Chapter 01

0Shares

‘இந்த உலகத்தில் எத்தனையோ கோடி ஆண்களிலிருக்க இவனைப் போய் ஏன் காதலித்துத் தொலைத்தேன்..’ என்று ஒரு லட்சத்து பதினான்காம் முறையாக வருத்தப்பட்டு ஓய்ந்தாள் சாருலதா..

அவள் கண்களில் அவளையுமறியாமல் துளிர்த்து விட்ட விழி நீரை உணர்ந்தவள்.. அவசரமாய் தன்னை யாரும் பார்த்துவிட்டார்களா என்று சுற்று முற்றும் 

பார்த்துக் கொண்டே விழிகளில் அரும்பியிருந்த கண்ணீர்த் துளிகளை கைக்குட்டையால் ஒற்றியெடுத்தாள்..

‘நானா அழுகிறேன்.. சே..’ அவளுக்குத் தன்மீதே கோபம் வந்தது..

அழுகை என்றாலே பிடிக்காதவள்.. வேண்டாமென்று ஒன்றை விலக்கி வைத்துவிட்டால், இறுதி மூச்சுவரை அதைத் திரும்பிக்கூடப் பார்க்காதவள்.. கடைசி வரை போராடாமல் தோல்வியை ஒப்புக் கொள்ளாதவள்… 

இன்று தோற்றுப்போன மனநிலையுடன் கண்கலங்கி உட்கார்ந்திருக்கிறாள்..

யாருக்காக..? தன் போக்கில் உலகை எதிர்கொள்ளும் முரட்டு சுபாவமுடைய.. தீயைப் போல சுட்டுக் கொண்டிருக்கும் குணமுடைய ஒருவனுக்காக..

என்ன செய்வது.. சாருலதா அவனைக் காதலித்துத் தொலைத்து விட்டாளே.. உலகோடு ஒட்டாத இயல்புடைய அவன்மேல் உயிரை வைத்துவிட்டாளோ..

‘காதல் என்பது எவ்வளவு பெரிய தைரியசாலியையும், கோழையாக்கிவிடும் தன்மையுடையது..’ என்பதைத் தாமதமாகப் புரிந்து கொண்டு தவித்தாள் சாருலதா..

‘திரும்பி வர முடியாத ஒருவழிப் பாதையில் பயணித்துவிட்டோமோ..’ என்று பரிதவித்தாள்.. ‘தன் புத்திசாலித்தனம் எங்கே தொலைந்து போனது..’ என்று தேடிப்பார்க்க இயலாமல், முட்டாளாகி மூலையில் சரிந்து அமர்ந்து முகம் மூடிக்கொண்டாள்..

இத்தனை துன்பத்தையும் அவளுக்கு அளித்த தனஞ்ஜெயன் தன் போக்கில் ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்..

“உனக்கும்.. சாருலதாவிற்கும் எதுவும் மனஸ்தாபமா..?” அவன் எதிரில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணன் வினவினான்..

“ஒருதாபமும் இல்லை.. நீ முதலில் கொட்டிக் கொள்ளும் வேலையைக் கவனி..”

“உனக்கு ஒரு தாபமும் இருக்காது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.. நீ ஒரு அதிசயப் பிறவி.. உன்னையும் ஒருத்தி மாய்ந்து.. மாய்ந்து காதலிக்கிறாளே.. அவளை ஏண்டா அழ வைக்கிறாய்..?”

“எனக்கு அப்படி ஒரு நேர்த்திக் கடன் இருக்குடா.. போதுமா.. நீ சாப்பிடத்தானே என்கூட வந்தாய்..? வந்த வேலையை மட்டும் பாரு.. தேவையில்லாமல் என் பெர்ஸனல் மேட்டரில் மூக்கை நுழைக்காதே.. எனக்கு அது பிடிக்காது..”

“உனக்கு எதுதாண்டா பிடிக்கும்..? ‘அட்லீஸ்ட் அந்தச் சாருலதாப் பெண்ணையாவது பிடித்திருக்கிறதே..’ என்று சந்தோசப்பட்டேன்.. இப்போது அதற்கும் வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறாய்..”

“அது ஏண்டா.. அடுத்தவனின் அந்தரங்கத்தைத் தெரிந்துகொள்ள அத்தனை பேரும் ஆளாய்ப் பறக்கறீங்க..?”

“நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்.. நான் இந்தச் சென்னையில் கால் பதித்த நாள் முதலாய்.. ஆறு வருடங்களாய் உன்னுடன் ஒரே அபார்ட்மென்டில் குடியிருக்கிறேன்.. ஒரே ஆஃபீஸில் ஒன்றாக வேலை செய்கிறேன்.. என் சுக.. துக்கத்தை வாடகையோடு.. உன்னுடன் ஷேர் பண்ணிக் கொண்டிருக்கிறேன்..”

“ஒன் மினிட் கிருஷ்… நான் வாடகையை மட்டும்தான் இதுவரை உன்னுடன் ஷேர் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.. என் சுக.. துக்கத்தை என்றைக்குமே மற்றவங்ககிட்ட ஷேர் பண்ணிக் கொண்டதில்லை..”

“டேய்.. நான் உன் நண்பன் டா..”

“நான் மட்டும் உன்னை என் எதிரியின்னா சொன்னேன்..?”

“என்னைக்கூட ஏண்டா பிரித்துப் பார்க்கிறாய்..?”

“இந்த உலகத்தில் நான் தனியாகத்தான் பிறந்து வந்தேன்.. தனியாகத்தான் போகப் போகிறேன்.. இதில் ஊடே வரும் எதுவும் நிரந்தரமில்லை..”

“இடையில் வாழும் காலத்தில் இந்த உலகோடு இசைந்து வாழ்ந்தால்தான் என்னடா..?”

“எனக்கு அவசியமில்லை..!”

“சாருலதாவைப் போன்ற ஒரு புத்திசாலிப் பெண் உன்னை உயிருக்குயிராய் காதலிக்கிறாள்.. நீ அவளைப் பற்றிக் கொஞ்சம் நினைத்துப் பாருடா தனா..”

“அவள் என்னைக் காதலித்தால்.. அதற்காக.. நான் நானாக இல்லாமல் மாற வேண்டுமா..? என்னைக் காதலின்னு நான் அவளிடம் போய் கேட்டேனா..? அவளாக என்னைக் காதலித்தால்.. அதற்கு நான் பொறுப்பாக முடியாது..?”

“இது ஒரு பேச்சாடா தனா..?”

“எனக்கு இப்படித்தான் பேச வரும்..”

“மாற்றிக்கொள்..”

“அது என்ன தேவைக்கு..?”

“உனக்காக இல்லாவிட்டாலும்.. சாருலதாவிற்காகவது மாறு..”

“அவள் என்ன பெரிய இவளா..?”

“உன் காதலிடா..”

“இது என்னடா பெரிய துன்பமாக போய்விட்டது.. சும்மா நொய் நொய்யென்று – சதா பேசிக் கொண்டேயிருக்கிறாள்.. அதற்கு நான் பொறுமையாக ‘ஊம்’ வேறு போடவேண்டுமாம்..”

“அதிலென்னடா உனக்குக் கஷ்டம்..?”

“என் கஷ்டம் உனக்கெப்படிப் புரியப் போகுது.. ஒரு மனிதனுக்கு ஆயிரம் வேலை இருக்கும்.. அதையெல்லாம் விட்டுவிட்டு.. இவள் வாயைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா..?”

தனஞ்ஜெயன் எரிச்சலுடன் கேட்கவும்.. கிருஷ்ணனுக்கு சிரிப்பு வந்துவிட்டது..

“ஏண்டா.. உலகத்தில் ஆயிரம் பிரச்சினைகள்.. குற்றம்.. குறைகள் இருக்கு.. உன் பிரச்னை இதுதானா..?”

“உனக்கென்னடா மச்சான்… ஈஸியாய் சொல்லிவிட்டாய்.. என் தலைவேதனை எனக்குத்தான் தெரியும்.. நான் பாட்டுக்கு ஜாலியாய் இருந்தேன்டா… மகராசி வந்தாள்.. உன்னைக் காதலிக்கிறேன்டான்னு சொன்னாள்.. எந்த நேரத்தில் அவள் காதலைச் சொன்னாளோ.. அந்த நொடியிலிருந்து என் சுதந்திரம் போய்விட்டது..”

