Chapter 11

0Shares

நதியோரம் நடந்தபோது

நான் என்ற நினைவு போகும்

தண்ணீர் போல் மனமிருந்தால்

தாகம்தான் ஏன் தோன்றும்?

…நதியோரம் நான் நடந்த போது…

முடிவு எடுத்த பின் கணநேரம் கூட வித்யா யோசிக்க வில்லை.. கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் பண்ணிய கம்பெனிக்கு உடனடியாக வேலையில் சேர முடியாதென்றும் ஒரு வருடம் அவகாசம் கொடுக்க வேண்டியும் ஒரு பதிவுத் தபால் அனுப்பினாள்.. நிச்சயம் தனக்காக அந்த வேலை காத்திருக்கும் என்ற நம்பிக்கை கொள்ளாவிடினும் தனது தேர்வு முடிவு வெளியான பின் தன் மதிப்பெண் அதைப் பெற்றுத் தரக்கூடும் என்று எண்ணினாள்.. பார்த்துக் கொண்டிருந்த வேலையை ராஜினாமா பண்ணினாள்.. தனது ஜி.பி.எப். மற்ற பிடித்த தொகைகளை அனுப்ப வேண்டிய முகவரியாக பூர்ணிமாவின் மணிமுத்தாறு கிராம முகவரியைக் கொடுத்தாள்..

தனது சேமிப்புப் பணத்தை போஸ்ட் ஆபிஸில் கிஷான் விகாஸ் பத்திரங்களில் முதலீடு செய்து பத்திரமாக கையில் எடுத்துக் கொண்டாள்.. பின்னாளில் வேலை கிடைக்க தாமதமானால் அவை உதவும் என்று யோசித்துச் செயல்பட்டாள்.. அவளது தாயின் நகைகளில் பத்து பவுன் விற்றது போக மீதமிருந்த பதினைந்து பவுன் நகையையும் அவளது ஊதியத்தில் வாங்கிய இரண்டு, மூன்று சிறிய நகைகளையும் ஒரு பெட்டியில் பத்திரப்படுத்தி எடுத்துக் கொண்டாள்..

மற்றபடி அவளது துணி வகைகள் நான்கு பெட்டிகளில் அடைபட்டு விட்டன.. அவளது நகைகள்.. சான்றிதழ்கள் அடங்கிய சிறு பெட்டியை அந்தப் பெட்டிகளில் துணிகளுக்கு அடியில் வைத்துக் கொண்டாள்.

பூர்ணிமாவின் பெட்டிகள் பல நரேந்திரனின் காரில் சென்று விட்டன.. மீதமிருந்தவைகளோ ஐந்து பெட்டிகளில் அடங்கி விட்டன.. வித்யாவுடைய பெட்டிகளையும் பூர்ணிமாவின் பெட்டிகளையும் காரின் டிக்கியில் அடுக்கிய சதாசிவம் கண்ணம்மாவின் பெட்டிகள் இரண்டையும் கடைசியில் அடுக்கி டிக்கியை மூடிப் பூட்டினார்..

“சரி தாத்தா.. அண்ணன் சொன்னபடி நம் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு நீங்கள் கிளம்பி வந்து விடுங்கள்.. வீட்டை அதுவரை பத்திரமாய் பார்த்துக் கொள்ளுங்கள்..” என்று சின்னய்யனுக்குக் கட்டளை பிறப்பித்த பூர்ணிமா காரின் பின் பக்கக் கதவைத் திறந்து விட்டு வித்யாவைப் பார்த்து, “ஏறுடி” என்றாள்..

காரில் ஏறுமுன் அந்த வீட்டை ஓர் முறை திரும்பிப் பார்த்தாள் வித்யா.. மீண்டும் ஓர் முறை அந்த வீட்டைப் பார்க்க முடியுமா என்று எண்ணமிட்டவள் கண் கலங்கியது.

