Chapter 12

0Shares

நதியோரம் நடந்தபோது

நனைத்ததெனை மழைத்தூறல்

இளைப்பாற நிழல் கொடுக்கும்

இதமான மழைச்சாரல்

…நதியோரம் நான் நடந்த போது…

பணக்காரர்கள் அதிலும் ராஜ பரம்பரை போன்ற பாரம்பர்யத்தைச் சேர்ந்த பரம்பரைப் பணக்காரர்களுக்கு சாமானியர்களை மதிக்கத் தோன்றாது.. மற்றவர்கள் தங்களுக்குச் சமமில்லை என்பது அவர்களது ரத்தத்தில் ஊறிய நினைவு.. தங்களைப் போன்ற மேல்தட்டைச் சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்களின் முகம் பார்ப்பது கூடத் தவறு என்று எண்ணத்தை உடையவர்கள்..

நரேந்திரனின் தம்பிகளும் அவர்களது.. மனைவிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.. பூர்ணிமா வேலையாள்களுடன் இயல்பாக பழகும் சுபாவம் உடையவள்.. அனைவரிடமும் அன்பு பாராட்டுபவள்.. அவளது தோழியென்று உள்ளே நுழைந்த வித்யாவிடம் அவர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டதில் ஆச்சர்யமில்லை.. ஆனால் நரேந்திரனின் அக்கறைக்கும் அன்புக்கும் அவள் பாத்திரமானவள் என்பதை அறிந்ததும் அவர்கள் மனதில் பொறாமைத் தீ பற்றிக் கொண்டது..

காலையில் எட்டு மணிக்கெல்லாம் வீட்டை விட்டுப் போகும் நரேந்திரன் இரவு பதினோரு மணிக்கு மேல் தான் வீடு திரும்புவான்.. சிலநாள்கள் வரவே மாட்டான்.. இரவு பகல் பாராமல் அவன் வியர்வை சிந்த அவனது திருமணமான தம்பிகளோ காலையில் பதினோரு மணிக்கு பேக்டரிக்கு ஒரு ஆள், மில்லுக்கு ஒரு ஆள் என்று போவார்கள்.. மதியம் ஒரு மணிக்கு ‘டாண்’ என்று மதியச் சாப்பாட்டிற்கு வந்து விடுவார்கள்.. மூன்று மணிக்கு திரும்பப் போவார்கள்.. மாலையில் சுவர் கடிகாரம் ஐந்து அடிக்கும்போது வீட்டில் ஆஜராகி இருப்பார்கள்.. இத்தனைக்கும் மகேந்திரன் பேக்டரியின் ஜெனரல் மேனேஜர்.. யுகேந்திரன் மில்லின் ஜெனரல் மேனஜர்.. நல்ல வேளையாக நரேந்திரன் இரண்டிற்குமே மேனேஜிங் டைரக்டர் பொறுப்பில் இருந்தான்.. பணச்சிக்கல் எழுந்த சமயத்தில் அந்தப் பதவி முள்ளால் செய்த அரியாசனம் என்பதை அறிந்த இருவரும் கெட்டிக்காரத் தனமாக அண்ணனே இருக்கட்டும் என்று நழுவி விட்டனர்… இப்போது பதவியைக் கைப்பற்ற நேரம் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்..

ஒரு தடவை மூத்த மகனின் உழைப்பைக் கண்டு பரிதாபப்பட்ட சௌதாமினி நரேந்திரன் முன்னாலேயே மற்ற இரு மகன்களைக் கண்டித்தாள்..

“மகி, யுகா.. நீங்கள் இரண்டு பேரும் ஜி.எம்.மாக இருந்து என்ன பயன்..? அண்ணன் தனியாக உழைக்கிறானே.. வேலையைப் பகிர்ந்து கொள்ள வேண்டாமா..?”

உடனே மகnந்திரன் பதில் சொன்னான்..

“அம்மா.. அண்ணனுக்கு என்ன பெண்டாட்டியா.. பிள்ளையா..? வீட்டில் மனைவியைப் பார்க்கணும்.. குழந்தையைப் பார்க்கணும்னு ஓடி வர..”

யுகேந்திரன் மகேந்திரனை மிஞ்சினான்..

