Chapter 13
நீ விலகிப் போனாலும்
நீயின்றி நானில்லை..
அந்த அகன்று விரிந்திருந்த ஆலமரத்தின் அடியில் கல்லினால் கட்டப்பட்ட மேடை அமைந்திருக்க.. அதன்முன் ஊர்ஜனங்கள் குழுமியிருந்தார்கள்..
“ஐயா.. வர்றாரு.. வழி விடுங்கப்பா..” ஒரு பெரிசு உரக்கக் குரல் கொடுக்க.. கூட்டம் இரண்டாகப் பிளந்து வழி விட்டது..
ஆஜானுபாகுவான தோற்றத்தோடு.. வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு… பெரிய மீசையை முறுக்கியவாறு.. அந்தக் கல்மேடையில் அமர்ந்தார் சண்முகம்..
“என்ன பிராதுப்பா..?” கம்பீரமான குரலில் அவர் வினவவும்.. இரண்டு பேர் முன்னால் வந்தார்கள்..
“என்னப்பா.. முனியா.. சுப்பா..? என்னா சமாச்சாரம்..?”
“ஐhய.. இவன் என் கூடப்பிறந்தவனுங்க..”
“அதுகூட உனக்கு நினைப்பிருக்காப்பு..?”
“இப்ப இவன் என் பங்காளிய்யா..”
“அதுதானே பார்த்தேன்… என்னடா… ஒடன் பொறந்தவன் மேல.. பாசமழையைப் பொழியறானேன்னு ஒரு நிமிசம் அசந்து போயிட்டேன்.. ம்ம்.. ஒன் பிறவிக் குணம் எங்கே போயிரும்..?”
“ஊரில.. உலகத்தில.. இல்லாததையா நான் சொல்லிப்புட்டேன்..? உடன்பிறந்தவன் வளர்ந்துட்டா.. அவன் உடன் பங்காளிதானேய்யா..”
“இதைச் சொல்லித்தானே போன வருசம்.. காடுகரையைப் பிரிச்சுக்கிட்டுப் போனீங்க… இப்ப என்னப்பு.. புதுசா பஞ்சாயத்தில் வந்து நிக்கறீங்க..
ஒங்க பஞ்சாயத்தைத் தீர்த்து வைக்கிறதுதான் பெரிய பஞ்சாயத்தா போயிருச்சு எனக்கு.. வாயைத் திறந்து.. வழக்கை சொல்லுங்கப்பு..”
“ஐயா.. அவன் வீட்டில ஒருமாசம்.. என் வீட்டிலே ஒரு மாசம்ன்னு எங்க ஆத்தாக்கிழவி கஞ்சி குடிக்கும்..”
“அடகெரகமே.. இதையும் காது கொடுத்துக் கேட்கணுமுன்னு எந்தலையில் எழுதி வைத்திருக்கு.. ம்ம்.. மேலே சொல்லப்பு..”
“ஆனா பாருங்க.. அவன் வீட்டில் என் ஆத்தா இருக்கிறப்போ மட்டும் மாதத்துக்கு முப்பது நாள்தான் வருது.. என் வீட்டுக்கு வர்றப்போ.. முப்பத்தியொரு நாள் வருது..”
“அதுக்கு இப்ப என்னாங்கிறப்பு..?”
“ஒருநாள் கூடக் கஞ்சி ஊத்த.. நான் கேணச் சிறுக்கியான்னு.. என் பொஞ்சாதி கேள்வி கேட்கிறாள்.. அதனால.. இனிமே.. அடுத்த வருசம் முழுக்க.. அவன் வீட்டில் முப்பத்தி ஒரு நாளும் என் வீட்டில் முப்பது நாளும்.. எங்க ஆத்தா கஞ்சி குடிக்கணுமுன்னு நீங்க உத்தரவு போடணும்..”
