Chapter 01
‘மகாலெட்சுமி ஜவுளி ஸ்டோர்ஸ்’ என்ற பெயர் பலகையைப் பார்த்தபடி அந்த நெரிசலான ரோட்டில் நடந்தாள் ரூபிணி. விழுப்புரம் ரெயில்வே ஜங்ஷனிலிருந்து அவளைப் போலவே வெளியே வந்த மக்கள் கூட்டம் ஏற்கனவே நெரிசல் மிகுந்த ஜனக் கூட்டத்தில் கலந்தது. ரெயில் நிலையத்திற்கு முன்னாலிருந்த சாலை பாண்டிச்சேரி செல்லும் சாலையாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. ஒரு கையில் பெரிய சூட்கேஸுடனுன் மறு கையில் டிராவல் பேக்குடனும் இருந்த ரூபிணி பற்றாக்குறைக்கு தோளில் ஹேண்ட் பேகோடு இன்னும் இரண்டு தோள் பைகளை மாட்டியிருந்தாள்.. ஆட்டோ ஸ்டாண்ட் அருகே வந்ததும் “ஆட்டோ…” என்று அழைத்தாள்.
“ஏறுங்கம்மா… ” என்றான் முதலில் நின்று கொண்டிருந்த ஆட்டோவின் அருகே நின்று கொண்டிருந்த டிரைவர்.
ஆட்டோவுக்குள் தன் கையிலிருந்த பெட்டி, பைகளை அடுக்கி விட்டு அதன் பக்கத்திலேயே ஏறி அமர்ந்து கொண்டாள் ரூபிணி.
ஆட்டோவைக் கிளப்பிள டிரைவர் அவளைத் திரும்பிப் பார்த்து “எங்கே போகனும்மா?” என்று கேட்டான்..
“கலைவாணி லேடிஸ் ஹாஸ்டலுக்குப் போகணும்..”
ஆட்டோ நேராகச் சென்று வளைந்து திரும்பி சென்னை செல்லும் மெயின் ரோட்டின் போக்குவரத்தில் கலந்தது. சற்று தூரம் சென்றதும் திரும்பி அகலமான சாலையில் சென்று ஒரு பெரிய மூன்று மாடிக் கட்டிடத்தின் முன்னால் நின்றது.
சுற்றிலும் காம்பவுண்டு சுவருடன் உள்ளே விஸ்தீரமான தோட்டத்தின் நடுவே நின்றிருந்த அக்கட்டிடத்தின் முகப்பிலும் வெளியே காம்பவுண்டு சுவரிலும்,
‘கலைவாணி லேடிஸ் ஹாஸ்டல்’ என்ற பெயர் இருந்தது.. பைகளை இறக்கி வாசலில் வைத்த ரூபிணி.
“எவ்வளவு ஆச்சு?” என்று வினவினாள்.
ஆட்டோ டிரைவர் கேட்ட பணத்தை வாக்குவாதம் செய்யாமல் எடுத்துக் கொடுத்து விட்டுத் தன் பெட்டி பைகளை தூக்கிக் கொள்ள ரூபிணி குனிந்தாள்.
“இருங்கம்மா.. நான் பெட்டியை எடுத்துக்கிட்டு வருகிறேன்…”
ஆட்டோ டிரைவர் அவளது பதிலை எதிர்பார்க்காமல் குனிந்து பெட்டியை ஒரு கையிலும்… டிராவல் பேக்கை மற்றொரு கையிலும் எடுத்துக் கொண்டு காம்பவுண்டு வாசலைத் தாண்டி உள்ளே நடந்து சென்றான்.
சுமை குறைந்ததால் நிம்மதி பெருமூச்சு விட்ட ரூபிணி மீதிமிருந்த பைகளையும் ஹேண்ட் பேகையும் எடுத்துக் கொண்டு அவனைப் பின் தொடர்ந்தாள். உள்ளே நீண்ட முன்புற ஹாலில் சேர்கள் போடப்பட்டிருக்க நடுவிலிருந்த டீப்பாயில் வார.. மாதப் பத்திரிகைகளும் தினசரியும் கிடந்தன. ஹாலின் மூலையில் இருந்த ஸ்டாண்டில் டி.வி. வைக்கப்பட்டிருந்தது. அது அதிகாலை நேரம்.. அதனால் நைட்டியுடன் இருந்த பெண்கள் காபியை உறிஞ்சியவாறு அங்கிருந்த சேர்களில் அமர்ந்து படித்துக் கொண்டும்… டி.வி. பார்த்துக் கொண்டும் இருந்தனர்.