“வேலை பார்த்தாலாவது.. அவரது தனிமை மறையும்ன்னுதான் விட்டுக் கொடுக்கிறோம்..”

சௌதாமினி வாயடைத்துப் போனாள்..

‘இவர்களும் என் பிள்ளைகளா..? நரேந்திரனைப் பெற்ற வயிற்றில் தான் இவர்களையும் பெற்றேனா..? அவன் வாழ்வைக் குலைத்து விட்டு இவர்கள் என்ன பேச்சுப் பேசுகிறார்கள்..’

மனதிற்குள் பொறுமியவள் அது பற்றி அவர்களிடம் அப்புறம் வாயைத் திறக்கவேயில்லை..

பூர்ணிமாவிற்கு நேர் மூத்தவனான சுரேந்திரன் விளையாட்டுப் பிள்ளை.. அவனைப் பொறுத்தவரை அவன் ஆசைப்படுவான்.. நரேந்திரன் நிறைவேற்றி வைப்பான்.. வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கும் அவனுக்கு பணம் அனுப்ப நரேந்திரன் இன்னும் அதிகம் உழைக்க வேண்டியிருந்தது..

மகேந்திரனையும்.. யுகேந்திரனையும் பொறுத்த வரையில் நரேந்திரன் தனிக்கட்டை.. இனிக் கல்யாணம் என்பது அவன் வாழ்வில் வரப் போவது இல்லை.. இந்தக் குடும்பத்திற்கு உழைக்க வேண்டியது அவனது தலைவிதி.. உல்லாசமாய் வாழ வேண்டியது இவர்கள் தலைவிதி.. அவர்களது மனைவிமார்களின் எண்ணங்களோ கணவன் மார்கள்களை மிஞ்சியிருந்தது.. மீனலோசனி வீட்டின் மூத்த மருமகள்.. பிரபாவதி இளைய மருமகள்.. இனியொரு மருமகள் சுரேந்திரனின் மனைவியாகத்தான் வரவேண்டும் என்பது அவர்களின் அசைக்க முடியாத முடிவு.. இதை அவ்வப்போது ஆட்டிப் பார்ப்பவள் பூர்ணிமா மட்டும்தான்.. ஆனால் பிரபாவதியின் அண்ணனின் மனைவியாக அவள் ஆகிவிட்டால் அவள் குடுமி தன் கையில்தானே என்ற எண்ணம் பிரபாவதிக்கு..

திடீரென்று வித்யாவின் பிரவேசம் அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.. இரவு அவரவர்களின் பெட்ரூமில் விவாதம் நடைபெற்றது..

“அவர்கள் இரண்டு பேரும் பேசிக் கொள்வதைப் பார்த்தால் ஏற்கெனவே பேசிப் பழகியவர்கள் போல் தோன்றுகிறதே..” என்றாள் மீனலோசனி மகேந்திரனிடம்..

“அதுதான் எனக்கும் யோசனையாய் இருக்கிறது.. ஆள்வேறு பார்க்க அழகாக இருக்கிறாள்..” என்று மகேந்திரன் சொல்லி வைக்க அங்கே பூகம்பம் வெடித்தது.

பிரபாவதியோ.. “இதோ பாருங்கள்.. உங்கள் பெரிய அண்ணன் தனிக்கட்டைன்னு நாம் கற்பனைக் கோட்டை கட்டிக்கிட்டு இருப்பதெல்லாம் பொய்யாகப் போகப் போகிறது போல.. அவள் ஆளும்.. முகமும்.. பட்டணத்துக்காரி.. தங்கையைப் பார்க்கப் போகிறேன்னு இவர் போகும்போது வளைத்துப் போட்டு விட்டாள் போல.. பெர்ஸனல் மேனேஜராம்ல்ல.. உங்களைப் மதித்து ஓர் வார்த்தை போடலாமா… வேண்டாமான்னு கேட்டாரா..? ஏதோ எல்லாமே அவர் சொத்து போல அவர் இஷ்டத்துக்கு முடிவெடுக்கிறாரே..” என்று யுகேந்திரனிடம் பொறும அவன் சும்மா இருக்காமல்..

“அவர் தானே உழைத்துக் கடன்களை அடைத்தவர் தானே..? அவருக்குத்தானே முழு உரிமையிருக்கிறது..” என்று தெரியாமல் சொல்லிவிட அவன் அறை குருஷேத்திரமானது..