“தூத்தேறி.. இதெல்லாம் ஒரு வழக்கு.. இதுக்கு ஒரு பஞ்சாயத்து.. பெத்த கிழவிக்கு ஒரு வாய் கஞ்சி ஊத்த கணக்குப் பார்க்கிற நீயெல்லாம் என்ன பிறவிடா.. இந்த மண்ணில் பொறந்தவனா நீயி..? ஒருநாள் கூடக் கஞ்சி ஊத்தினால்.. யார்வீட்டுச் சொத்துடா குறையும்..? அது உன் அப்பனும்.. ஆத்தாளும் வம்பாடுபட்டு.. வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி.. சம்பாதித்து வைத்தச் சொத்துடா.. அதை அனுபவிக்க உனக்கு உரிமை இருக்கு.. ஆனால்.. ஆத்தாளுக்கு ஒருநாள் கூடக் கஞ்சி ஊத்த உனக்கு மனசு இல்லை.. இப்போ சொல்றேன்.. எல்லாரும் கேட்டுக்கங்க.. இவன் இனிமேல் காலம் முச்சூடும் இவனுடைய ஆத்தாளுக்கு அரிசிச் சோறும்.. கறிக்குழம்புமாய் ஆக்கிப்போடணும்.. தவறினால்.. இவனை ஊரை விட்டுத் தள்ளி வைக்கணும்.. இதுதான் இந்தப் பஞ்சாயத்தின் தீர்ப்பு..”
“ஐயா.. இது அநியாயம்ங்க..”
“எனக்கு இதுதாண்டா நியாயம்..”
“என் தம்பிக்காரனுக்கும் ஆத்தாளைக் காப்பாற்றும் கடமை இருக்கில்ல..?”
“அவன் உன்னைப்போல.. பெத்தவளுக்கு கஞ்சி ஊத்தக் கணக்குப்பார்த்து பஞ்சாயத்துக் கூட்டினானா..?”
சண்முகம்.. துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு.. எழுந்து நின்று கர்ஜித்தார்.. அந்தக் கூட்டத்தில் ஒட்டாமல்.. விலகித் தெரிந்த அந்த அழகிய இளம் பெண்ணின் விழியில் தெரிந்த வியப்பைக் கவனித்தவர் யோசித்தார்..
‘இது யார் வீட்டுக்கு வந்த பொண்ணு..? ஊருக்குப் புதுசாய் தெரிகிறதே..’
அவரது பார்வையை உணர்ந்த அந்தப் பெண் அவருக்கு கரம் குவித்து வணக்கம் சொல்ல.. பதில் வணக்கம் சொல்லி விட்டு விசாரித்தார்..
“யாரும்மா நீ..?”
“என் பெயர் சாருலதாங்க..”
“எந்த ஊர்..?”
“சென்னை..”
“இந்த ஊரில் யார் வீட்டுக்கு விருந்தாளியாய் வந்திருக்கிறாய்..?”
“உங்கள் வீட்டுக்குத்தான் விருந்தாளியாய் வந்திருக்கிறேன்..”
அவருக்கு தூக்கி வாரிப் போட்டது.. ‘என் வீட்டிற்கு வந்திருக்கிறாளா..?’ இது யார் என்றே தெரியவில்லையே..?
“என் வீட்டுக்கா வந்திருக்கிறேன்னு சொன்னே..?”
“ஆமாங்க..”
“எங்களை உனக்கு எப்படித் தெரியும்..?”
“நான் உங்கள் வீட்டிற்குச் சொந்தம்..”
“சொந்தமா..? எப்படி சொந்தம்..? எந்த வகையில் சொந்தம்..?”
“அதை.. உங்கள் வீட்டிற்குப் போய் பேசலாமே..”
சண்முகம் கூர்மையான அறிவுள்ளவர்.. வந்திருந்த பெண்ணின்.. அழகிய.. படித்தபெண் போன்ற – தோற்றமும்.. அவளது கையிலிருந்த துணிகள் அடங்கிய பெரிய பையும் அவருக்கு எதையோ உணர்த்த..
“வாம்மா..” என்றபடி முன்னால் நடந்தார்..
“என்ன மாமா.. வீட்டுக்கு விருந்தாளி வந்திருக்கு போல..” எதிரே வந்த பெண் விசாரித்தாள்..
“ஆமாம் புள்ள..”
“எந்த ஊராம்..?”