ஆட்டோ டிரைவர் ஹாலில் பெட்டியையும்… டிராவல் பேக்கையும் வைத்தான்..
“தேங்க்ஸ்…” என்றாள் ரூபிணி உண்மையான நன்றியுடன்.
“தேங்க்ஸ்ஸெல்லாம் எதுக்கும்மா… காலங்கார்த்தால.. விடிஞ்சும் விடியாம இருக்கிற இந்தப் பொழுதில என் ஆட்டோவில் ஏறிய முதல் சவாரியே நீங்கதான்.. கேட்ட துட்டை வாக்குவாதம் பண்ணாம கொடுத்திங்க… முதல் போணியே தகராறா இருந்தால் அன்னைக்கு நாள் பூராவும் தகராறா பூடும்மா.. இன்னைக்கு எந்த விடியா மூஞ்சியும் என் ஆட்டோவில் முத முதலா ஏறிடக் கூடாதேன்னு பயந்துகிட்டு நின்னேன். மகாலட்சுமி போல நீங்க வந்து நாளைத் தொடங்கி வைச்சிருக்கீங்க… இன்னைக்கு பொழுது நல்ல பொழுதா எனக்கு விடிஞ்சிருச்சு. மனுசருக்கு மனுசர் இந்த உதவிகூடச் செய்யலைன்னா எப்படிம்மா?”
“நீங்க கேட்டது கரெக்டான ரேட்தான். கூடக் கேட்கலையே…”
“அது உங்களுக்குத் தெரிந்த மாதிரி எத்தனை பேருக்குத் தெரியுது? ஆட்டோக்காரன்னா… அடாவடிக் காரன்னு பெயராகிப் போச்சு. எங்களோட நாணயம் பத்தி உங்களுக்குத் தெரிந்தது போல் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கிறதுன்னு சொல்லுங்க…? வரேன்ம்மா…”
ஆட்டோ டிரைவர் போய்விட ரூபிணி தயக்கமாய் அங்கே அமர்ந்து காபி சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்களைப் பார்த்தாள். அவர்களில் ஒரு பெண்.
“ஹாய்… ஐ ஆம் ஜமுனா…” என்றாள்.
“ஐ ஆம் ரூபிணி… வார்டனைப் பார்க்கணுமே..”
“என்கூட வாங்க போகலாம்..”
“பெட்டி பையெல்லாம்…”
“ஆளுக்கு ஒன்னாய் தூக்கிக் கொண்டு போனால் போகிறது.”
“உங்களுக்கேன்ன வீண் சிரமம்.”
“அட.. இதில் என்னங்க சிரமம்? ஒரு ஆட்டோ டிரைவர் அரை மணி நேரமாய் டயலாக் பேசி பெட்டி பைகளை தூக்கிக் கொண்டு வந்து வைக்கும்போது.. ஹாஸ்டல் மேட். நான் உதவி செய்ய மாட்டேனா…”
அவளின் இயல்பான பேச்சில் கவரப்பட்ட ரூபிணி அவள் பின்னால் பெட்டியைத் தூக்கிக் கொண்டு நடந்தாள். ரூபிணியின் டிராவல் பேக்கைத் தூக்கிக் கொண்டு முன்னால் நடந்த ஜமுனா நீண்டிருந்த வராண்டாவில் ஒரு அறையின் முன் நின்று கொண்டு கதவை ஒரு விரலால் மிக மெதுவாய்… நாசுக்காய் தட்டினாள்.
“யார் அது?”
“ஜமுனா மேடம்…”
“பேஸ் வாஷ் பண்ணிக்கிட்டு இருக்கேன்.. என்ன விஷயம்”
“நியூ பேஸ் ஒருத்தங்க வந்திருக்காங்க… அதுதான் விசயம்..”
ரூபிணிக்கு சிரிப்பு வந்துவிட்டது. ஜமுனாவோ இயல்பாய் முகத்தை வைத்துக் கொண்டு ரூபிணியைப் பார்த்து,
“எத்தனை முறை வாஷ் பண்ணினாலும் அந்த பேஸ் தடித்த பேஸாத்தான் இருக்கப் போகுது.. இவங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை..?” என்று கூறினாள்.
இப்போது ரூபிணி வாய் விட்டே சிரித்தாள். அறைக் கதவு திறந்தது. ஈர முகத்தை டவலால் துடைத்தபடி ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி வந்து நின்றாள்.
“ரூபிணி… இவங்கதான் மணிமேகலை மேடம். நம்ம வார்டன். நான் இப்போது உங்கள்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேனே.. பால் வடியும் முகம் இவங்களுடையதுன்னு.. அந்த அழகு முகத்தைக் கொண்டவங்க இவங்கதான்.”
