Chapter 13
நதியோரம் நடந்தபோது
நந்தவனம் கண்டு சென்றேன்
பூவெல்லாம் உன் முகமாய் தோன்ற
புன்னகையை என் நகையாய் கொண்டேன்
…நதியோரம் நான் நடந்த போது…
அகன்று விரிந்து ஓடிய நதியின் அருகேயுள்ள பாதையில் கார் சென்று கொண்டிருந்தது.. நதி நீரில் குளிப்பவர்களையும், துணி தோய்ப்பவர்களையும் நதிக்கரை நாணல்களையும் பார்த்தபடி சிலுசிலுவென்ற காற்றையும் சுகமாய் ரசித்து அனுபவித்துக் கொண்டு வந்தாள் வித்யா.. அவளது முகத்திலிருந்த ஆர்வத்தை ஜாடையாய் பார்த்த நரேந்திரன்..
“ஆறு என்றால் பிடிக்குமா..?” என்று கேட்டான்..
“ரொம்பப் பிடிக்கும்.. யு ஸீ.. நான் இதுவரை ஆற்றையே பார்த்ததில்லை.. இங்கே அருவி வேறு இருக்கிறதாமே.. அதையெல்லாம் சினிமாவிலும்.. சீரியலிலும்.. விளம்பரங்களிலும் பார்த்ததுதான்..”
“ஓ.. நான் இந்த ஆற்றங்கரையில் பிறந்து வளர்ந்தவன்.. வாரம் ஒரு முறையாவது அருவியில் குளியல் போடுபவன்.. இந்த ஆறு எனக்கு பிரண்ட் மாதிரி.. வித்யா..”
“அப்படியா..?” என்று புரிந்து கொண்டவளாய் வித்யா கூறினாள்..
“ஆமாம்.. மனம் சரியில்லாதபோது ஆற்றங்கரைக்கும்.. அருவிக் கரைக்கும் போய் விடுவேன்.. இந்த வார இறுதியில் உன்னை அருவிக்குக் கூட்டிப் போய் காட்டுகிறேன்..”
“தேங்க்யூ..” என்று உண்மையான மகிழ்வுடன் கூறினாள் வித்யா..
“தேங்க்ஸ் எதற்கு..?”
“இல்லை.. பூர்ணிமாவைக் கூப்பிட்டுக் கொண்டு போக எனக்குச் சங்கடமாக இருக்கிறது.. சென்னையில் அவள் என் தோழி மட்டும்தான்.. இங்கே உங்கள் வீட்டுப் பெண்.. அவளை அருவிக்கரைக்கு கூப்பிட்டால் ஆன்ட்டி ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.. ஆனால் மற்றவர்கள்..”
“சந்தேகமே வேண்டாம்.. நிச்சயம் ஏதாவது சொல்வார்கள்..”
“அதனால்தான்.. நான் தனியே எங்கேயும் போய் பழக்கமில்லை.. ‘ஆபிஸ் போகவில்லையா..?’ என்று கேட்காதீர்கள்.. அது வேறு, இது வேறு..”
“புரிகிறது.. பட் வித்யா ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.. பூர்ணிமா வந்தாலும் நான் உடன் வருவேன்.. ஏனென்றால் நான் முன்னாலேயே சொன்னது மாதிரி இங்கு இருக்கும் வரை நீ என் பொறுப்பு.. என் நிழலை விட்டு நகர அனுமதிக்க மாட்டேன்..”
வித்யா உதடு மடித்துக் கடித்து.. உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தாள்.. அவளது மனவோட்டத்தை அறியாதவனாய் நரேந்திரன் பேசிக் கொண்டு வந்தான்..
“நீ வந்ததில் எனக்கு மிகவும் சந்தோசம் வித்யா.. எனக்காக, என் வார்த்தையை மதித்து நீ உன் வேலையைக் கூட.. அதிலும் எவ்வளவு உயர்வான வேலை அது.. விட்டு விட்டு வந்திருக்கிறாய்.. அதற்கு ஈடே கிடையாது வித்யா.. அம்மாவின் தாய்ப்பாசத்திற்கு எவ்வாறு விலை கிடையாதோ.. அது போல்தான் உன் பாசத்திற்கும் விலை கிடையாது..”
வித்யா தலை குனிந்து கண்ணீரை அடக்கிக் கொண்டாள்..