‘வீடு என்பது எது..?’ அமைதியையும் நிம்மதியையும் பாதுகாப்பையும் வழங்குவது.. பட்டினியாய் கிடந்தாலும் தன் வீட்டில் கிடந்து விட்டால் அந்தத் துன்பம் கூட பாதிக்காது.. வீடு என்பது கல்லாலும்.. சிமெண்டாலும் கட்டப்பட்டதல்ல.. அன்பாலும்.. பாசத்தாலும் நம்முடன் பிணைந்திருப்பது.. அந்தப் பாசத்தை அவளைப் பெற்றவரின் வீடு தரவில்லை.. அங்கே அவளுக்கு எந்தவிதச் சொந்தமும் இல்லை.. இது பூர்ணிமாவின் வீடு.. ஆனால் இந்த நான்கு வருடங்களாக அவளுக்கு முகவரியைத் தந்தது இந்த வீடு.. அவளுக்காக கதவு திறந்து அவளை உள் வாங்கிக் கொண்ட தாயின் மடி இது..

“என்னடி வீட்டையே முறைச்சுக்கிட்டு நிற்கிற..? காரில் ஏறு..” பூர்ணிமா அவளை உலுக்கினாள்.. அவள் காரில் ஏறிக் கொண்டாள்.. பூர்ணிமா அவளருகில் அமர்ந்து கொள்ள கண்ணம்மா முன் பக்கம் சதாசிவத்தின் அருகில் அமர்ந்து கொண்டாள்.. கார் கிளம்பியது.. சென்னை மாநகரை பின்னுக்குத் தள்ளி விட்டுப் பறந்தது..

அன்று ஆயகுடியில் பிறந்து வளர்ந்தவள் அதைத் துறந்து சென்னைக்குப் படிக்க வந்தாள்.. இன்று படிப்பை முடித்து விட்டு சென்னையைத் துறந்து முன் பின் கேட்டறியாத, பார்த்தறியாத மணிமுத்தாறுக்குப் போகிறாள் நாளை..?

வாழ்க்கைப் பயணத்தில் ஏதேனும் ஓர் ஊரிலாவது நிலைத்து வாழக் கொடுத்து வைக்குமா அவளுக்கு..?

வழியில் மதுரையில் ஒரு ஹோட்டலில் மதிய உணவை முடித்தார்கள்.. இரவு உணவு திருநெல்வேலி ஹோட்டலில் இரவு மணி பத்தைத் தொடும்போது மணி முத்தாறு என்ற அந்த ஊரை நெருங்கி விட்டதாக பூர்ணிமா கூறினாள்..

கார் ஓடிக் கொண்டிருந்த பாதையை ஒட்டி வெள்ளி ரிப்பன் போல் நதி ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.. ஆற்றோரக் காற்று உடல் தொட்டு விளையாட வித்யா ஆவலாய் எட்டிப் பார்த்தாள்..

“இது என்ன ஆறுடி பூர்ணிமா..”

“இங்கே இது மணிமுத்தாறு.. கொஞ்ச தூரம் போனால் பாபநாசம் ஆறு.. இங்கே பால்ஸ் இருக்கு தெரியுமா..?”

“அருவியா.. இங்கேயோ..?”

“இங்கேதான்.. எங்கள் வீட்டிலிருந்து நடந்து போகக் கூடிய தூரத்தில்தான் அருவி இருக்கிறது..”

“இந்த ஆறு கூட உன் வீட்டோரம் ஓடுமா..?”

“ஆற்றங்கரையில்தான் மணிமுத்தாறு ஊரே உள்ளது.. எங்கள் வீடும் ஆற்றங்கரையில்தான் கட்டப் பட்டிருக்கிறது.. வீட்டின் பின்பக்கம் ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது..”

வித்யா இயற்கையை ரசிப்பவள்.. ஆறு ஓடும் ஊரில் அவள் வசிக்கப் போகிறாள் என்றதும் மகிழ்ந்து போனாள்.. புண்பட்ட அவள் உள்ளத்திற்கு மருந்திடுவது போல் அமைதியாய் ஆறு உடன் வந்து கொண்டிருந்தது..

