Chapter 01

0Shares

மிருணாளினி வீட்டுக்குள் நுழைந்த போது.. அவளுடைய அப்பா.. சுந்தரம்.. மனைவியை சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்..

“உனக்கு அறிவே இல்லைடி..”

“உங்களுக்கு மட்டும் அது இருக்கிறதா நினைப்பா..?”

“இந்த வக்கணைப் பேச்சுக்கொண்ணும் குறைச்சலில்லை.. உன்கிட்ட நான் என்ன சொன்னேன்..? நீ என்ன செய்து வைத்திருக்கிற…?”

அவர்கள் இருவரையும் கேள்வியாய் பார்த்தபடி… ஹேண்ட் பேகை டீப்பாயின் மேல் வைத்தாள் மிருணாளினி.

“என்னம்மா.. எதுக்கு அப்பா சத்தம் போடறாரு…?”

“அவருக்கு என்ன வேலை..? நீயேண்டி லேட்டா வர்ற…?”

“பேச்சை மாத்தாதே ரங்கம்.. அதான் உன் பொண்ணு கேட்கிறாள்ல.. பதிலைச் சொல்லு…”

ரங்கமணி பதிலைச் சொல்லாமல் கணவரை முறைத்தாள்..

‘எங்கிட்டு இருந்துடி இந்த முறைப்பை கத்துக்கிட்ட…?’

முகிலனின் கேள்வி மிருணாளினியின் மனதில் எழுந்தது… ‘ஒரு வேளை அம்மாவிடம் இருந்து அதை கற்றுக் கொண்டேனோ..?’ அவள் யோசித்தாள்.

மகளை யோசிக்க விடாமல் அவளை பஞ்சாயத்து தலைவராக்கினாள் ரங்கமணி..

“நீயே இந்த நியாயத்தை கேளுடி…”

“சொல்லுங்கம்மா.. சொன்னால்தானே எனக்கும் தெரியும்..? அதை விட்டுட்டு மொட்டையாய் நியாயம் கேட்டால் எப்படி…?”

“என் செல்போனில் பாட்டு வந்தது…”

“கம்பெனிகாரங்க போட்டு விட்ட பாட்டா இருக்கும்..”

மிருணாளினி கூறியதற்கு ஆமோதிப்பாக தலையை அசைத்தார் சுந்தரம்..

“சரியாச் சொன்னேம்மா.. அதேதான்…”

“அதுக்கென்னவாம்ப்பா…?”

“பாட்டு வந்தால் ‘ஆஃப்’ பண்ணிட்டு போனைத் தூக்கிப் போட வேண்டியதுதானே…?”

“ஆமாம்.. அதைத்தான் நாமெல்லாம் செய்வோம்…”

“இவ என்ன செய்தாள்ன்னு நீயே கேளு…”

“என்னம்மா செய்தீங்க…”

ரங்கமணி முகத்தில் அசடு வழிய…

“தெரியாத்தனமா கால் பண்ற பட்டனை அமுக்கிட்டேன்ம்மா…”

“கிழிஞ்சது போங்க.. அந்தப் பாட்டு செல்லில் ஏறிடுமே..”

“ஏறிருச்சு.. அவங்க ரீசார்ஜ் பண்ணின பணத்தை கழிச்சுட்டாங்க…”

“அடப்பாவமே.. அப்புறம்…”

“இவ சும்மாயிருக்காமல் தொணத்தினா…”

“என்னன்னு…?”

“பாட்டைக் கட் பண்ணனும்.. பாட்டைக் கட் பண்ணனும்னு என் உயிரைப் போட்டு எடுத்தா…”

“கஸ்டமர் கேர் சர்வீஸ்க்கு போன் பண்ண வேண்டியதுதானே…”

இப்போது சுந்தரத்தின் முகத்தில் அசடு வழிய ஆரம்பிக்க… மிருணாளினி சோபாவில் அமர்ந்து தகப்பனாரின் முகத்தை விசித்திரமாக பார்த்தாள்.

“என்னப்பா…?”

“அவரையேண்டி கேட்கிற…? என்கிட்டக் கேளு.. அதைச் சொல்றேன்…”

“என்னாச்சும்மா…?”

“கஸ்டமர் கேர் சர்வீஸுக்கு என்ன நம்பரில் போன் பண்ணனும்னு இந்த மனுசரிடம் கேட்டேன்..”

“சரி.. அப்பா சொன்னாரா…?”

“சொன்னாரு.. சொன்னாரு…”

ரங்கமணி எள்ளும்.. கொள்ளும் முகத்தில் வெடிக்க.. கணவரை மகா ‘அன்பாக’ ஒரு பார்வை பார்த்து வைத்தாள்.

அந்தப் பார்வையின் அனல் வீச்சைத் தாங்க முடியாமல் திணறிப் போனார் சுந்தரம்.

அவர் முகத்தைப் பார்க்கையில் மிருணாளினிக்கு சிரிப்பு வந்து தொலைத்தது – கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டவள்..

“என்ன நம்பரைப்பா.. சொல்லி வைத்தீங்க..?” என்று தகப்பனாரைப் பார்த்துக் கேட்டாள்..

“அதுவாம்மா.. ஏதோ ஒரு ஞாபகத்தில் நூற்றியெட்டுன்னு சொல்லிட்டேன்ம்மா…”

“என்னது…” விழி விரித்தாள் மிருணாளினி..