‘இந்த ஒரு வார்த்தை போதும் தெய்வமே..! என் மனதுக்கினியனின் மனம் மகிழச் செய்து விட்டேன்.. என்னால் முடிந்த ஆறுதலையும் தர முடியுமானால் உனக்குக் கோடி நன்றி சொல்வேன்..’
அம்பாசமுத்திரத்திறகுள் கார் நுழைந்தது.. பேக்டரியை அடைந்ததும் அவன் இறங்கி அவசரமாய் கார் கதவைத் திறக்க வருவதற்குள் வித்யாவே கார் கதவைத் திறந்து கொண்டு இறங்கினாள்.. மிகப் பெரிய தொழிற்சாலையின் வாயிலில் நிற்பதை உணர்ந்தவளாய் அதை பிரமிப்புடன் பார்த்தாள்..
‘எவ்வளவு பெரிய தொழிற்சாலை..! இதன் முதலாளியா அவளை அருகே அமர வைத்து ஒரு நண்பன் போல பேசிக் கொண்டு காரை ஓட்டி வந்தான்.. இதன் உரிமையாளர்களாய் இருக்கும் மகேந்திரனுக்கும்.. யுகேந்திரனுக்கும் ஏன் கர்வம் வராது..?’
“வா வித்யா… ஏன் வாசலிலேயே நின்று விட்டாய்..?” என்று அவளது ஆச்சர்யத்தை உணராதவனாய் நரேந்திரன் அழைத்தான்.. தன்நிலைக்கு வந்தவளாய் அவள் அவனைப் பின் தொடர அவனோ நடையின் வேகத்தை மட்டுப்படுத்தி அவளுக்கு இணையாக நடந்து வந்தான்.. வழியில் தென்பட்டவர்கள்.. அமர்ந்து வேலை செய்தவர்கள் அனைவரும் ‘வணக்கம், குட்மார்னிங்’ என்று கூற பதிலுக்கு தலை அசைத்து அதை ஏற்றுக் கொண்டபடி தன் அறைக்குச் சென்றவன் இன்டர்காமில் தன் செயலாளரை அழைத்தான்..
“சார்..” என்றபடி உள்ளே வந்தான் குகன்.. நரேந்திரனின் உதவியாளன்..
“குகன், நம் பேக்டரி போர்மேன்களையும்.. சூப்பர் வைசர்களையும் அவசர மீட்டிங் என்று கான்பரன்ஸ் ஹாலுக்கு வரச்சொல்.. க்விக்.. இன்னும் பதினைந்து நிமிடத்தில் அனைவரும் என் முன் இருக்க வேண்டும்..” என்று உத்தரவிட்டான்..
“சரி சார்..” என்றபடி மின்னலாய் மறைந்தான் குகன்.
“இதைப் படித்துப் பார் வித்யா..” என்று ‘கான்பிடன்ஷியல்’ என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஃபைல் ஒன்றைத் தூக்கி அவள் கையில் கொடுத்தான் நரேந்திரன். வித்யா அதை ஊன்றிப் படிக்க ஆரம்பித்தாள்.
“இது நம் ஆபிஸில் வேலை செய்பவர்களின் ஜாதகம்.. அவர்களது வேலை.. குடும்ப விவரம்.. மற்ற செய்திகள் என்று அனைத்தும் இதில் இருக்கும்.. படித்து கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துக்கொள்.. பெர்ஸனல் மேனேஜர் பதவி என்பது நிர்வாகத்தின் முதுகு எலும்பு போல்.. முக்கிய முடிவுகளை நீதான் எடுக்க வேண்டும்.. தொழிலாளர் நிர்வாகம் இரண்டுக்கும் பாலமாய் இருக்க வேண்டும்.. உன் புத்திசாலித்தனத்தை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை உன் வசம் ஒப்படைக்கிறேன்.. இங்கே நீ எல்லாவற்றையும் கற்றுக் கொண்டால் நான் நிம்மதியாய் மில்லை மட்டும் கவனிப்பேன்.. என் வேலைப்பளு மிகவும் குறையும்..”
வித்யாவின் மனதில் அவன் கடைசியில் சொன்ன வார்த்தைகள் அழுந்தப் பதிந்தன.. மனதில் திடத்துடன் ஃபைலை மீண்டும் படிக்க ஆரம்பித்தாள் அவள்.. தொழிலாளர்கள் வேலை, தகுதி வாரியாகப் பிரித்து அடிமட்ட ஊழியரிலிருந்து ஆரம்பித்து மேனேஜிங் டைரக்டரான நரேந்திரன் வரை அனைவரைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் போட்டோவுடன் அதில் இருந்தது..
