Chapter 01
“ஹாய்.. ஹாய்.. ஹாய்…” என்று ஆரவாரித்த படி அந்த ஹாலுக்குள் பிரவேசித்தாள் ஜென்ஸி…
சிறுசிறு மரத் தடுப்புகளுக்குள் தங்கள் முன்னாலிருந்த கம்ப்யூட்டருடன் கதை பேசிக் கொண்டிருந்தவர்கள் நிமிர்ந்தார்கள்.
கண்சிமிட்டும் நேரத்திற்குள் அனைவரின் பார்வைகளையும் தன் மேல் பதிய வைத்து விடும் ஜென்ஸி.. கொட்டுகிற அருவியைப் போல் கலகலப்பானவள்.
“ஏன் ஜென்ஸி… ஒரு ஆறு மணி நேரம் ஆகியிருக்குமா…?”
அவளது தோற்றத்தை எடை போட்டபடி நமட்டுச் சிரிப்புடன் வினவினாள் கயல்விழி.
“இங்கே பாரு கயல்…”
“பார்த்துட்டாப் போச்சு.. எல்லோரும் உன்னைப் பார்க்கணுமுன்னுதானே.. வேலை மெனக்கெட்டு… விடிவதற்கு முன்னாலேயே அலாரம் வைத்து எழுந்து.. இவ்வளவு மேக்அப்பை பண்ணிக்கிட்டு வந்திருக்கிற…? உன்னை ஏமாத்த எனக்கு மனசு வருமா…? இதோ.. பார்த்துட்டேன் போதுமா…?”
ஜென்ஸியை உச்சி முதல்… உள்ளங்கால் வரை பார்வையிட்டாள் கயல்விழி.
அதற்கெல்லாம் ஜென்ஸி அயர்கிற ஆள் அல்ல…
“ஆமாம்.. அதுக்கு இப்ப என்னாங்கிற..? நானாவது விடிகிறதுக்கு முன்னாலதான் மேக் அப் போட ஆரம்பிக்கிறேன்.. நீ விடிய… விடிய மேக்அப் போடுகிறயே.. இதை நான் எங்கே போய் சொல்றது…?”
“எங்கேயும் எதுக்குப் போய் சொல்கிற..? உன் கண்ணுக்கு முன்னாலதான் நான் இருக்கிறேனே… என்கிட்டயே சொல்லு.. இங்கே இருக்கிற அத்தனை பேரிடம் கேட்கலாமா…?”
“எதைக் கேட்கலாம்கிற…?”
“உன்னைப் பார்த்தால் மேக்அப் போட்டிருக்கிறதைப் போலத் தெரியுதா.. இல்லை என்னைப் பார்த்தால் மேக்அப் போட்டிருக்கிறதைப் போலத் தெரியுதான்னு கேட்டு விடுவோம்..”
இதைச் சொன்ன கயல்விழி.. குடும்பப் பாங்கான அழகோடு எளிமையாக தெரிந்தாள்…
இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜென்ஸியோ புருவங்களில் தீட்டப்பட்டிருந்த மையிலிருந்து… கால் விரல்களுக்கு கவனமாய் போடப்பட்டிருந்த நெயில் பாலிஷ் வரை அதிக அளவு மேக்அப் போட்டிருப்பதை வெளிப்படுத்தும் தோற்றத்துடன் இருந்தாள்…
இதற்கும் ஜென்ஸி அலட்டிக் கொள்ளவேயில்லை..
“எதைச் செய்தாலும் அதை ஒளிவு மறைவில்லாம.. வெளிப்படையாய் செய்யணும் கயல்.. அதுதான் என் பாலிஸி.. உன்னைப் போல… மேக்அப் போட்டுக் கொள்வதே வெளியே தெரியாமல் இருக்கணும்னு மெனக்கெட்டு மேக்அப் போட்டுக்கிற ஆள் நானில்லை…”
“உன்கிட்ட வாய் கொடுத்து ஜெயிக்க முடியுமாடி..?”
“தெரியுதில்ல.. தெரிந்தும் ஏன் டிரை பண்ணுகிற..?”
“என்னைக்காவது ஒருநாள் உன்கிட்ட பேசி ஜெயிச்சுற முடியாதான்னு ஒரு நப்பாசைதான்… வேறென்ன…?”
“பேராசைன்னு சொல்லு…”
“என்னவோ ஒரு ஆசை.. சீட்டுக்கு போய் வேலையை ஆரம்பிடி…”
“அதுக்கு இன்னும் நேரமிருக்கு.. ஆமாம்.. ஆபிஸே ஆனந்தக் கடலில் மூழ்கியிருக்குதே… என்ன விசயம்…?”
“உனக்கு விசயமே மறந்து விட்டதா…?”
“ஒரு நினைப்பிலிருந்தா நினைவிருக்கும்…”
“அதைச் சொல்லு.. உனக்குத்தான் ஓராயிரம் நினைப்பாச்சே…”
“அதை நான் ஒப்புக்கிறேன்.. நீ ஒப்புக்குவாயா…?”
“மாட்டேன்…”
“அப்ப.. என்னை வாருகிற வேலையை விட்டுட்டு விசயத்தை மட்டும் சொல்லு…”
“இன்னைக்கு கருப்பையா ரிட்டயர் ஆகிறார்…”
“வாவ்.. நம்ம ஆபீசுக்கு இன்னைக்கு சாயங்காலம் சுதந்திரம் கிடைக்கப் போகுதுன்னு சொல்லு.. அதுதான் எல்லாரின் முகத்திலும் பல்ப் எரியுதா…?”