“நூற்றியெட்டுன்னா.. ஆம்புலன்ஸ்.. பயர் சர்வீஸ்.. போலிஸ்ன்னு பேச வேண்டிய நம்பராச்சேப்பா…”

“அது உனக்குத் தெரியுது.. இவளுக்குத் தெரியலையே..”

சுந்தரம் அலுத்துக் கொள்ள.. கையிலிருந்த ரிமோட்டைத் தூக்கி சோபாவின் மேல் வீசினாள் ரங்கமணி.

“பேசாதீங்க.. எனக்கு நல்லா வந்திரும் வாயில.. ஏண்டி மிருணா நம்பரைச் சொன்ன மனுசனுக்கு அது எந்த சர்வீஸை கூப்பிற நம்பர்ன்னு தெரியாதாம். எனக்கு மட்டும் அது தெரிஞ்சிருக்குமாம். இந்த நியாயத்தை நீ எங்கேயாவது கேட்டிருக்கியா…?”

“அம்மா கேட்கிறதும் நியாயம் தானேப்பா…”

“நீயென்ன நியாயத்தை கண்டுட்டம்மா.. நான்தான் நம்பரைச் சொல்லிட்டு வெளியே போயிட்டேன்.. நான் திரும்பி வருகிற வரைக்கும் இவ இந்த சர்வீஸுக்கு போனைப் போட்டு மல்லுக்கட்டலாமா…?”

“ஐயையோ.. என்னம்மா பேசித் தொலைத்தீங்க…”

ரங்கமணி அழ மாட்டாத குறையாய் சொல்ல ஆரம்பித்தாள்…

“நான் நம்பரைப் போட்டேனா…?”

“போட்டிங்க…”

“ஹலோ.. இது நூற்றியெட்டுன்னு ஒரு பொண்ணு சொல்லுச்சு…”

“நீங்க என்ன செய்தீங்க…?”

“அதுதான் எனக்குத் தெரியுமே.. நூற்றியெட்டுன்னு  தெரியாமலா போனைப் போட்டேன்.. இப்ப நிறுத்த முடியுமா.. முடியாதான்னு கேட்டேன்..”

“கடவுளே… அப்புறம்..”

“அந்தப் பொண்ணுக்கு ஒண்ணும் விளங்கலை போல..”

“எப்படியம்மா விளங்கும்..?”

“அது கடுப்பாகிப் போயிருச்சு..”

“கடுப்பாகாமல் இருந்தால்தான் ஆச்சரியம்..”

“எதை நிறுத்த சொல்கிறேன்னு கேட்டுச்சு..”

“அதுக்கு என்ன தெரியும்..? ஐயோ பாவம்..”

“ஏன்.. அதுகூட உனக்குத் தெரியாதா…? பாட்டை நிறுத்தணும்னு நான் சொன்னேன்..”

தாயும்.. தகப்பனும் மாறிமாறிப் பேசியதிலிருந்து மிருணாளினி கிரஹித்துக் கொண்டது இதுதான்.

நூற்றி எட்டிற்கு போன் பண்ணிய ரங்கமணி.. பாட்டை நிறுத்த முடியுமா.. முடியாதா..? என்று வாக்குவாதம் செய்திருக்கிறாள்..

அவசர சர்வீஸில் இருந்த நூற்றியெட்டைச் சேர்ந்த பெண் குழம்பிப் போயிருக்கிறாள். அவள் விளக்கம் சொல்லியது ரங்கமணியின் செவிகளில் ஏறவில்லை.. ரங்கமணி கூறியது அவளது புத்தியில் ஏறவில்லை..

ரங்கமணியிடம் போராடி அலுத்துப் போன அந்தப் பெண்.. அருகிலிருந்த ஆணிடம் போனை கொடுத்து விட்டாள். அந்த நேரம் பார்த்து.. வெளியில் போயிருந்த சுந்தரம் வீட்டுக்கு திரும்பியிருக்கிறார்..

யாரோ ஒரு ஆண் மனைவியை மிரட்டுகிறான் என்ற நினைவில் அவர் ரங்கமணியிடமிருந்து போனை வாங்கி சண்டை போட ஆரம்பிக்க.. விசயம் முற்றி.. உயரதிகாரி லைனில் வரும் அளவுக்கு கொண்டு போய் விட்டிருக்கிறது.

அந்த உயரதிகாரி போனிலே காய்ச்சு.. காய்ச்சென்று காய்ச்சி விட்டார். கப்சிப்பென்று அடங்கிப் போனவராய் சுந்தரம் போனை அணைத்து விட்டு, மனைவியை சத்தம் போட ஆரபித்து விட்டார்.

“இந்த வீரத்தையெல்லாம்… போனில் பேசினவன் கிட்ட காண்பித்திருக்கணும்.. அதை விட்டுட்டு.. பெண்டாட்டி கிடைச்சாள்ன்னு என்கிட்ட வந்து வீரத்தை காட்டறாரு..”

ரங்கமணி நொடித்துக் கொண்டே உள்ளே போக.. மிருணாளினிக்கு சிரிப்பதா.. அழுவதா என்று புரியவில்லை.

“கடைசியில் அந்தப் பாட்டு கட்டாயிடுச்சா.. இல்லையா…?” என்று அவள் கேட்டதற்கு..

“இல்லை…” என்ற பதில் வந்தது..

0Shares

Reviews – Manipaayz / மன்னிப்பாயா..?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link