இவை எதையும் யோசிக்காமல் பூர்ணிமா.. “இதுதாண்டி உனது ரூம்” என்று காட்டிய அறைக்குள் சென்ற வித்யா அதன் அழகையும் அளவையும் கண்டு வியப்புற்றாள்.. சென்னையில் பூர்ணிமாவின் அறையைப் போல பெரிதாக அறையின் நடு மையத்தில் பிரம்மாண்டமான பெரிய கட்டிலும் அதன் மேல் படுத்தால் ஆள் உள்ளே அமுங்கி விடுவது போல் மிருதுவான மெத்தையும் போடப்பட்டு புது தலையணை, மெத்தை விரிப்புகளுடன் இருந்தது.. சற்றுத் தள்ளி சோபா போடப் பட்டு எதிரில் டீபாய் இருந்தது.. அறையின் மூலையில் டேபிள்.. சேர் இருந்தன.. அறையை ஒட்டி இருந்த மற்றொரு அறையைத் திறந்து பார்த்தாள்.. அது உடை மாற்றும் அறை, அதை ஒட்டிய கதவைத் திறந்தால் அட்டாச்டு பாத்ரூம்.. ஹீட்டர் வசதியுடன் இருந்தது.. உடை மாற்றும் அறையில் சுவரில் பதித்த மர அலமாரிகளும்.. ஆளுயுரக்கண்ணாடியும் அதன் முன் டீபாயும் இருந்தன..

வித்யா அறையின் பெரிய ஜன்னல் திரையை விலக்கிப் பார்த்தாள்.. வீட்டின் பின்புறம் ஓடிய ஆறு தெரிந்தது.. சற்று நேரம் அதையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.. அறையின் வழி தோட்டம் தெரிந்தது.. ஆற்றோரக் காற்று அலையலையாய் உடல் மேல் படிந்தது..

‘இந்த அறைக்கு ஏஸி தேவையே இல்லை’ என்று நினைத்துக் கொண்டாள் வித்யா.. ஆனால் அந்த அறை ஏஸி வசதியுடன் இருந்தது.. உடம்பு அயர்வாய் இருக்க பெட்டிகளை காலையில் பிரித்து அடுக்கலாம் என்ற முடிவுடன் படுத்தவள் உறங்கி விட்டாள்..

வழக்கம் போல் அதிகாலையில் விழித்துக் கொண்டவள் பல் துலக்கி முகம் கழுவி விட்டுப் பெட்டிகளைத் திறந்து துணிகளை உடை மாற்றும் அறையிலிருந்த சுவர் அலமாரிகளில் அடுக்கினாள்.. அதிலிருந்த லாக்கரில் சான்றிதழ்கள் மற்றும் நகைப் பெட்டியை வைத்து மூடியவள் பூட்டி சாவியை எடுத்துக் கைப்பையில் வைத்துக் கொண்டாள்.. அறையின் காலிங் பெல் அலற கதவு திறந்தாள்.. பூர்ணிமா கையில் காபிக் கோப்பைகளுடன் நின்று கொண்டிருந்தாள்..

“ஏண்டி.. நீயே காபி கொண்டு வரணுமா..?”

“இது உனக்குப் புது இடமில்லையா..? பழகும்வரை நான் கூட இருக்க வேண்டுமில்லையா..?”

தோழியின் கனவில் மனம் நிறைந்தவள் காபியை வாங்கிப் பருகியபடி அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள்.. பூர்ணிமா அருகே அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருக்க அறை வாசலில், “மே ஐ கமின்..?” என்ற குரல் கேட்டது.. திரும்பிப் பார்த்தனர்.. நரேந்திரன் நின்று கொண்டிருந்தான்.. வித்யா முகம் சிவந்து போனாள்.. அவள் நைட்டியில் இருந்தாள்.. தலைப் பின்னலை அவிழ்த்து விரியப் போட்டிருந்தாள்.. நெற்றியில் பொட்டிருக்கிறதா.. இல்லையா என்று மனதிற்குள் கவலையுற்றாள்.. முழங்கால்களுக்கு கீழ் தொங்கும் அவளது நீண்ட தலை முடியை ரசித்தபடி உள்ளே வந்தவன் எதிரேயிருந்த மற்றொரு சோபாவில் அமர்ந்தான்..