“ஆமாம்.. நம்ம சொர்ணா.. இன்னைக்கு வடை பாயாசத்தோட விருந்தே சமைச்சாளாம்..”
“செய்ய மாட்டாளா..? அவளை சுடிதார் போட்டுக்கிட்டு ஆபிஸ் வரக் கூடாதுன்னு சொன்ன மகராசனாச்சே அவர்…”
“பாவம்.. சேலை கட்டத் தெரியாமல் கால் தடுக்கி விழுந்து ஒரு மாசம் பெட்ரெஸ்டில் இருந்தா அவ…”
“அதுக்குப் பின்னால தான் நான் வந்திட்டேனே…”
“அது எப்படி ஜென்ஸி.. சொர்ணா சுடிதார் போட்டால் மட்டும் தப்புன்னு முறைத்த அந்த மனுசர்.. உன்னை ஒரு வார்த்தை கூடச் சொல்லலை…”
“அதானே.. சொர்ணாவாவது சேலையைக் கட்டத் தெரியாமல் கட்டிக்கிட்டு வந்து கால் தடுக்கி விழுந்தா.. எனக்கு சேலையை பிரித்துப் பார்க்கக் கூடத் தெரியாதே…”
“வெளியில் சொல்லிராதே…”
கயல் விழி எரிச்சலுடன் சொல்லிக் கொண்டிருந்த போது..”எதை வெளியில் சொல்லக் கூடாதுன்னு சொல்கிற கயல்..? ஏன்.. என்கிட்ட அந்த ரகசியத்தை சொன்னால் நான் மனசில் வைச்சுப் பூட்டிக்க மாட்டேனா…?” என்று ஆர்வமாக கேட்டபடி அருகில் வந்தாள் தேவி..
“ஆமாண்டி.. காலையிலேயே அடுத்தவங்களைப் பத்தி நான் ரகசியம் பேச ஆரம்பிச்சுட்டேன். அதைக் கேட்க முடியலைன்னு உனக்கு மலையளவுக்கு மனக்குறை.. போடி வேலையைப் பார்த்துக்கிட்டு.. எந்த மடைச்சியாவது.. இவளிடம் போய் ரகசியத்தை சொல்வாளா…?” எரிச்சல் பட்டாள் கயல்விழி…
“ஏண்டி.. என்கிட்ட சொன்னால் என்ன..?” சண்டைக்கு தயாரானாள் ஜென்ஸி..
“நீதானே.. எதையும் மனசில் வைச்சுக்காத ரகமாச்சே..” கிண்டலாகக் கூறினாள் கயல்விழி..
அப்போதுதான் அலுவலகத்திற்குள் வந்த லீலா.. ஆர்வமாக..
“யாரு.. எதை வைச்சிருக்கிறது…” என்று கேட்க…
“இங்கே.. யாரும் யாரையும் வைச்சிருக்கலை…” என்று சொல்லி வைத்து விட்டு.. கயல்விழியிடம் மாத்து வாங்கினாள் ஜென்ஸி..
“பிசாசே.. நீ வாயைத் திறந்தாலே வில்லங்கம் தாண்டி.. ஏய் லீலா.. உனக்கு இப்ப என்னடி வேணும்…?”
கயல்விழி கேட்டதற்கு பதிலைச் சொல்லாமல் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள் லீலா.
அவள் சிரிப்பதை விசித்திரமாகப் பார்த்த ஜென்ஸி..
“எதுக்குடி இவ இந்தச் சிரிப்பு சிரிக்கிறா…?” என்று கேட்டுவிட்டு.. அதற்கும் ஒரு மாத்து வாங்கினாள்..
“அவ எதுக்கு சிரிக்கிறான்னு உனக்குத் தெரியாதா..?” கயல்விழி எரிப்பதைப் போல் பார்க்க ஆரம்பிக்க..
“விடு.. விடு.. இப்ப என்ன ஆகிப் போச்சுன்னு இப்படி அனல் பார்வை பார்க்கிற…?” என்று வெள்ளைக் கொடியை பறக்க விட்டாள் ஜென்ஸி..
பேசிக் கொண்டே வாசல்பக்கம் பார்த்த கயல்விழியின் கண்கள் மின்னின..
“என்ன ஆச்சு…? நம்ம ஆபீஸின் ஹீரோவும்.. ஹீரோயினும் வந்துட்டாங்களா…?”
திரும்பிப் பார்க்காமலேயே ஜென்ஸி வினவ..
“எப்படிடீ..?” என்று வியந்தாள் தேவி…
“அது அப்படித்தான்.. அவளுக்குத்தான் உடம்பு பூரா கண்ணாச்சே.. முதுகில் கண்ணில்லாம போகுமா…?” என்றாள் கயல்விழி…
“அதுதான் இல்ல.. உன் மூஞ்சியில் எரிஞ்ச பல்பைப் பார்த்துத்தான் அதை நான் கண்டு பிடிச்சேன்…” அமர்த்தலாக கூறினாள் ஜென்ஸி.
அனைவரின் கண்களும்.. அப்போதுதான் அலுவலகத்திற்குள் நுழைந்து கொண்டிருந்த அந்த இருவரையும் நோக்கின…
Reviews – Manipaayz / மன்னிப்பாயா..?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.