அறைக்கதவு தட்டப்பட, “யெஸ் கமின்..” என்றான் நரேந்திரன்.. குகன் உள்ளே நுழைந்தான்..
“சார் எல்லோரும் கான்பரன்ஸ் ஹாலுக்கு வந்து விட்டார்கள்..” என்றான்..
“குட்” என்றபடி எழுந்து கொண்ட நரேந்திரன்..
“குகன், மீட் மிஸ் வித்யா.. இன்றிலிருந்து நம் பேக்டரியின் பெர்ஸனல் மேனேஜர்” என்றான்..
அதுவரை அலுவலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் எம்.டியுடன் வந்திருக்கும் அழகான பெண் யார் என்ற ஆராய்ச்சியிலிருப்பதை கவனித்தவன் தானும் அந்த யோசனையிலிருந்தான்.. நரேந்திரன் அறிமுகப்படுத்தவும் ‘ஆ’வென்று வாய் பிறந்தவனாய்.
“குட் மார்னிங் மேடம்-நான்தான் குகன்.. எம்.டி.சாரின் பெர்ஸனல் செகரட்டரி..” என்றான்..
“இனிமேல் பெர்ஸனல் மேனேஜருக்கும் நீதான் பெர்ஸனல் செகரட்டரி.. புரிந்ததா..?” என்ற நரேந்திரன் அவளிடம் திரும்பி..
“வா வித்யா..” என்று அழைத்தான்..
வித்யாவை ஒருமையில் தன் முதலாளி அழைப்பதை மனதிற்குள் குறித்துக் கொண்ட குகன் அவர்களுக்கு முன்னால் விரைந்து கான்பரன்ஸ் ஹாலுக்குள் சென்றான்.. பல குரல் கலந்த கலவையொலி ஓங்கி ஒலிக்க நரேந்திரனும் வித்யாவும் உள்ளே நுழைந்ததும் குண்டூசி போட்டால்கூட கேட்பதுபோல் நிசப்தம் வந்தது..
ஒரு மாநாடு நடத்தலாம் போன்ற நீண்ட பெரிய அறையில் சேர்கள் போடப்பட்டிருக்க அதில் போர்மேன் களும், சூப்பர்வைசர்களும் அமர்ந்து இருந்தனர்.. முன்னால் போடப்பட்டிருந்த டேபிளின் பின்னால் போடப்பட்டிருந்த சேர்களில் ஒன்றில் நரேந்திரன் அமர்ந்து கொள்ள அருகில் வித்யா அமர்ந்தாள்.. குகன் கைகளைக் கட்டியபடி அருகில் நின்றான்.. டேபிள் மேலிருந்த மைக்கில் நரேந்திரன் பேச ஆரம்பித்தான்..
“என் பேக்டரியின் சூப்பர்வைசர்களுக்கும்.. ஃபோர்மேன்களுக்கும் ஒரு முக்கிய தகவலைத் தெரிவிப்பதற்காக இங்கே வரச் சொல்லியிருக்கிறேன்.. இதோ அமர்ந்திருக்கும் வித்யாதான் உங்களின் புதிய பெர்ஸனல் மேனேஜர்.. இனி பேக்டரியின் நிர்வாகம் அவர்கள் பார்வையின் கீழ் இயங்கும்.. உங்களது அனைத்து வேண்டுகோள்களையும், குறைகளையும் அவர்களிடம் தான் நீங்கள் சொல்ல வேண்டும்.. இனி உங்களை நீங்கள் அவர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்..”
எல்லோரின் முகத்திலும் வியப்புக்குறி.. ‘இந்தச் சிறு பெண்ணா நம்மை நிர்வகிக்கப் போகிறாள்..?’ என்ற அவ நம்பிக்கை சிலர் மனதில் எழுந்தது.. எதையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் வரிசையாய் அனைவரும் வந்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு அவரவர் இருக்கைக்குச் சென்றனர்.. அடுத்து வித்யா மைக்கில் பேசினாள்..
“என்னடா ஒரு சிறு பெண்ணா நம் பெர்ஸனல் மேனேஜர் என்று உங்களுக்குத் தோன்றும்..” என்று அவள் ஆரம்பிக்க அந்த நினைவோடு இருந்தவர்களின் முகத்தில் வியப்புக் குறி.. ‘ஏது பெண் ரொம்ப உஷார் பேர்வழிதான்..’ என்று நினைத்துக் கொண்டார்கள்.. வித்யா தொடர்ந்தாள்..
