Chapter 18

0Shares

சொட்டு சொட்டாய்

மழைத்துளி விழுந்து…

உன் மனதை சொல்லியது..

ஸ்ரீதேவி சொல்லியதைக் கேட்டதும்…

“இதுதான் விசயமா..? எனக்கு அப்பவே தெரியுமே..” என்றாள் லலிதா…

“நான் கூட இவ ரகசியமாய் பேசவும் என்னவோ ஏதோன்னு நினைச்சிட்டேன்.. இதைச் சொல்லத்தான் இவ்வளவு பில்ட் அப் கொடுத்தியா..?” இலகுவாக சொன்னாள் நிஷா..

“நீ வேற.. இதுக ரெண்டும் சயின்ஸ் மேல இன்ட்ரெஸ்ட் வந்திருச்சுன்னு என் ஹஸ்பெண்டோட சயின்ஸ் ஸ்கூலில உட்கார்ந்துக்குவாங்க.. பேச்சு பேச்சாய் இருக்க பார்வையிலேயே ஒருத்தரையொருத்தர் சாப்பிட்டுக்குவாங்க.. நாம கூட இந்த அளவுக்கு காதல் பண்ணலைடி உமான்னு என் ஹஸ்பெண்ட் சொல்லுவார்.” உமா மஹேஸ்வரி கூறினாள்..

“அப்போ.. உங்களுக்கும் விசயம் தெரிஞ்சிருக்கு..”

“உனக்குத் தெரிஞ்சிருக்கும்போது எங்களுக்கும் தெரியாம இருக்குமோ..? என்ன ஒண்ணு இப்ப வெளிப் படையா பேசறதைப் போல இதுக்கு முன்னால இதை பத்தி நாங்க ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கல.. உன்னையும் சேர்த்துத்தான் சொல்றேன்..”

“உண்மைதான் லலிதா.. நான் எப்பவோ இதை ஸ்மெல் பண்ணிட்டேன்.. ஆனாலும், இது காதல் விவகாரம்.. இரண்டு பேருமே நம்ம அப்பார்ட்மென்டில தான் குடியிருக்காங்க.. இது கல்யாணத்தில முடியுமா..? முடியாதான்னும் நமக்கு எதுவும் தெரியாது. அஞ்சனா 

வேற தாயில்லாத பெண்ணாப் போயிட்டா.. அவளோட அப்பாவுக்கு விசயம் தெரிஞ்சா துடிச்சுப் போயிடுவாரு.. பிரதாப்போட அப்பாவைப் பத்திச் சொல்லவே வேணாம்.. வீட்டையே ரெண்டாக்கி விடுவாரு.. அதோட அவர் வீட்டிலயும் கல்யாண வயசில ப்ரீதி இருக்கா.. இதனாலே அவ கல்யாணத்திலே பிரச்னை வந்தாலும் வரலாம்.. நாலையும் யோசிச்சுத்தான் நான் உங்ககிட்ட எதையும் பேசிக்கல..” ஸ்ரீதேவி விரிவாகப் பேசினாள்..

“நீ யோசிச்சதைப் போலத்தான் நாங்களும் யோசிச்சோம்..” என்றாள் நிஷா..

“இப்ப என்ன பண்றது..? இவ மாப்பிள்ளை வீட்டாளுகளை துரத்தி விடற வரைக்கும் போயிட்டாளே..”

“அதைச் சொல்லு உமா.. நான் கூட இவ சாதுவா வளைய வரவும்.. பாவம் காதல் விசயத்தை அப்பாகிட்ட சொல்ல முடியாம கல்யாணத்துக்கு தலையை ஆட்டிடான்னு நினைச்சேன்.. கடைசியில பார்த்தால் கள்ளி.. இப்படிச் செஞ்சு வைச்சிட்டா…”

லலிதாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.. அவளறிந்த அஞ்சனா பயந்தவள், தகப்பனாருக்கு எதிராக சிறுத் துரும்பைக்கூட கிள்ளிப்போட யோசிப்பவள்..

“அவளா இதைச் செய்தாள்..?”

“ஆனாலும் அவளுக்கு இத்தனை துணிச்சல்..! ஆகாது” நிஷா ஆதங்கப்பட்டாள்..

“வேறென்ன செய்திருக்கணும்னு நினைக்கிற நிஷா..?”

“காதலிச்சவனை விட்டுட்டு அப்பா சொன்ன மாப்பிள்ளைக்கே கழுத்தை நீட்டியிருக்கனும்னு நினைக்கறியா..?”