“வித்யாவுக்கு காபி அனுப்பியாச்சான்னு கீழே சமையலறையில் போய் கேட்கப் போனேன்.. நீ கொண்டு வந்து விட்டதாகச் சித்தி சொன்னாங்க.. தேங்க்ஸ்..” என்றான் பூர்ணிமாவிடம்..

“தோடா.. நானும் பார்க்கிறேன்.. வித்யா பாராயணம் பலமா இருக்கு.. நேற்று ராத்திரி என்னன்னா நான் வந்ததையே கவனிக்கவில்லை.. வித்யாகிட்ட விழுந்து விழுந்து விசாரிப்பு.. இப்ப என்னன்னா விழுந்து விழுந்து உபசரிப்பு.. அண்ணா.. அவள் என் தோழி.. அது நினைவிருக்கட்டும்..” என்றாள் பூர்ணிமா..

“ஆனால் நம் வீட்டில் காலடி வைத்த பின்னால் வித்யா என் பொறுப்பு..” உண்மையான அக்கறையுடன் இதைக் கூறினான் நரேந்திரன்.. அதைக் கேட்ட இரு பெண்களின் மனதிலும் சிலிர்ப்பு ஓடியது.. அண்ணனின் வாழ்விலும் தென்றல் வீசுமா..? என்ற ஏக்கம் பூர்ணிமாவிற்கு.. தன் வாழ்வில் அவன் காதல் கிட்டுமா..? என்ற ஏக்கம் வித்யாவிற்கு..

“வித்யா குளித்து உடை மாற்றிக் கொண்டு சீக்கிரம் கிளம்பி வா..” என்றான் நரேந்திரன்..

“ஏன் அண்ணா இந்த அவசரம்..” என்று வினவினாள் பூர்ணிமா..

“எட்டு மணிக்கெல்லாம் நான் ஆபிஸ் போகணும்.. மறந்து விட்டதா.. வித்யா என்கூடவே வந்து பழகட்டும்.. என்றான் நரேந்திரன்..”

“இல்லை.. சா.. நரேன்.. நான் தனியாக வந்து கொள்கிறேன்.. என் ஸ்கூட்டியை விற்று பணம் கொண்டு வந்திருக்கிறேன்.. இங்கே ஏதாவது வண்டி வாங்கிக் கொள்கிறேன்..” என்றாள் வித்யா..

“இதுபோல முட்டாள்தனமாய் அம்மா முன்னாலும் மற்றவர்கள் முன்னாலும் நீ பேத்தக் கூடாது என்று தான் விழுந்தடித்து ஓடி வந்தேன்.. அது போலவே பேத்துகிறாய்..” என்று எரிந்து விழுந்தான் அவன்..

“பேத்தலா..?” முகம் சிவந்தது வித்யாவிற்கு..

“பேத்தல்தான்.. வேறு என்ன..? வித்யா இது சென்னையில்லை.. மணிமுத்தாறு.. சற்று பெரிய கிராமம்.. என் பேக்டரியும்.. மில்லும் அம்பாசமுத்திரத்தில் இருக்கிறது… அதுவும் சென்னை போல் பெரிய சிட்டியில்லை. இங்கே உன்னை தனியாக டிராவல் பண்ண நான் அனுமதிக்க முடியாது.. உன் கொள்கைகள் எல்லாம் மணிமுத்தாறு எல்லையோடு முடிந்து போய் விட்டது.. இனி என் கொள்கைப்படி நடக்கப் பழகு.. என் வீட்டில் இருந்து கொண்டு நீ தனியே.. நான் தனியே போய் வர முடியாது.. அது உனக்கு மதிப்பையும் அளிக்காது..”

“நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை சா.. நரேன்..”

“நான் கவலைப்படுகிறேன்.. மணிமுத்தாறில் நீ இருக்கும் ஒவ்வொரு வினாடியிலும் என் நிழலில்தான் இருக்க வேண்டும்.. இது என் கட்டளை…”

அவன் விர்ரென்று எழுந்து போய் விட்டான்.. பூர்ணிமா அவர்களின் வாக்குவாதத்திற்கும் அவளுக்கும் சம்பந்தமில்லாதது போல் மிகச் சுவாரஸ்யமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.. வித்யா அவளை முறைக்க கைகளை விரித்துத் தோளைக் குலுக்கி..