“என்னை ஓர் சிறு பெண்ணாய் பார்க்காதீர்கள்.. உங்களது பெர்ஸனல் மேனேஜர் என்ற முறையில் பாருங்கள்.. என் பதவிக்காலத்தில் நான் நிச்சயம் உங்களில் ஒருத்தியாகச் செயல்படுவேன் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.. கடமையைச் செய்வோம்.. பலன் நிச்சயம் கிடைக்கும்.. உங்கள் அனைவருக்கும் என் வந்தனங்கள்.. என் வேலையை நான் சிறப்பாகச் செய்ய உங்கள் அனைவரின் துணையும் ஒத்துழைப்பும் எனக்கு வேண்டும்..” என்றவர் சற்று இடைவெளிவிட்டு.. “கிடைக்குமா..?” என்று கேட்டாள்..
“கிடைக்கும்.. நிச்சயம் கிடைக்கும்..” என்ற குரல்கள் எழுந்தன..
நரேந்திரன் புன்னகையோடு நடப்பவற்றைக் கவனித்துக் கொண்டு இருந்தான்.. ஒரு நிமிடத்தில் பேக்டரியில் உள்ளவர்களை வித்யா வசீகரித்த விதத்தை மனதிற்குள் மெச்சிக் கொண்டான்.. டேபிளில் கை வைத்திருந்தவளின் கரத்தின் மீது அவன் பார்வை ஓடியது.. சிவந்த அழகான வாழைத்தண்டு போன்ற கரங்கள்.. அதில் விளையாடும் பொன் வளையல்கள்.. தன் அழகை உணராத அடக்கம்.. அறிவு தந்த நிமிர்வு.. சாயம் பூசாத முகம்.. வெட்டி விடப்படாத நீண்ட கூந்தல்.. எதிராளியை நொடியில் வசப்படுத்தும் புத்தி சாதுர்யம்.. இவை அனைத்தும் ஒரே பெண்ணிடம் குடிகொண்டு இருக்கும் விந்தையை எண்ணி வியந்தான்.. பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத பேரழகி என்றுதான் அவளை இதுவரை நினைத்திருந்தான்.. கேட்கக் கேட்கத் தெவிட்டாத தேன்மொழிகளைப் பேசவும் அவளால் முடியும் என்பதை இன்றுதான் அறிந்தான்.. படபடவென்ற கைதட்டல்கள் அவனை நடப்புலகுக்கு கொண்டு வந்தன..
எல்லோருக்கும் டீ விநியோகம் செய்யப்பட்டது.. உற்சாகமாய் புது பெர்ஸனல் மேனேஜரைப் பற்றிப் பேசிக் கொண்டு அனைவரும் கலைய குகன் அருகில் வந்து..
“பெண்டாஸ்டிக் மேடம்” என்றான் பாராட்டுதலாய்..
“தேங்க் யூ மிஸ்டர் குகன்.. எனக்கு அட்மினிஸ்ட் ரேடிவில் எத்தனை செக்ஷன்.. அவர்கள் பயோ டேட்டா எல்லாம் வேண்டுமே..”
“கம்ப்யூட்டரில் பதிவு பண்ணியிருக்கிறோம் மேடம்.. சி.டி.யைக் கொண்டு வந்து தருகிறேன் மேடம்..”
“வெல்.. அப்புறம் பேக்டரியின் அக்கவுண்ட்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்து ஃபைல்களும், சி.டிக்களும் எனக்கு வேண்டும்..”
“தருகிறேன் மேடம்..”
“இன்றைக்கு முழுவதும் ஃபைல்களையும், சி.டி.க் களையும் பார்த்து விடுகிறேன்.. நாளை பேக்டரியின் அட்மினிஸ்ட்ரேடிவ் அன்ட் லேபர் சைட் இரண்டையும் சுற்றிப் பார்த்து விடலாம்..”
வித்யா வேகமாகச் செயல்பட்டாள்.. நரேந்திரன் சரியான ஆளிடம் பொறுப்பை ஒப்படைத்த நிம்மதியுடன் மில்லுக்கு கிளம்பிப் போய் விட்டான்.. மற்ற நாள்களாக இருந்தால் மாலையில் தான் மில்லுக்குப் போவான்.. இன்று வித்யாவின் செயல்பாட்டிலிருந்த கூர்மை அவனது வேலைப்பளுவைக் குறைக்க கிளம்பிப் போய் விட்டான்.. ‘எள்’ என்று சொல்லும் முன் ‘எண்ணெ’யாக குகன் அவள் கேட்டவற்றைக் கொண்டு வந்து வித்யாவின் டேபிளை நிரப்பினான்..