“சென்னைப் பட்டணமாம்..”
“அப்படின்னா..”
“மெட்ராஸும்மா..”
“ஆ.. அப்படிச் சொன்னாத்தானே எனக்குத் தெரியும்.. பொண்ணு யாரு.. உங்க சொந்தமா..?”
“ஆமாம்..”
அடுத்து அவர்.. ‘என்ன முறையான சொந்தம்..’ என்று கேட்டு வைத்தால் எப்படிப் பதில் சொல்வது என்ற சங்கடத்தோடு நடையை எட்டிப் போட்டார்..
அந்தப் பெரிய வீட்டின் முன்னால் சிமிண்ட் போடப்பட்ட தரையிருக்க.. அதில் நெல்.. மிளகாய், பருப்பு போன்ற தானிய வகைகள் காய வைக்கப்பட்டிருந்தன..
சுற்றிலும் மர வேலி போடப்பட்டிருக்க.. மரப்படலைத் தள்ளித் திறந்தபடி உள்ளே சென்ற சண்முகம்.. வாசலில் மிளகாயை அள்ளிக் கொண்டிருந்த மனைவியை சத்தமாய் அழைத்தார்..
“தெய்வானை.. அடியேய் தெய்வானை..”
“ஏன் இப்படிச் சத்தம் போட்டு ஏழுரையும் கூட்டுகிறீங்க.. தெய்வானைக்கு என்ன வைச்சிருக்கீங்களாம்..”
“யாருடி இவ.. நேரம் கெட்ட நேரத்தில வியாக்கியானம் பேசிக்கிட்டு.. இங்கே வாடி..”
“அடி.. ஆத்தி.. இந்த மனுசனுக்கு.. இந்த வயசிலயும் கோபம் குறைவேனாங்குதே..”
அங்கலாய்த்தபடி.. கைவேலையைப் போட்டுவிட்டு அவர்கள் அருகே வந்தாள் தெய்வானை.. அப்போதுதான் சாருலதாவைக் கவனித்தவள்..
“யாரு இந்தப் பொண்ணு..?” என்று கேட்டாள்..
“அதைக் கேட்கத்தான் உன்னைக் கூப்பிட்டேன்.. உள்ளே வா.. நீயும் வாம்மா..”
சண்முகம் வீட்டிற்குள் போனதும்.. முற்றத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.. நான்கு புறமும் இருந்த தூண்களில் ஒன்றின் மேல் சாய்ந்து நின்றபடி சாருலதா அவர் முகம் பார்த்தாள்..
“தெய்வானை.. அந்தப் பொண்ணுக்கு குடிக்க ஏதாவது குடு..”
தெய்வானை கொண்டு வந்து கொடுத்த மோரை வாங்கிக் குடித்ததும்.. சாருலதாவிற்கு கொஞ்சம் தெம்பு வந்தது..
“சொல்லும்மா.. நீ எந்த வகையில் எங்களுக்கு சொந்தம்..?”
“உங்கள் மகனைக் காதலிக்கிறவள் என்ற வகையில் உங்களுக்குச் சொந்தம்..”
சண்முகம் இதுவாகத்தான் இருக்கும் என்று முன்பே யூகித்திருந்ததால்.. அவர் முகத்தில் அதிர்ச்சியின் சாயல் இல்லை..
“ஆத்தி.. இந்தப் பொண்ணு.. என்னத்தையோ சொல்லுதே.. யாரும்மா நீ..? என் மகனை உனக்கு எப்படித் தெரியும்..? எத்தனை நாளாய் உங்களுக்குள்ள பழக்கம்..?”
தெய்வானை பதறினாள்.. சாருலதா பொறுமையாய் எல்லாவற்றையும் சொன்னாள்.. சண்முகம் தீர்க்கமான விழிகளுடன்.. அவள் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தார்..
“நீங்க ஊருக்கெல்லாம் நியாயம் சொல்கிறவங்க.. எனக்கொரு நியாயத்தை நீங்களே சொல்லுங்க.. என்னை உயிருக்குயிராய் காதலித்து.. பெண் கேட்டு என் வீட்டுப் படியேறியும் வந்துவிட்டு.. நீ வேண்டாமுன்னு தூக்கிப் போட்டுவிட்டுப் போய் விட்டார் உங்கள் மகன்.. இது நியாயமா..?”
