Chapter 09

0Shares

நையாண்டி ததும்பிய அவன் பார்வையும், சிரிப்பும் திவ்யாவைக் குழப்பின.. எவன் இவன்..? என்று புரியாமல் அவள் மற்றவர்களுடன் சங்கமித்து கல்யாண வீட்டிற்குள் சென்றாள்.. அவள் எங்கு சென்றாலும்.. நிழல் போல பின் தொடர்ந்தவனின் பார்வையில் அவளது புருவங்கள் முடிச்சிட்டன..

“தம்பி யாரு..?”

அவள் மனதிலிருந்த கேள்வியை பட்டம்மாள் பாட்டி கேட்டு வைத்ததில் திவ்யாவுக்கு சந்தோசமாகிப் போனது..

“மன்மதன்..”

திவ்யாவின் ஊடுறுவதைப் போல பார்த்தபடி அவன் சொன்ன பதிலில் அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது..

“இதப்பாருடா.. தம்பி எந்த ஊரு ரதிக்காக காத்திருக்காப் புலயாம்..?”

பட்டம்மாள் பாட்டி இடக்காக கேட்டதில் அங்கிருந்த பெண்கள் கூட்டம் கொல்லென்று சிரித்து அவன் கவனத்தை கவர முயன்றது.. அதில் ஆச்சரியமான ரம்யா.. திவ்யாவின் காதோரமாக..

“இவன் பண்ற அளப்பறையைப் பாத்தா இவனுக்கு அப்படி ஒரு நினைப்பு மனசில ஓடுது போலதான் இருக்குடி திவ்யா..” என்றாள்..

‘இருக்கும்.. இருக்கும்..’

திவ்யா அவனைப் பார்க்காமல் வேறு திக்கில் பார்த்தாள்.. வந்த இடத்தில் இதுபோன்ற அளப்பறைகளை சகித்துக் கொள்ள வேண்டுமா என்றிருந்தது அவளுக்கு..

அவனோ.. மன்மதனின் மறுபிறப்பு போல ஸ்டைலாக போஸ் கொடுத்து நின்று அவளையே தூண்டித் துழாவிப் பார்த்தபடி பட்டம்மாளுக்கு பதில் கொடுத்தான்..

“ஏன் பாட்டி.. உங்க ஊரில ரதி இல்லையா..?”

“அப்படிப் போடு பேராண்டி.. ஆக.. தம்பி எங்க ஊரு ரதிக்காகத்தான் இந்த இடத்திலேயே ஆலவட்டம் போடுதாக்கும்..?”

“அப்படித்தான் வைச்சுக்கங்களேன்..”

பூடகமாகச் சொல்லிவிட்டு அவன் சென்றுவிட.. பெண் வீட்டைச் சேர்ந்த வயதுப் பெண்களின் மத்தியில் அவன் மனதைக் கவர்ந்த ரதி எவளாக இருக்கக்கூடும் என்ற பேச்சுக் கிளம்பியது..

“சொர்ணா.. பேக்கில இருந்து கொஞ்சம் பவுடர எடுத்து முகத்தில பூசிக்கம்மா..”

சொர்ணாவின் அம்மா மகளை அவன் மனம் கவரும் ரதியாக்கும் முயற்சியில் ஈடுபட்டாள்..

“கன்றாவிடி.. இதையெல்லாம் காது கொடுத்துக் கேட்கணுமுன்னும்.. கண் கொண்டு பார்க்கனுமுன்னும் நம்ம தலயில விதிச்சிருக்கு..”

திவ்யா தலையில் அடித்துக் கொண்டதை ஆமோதித்தாள் ரம்யா.. கூடவே ஒரு சந்தேகமும் கேட்டாள்..

“ஆமா திவ்யா.. ஆளு பாக்க கொஞ்சம் டக்கராத்தான் இருக்கான்.. இவன் மனசை இம்ப்ரெஸ் பண்ணின அந்த ரதி எவளா இருக்கும்..?”

“யாருக்குத் தெரியும்..?” அசுவராஸ்யமாகச் சொன்னாள் திவ்யா..