“இப்படி ஒரு சிறையில் மாட்ட முடியவில்லையேன்னு எனக்கு ஏக்கமாய் இருக்கு.. உனக்கு இது கொடுமையாய் இருக்கு.. எல்லாம் நேரம்டா..”

“ஏன்.. இவ்வளவு சொல்கிறவன்.. நீ போய் அவளைக் காதலிக்க வேண்டியதுதானே..”

“சொன்னேனே.. என் காதலை அவளிடம் சொன்னேனே.. அவள் சிரித்துக் கொண்டே மறுத்து விட்டாளே..”

தனஞ்ஜெயனின் மனதில் தென்றலடித்தது.. அவனுக்கும் அது தெரியும்.. யாருக்கும் வளைந்து கொடுக்காமல்.. நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையுமாக இருக்கும் சாருலதா.. தன்னிடம் மட்டும்தான் மண்டியிடுகிறாள் என்பது..

ஆனால்.. அதையும் மீறி அவர்கள் இருவருக்கும் இடையே சமீப காலமாய் அனலடிக்கும் வாக்குவாதங்கள் தோன்றிக்கொண்டிருந்தன.. அலையடிக்கும் கடலாய் சிலசமயம் அவள் கொந்தளித்தாள்.. சிலசமயம் அவன் அவளைத் தூக்கியெறிந்தான்..

எல்லாச் சமயங்களிலும், அவன் உடைந்து விடாமல் நிலைத்து நிற்க.. சாருலதா மனம் உடைந்தாள்.. தன் திடம் குலைந்து சரிந்தாள்..

அவள் படும் வேதனையைச் தனஞ்ஜெயன் புரிந்து கொண்டானோ.. இல்லையோ.. கிருஷ்ணன் புரிந்து கொண்டான்.. அவள் மேல் மனதிற்குள் இரக்கம் சுரக்க.. அவள் சார்பாய் தனஞ்ஜெயனிடம் பரிந்து பேசினான்..

எவருக்கும் கட்டுப்படாத இயல்புடைய தனஞ்ஜெயன்.. சில சமயம் அவனுக்குப் பதில் சொல்வான்.. சிலசமயம்.. ‘நீ யார் என் விசயத்தில் தலையிட..’ என்று மூக்கை உடைப்பான்..

சாருலதாவின் சோர்ந்த முகத்தை தன் நினைவில் கொண்டுவந்து நிறுத்தி.. தன்னைத் தேற்றிக்கொண்டு, கிருஷ்ணன்.. விடாமல் தன் முயற்சியைத் தொடர்வான்..

அன்றும் அது போலத்தான்.. தொடர்ந்து ஒரு வாரமாக தனஞ்ஜெயன்.. சாருலதாவிடம் முகம் கொடுத்துப் பேசாமல் போர் முரசு கொட்டிவிட.. சாருலதா அதிகமாக மனம் உடைந்தாள்.. அவளது கண்ணீர் முகத்தைக் காணச் சகிக்காமல் கிருஷ்ணன், தனஞ்ஜெயனிடம் பேச ஆரம்பித்திருந்தான்..

“அவள் என்னைக் காதலிக்கிறாள் என்பதற்காக நான் அவளுடைய அடிமை போல அவள் என்னை ட்ரீட் பண்ணக்கூடாதுடா கிருஷ்..”

“எனக்கு என்னவோ வேறு மாதிரி தோன்றுகிறது..”

“எப்படி..?”

“அவள் உன்னைக் காதலிக்கிறாள் என்பதற்காக நீ அவளை உன்அடிமையாக நினைக்கிறாய்..”

“உளறாதே..”

“இதுதான் உண்மை.. உன் மனச்சாட்சியைக் கேட்டுப்பார்.. நான் சொல்வதுதான் உண்மையென்று அது சொல்லும்..”

“அவள் என்னைக் கார்னர் பண்ணுவது சரியா..?”

“எதை வைத்து நீ இப்படிச் சொல்கிறாய்..? தனா..! உனக்கே தெரியும்.. அவள் புத்திசாலி.. அதிகம் யோசிப்பவள்.. அவளுக்குப் பிடிக்காத எதையும் கோடி ரூபாய் கொடுத்தாலும் செய்ய மாட்டாள்.. யாருக்கும் பணியாதவள்.. உன் அன்பிற்குப் பணிகிறாள்.. அதை நீ எளிதாய் எடை போடாதே..”