“உன்னைப் பெற்றவர் பேசியது மட்டும் நியாயமாம்மா..?”
“நியாயமில்லைதாங்க.. ஆனால்.. அதற்கு நான் எப்படி பொறுப்பாவேன்..? என்னைக் கைவிடாமல் காலம் பூராவும் காப்பாற்ற வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறதா.. இல்லையா..?”
“உன்னைப் பெற்றவங்க நினைப்பு வேறு மாதிரி இருக்கேம்மா..”
“ஆனால் என் நினைப்பு உங்க மகன் மேல் மட்டும்தாங்க.. என்னால் அவரில்லாமல் வாழ முடியாது..”
“இந்த நினைப்பில் நீ உறுதியாக இருக்கிறாயா..?”
“உறுதியில்லாமலா வீட்டை விட்டு வெளியே வருவேன்..?”
“இது சண்முகத்தின் வீடும்மா.. என் மகனை நம்பி.. வீட்டை விட்டு வெளியே வந்து.. என் வீட்டுப்படியை நியாயம் கேட்டு மிதித்து விட்டாய்.. இனி.. இது உன் வீடு.. நீ எங்கள் மருமகள்.. இந்த உலகமே எதிர்த்து வந்தாலும்.. என் மகன் உன் கழுத்தில் தாலிகட்டுவான்.. உங்க அப்பன் என்னம்மா.. எனக்கு அவர் வெறும் பிஸ்கோத்து..”
சண்முகம் மீசையை முறுக்கியவண்ணம் கூறினார்.. தெய்வானை வந்திருக்கும் பெண்ணின் அழகில் மகிழ்ந்து போய் அவள் கைபிடித்து அருகே அமர வைத்துக் கொண்டார்..
“எவ்வளவு அழகாயிருக்கேம்மா.. எங்க தனா உன்மேல் ஆசைப்பட்டானா..?”
“ம்ம்ம்..”
“அப்புறம் எதுக்கு அவன் அப்படிச் சொல்லி விட்டுப் போனானாம்.. கூறு கெட்ட பயல்.. இவ்வளவு பாசத்தோடு ஒரு பொண்ணு பின்னால் வந்தால்.. அவளைக் கை நழுவ விட்டுவிட்டுப் போகிறவனை என்னன்னு சொல்றது..?”
“அவன் வந்ததும் அதை நீயே அவனிடம் கேளு.. இப்ப எழுந்திருச்சு.. மருமகளைக் கூப்பிட்டுக்கிட்டு போய் குளிக்கச் சொல்லி.. துணிமணிகளை மாத்தினப்புறம் சோற்றைப் போடு.. எந்நேரம் சாப்புட்டுச்சோ.. புள்ள.. பாவம்.. பசி அது முகத்தில தெரியுது..”
அவசரமாய் எழுந்து கொண்ட தெய்வானை.. சாருலதாவின் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு போக.. சாருலதாவிற்கு.. அது முன் பின் அறியாத வீடு என்றே தோன்றவில்லை.. காலம் காலமாய் அவள் கால் பதித்து வாழ்ந்து வந்த வீடு போலவே அவள் உணர்ந்தாள்..
சண்முகம் புயலைப்போல செயலில் இறங்கினார்.. ஊர் பெரிய மனிதர்களைக் கூப்பிட்டு ஆலோசனை நடத்தினார்.. வீட்டு வாசலில் பந்தல் கால் நட்டு.. கொட்டகை போட்டார்.. வாழை மரம் கட்டினார்.. வீடு விழாக்கோலம் பூண்டது.. பக்கத்து டவுனிலிருந்து.. அவரது மகளும் மருமகனும் பேரப்பிள்ளைகளும்.. உறவுக்காரர்களும் வந்து நிறைய.. வீடு.. கல்யாணக் கோலம் பூண்டது..
Reviews – Nee Indry Nan Illai / நீயின்றி நானில்லை
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.