நகரமும் இல்லாமல் கிராமமும் இல்லாத அந்தப் பெரிய ஊருக்குள் கார் சென்று விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த பிரம்மாண்டமான மாளிகையின் நுழைவாயிலில் நுழைந்தது.. கேட்டிற்கும் வீட்டுக்கும் இடையே அரை கிலோ மீட்டர் தூரமிருக்கும் போலிருந்தது. வீடுவரை அகலமாய் சிமெண்ட் பாதை ஓடியது.. பாதையின் இரு பக்கமும் அரை வடிவமாய் செங்கல் பதிக்கப்பட்டு அலங்கார விளக்குத் தூண்கள் நின்று கொண்டிருந்தன.. பாதையின் நடுவில் வட்டமான அலங்கார செய்நீருற்று அமைக்கப்பட்டு அதன் இரு பக்கமும் பாதை பிரிந்து ஓடி வீட்டின் முகப்பிலிருந்த பிரமாண்டமான போர்டிகோவில் முடிந்தது.. அந்த விசாலமான போர்டிகோவில் ஏறக்குறைய இருபது கார்களுக்கு மேலேயே நிறுத்தலாம் போல இருந்தது.. கார் போகும் பாதையின் இரு பக்கமும் பூச்செடிகளும், பழமரங்களும் நிறைந்த தோட்டம் அமைந்திருந்தது..

நீண்ட சிமெண்ட் பாதையில் வழுக்கிக் கொண்டு சென்ற கார் போர்டிகோவில் ஏற்கெனவே நின்று கொண்டிருந்த ஆறு கார்களின் மத்தியில் போய் நின்றது.. கார் நின்றதும் உள்ளேயிருந்து வந்த வேலையாள்கள் பூர்ணிமாவை மரியாதையாய் விசாரித்து விட்டு அவர்களது பெட்டிகளைச் சுமந்து சென்றனர்.. காரிலிருந்து இறங்கிய வித்யா வீட்டினுள் செல்லத் தயங்கி நின்றாள்.. சென்னை வீட்டை விட பத்து மடங்கு பெரியதாக மணிமுத்தாறு வீடு இருந்தது.. அப்படிப்பட்ட வீட்டை இப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறாள் வித்யா.. உள்ளேயிருந்து தத்தித் தளர் நடைபோட்ட பெண் குழந்தையொன்று வர பின்னாலேயே..

“காமினி நில்லு..” என்றபடி ஓர் அழகான இளம் பெண் ஒருத்தி வந்தாள்.. குழந்தையைத் தூக்கிக் கொண்டவள் பூர்ணிமாவிடம் “உள்ளே வா பூர்ணிமா.. உனக்காகத்தான் நாங்கள் எல்லோரும் தூங்காமல் காத்திருக்கிறோம்..” என்று கைபிடித்து அழைத்தாள்..

புன்சிரிப்புடன் கைகளை உருவிக் கொண்ட பூர்ணிமா வித்யாவின் கரங்களைப் பற்றி..

“வித்யா.. இது என் மூன்றாவது அண்ணி பிரபாவதி தேவி.. அண்ணி.. இவள் வித்யா… என் பிரண்ட்..” என்று அறிமுகப்படுத்தி வைத்தாள்..

வித்யா.. “அப்படியா.. வணக்கம்..” என்று கூற பதிலுக்கு ஒரு ஹலோ கூடச் சொல்லாமல் அவள் ஒருத்தி அங்கேயில்லாதது போல் பாவித்து..

“இது என்ன வழக்கம் பூர்ணிமா.. நான் இரண்டாவது மருமகள்.. உன் சின்ன அண்ணி.. நீயோ எப்போதும் மூன்றாவது அண்ணியென்கிறாய்..” என்று கடிந்து கொண்டாள்..

“நீங்கள் என் மூன்றாவது அண்ணனைக் கல்யாணம் செய்து கொண்டவர்கள் அதனால் மூன்றாவதுதான்..” என்று ‘அண்ணி’ என்ற வார்த்தையை வேண்டுமென்றே விட்டு விட்டுப் பேசியவள் அவள் அங்கு நிற்பதை அலட்சியம் செய்தவளாய்..

“நீ வாடி..” என்று வித்யாவின் கை பிடித்து இழுத்தவாறு வீட்டிற்குள் சென்றாள்.. நீண்ட முன் வராண்டாவைத் தாண்டி வீட்டின் பிரம்மாண்டமான வரவேற்பறைக்குள் சென்றனர்.. மேலேயிருந்து லஸ்தர் அலங்கார விளக்குகள் ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருந்தன.. விஸ்தீரமான அறையில் பெரிய பெரிய சோபாக்கள் பிரித்துப் பிரித்துப் போடப்பட்டு இருந்தன.. பூர்ணிமாவைக் கண்டதும் குடும்பத்தார் அவளைச் சூழ்ந்து கொள்ள வித்யா விலக முயற்சித்தாள்.. பூர்ணிமாவின் பிடி இறுகியது.. வித்யாவை விலகிச் செல்ல அவள் அனுமதிக்கவில்லை..