“நீ அவளைப் பற்றி அதிகம் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை..”

“பொறாமை..? ம்ம்.. இது காதலில் இருக்க வேண்டிய ஒன்று.. தனா உன்னைவிட நான் வசதியானவன்.. அவள் மட்டும் என் காதலை ஏற்றுக் கொண்டிருந்தால்.. ஒரு மகாராணிபோல் அவளை வாழ வைத்திருப்பேன்.. ஆனால்.. அவள் என்னைப் புறக்கணித்தாள்.. உன்னை விரும்பினாள்.. நீ அவளை உன் காலடியில் பட்டத் துசியாக நினைக்கிறாய்.. இது சரியில்லை.. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்..”

“ஏண்டா.. ஞாயிற்றுக் கிழமைகூட மனிதனை நிம்மதியாக இருக்க விடமாட்டியா..? மற்ற நாள்களில் அவள் என் உயிரை எடுக்கிறாள்.. ஞாயிற்றுக்கிழமையில்.. நீ என் உயிரை எடுக்கிறாய்.. நீங்கள் இரண்டு பேரும் ஒரு முடிவோடுதான் இருக்கிறீங்களா..?”

தனஞ்ஜெயன் கோபத்துடன் பாதிச் சாப்பாட்டில் எழுந்து கொள்ளப் போனான்.. அவன் கை பிடித்து அமர வைத்தான் கிருஷ்ணன்..

“என் மேலிருக்கும் கோபத்தை என்மீது காண்பி.. சாப்பாட்டின் மேல் காண்பிக்காதே… இந்தச் சாப்பாட்டிற்காகத்தான் நாம் இத்தனை பாடுபடுகிறோம்.. சாப்பிடு..”

“தெரியுதில்லையா.. நாள் முழுவதும் உழைக்கிற மனுசனை ஒரு வாய் சாப்பிடக்கூட விடாமல் அவள் வந்து உயிரை எடுத்தால் எனக்கு கோவம் வருமா.. வராதா..?”

“ஓ.. லன்ச் டயத்தில் சாருலதா உன்னிடம் பேச வந்தாளா..?”

“ஆமாம்.. ‘சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.. அப்புறமாய் வா.. பேசலா’மென்று சொன்னால்… 

முகத்தை முழுநீளத்திற்கு தூக்கி வைத்துக் கொள்கிறாள்.. மனுசனுக்கு எப்படி இருக்கும்..?”

“அவள் சாப்பிட்டுவிட்டாளான்னு கேட்டியா..?”

“அதெல்லாம் கொட்டிக் கொள்ளாமல்தான் என்னிடம் பேச வந்தாள்.. இவளும் சாப்பிடமாட்டாள்.. என்னையும் சாப்பிட விடமாட்டாள்..”

“அவள் சாப்பிடாமல் உன்னிடம் பேச ஓடி வந்திருக்கிறாள்.. அது புரியாமல் நீ அவளைத் திட்டியிருக்கிறாய்.. இதில் கோபம் வராதான்னு கேள்வி வேறு கேட்கிறாய்.. கவனி.. தனா.. இதற்கு எனக்குக் கோபம் வராது.. உனக்குத்தான் வரும்..”

“நீ நினைப்பது போல் ஆட என்னால் முடியாது..”

“எப்படியோ போ.. ஒன்றை மட்டும் சொல்கிறேன் கேட்டுக்கொள்.. சாருலதா, பெண் சிங்கம், யாருக்கும் கட்டுப்படாத அந்தச் சிங்கத்தை கட்டுப்படுத்தும் ரிங்மாஸ்டர் நீ ஒருவன்தான்.. உன் கையிலிருக்கும் ‘காதல்’ என்ற சாட்டைக்கு அவள் அடிபணிகிறாள்.. அதை நீ அவளது பலவீனமாய் நினைத்து விடாதே..”

கிருஷ்ணன் சொன்ன வார்த்தைகளில் பொதிந்திருந்த உண்மையை அறியாதவனல்ல தனஞ்ஜெயன்.. அவன் அதை நன்கு அறிவான்..

0Shares

Reviews – Nee Indry Nan Illai / நீயின்றி நானில்லை

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link