Chapter 11
ஆவி பறக்கும் இட்லிகளை முகிலனின் முன்னாலிருந்த தட்டில் வைத்தபடி பேச ஆரம்பித்தாள் கோகிலா…
“அக்கா போன் பண்ணியிருந்தா முகிலா…”
“டெல்லியில் குளிர் ஆரம்பிச்சுருச்சாம்மா…”
“அவ குளிரைப் பத்திப் பேச போன் பண்ணலை…”
“வேறென்னவாம்.. அத்தான் எதுவும் தகராறு பண்ணுகிறாரா…?”
“ஹஸ்பெண்டு அண்டு வொய்ப்பின் சண்டை சச்சரவுகளை பெத்தவங்க கிட்ட சொல்லி நியாயம் கேட்க வைக்கிற அளவுக்கு அகிலா குடும்பம் நடத்தலைடா…”
“அப்ப சாதாரணமாகத்தான் ஹலோ சொல்லியிருக்கு போல.. இன்னும் கொஞ்சம் சட்னி போடுங்கம்மா…”
“சாதாரணமாப் பேசவும் கூப்பிடலை…”
“அப்படியா…”
இந்தக் கேள்வியை மிகச் சாதாரணமாக கேட்ட மகனை முறைத்துப் பார்த்தாள் கோகிலா…
‘என்ன பேசிச்சு…’ என்ற கேள்வியைத் தவிர.. மற்ற அத்தனை கேள்விகளையும் கேட்டு விட்ட மகனை முறைக்க மட்டும்தான் அவளால் முடிந்தது…
மனைவிக்கும்.. மகனுக்கும்.. இடையில் நடந்த உரையாடலைக் கேட்டபடி வந்து சாப்பிட அமர்ந்த பிரகாசத்திற்கு மனைவியின் நிலைமையைப் பார்த்து சிரிப்புத்தான் வந்தது..
“என்ன கோகிலா.. ஸ்கூலுக்கு நேரமாகலையா…?” என்று வினவினார்…
“ஆமாம்.. நேரமாகுது.. நீங்களும் உங்க மகனும்.. தானாய் போட்டுச் சாப்பிட்டுக்கறீங்களா…?” எரிச்சலுடன் கேட்டாள் கோகிலா..
“செய்துட்டாப் போச்சு.. அந்தத் தட்டை கொஞ்சம் இப்படி எடுத்து வை…”
அவர் முன்னால் தட்டை வைத்தாள் கோகிலா…
“நாலு இட்லிகளை மட்டும் வைச்சுரும்மா.. நாலே நாலு இட்லிதான்…”
பல்லைக் கடித்தபடி அவர் தட்டில் இட்லிகளை பரப்பினாள்..
“சட்னியை இந்தப் பக்கம் ஊத்தி.. சாம்பாரை அந்தப் பக்கம் ஊத்து…”
கோகிலா ஊற்றினாள்.. சாப்பிட ஆரம்பித்த பிரகாசம்..
“அந்த தண்ணீர் ஜக்கை என் பக்கம் நகர்த்தும்மா…” என்றார்..
கோகிலா தண்ணீர் ஊற்றி வைத்தாள்.
“இனியும் ஏன் இங்கே நிற்கிற கோகிலா.. ஸ்கூலுக்கு கிளம்பு.. அதான் நானாய் போட்டு சாப்பிட்டுக் கிட்டிருக்கேனே…” என்று பிரகாசம் இலகுவாய் சொல்லவும்.. கோகிலாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது..
“இதுதான் நீங்களாய் போட்டுக்கிட்டு சாப்பிடும் லட்சணமா…?” அவர் முதுகில் ஒரு போடு போட்டாள்.
“பாருடா முகிலா.. உன் அம்மா என்னை அடிக்கிறா…” மகனிடம் அவர் புகார் கூற.. முகிலன் நிமிர்ந்து தாயைப் பார்த்து சிரித்தான்.
“அடிக்காம என்னப்பா செய்வாங்க.. ரெண்டு பேரும் ஒரே ஸ்கூலில் வொர்க் பண்ணுகிறீங்க.. நீங்க மட்டும் முதலில் கிளம்பி வந்து உட்கார்ந்துக்கிட்டு அவங்களை சர்வ் பண்ண வைத்தா.. அவங்க கோவப்பட மாட்டாங்களா…?”
“அவ கோவம் அதுக்காக இல்லைடா…”
“வேற எதுக்காம்…?”
“அகிலா என்ன விசயமாக போன் பண்ணினான்னு உன்னைக் கேட்க வைக்க முடியலைங்கிற கோபம்தான் அவளுக்கு…”
முகிலன் மௌனித்தான். அவனுக்குத் தெரியும்.. அந்தக் கேள்வியைக் கேட்டால் என்ன பதில் வருமென்று..
“பேசமாட்டானே.. இப்ப மட்டும் இவனுக்கு வாயடைத்து விடுமே…” கோகிலா பொறுமினாள்..