“அம்மா.. இவள் என் தோழி வித்யா.. இனி என்னுடன் இங்கேதான் இருப்பாள்..” என்று தாயின் முன் நிறுத்தி அறிமுகப்படுத்தினாள் பூர்ணிமா..

அழகான ஓவியம் போலிருந்த சௌதாமினியின் முகத்தில் வரவேற்கும் புன்முறுவல் உதித்தது.. சகஜமாக..

“வாம்மா.. நம் பேக்டரியில் பெர்ஸனல் மேனேஜர் வேலைக்கு உன்னை நரேந்திரன் நியமிச்சிருக்கிறானாம். என்னிடம் இன்றுதான் சொல்லி நீ இன்று வருவதாகச் சொன்னான்.. இது உன் வீடுன்னு நினைத்துக் கொள்ளம்மா.. மாடியில் பூர்ணிமாவின் அறைக்குப் பக்கத்திலேயே உனக்கு அறை கொடுத்திருக்கிறோம்மா.. எது வானாலும் தயங்காமல் என்னிடம் நீ சொல்லலாம்..” என்றாள் அன்புடன்..

“தேங்க்ஸ் ஆன்ட்டி..” என்றாள் வித்யா விடுதலை உணர்வுடன்..

அங்கிருந்த மற்றவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு நயன பாஷையில் உரையாடிக் கொண்டனர்.. பூர்ணிமா ஓர் நிமிர்வுடன்..

“வித்யா இவர்தான் என் இரண்டாவது அண்ணன் மகேந்திர பூபதி இவங்க என் இரண்டாவது அண்ணி மீனலோசனி தேவி..” என்று எரிச்சலாக அடை மொழியுடன் அறிமுகப்படுத்தி வைத்தாள்..

மகேந்திர பூபதியின் கர்வம் நிரம்பிய கண்கள் வித்யாவை ஏற இறங்கப் பார்த்தன.. மீனலோசனியோ உதாசீனம் ததும்பிய விழிகளால் வித்யாவைப் பார்ப்பது கூட தன் தகுதிக்கு இழுக்கு என்பது போல் முகம் திருப்பிக் கொண்டவள் பூர்ணிமாவிடம் பிரபாவதி கூறியது போல்.. “என்ன பூர்ணிமா இது..? இந்த வீட்டின் மூத்த மருமகள் நான்.. எப்போதும் என்னை இரண்டாவது ஆக்குகிறாயே..” என்று குறைபட்ட குரலில் கூறினாள்..

“என் பெரியண்ணனின் மனைவிதான் இந்த வீட்டின் மூத்த மருமகள் அண்ணி.. நீங்கள் முதலில் வந்தாலும் இரண்டாவது மருமகள் தான்.. என் பெரியண்ணனின் மனைவிதான் என் பெரியண்ணி..” என்று உதாசீனக் குரலில் பேசி.. அவள் எப்படி வித்யாவின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தாளோ அதுபோல் மீனலோசனியின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்த பூர்ணிமா வித்யாவின் பக்கம் திரும்பி..

“வித்யா இவர் என் மூன்றாவது அண்ணன் யுகேந்திர பூபதி.. இவங்களைத்தான் வாசலில் பார்த்தாயே என் மூன்றாவது அண்ணி பிரபாவதி தேவி.. அவங்க கல்யாணம் பண்ணியிருக்காங்க..” என்றாள்..

கர்வத்தில் மகேந்திரனுக்கு யுகேந்திரன் சளைத்தவனில்லை என்று நிரூபிக்க பிரபாவதியோ தன் பெண் குழந்தையுடன் மும்முரமாய் பேசிக் கொண்டிருக்க..

“அத்தை..” என்ற மழலைக் குரல் கேட்டது.. திரும்பிப் பார்த்தார்கள்.. ஐந்து வயதுச் சிறுவன் ஒருவன் நின்றிருந்தான்..