எம்.டியின் அறைக்குப் பக்கத்திலேயே பெர்ஸனல் மேனேஜர் அறையும் இருந்தது.. ஜெனரல் மேனேஜரின் அறை மிகவும் தள்ளி நவீனமாக அமைந்திருந்தது.. மகேந்திரன் தான் வருவதையும் போவதையும் தன் செயல்பாடுகளையும் நரேந்திரன் அறிவதை விரும்புவ தில்லை.. எனவே மிகத் தள்ளி தன் அறையை அமைத்துக் கொண்டிருந்தான்.. அத்தோடு தனக்கென்று உளவு சொல்ல தனக்கு சாதகமாகச் செயல்பட ஒரு குழுவையே பேக்டரியில் உருவாக்கி வைத்திருந்தான்.. அதனால் மகேந்திரன் சாவகாசமாய் பதினொன்றரை மணிக்கு பேக்டரி வந்த சேரும்போது வித்யா அனைத்து ஃபைல் களையும் பார்த்துவிட்டு அக்கவுண்ட்ஸை ஆராய ஆரம்பித்து இருந்தாள்.. அதே நேரத்தில் மகேந்திரனுக்கு வித்யா வந்ததில் இருந்து பேக்டரியில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் தெரியப் படுத்தப்பட்டது.. அவன் கொதித்துப் போனான்.. குகனை அழைத்துச் சத்தம் போட்டான்..
“யாரைக் கேட்டு அக்கவுண்ட்ஃ பைலையெல்லாம் அவள் கிட்ட கொடுத்தே…”
‘அவளா’ என்று மனதிற்குள் வெகுண்ட குகன் அவன் தன்னை ஏகசவனத்தில் பேசியதை சகித்துக் கொண்டவனாய்..
“நான் அவங்களுக்குக் பெர்ஸனல் செகரட்டரி சார்.. அவங்க கேட்டதைக் கொடுப்பதுதான் என் வேலை..” என்றான் அசையாமல்..
‘இவனை மட்டும் தன் வழிக்குக் கொண்டு வரவே முடியவில்லையே..’ என்று பல்லைக் கடித்துக் கொண்ட மகேந்திரன்..
“அவள் கேட்டால் இந்த பேக்டரியையே எழுதிக் கொடுத்துருவியா..?” என்று வெகுண்டான்..
“நான் எப்படி சார் அதைச் செய்ய முடியும்..? நான் சாதாரண கூலிக்காரன்.. உங்கள் அண்ணன்தானே எம்.டி அவர்தான் அதைச் செய்ய முடியும்..” என்று குத்தலாய் பதில் சொன்னான் குகன்..
“அப்படியானால் எனக்கு இந்த பேக்டரியில் உரிமை யில்லையென்று சொல்கிறாயா..? உனக்கு எவ்வளவு தைரியம்..?”
“நீங்கள் கேட்டதற்கு பதில் சொன்னேன் சார்..”
“நீ என் கண் முன் நிற்காமல் வெளியே போய்விடு..”
‘போகாமல் உன் முன் நிற்கவா ஆசைப்படுவேன்..?’ என்று மனதில் நினைத்தவனாய் வெளியே வந்தான் குகன்.. அவன் இதழ்களில் முறுவல் மலர்ந்தது.. மகேந்திரன் ஏனிந்த பேயாட்டம் போடுகிறான் என்பதை அவன் அறிவான்..
வித்யா அக்கௌண்ட்ஸ் ஃபைல்களை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.. அதுதான் மகேந்திரன் கொட்டில்லாமலே ஆடக் காரணம்.
ஏன் மகேந்திரன் அக்கௌண்ட்ஸ் ஃபைல்களை வித்யா பார்ப்பதை விரும்பவில்லை என்ற காரணத்தை அப்போது வித்யா கண்டு பிடித்திருந்தாள்.. விளைவு.. நரேந்திரன் மதிய உணவை வித்யாவுடன் சேர்ந்து உண்ண பேக்டரிக்கு வந்தபோது மகேந்திரன் வித்யாவுடன் மோதிக் கொண்டிருந்தான்..
Reviews – Nathiyoram Nadantha Pothu / நதியோரம் நடந்தபோது…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.