மணப்பெண்ணை அலங்கரித்து நலங்கு வைக்க மேடைக்கு அழைத்து வந்து விட்டார்கள்.. திருமணமான பெண்கள் எல்லாம் நலங்கு வைக்கப் போய் விட.. வயதுப் பெண்கள் கல்யாண வீட்டில் கண்காணிக்க ஆளின்றி சுதந்திரப் பறவையாக உலா வந்தார்கள்..

“காத்தாட வாசப்பக்கம் போகலாமா திவ்யா.. இங்க கசகசன்னு இருக்க..”

ரம்யா அனத்தினாள்.. திவ்யாவிற்கும் வியர்த்துக் கொட்டியதால் அவள் மறுப்புக் கூறாமல் தங்கையுடன் வாசலுக்கு வந்து அங்கே போடப் பட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றை இழுத்துப் போட்டு உட்கார்ந்தாள்..

“பசிக்குதுடி.. இதுக எப்ப நலங்கு வைச்சு முடிச்சு.. எப்ப பந்தியப் போடப் போறாங்களோ.. இந்த அம்மாவுக்கு பயந்து இங்க வந்து மாட்டியிருக்கோம்..”

“சும்மா.. நொய்.. நொய்யுன்னு அனத்தாதடி.. சொந்த பந்தம்ன்னா இப்படித்தான் இருக்கும்.. எல்லா இடத்திலயும் எல்லாமும் கிடைச்சிராது.. நாமதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கனும்..”

“பசியை எப்படிடீ அட்ஜஸ்ட் பண்ணிக்கிறது..?”

ரம்யாவின் பிடுங்கலில் பக்கத்தில் எங்காவது பன்னும் டீயும் கிடைக்குமா என்று விசாரித்து விடலாமா என்ற தலை வேதனைக்கு ஆளானாள் திவ்யா..

“இந்தாங்க..”

அவர்கள் முன்னால் நீட்டப்பட்ட தட்டுக்களில் வடையும் சேகரியும் இருந்தன.. யாரென்று கூடப் பார்க்காமல் ரம்யா தட்டைப் பிடுங்கி அதை மின்னல் வேகத்தில் காலி செய்ய ஆரம்பித்தாள்.. திவ்யா மட்டும் தட்டை வாங்கிக் கொள்ளாமல் யாரென்று பார்த்தாள்.. அவள் நினைத்து சரியாக இருந்தது.. அந்த ‘மன்மதன்’ தான் அங்கே நின்றிருந்தான்..

‘இவனா..?’ அவள் பார்வையில் அவன் கண்களில் மின்னல் வெட்டியது..

அதற்குள் தட்டை அசுர வேகத்தில் காலி செய்திருந்த ரம்யா.. திவ்யாவுக்கான தட்டையும் வாங்கிக் கொண்டு.. 

“தேங்க்ஸ் மிஸ்டர் மன்மதன்..” என்றாள்..

‘இவ இருக்காளே..’ திவ்யா தலையில் கை வைத்தாள்..

இரண்டு தம்ளர்களில் காபி கொண்டு வந்த ‘அவன்..’

“இந்தக் காபியையாவது உங்க அக்காவை குடிக்க விடுவீங்களா.. இல்ல.. இதையும் மிச்சம் வைக்காம காலி பண்ணிருவீங்களா..?” என்று வெகு வினயத்துடன் ரம்யாவிடம் கேட்டு வைத்தான்..

“பிழைத்துப் போகட்டும்.. காபியை அவ கிட்டயே கொடுங்க..” ரம்யா பெருந்தன்மையாக அனுமதித்தாள்..

“உங்களுக்கு ரொம்பவும் தாராள மனது..”

அவனது வஞ்சகப் புகழ்ச்சியில் காபியைக் குடித்துக் கொண்டிருந்த ரம்யா பார்வையை மேலாக உயர்த்தி.. தம்ளரின் விளிம்பின் விழியாக அவனைப் பார்த்தபடி..