“ஹேய்.. மிஸ்டர் அரவிந்தபூபதி..” என்று தூக்கிக் கொண்ட பூர்ணிமா வித்யாவிடம்..

“இந்தப் பெரிய மனுசன் மகேந்திர அண்ணனின் மகன்.. இவனுக்குக் குட்டித் தங்கை ஒருத்தி இரண்டு வயதில் இருக்கிறாள்.. பூஜாக்குட்டி எங்கேடா..” என்று கேட்டாள்..

“தூங்கிருச்சு..”

“நீ ஏன் தூங்கவில்லை..?”

“உன்னைப் பார்க்கணும்னுதான்..” என்று அவன் கூற பூர்ணிமா பாசத்துடன் அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.. வித்யாவும் அவன் கன்னத்தில் மெல்லத் தட்ட..

“கொஞ்சியது போதும்.. நேரமாகி விட்டது வா தூங்கப் போகலாம்..” என்று கடுமையான குரலில் கூறிய மீனலோசனி மகனை வாங்க கை நீட்ட.. அவளிடம் குழந்தையைக் கொடுக்காமல் கீழே இறக்கி விட்ட பூர்ணிமா.. தாயின் அருகில் வந்து முறுவலித்தாள்..

“அம்மா.. டயர்டா இருக்கு.. நானும் வித்யாவும் தூங்கப் போகிறோம்.. காலையில் பார்க்கிறோம்..” என்று கூறிக்கொண்டு இருக்கும்போது வாசலில் கார் சத்தம் கேட்டது.. சற்று நேரத்தில் புயல் வேகத்துடன் உள்ளே வந்த நரேந்திரன் தங்கையைக் கவனிக்காமல் நேரே வித்யாவிடம் சென்று பதற்றமான குரலில்..

“ஐ ஆம் ஸாரி வித்யா.. இன்றைக்குப் பார்த்து மில்லில் வேலை அதிகமாக இருந்தது.. அதனால் தான் உங்களை ரிஸீவ் பண்ண நான் வீட்டில் இருக்க முடிய வில்லை.. சாயந்திரமிருந்து தவிக்கிறேன் எப்படியும் வந்து விட வேண்டுமென்று.. முடியாமல் போய் விட்டது.. ஐ ஆம் வெரி ஸாரி எகெய்ன்.. சாப்பிட்டீர்களா.. பயணம் சௌகர்யமாய் இருந்ததா..” என்று மூச்சு விடாமல் விசாரித்தான்..

ஒரு நொடியில் மந்திரக் கோலை யாரோ சுழற்றினாற் போல் அந்த சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டது.. மகேந்திரன் மற்றும் யுகேந்திரனின் விழிகளில் வியப்புடன் ஜாக்கிரதை உணர்வும் மீனலோசனி மற்றும் பிரபாவதியின் முகங்களில் வித்யாவின் முக்கியத்துவம் உணர்ந்த எரிச்சலும் தோன்றின.. முகம் மாறாமல் இயல்பாய் இருந்தவள் சௌதாமினி மட்டும்தான்..

வித்யாவின் மனதில் அதுவரை இருந்த நிராதரவான ஓர் உணர்வு மறைந்து இதம் பரவியது.. அழையா விருந்தாளி என்பது போல் பூர்ணிமாவின் மற்ற சகோதரர்களும் அவர்களது மனைவிகளும் நடந்து கொள்ள நரேந்திரன் ஒரே வினாடியில் அவளை அந்த வீட்டின் முக்கிய சிறப்பு விருந்தாளியாக்கி விட்டான்.. அவன் துணை இருக்கும் போது இனம் புரியா கலக்கம் மறைந்து போவது புரிய வித்யா மனச் சங்கடம் மறைந்து மனம் லேசாகிச் சிரித்தாள்.. நரேந்திரனின் மனம் உற்சாகமாக இருந்தது.. எத்தனையோ ஜென்ம பந்தம் அவளோடு இருந்தது போல் அவன் உணர்ந்தான்.. அவளது வரவை எதிர்பார்த்து தான் தவித்தது அவனுக்கே புரிந்தது.. அவளது வரவால் அவன் மனம் சிறகை விரித்து சந்தோச வானில் பறந்தது..

0Shares

Reviews – Nathiyoram Nadantha Pothu / நதியோரம் நடந்தபோது…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link