“என்னைப் புகழா விட்டால் உனக்குப் பொழுதே போகாது. ஜமுனா… உன் பெயர் என்னம்மா?”
“ரூபிணி மேடம்…”
“எங்கே வேலை பார்க்கிறாய்?”
“எல்.ஐ.ஸி.யில் வேலை கிடைத்திருக்கிறது மேடம். போனில் உங்களிடம் போன வாரம் பேசினேனே… நீங்கள் தான் ரூம் இருக்கிறது உடனே வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று சொன்னீர்கள்.”
“யெஸ்.. யெஸ்.. ஐ ரிமம்பர் இட்.. சும்மா உன்னை வெரி பை பண்ண கேட்டேன். நீதானா.. அது என்று கன்பர்ம் பண்ணிக் கொண்டேன்.” மணிமேகலை சமாளித்தாள்.
“பொய்.. பொய்.. அம்மணிக்கு மறதி அதிகம். மூக்குக் கண்ணாடியை போட்டுக் கொண்டே கண்ணாடியைத் தேடும் ரகம். ஞாபகசக்தி பிட்டுக்குச்சுன்னு ஒத்துக்காது. கப்ஸா விடும் பாருங்களேன். நீங்க பேசின விவரத்தை மறந்துவிட்டு நீதானா அந்தக் குயில்ன்னு டெஸ்ட் பண்ணினேன் என்று கதை விடுவதை…” ரூபிணியின் காதோரமாய் ஜமுனா முணுமுணுத்தாள்.
“ஜமுனா என்ன சொல்கிறாள்?” மணிமேகலை வினவ ரூபிணி சங்கடத்துக்கு உள்ளானாள்.
“உங்களைப் பற்றி பெருமையாய் சொல்லிக் கொண்டிருந்தேன் மேடம். உங்களுக்கு அபார ஞாபக சக்தின்னு எனக்குத் தெரியும். ரூபிணிக்குத் தெரியாதே…” ஜமுனா சிரிக்காமல் கூறினாள்.
“ஜமுனாவிற்கு என்னைப் பற்றிப் பேசுவதென்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி… அவ்வளவு பிடிக்கும். நீ உன் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரின் ஜெராக்ஸ் காபி இருந்தால் கொடும்மா… மற்ற பயோ டேட்டாவைச் சொல்லு…”
மணிமேகலை ஒரு விண்ணப்பப் படிவத்தை எடுத்து ரூபிணியிடம் விவரம் கேட்டுக் கொண்டே மளமளவென்று பூர்த்தி செய்தாள். ரூபிணி தயாராய் வைத்திருந்த அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரின் ஜெராக்ஸ் காபியைக் கொடுத்தாள்.
“பரவாயில்லையே ரெடியாய் வைத்திருக்கிறாயே..”
“நீங்கள் அப்பாயின்ட்மென்ட் ஆர்டரின் ஜெராக்ஸ் காபி வேண்டுமென்று போனில் சொல்லியிருந்தீர்கள் மேடம்.”
“மேடம் அவங்க சொன்னதை நீங்க நினைவில் வைத்திருந்தீங்களான்னு செக் பண்ணுகிறாங்க ரூபிணி. நான் சொல்வது சரிதானே மேடம்…” மீண்டும் ஜமுனா சிரிக்காமல் கூற ரூபிணிக்கு அவளை மிகவும் பிடித்து விட்டது.
“கரெக்டாகச் சொல்லி விட்டாய் ஜமுனா. நீ நான் சொன்னதை மறந்து விடாமல் இருக்கியான்னு செக்பண்ணினேன்ம்மா… இங்கே கையெழுத்துப் போடு…”
மணிமேகலை நீட்டிய விண்ணப்ப படிவத்தில் கையொப்பம் இட்டு அவளிடம் திருப்பிக் கொடுத்தாள் ரூபிணி.
“சரி நீ போம்மா…” மணிமேகலை எதையோ தேடியவாறு கூற,
“எங்கே போவது?” என்று தெரியாமல் ரூபிணி விழித்தாள்.
“பார்த்தீர்களா… மறதி மணிமேகலை பண்ணும் அட்டகாசத்தை. ரூமை அலாட் பண்ணாமல் போகச் சொல்லுதே..” சன்னமாய் ரூபிணியிடம் கூறிவிட்டு மணிமேகலையிடம் சத்தமாய்,
“மேடம் நீங்க எந்த ரூமுன்னு சொன்னீங்க. எனக்கு மறந்து விட்டதே. நான்தான் இவங்களுக்கு வழிகாட்டணும்?” என்று கேட்டாள் ஜமுனா.