“இப்படிப் பட்டினி போட்டு தாராள மனசுக்காரியா என்னை மாத்தி விட்டுட்டாங்களே இந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க.. அவங்ககிட்டப் போயி இந்தப் பாராட்டைச் சொல்லுங்க.. ஆக்சுவலா.. இந்த மொத்த கிரெடிட்டும் அவங்களத்தான் போய் சேரனும்.. ஆத்தாடி.. கல்யாணத்துக்கு வந்தவங்களுக்கு முதல்ல பந்தியைப் போடாம.. நலங்கு வைக்கிறாங்க.. வைக்கிறாங்க.. விடிய விடிய நலங்கு வைச்சுக்கிட்டே இருப்பாங்க போல.. கொலைப்பசி.. இதில அக்கா பங்குன்னு விட்டுக் கொடுக்க எப்படித் தோணும்..?” என்று நியாயம் கேட்டாள்..

“நிஜம்தான்..” அவனும் உண்மையை ஒப்புக் கொண்டபடி திவ்யாவைப் பார்த்தான்..

‘போடா..’ திவ்யா வாசலைப் பார்த்தாள்..

பட்டுப் பாவாடையும் சட்டையுமாக 

இரண்டு சிறுமிகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.. பட்டுப் புடவை சரசரக்க மல்லிகைப் பூவின் வாசனையுடன் பெண்கள் அவர்களைக் கடந்து வீட்டுக்குள் போனார்கள்.. வேட்டியை மடித்துக் கட்டியபடி ஆண்கள் பரபரப்புடன் இங்கும் அங்கும் அலைந்தபடி இருந்தார்கள்..

சிலுசிலுவென வீசிய தென்றல் காற்றில் புழுக்கம் மறைந்து போனதைப் போல உணர்ந்தாள் திவ்யா..

“காலங்களில் அவள் வசந்தம்..

கலைகளிலே அவள் ஓவியம்..

மாதங்களில் அவள் மார்கழி..

மலர்களிலே அவள் மல்லிகை..”

ஒலிபெருக்கியில் ஒலித்த பழைய பாடல்கூட அவளது மனநிலையை உணர்ந்ததைப் போல வெகு இனிமையாக அவளைத் தாலாட்டியது..

பாடலுடன் இணைந்து பாடியபடி திரும்பியவள்.. அவளையே அவன் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து பாடுவதை நிறுத்தி விட்டாள்.. மனதில் மெலிதான கோபம் எழுந்தது..

‘மன்மதனாம்.. குரங்கு..’ முகத்தைத் திருப்பிக் கொள்ள அவள் முனைந்த போது.. அவன் சிடியில் பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருந்த ஆளிடம் எதையோ சொல்வதைக் கண்டாள்..

அவளையே பார்த்தபடி அவன் முணு முணுத்ததில்..

‘என்னவாக இருக்கும்..?’ என்று அவள் மனம் குறுகுறுத்தது..

“நின்னையே ரதியென்று..

நினைக்கிறேனடி கண்ணம்மா..”

பாடல் ஒலிக்க ஆரம்பித்ததில் அதிர்ந்து போனவள் அப்போது தான்  அவனை உணர்ந்தாள்..

‘இவனை இதுக்கு முன்னாலே நான் பார்த்திருக்கேனில்ல..’

எப்போது அவனைப் பார்த்தாள் என்பதும் நினைவுக்கு வந்து விட்டதில் அவள் பல்லைக் கடித்தாள்..

‘ஓஹோ..! கதை அப்படிப் போகுதாமா..? ஐயாவை மன்மதன்னு நினைப்பான்னு நான் கேட்டுட்டதாலதான் இவன் பேரை மன்மதன்னு சொல்லிக்கிட்டானா..? இங்க எந்த ரதியும் உன்னைத் தேடிக்கிட்டு நிக்கலைன்னு நான் சொன்னதுக்காகத்தான் நின்னையே ரதியென்று நினைக்கிறேன்னு பாட்டைப் போட வைக்கிறானா..?’

அவள் பார்த்த பார்வையில் தெரிந்த மாற்றத்தில் அவனை அவள் உணர்ந்து கொண்டாள் என்பதை உணர்ந்து கொண்ட சுரேஷ் உற்சாகமானான்..

0Shares

Reviews – Mannavan Vandhanadi Thozhi! / மன்னவன் வந்தானடி தோழி!

5.0
5.0 out of 5 stars (based on 1 review)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

Amazing Book! Fun and Enjoyable to read

February 7, 2026

Fun book to read

PVG

Response from MR Novels

Glad that you liked it!

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link