“அவ நினைப்பா உமா.. முகம் பார்க்காமலே கல்யாணம் செய்துக்கிட்ட சமத்துப் பொண்ணில்ல.. அப்படித்தான் நினைப்பா..”

“இவ முகத்தைப் பாக்காததில ஒரு குறைவும் இல்லை ஸ்ரீதேவி.. இவளோட ஹஸ்பெண்ட் போல அருமையான மனிதர் லைஃப் பார்ட்னரா கிடைச்சிருக்காரே..”

லலிதாவின் பேச்சை ரசித்துச் சிரித்தாள் நிஷா.. அவர்களின் பேச்சு வேறு திக்கில் திரும்பி விட்டது.. கடைசியில் அவர்கள் கலையும் சமயத்தில் என்ன செய்யலாம் என்று கூட்டு ஆலோசனையை நடத்தினார்கள்.

“விட்டுப் புடிப்போம்” என்றாள் ஸ்ரீதேவி..

“அதைத்தான் நானும் நினைச்சேன்.. இது காதல் விவகாரம்.. இத்தனை நாளாய்.. கண்டுக்காம இருந்ததைப் போல இனியும் இருந்துருவோம்.. அவங்க ரெண்டு பேரும் என்ன முடிவுக்கு வர்றாங்களோ வரட்டும்..” உமா கருத்து தெரிவித்தாள்..

“எனக்கும் அதுதான் தோணுது. ரெண்டு பசங்களும் நல்ல பசங்க.. அதுகளா ஒரு முடிவுக்கு வரட்டுமே… லலிதா சொன்னாள்.. ரெண்டு பக்க வீட்டையும் பார்க்க வேணாமா..” நிஷா கவலைப்பட்டாள்..

“பெரிசா ஒண்ணும் ஆகாது நிஷா.. அதோட அவங்க பெத்த பிள்ளைகளுக்கு இல்லாத கவலையும் பொறுப்புமா நமக்கு வந்திடப்போகுது..?” ஸ்ரீதேவி சமாதானப் படுத்தினாள்..

அஞ்சனாவும், பிரதாப்பும் எதுவரை போகிறார்கள் என்பதை அறியாப் பிள்ளைகளைப் போல கவனித்துக் கொண்டிருப்பது எனவும்.. உதவி தேவைப்பட்டால் உதவிக்கரம் நீட்டுவது எனவும், இல்லை இறுக்கிப் பிடிக்க வேண்டிய அவசியம் வந்தால் இறுக்கிப் பிடிப்பது எனவும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்திற்கு பின்னால் அவர்கள் அவரவரின் வீட்டுக்கு.. அவரைக்காயும் சோற்றுக்கு என்று கலைந்தார்கள்..

இது எதையும் அறியாதவர்களாக அஞ்சனாவும் பிரதாப்பும் காதல் சிறதை விரித்து காதல் வானல் பறந்துக் கொண்டிருந்தார்கள்..

“தேங்க்ஸ்..”

மறுநாளின் முன்னிரவுப் பொழுதில் மொட்டை மாடியில் தனது நன்றியைச் சொன்னான் பிரதாப்..

“எதுக்கு..?”

“உன் பெண் பார்க்கும் படலத்தை நிறுத்திட்டியே.. அதுக்கு..”

“நீங்க எதுக்காக அதுக்குப்போய் நன்றி சொல்லணும்..?”

“என் வார்த்தைக்காகத்தானே நீ அதை செஞ்ச..?”

“ஊஹூம்.. நீங்க சொல்லாம இருந்திருந்தாலும் நான் அதைத்தான் செய்திருப்பேன்.. என்னால எப்படி இன்னொருத்தர் முன்னாலே போய் நிற்க முடியும்..?”

அஞ்சனாவின் வார்த்தைகளில் உண்மை இருந்தது.. அவளைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவதாக இருந்த நாளுக்கு முதல் நாளிரவில் அவள் மொட்டை மாடியில் தனிமையில் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த நினைவில் நெகிழ்ந்து போனான் பிரதாப்..

“அஞ்சனா..” அவன் கை நீண்டு, அவள் கையைப் பற்றிய அந்த நொடியில் வானில் மின்னலின் கீற்று தெரிந்தது.. பலமான மழைச்சாரல் அவர்கள் இருவரையும் நனைத்தது..

0Shares

Reviews – Minalaga Vanthavale / மின்னலாக வந்தவளே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link