Chapter 22
மழைநீர் வழிந்து
ஓடையாக ஓடியது
என் மனதில் உன் நினைவு மட்டும்
ஓடாமல் ஏன் தேங்கியது..?
“நீ சுயநலக்காரண்டா..”
தன் அண்ணனைக் குற்றம் சாட்டினாள் ப்ரீதி..
அஞ்சனாவை அவன் குற்றம் சாட்டிய அதே வார்த்தையை அவன் பக்கம் திரும்பிய தங்கையை உற்றுப் பார்த்தான் பிரதாப்..
“என்ன..?” அவள் கடுகடுத்தாள்..
“என் சுயநலத்துக்கு காரணமே நீதான்.. நான் உன்மேல் வைச்சிருக்கிற பாசம்தான்..”
“அப்ப.. அவமேல நீ காதலை வைக்கலையா..? காதலுக்கும் ஒரு கடமை இருக்குடா..”
“என்ன நீ.. என்னையே குற்றம் சொல்ற.. நீயானா அவளை சப்போர்ட் பண்ணிப் பேசற.. அவ என்ன பேசறா தெரியுமா..?”
பிரதாப் சலிப்புடன் சொல்ல அவனை ஆழ்ந்து பார்த்துவிட்டு நிதானமாகக் கேட்டாள் ப்ரீதி..
“என்னை சொல்லியிருக்கப் போறா.. அவ வாழ்க்கையை வாழவிடாம குறுக்கே நான் வந்து நிற்கிறேன்னு சொல்லியிருப்பா..”
பக்கத்தில் நின்று கேட்டவளைப் போல ப்ரீதி சொல்லி வைக்க தங்கையை ஆச்சரியத்துடன் பார்த்தான் பிரதாப்..
“ப்ரீதி..”
“அவ இடத்தில யாரிருந்தாலும் இப்படித்தான் பேசியிருப்பாங்க.. காதலிக்கிறவளை தனியே போராட விட்டுட்டு நீ தங்கைக்கொரு கீதத்தைப் பாடிக்கிட்டு இருந்தா இப்படித்தான் தேவையில்லாம என் தலை உருளும்..”
“எனக்கு உன் கல்யாணம் முக்கியம் ப்ரீதி..”
“இதையே திருப்பித் திருப்பி சொல்றயே.. என்னிடம் சொன்னதைப் போலத்தானே அவளிடமும் சொல்லி வைச்சிருப்பே..?”
“சொன்னதோட மட்டுமில்லை.. கன்னத்தில ஓங்கி ஒரு அறையையும் விட்டுட்டேன்..”
“அடப்பாவி இதுக்கு மட்டும் உரிமை எடுத்துக்கறியே.. அந்த உரிமையை அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறதிலயும் காண்பிச்சா என்னடா..?”
“இதோ பார்.. என்னைக் கன்வின்ஸ் பண்ண டிரை பண்ணாதே.. எனக்கு உன் கல்யாணத்தில எந்தவிதப் பிரச்னையும் வரக்கூடாதுங்கிறது மட்டும்தான் முக்கியம்..”
“இதையே பினாத்திக்கிட்டு இரு.. இத்தனைக்கும் மேலே அவ திரும்பவும் ஒரு முயற்சியை பண்ணி பெண் பார்க்க வந்தவர்களை ஓட வைச்சிருக்கா.. இவங்களும் முதலில் வந்தவங்களைப் போல அவளுக்குச் சொந்தக் காரங்கதான்..”
யார்.. யாரோ அஞ்சனாவுக்கு சொந்தக்காரர்கள் என்று கூறப்படுவதில் பிரதாப்புக்கு கொஞ்சம்கூட பிடித்தமில்லை அந்த நினைவில் அவன் சுள்ளென்று எரிந்து விழுந்தான்..
“இதை நான் கேட்டேனா..?”
“இதுக்கு மட்டும் ரோசம் பொத்துக்கிட்டு வருதே.. இதை செய்கையிலயும் காண்பிக்க வேண்டியதுதானே.. டேய்.. அண்ணா..! அவளோட சொந்த பந்தம் மத்தியிலே வேற மாதிரி பேச்சுக் கிளம்பிட்டா அவளோட இமேஜே ஸ்பாயில் ஆகிடும்டா..”
“என்னத்தை ஆகிரும்ன்னு நீ இந்த அளவுக்கு பயம் காட்டற..?”
“அறிவோடதான் பேசறியா..? முதலில் மயக்கம்.. இப்ப வாந்தி.. இரண்டுக்கும் முடிச்சுப் போட்டு நம்ம பொதுஜனம் பேச ஆரம்பிச்சா அவ கதி என்னாகிறது..?”
“ஒண்ணும் ஆகாது.. ஆமாம்டா அவளுக்கு மசக்கை தான்.. அதுக்குக் காரணம் நான்தான்னு சொல்லிட்டுப் போறேன்.. இப்ப என்னாங்கிற..?”