“உன் பாடு.. பெரியண்ணன் பாடு.. ஆனால் ஒன்று.. நீ பூர்ணிமாவைத்தான் அரட்ட முடியும்.. நரேந்திரனிடம் உன் பாச்சா பலிக்காது..” என்றாள்..

பூர்ணிமா சென்று விட அறைக் கதவை அடைத்து விட்டு குளிக்கப் போனாள் வித்யா.. முதல் நாள் என்பதால் அரக்கு சிவப்பில் ஜரிகைக் கரையிட்ட காட்டன் புடவையை உடுத்திக் கொண்டவள் அதே புடவையில் வெட்டித் தைத்த அட்டாச்டு பிளவுஸை அணிந்து கொண்டாள்.. அழகாய் தலை வாரிப் பின்னலிட்டவள் தன்னிடமிருந்த நகைப் பெட்டியைத் திறந்து பார்த்தாள்.. எல்லா வண்ணங்களிலும் கல் பதித்த தோடுகள் தொங்கட்டான் களுடன் அவளிடம் இருந்தன.. அரக்குச் சிவப்புக் கல் செட்டைக் காதில் போட்டுக் கொண்டவள்.. அம்மாவின் சிகப்புக் கல் அட்டிகையை கழுத்தில் போட்டுக் கொண்டாள்.. கைப்பையை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவள்..

“ரூம் கதவை மூடி சாவியை எடுத்துக் கொள்” என்ற பூர்ணிமாவின் குரல் கேட்டு நிமிர்ந்தாள்.. தோழியின் அருகே வந்து அவளது அழகை “வாவ்” என்று ரசித்தவள்..

“இங்கே ஒவ்வொரு ரூமும் தனித்தனி போர்ஷன் மாதிரி வித்யா.. அவரவர் பகுதி இது.. பூட்டி சாவியை எடுத்து ஹேண்ட் பேகில் போட்டுக் கொண்டு போய்விடு.. ஏனென்றால் இந்த வீட்டு மருமகள்களுக்கு அடுத்தவர் ரூமை ஆராய்ச்சி பண்ணும் குணம் நிறைய உண்டு..” என்று கூறினாள்..

வித்யா அறையைப் பூட்டி சாவியை கைப்பையில் போட்டுக் கொள்ள இருவரும் கீழே இறங்கி பேசிக் கொண்டே சாப்பாட்டு அறைக்குப் போனார்கள்.. அங்கே  சௌதாமினியும் மற்றவர்களும் சாப்பிட்டுக் கொண்டிருக்க நரேந்திரன் மட்டும் சாப்பிடாமல் காத்துக் கொண்டிருந்தான்.. அதை ஜாடையாய் பார்த்த சௌதாமினி மனம் குளிர, மற்றவர்கள் வயிறு எரிந்தனர்.. பூர்ணிமாவும், வித்யாவும் வரவும் அவர்களுடன் பேசிக் கொண்டே நரேந்திரன் சாப்பிட்டு முடிக்க.. கிளம்பும் போது வித்யா..

“ஒரு நிமிடம்.. இங்கே பூஜையறை எங்கே இருக்கிறது..?” என்று கேட்டாள்.. நரேந்திரன் வியப்புடன் கைகாட்ட.. சென்று கண்மூடி வேண்டிக் கொண்டவள் அவன் அருகே வந்து..

“போகலாமா..?” என்று கேட்டாள்.. கவனமாய் அவளுக்கு காரின் முன் கதவைத் திறந்து விட்டவன் சுற்றி வந்து டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டான்.. பூர்ணிமா விற்குக் கை ஆட்டி விட்டுக் கிளம்பினார்கள்..

நதியோரம் சென்ற பாதையில் அவர்களது கார் சென்றது.. எண்ணம் கவர்ந்தவனின் அருகே அமர்ந்து சென்ற ஏந்திழையின் வாழ்வில் புது அத்தியாயமும் ஆரம்பித்தது..

0Shares

Reviews – Nathiyoram Nadantha Pothu / நதியோரம் நடந்தபோது…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link