“பொறு கோகிலா.. நீயும்தான் காலையிலே இந்தப் பேச்சை ஆரம்பிக்கனுமா…? அவனே, வேலைக்குப் போகிற அவசரத்தில் இருக்கிறான்.. ‘அரிபரியா’ இந்த விசயத்தைப் பேசாம.. நிதானமாப் பேசக் கூடாதா..?”
“எப்ப பேசலாம்கறிங்க…?”
“சாயந்திரம் பேசலாமே…”
“இவன் சாயந்திரம்தான் வீட்டுக்கு வருகிறானா…?”
பிரகாசத்தினால் பதில் பேச முடியவில்லை.. முகிலன் இரவு வெகு நேரமாகிய பின்னால் தான் வீட்டுக்கு வந்து சேர்வான்…
“பேசமுடியலைல்ல.. பதில் சொல்ல முடியலைல்ல.. அப்புறம் காலை நேரத்து அரிபரியில் நான் இதையும் சேர்த்துப் பேசாம என்ன செய்வேன்…?”
அதற்குள் சாப்பிட்டு முடித்து விட்டிருந்த முகிலன் கை கழுவ எழுந்தான்…
“என்னடா எழுந்துட்ட…?”
“சாப்பிட்டுட்டேன்ப்பா…”
“அம்மா இன்னும் சாப்பிடக்கூட ஆரம்பிக்கலை முகிலா…”
“சாப்பிடச் சொல்லுங்க…”
“ஏன் அதை நீ சொல்ல மாட்டாயா..? உன் முன்னாலதானே அவ நிற்கிறா…?”
முகிலன் தன் முன்னால் முறைத்துக் கொண்டிருந்த கோகிலாவைப் பார்த்தான்.
எதுவுமே நடக்காததைப் போன்ற இயல்பான குரலில் “சாப்பிடுங்கம்மா…” என்றான்.
“முதலில் நான் சொல்லவந்ததைக் கேளு…” கண்டிப்பான குரலில் கூறினாள் கோகிலா..
“கோகிலா நீ செய்கிறது சரியில்லை..” பிரகாசம் ஆட்சேபித்தார்..
மகனை முறைத்துக் கொண்டிருந்தவளின் பார்வை கணவனின் பக்கம் திரும்ப.. பிரகாசத்தின் தொண்டையில் இட்லி சிக்கிக் கொண்டது…
“எது சரியில்லைன்னு சொல்கிறீங்க…?” கோகிலா அமைதியான குரலில் வினவினாள்..
அந்த அமைதிக்குப் பின்னால் இருக்கும் அச்சுறுத்தலை உணராதவரா பிரகாசம்..?
“அதில்லை கோகிலா.. பாவம்.. பிள்ளை.. சாப்பிட்ட கையோடு நிற்கிறான்.. எச்சில் கையை கழுவக்கூட விடாமல் வழியை மறிச்சா எப்படிம்மா…?”
“ஓ.கே.. நான் வழியை மறிக்கலை.. ஹால் சோபாவில் வெயிட் பண்றேன்.. இவனை கையை கழுவிட்டு அங்கே வரச் சொல்லுங்க..”
கோகிலா போன வேகத்தில் அவளது கோபத்தின் பரிமாணம் தெரிந்தது. தந்தையை ஏறிட்ட முகிலனின் நெற்றியில் கேள்விச் சுருக்கம் இருந்தது…
“என்னப்பா…?”
“உன் அக்கா டில்லியில் ஒரு பெண்ணைப் பார்த்து வைத்திருக்கிறாளாம்..”
“எதுக்காம்…”
“இதென்னடா கேள்வி… நீ கல்யாணம் பண்ணிக்கத்தான்..”
“எனக்கு இப்பக் கல்யாணம் வேண்டாம்…”
“ஏன்…?”
“கொஞ்சம் நாள் ஆகட்டும்…”
“இதுதான் கல்யாண வயசு முகிலா…”
“ப்ளீஸ்ப்பா.. டோன்ட் டிஸ்டர்ப் மி…”
“இதை உன் அம்மாவிடம் போய் சொல்லு…”
முகிலன் சொன்னான்.. கோகிலாவின் விழிகளில் அப்பட்டமான குற்றச்சாட்டு தெரிந்தது..
“இது இருபதாவது பெண் முகிலா…”
“புரியலைம்மா…”
“நான் பெண் பார்த்து நீ பெண் பார்க்க வராமலேயே வேண்டாம்ன்னு ரிஜக்ட் பண்ணின இருபதாவது பெண்..”
“நீங்கதான் டைமை வேஸ்ட் பண்றீங்கம்மா…”
“இதை நீ எனக்குச் சொல்கிறாயா…?”
“ஆபீஸுக்கு டைம் ஆகிடுச்சு.. உங்களுக்கும் ஸ்கூல் கிளம்பணுமே போகலை…?”
“எனக்கு வழி தெரியும்…”
காலையிலேயே தாயின் கடுங்கோபத்திற்கு ஆளாக வேண்டிய நிலை வந்து விட்டதை உணர்ந்தவனாக முகிலன் அலுவலகம் செல்லும் சாக்கில்.. தாயின் கோபத்திலிருந்து தற்காலிகமாக தப்பித்தான்.
Reviews – Manipaayz / மன்னிப்பாயா..?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.