“கிழிச்சே.. அம்மா ஒரு பழமொழியைச் சொல்வாங்க. உனக்கு அதுதாண்டா லாயக்கு..”
“என்ன பழமொழி..”
“கூரையேறி கோழி பிடிக்கத் தைரியமில்லாதவன்.. வானத்தில ஏறி வைகுண்டம் போறேன்னு சொன்னானாம்.. அந்தக் கதைதாண்டா உன் கதை..”
ப்ரீதி உசுப்பேற்றிவிட்டு போய்விட்டாள்.. “உரலுக்கு ஒரு பக்கம் இடியென்றால் மத்தளத்திற்கு எல்லாப் பக்கமும் இடியா” என்று நொந்து நூலாகிப் போனான் பிரதாப்..
ஏற்கனவே சதிஷ் அவனை பிடிபிடியென்று பிடித்து விட்டிருந்தான்.. ராமனோ அவனைப் பக்கத்தில் அமர வைத்து உபதேசம் பண்ணியே உயிரைக் குறைத்திருந்தான். ஸ்ரீதர் காதலுக்கான கடமையை வலியுறுத்தியிருந்தான்.. சபியுல்லா கோதண்டத்தின் பாவம் பார்க்க சொல்லி அறிவுறுத்தியிருந்தான்.. இது எதையும் அறியாத பிரம்ம நாயகமோ அஞ்சனாவுக்கு ஒரு பொறுப்புமில்லையென்று அவளை அர்சித்துக் கொண்டிருந்தார்.. கோதண்டம் இதற்கெல்லாம் ஒரு படி மேலே போனவராக தன் மகளைக் குறித்த கவலையை அவனோடு பகிர்ந்து கொண்டிருந்தார்.
நாலா பக்கமும் வந்த தாக்குதலினால் நிலை குலைந்து போயிருந்தான் பிரதாப்.. பேசாமல் காவியை கட்டிக்கொண்டு சன்யாசம் வாங்கிக்கொண்டு விடலாமா என்றுகூட யோசிக்க ஆரம்பித்திருந்தான்.. இதைப் பற்றி அஞ்சனாவிடம் பேசலாமென்றால் அவள் அடி வாங்கிய நாளிலிருந்து அவனுடன் பேசுவதையும் தனிமையில் சந்திப்பதையும் முற்றிலுமாகத் தவிர்க்க ஆரம்பித்திருந்தாள்.
‘கோபத்தில ஒரு அப்பு அப்பினா.. அதுக்காக இவ முகத்தை திருப்பிக்கிட்டு போயிருவாளா..? அடிக்கக்கூட எனக்கு உரிமையில்லையா..?’ பொருமித் தவித்தான்..
இந்த நிலைமையில் புது வருடம் வந்தது.. அந்த நாளுக்கான கொண்டாட்டத்தை டிசம்பர் மாத இறுதியிலேயே அந்த அபார்ட்மெண்ட்வாசிகள் ஆரம்பித்து விட்டார்கள்..
ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் பெயர்கள் எழுதப்பட்டு சுருட்டிப் போடப்பட்டிருந்தன.. ஆளுக்கொரு பெயராக ஆறு குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளும் எடுக்க வேண்டும்.. அந்தச் சீட்டிலுள்ள பெயரில் இருப்பவர்களுக்கு அவர்கள் தான் ‘அம்மா’ புது வருடத்திற்கு ‘அம்மா’ தனது குழந்தைக்கு அவர்களுக்குத் தெரியாமல் ஒரு பரிசைக் குடுக்க வேண்டும். அதை ஒளிந்திருந்து கண்டுபிடிக்கும் குழந்தை தனது அம்மாவிற்கு புது வருடத்தன்று ஒரு பரிசை கொடுக்க வேண்டும். கண்டுபிடிக்க முடியாவிட்டால் அம்மா வென்றதாக அறிவித்து விடுவார்கள்..
“இந்த விளையாட்டை ஸ்ரீதேவி ஆன்ட்டிதான் கண்டு பிடிச்சாங்க.. புதுவருசத்தன்னைக்கு எங்க அபார்ட் மெண்டே கோலாகலமாக இருக்கும். நிறைய போட்டிகளை நடத்துவோம். ஜெயிச்சவங்களுக்கு பரிசு கொடுப்போம்.. மதியத்துக்கு பஃபே டைப்பில் அண்ணாமலை ஹோட்டலில்லிருந்து சாப்பிடுவோம். ஈவினிங் எல்லோருமா சேர்ந்து சினிமா பார்ப்போம்..” ஆயிஷா அஞ்சனாவிடம் விவரித்தாள்..
Reviews – Minalaga Vanthavale / மின்னலாக வந்தவளே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.