… நீங்க இப்படிச் செய்வீங்கன்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கல..” குமுறினாள் மாளவிகா..
“நான் மட்டும் நினைச்சுப் பார்த்தேனா..?” கூர்மையாகக் கேட்டான் ரமணன்..
“சொல்லுடி.. எனக்கு மட்டும் உன்னை கடத்திக்கிட்டு வந்து சிறை வைக்கனும்னு நேர்த்திக் கடனா..? அந்த நிலைமைக்கு என்னைத் தள்ளினது யாரு..? நீதானே..” சூடாக கேட்டான் ரமணன்…
“நீங்க நல்லவர்ன்னு நினைச்சேன்..”
“அதாவது.. நீ என்னை விட்டுட்டு வேறொருத்தனுக்கு கழுத்தை நீட்டுவ… நான் கண்ணெல்லாம் சிவக்க.. மனசை அடக்கிக் கிட்டு உனக்கு அட்சதைப் போட்டு.. எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாட்டுப் பாடனும்.. அப்படிச் செஞ்சிருந்தா உன் பார்வையிலே நான் நல்லவனாத் தெரிஞ்சிருப்பேன்.. அப்படித்தானேடி.. என் அன்புக் காதலியே..?” புருவங்களை உயர்த்தினான் ரமணன்..
“ரமணன்..” மாளவிகா பேச முடியாமல் தடுமாறினாள்..
“அந்தப் பருப்பெல்லாம் என்கிட்ட வேகாது.. இப்பச் சொல்றேன் கேட்டுக்க.. நான் கெட்டவன்தான்.. ரொம்ப.. ரொம்பக் கெட்டவன்.. என் காதலிய இன்னொருத்தன் கூட வாழ விட்டுத்தான் அந்த நல்லவன் பட்டத்தை சம்பாதிச் சுக்கனும்னா.. அந்தப் பட்டமே எனக்குத் தேவையில்லை.. புரிஞ்சதா..?” அதட்டினான் ரமணன்…
“என் நிலைமையை கொஞ்சமாவது நினைச்சுப் பார்த்தீங்களா..?” மாளவிகா குற்றம் சாட்டினாள்…
“உன் நிலைமைக்கு என்னடி கேடு..? காதலிக்கிறவனை விட்டுட்டு இன்னொருத்தன் கூட வாழ வேண்டிய அவசியமில்லாம போனதுக்கு நீ சந்தோசம் தானே படனும்.. அத விட்டுட்டு.. துக்கப் படற..?”
“இவ்வளவு இரக்கமில்லாதவரா நீங்க..?”
மாளவிகா வெறுப்புடன் சொன்னாள்.. ரமணன் ஒரே எட்டில் அவளை நெருங்கி.. அவள் முகத்தை இறுக்கிப் பிடித்து கண்களுக்குள் உற்றுப் பார்த்தான்.. அவனின் இரும்புப் பிடியில் முகம் வலிக்க.. வலி தாங்காமல் கண் கலங்கினாள் மாளவிகா.. அவன் அதைப் பொருட் படுத்தவில்லை..
“என்னடி இரக்கமில்லாம நடந்துக்கிட்டேன்..? நூறுபவுன் கொடு.. இருநூறு பவுன் கொடுன்னு இரக்கமில்லாம உன் அப்பனைக் கசக்கிப் பிழிஞ்சேனா..? உன்னை அடிச்சு நொறுக்கி.. ரத்தம் கொட்ட உன் வீட்டுக்கு இரக்கமில்லாம துரத்திவிட்டு உன் அம்மாவின் பெத்த வயிறை பதறடிச்சேனா..? இருக்கிற கொஞ்சக் காசையும் இரக்கமில்லாம.. உன் கழுத்தில கத்திய வைச்சு.. உங்க வீட்டிலே இருந்து பிடுங்கி..
உன் தம்பியை கதற வைச்சேனா..? சொல்லுடி.. நான் சொன்னதில ஒன்னையாவது நான் செஞ்சிருந்தா என்னை இரக்கமில்லாதவன்னு நீ சொல்லலாம்.. இதை எதையும் நான் செய்யலையே…”
கங்காதரன்.. பூமிகாவிற்கு செய்த அத்தனை கொடுமைகளையும் ரமணன் பிட்டுப் பிட்டு வைத்த போது.. மாளவிகாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. அவளைத் தள்ளி விட்டு.. வெறுப்புடன் பார்த்தான் ரமணன்…
“பேசுடி.. வக்கணையாய் வாய்கிழிய பேசின.. உன் பேச்சு எங்கே போச்சு…?”
“ஆயிரம்தான் இருந்தாலும்.. அதைச் செய்தது பூமிகாவோட புருசன்..” மாளவிகா சொல்லி விட்டாள்…
“புருசன்..” ரமணன் பயங்கரமாகச் சிரித்தான்.. மாளவிகாவின் அருகே வந்து குனிந்து அவள் முகத்தைப் பார்த்துக் கேட்டான்…
“அப்ப.. உனக்கு நான் யாருடி..?”
அழுத்தமாக வந்த அந்தக் கேள்வியில் வாயடைத்துப் போனாள் மாளவிகா..
“கழுத்தில தாலியைக் கட்டி.. கூடக் குடும்பம் நடத்தினாத்தான் அவன் புருசனா..? ஒரு செகண்ட்.. ஒரேயொரு செகண்ட் போதும்.. அதையெல்லாம்.. இங்கே.. இந்த இடத்தில.. இப்பவே.. நான் நடத்திக் காட்டவா..?”
விரல் சொடுக்கி.. கண்கள் சிவக்க.. ரௌத்திர முகத்துடன் ரமணன் கேட்ட போது பயந்து பின் வாங்கினாள் மாளவிகா…
“புருசனாம்.. புருசன்..! உனக்கு நான்தாண்டி புருசன்.. நான் மட்டும்தான் புருசன்..” விரல் நீட்டி எச்சரித்தான் ரமணன்..
“வேணாம் ரமணன்.. குற்றத்துக்கு மேலே.. குற்றமா செஞ்சுக்கிட்டுப் போகாதீங்க..,” பதிலுக்கு எச்சரித்தாள் மாளவிகா..
“ஹ..” கைகளை காற்றில் வீசி தன் கோபத்தை வெளிப்படுத்தினான் ரமணன்..
“குற்றமாம்.. எதுடி குற்றம்..? நான் காதலிக் கிறவளை.. என்னைக் காதலிக்கிறவளை.. அடுத்தவனுக்கு விட்டுக் கொடுக்க மாட்டேன்னு சொன்னா… அது குற்றமா..? உன் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லு.. நீ என்னைக் காதலிக்கலை..?”
மாளவிகா பதில் சொல்ல முடியாமல் தலை கவிழ்ந்தாள்…
“பேச மாட்டியே.. இதுக்குப் பதில் சொல்ல மாட்டியே.. நீதானேடி கேட்ட.. உன்கூட என்னால ஓடிவர முடியுமான்னு.. உன்னால அது முடியாதுதான்.. என்னால உன்னைத் தூக்கிக்கிட்டு வரமுடியும்.. அதான்.. உன்னைத் தூக்கிட்டேன்..”
அவன் வெற்றிச் சிரிப்பைச் சிரித்தான்…
Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.