‘எந்த ரூமைச் சொன்னோம்?’ என்று மணிமேகலை விழித்தவாறு ஜமுனாவைப் பார்த்துக் கேட்டாள்.
“உன் ரூமில் யார் யார் இருக்கிறீங்க.”
“நான் மட்டும்தான் மேடம்.”
“ஏன் உன் ரூம் மேட் என்ன ஆனாள்.”
“வேலை மாறுதல் வாங்கிக் கொண்டு போனாள்.”
“எப்போது…?”
“நேற்றுச் சாயங்காலம்தான் மேடம்.. நீங்கள் கூட அவளைக் கட்டித் தழுவி பிரியா விடை கொடுத்தீங்களே..”
ஜமுனா எடுத்துக் கொடுக்கவும் அதைப் பிடித்துக் கொண்ட மணிமேகலை.
“யெஸ்.. யெஸ்.. இவங்களை உன் ரூமில்தான் தங்க வைக்கப் போகிறேன்.. அழைத்துக் கொண்டு போ..” என்று கூறினாள்.
“தேங்க் யு மேடம்…” என்று மணிமேகலையிடம் கூறி விட்டு,
“வாங்க… ஓடிப்போயிடலாம்… இன்னும் கொஞ்சம் நேரம் இங்கேயே நின்றால் நம்மையே யாருன்னு கேட்டு விடும் இந்தம்மா…” என்று ரூபிணியிடம் கிசுகிசுத்தவாறு பெட்டியை எடுத்துக் கொண்டாள் ஜமுனா.. அவளைப் பின் தொடர்ந்து அறையை விட்டு வெளியே வந்த ரூபிணிக்கு ‘அப்பாடி…’ என்றிருந்தது.
“இவங்க எப்பவுமே இப்படித்தான் பேசுவாங்களா?” ரூபிணி கவலையாய் விசாரித்தாள்.
“இப்படித்தான் எப்பவுமே பேசும். அதுக்கு நீங்க ஏன் கவலைப்படறீங்க? அது மறதி அதுக்கு. நமக்கென்ன வந்தது?” என்றவாறு மாடிப்படியில் கால் வைத்த ஜமுனா.
“ஆமாம்.. நீங்க இன்னும் காபி சாப்பிடலையே..” என்று கேட்டு விட்டு அங்கே மாடிப்படியை பெருக்கிக் கொண்டிருந்த வேலையாளிடம்,
“ரோஸ்.. எங்க ரூமுக்கு ரெண்டு காபி வாங்கிட்டு வாயேன்..” என்று கூறினாள்.
“ஏம்மா… என் பெயர் எவ்வளவு அழகா இருக்கும். அதை ரோஸ் ரோஸ்ன்னு கொலை பண்றியே.. என் பேரை சரியாச் சொல்லிக் கூப்பிட்டால்தான் வாங்கிக்கிட்டு வருவேன்” அந்த ரோஸ் என்று அழைக்கப்பட்ட வேலையாள் நொடித்தாள்.
“இதுக்குப் போய் ஸ்டிரைக் பண்ணலாமா? உன் பெயர் ரோஜாரமணிதான். முழுப் பெயரையும் சொல்லி ரோஜாரமணின்னு கூப்பிட எனக்கும் ஆசைதான். அதில பாரு ரோஸ்.. எனக்கு வாய் தவறி ஜில் ஜில் ரமாமணின்னே உன்னைக் கூப்பிட வருது…”
“சரி சரி.. போ.. ரூமுக்கு காபியைக் கொண்டாரேன். ஆமாம் இது யாரு புதுமுகமாய் இருக்கே..”
“இந்த புதுமுகத்தை அறிமுகம் செய்து வைக்கிறேன் கேள்.. இவங்க பெயர் ரூபிணி எல்.ஐ.ஸி.யில் வேலை பார்க்கிறாங்க.”
“ஆமாம். இது என்னா புதுசா கீது? உன் ரூம் மேட் எல்லாத்தையும் வாடி போடின்னு கூப்பிடுவே. இதைப் போயி அவங்க இவங்கன்னு மரியாதையாய் கூப்பிடுறயே.. என்னா விஷயம்?”
“உன்னைப் போல் நாலு பெரிய மனிதர்கள் இந்த விஷயத்தை இவங்க காதில் போட்டு வாடி போடின்னு கூப்பிட பெர்மிசன் வாங்கிக் கொடுக்கட்டும்ன்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன். அதுதான் விஷயம்.” ரூபிணியைப் பார்த்தவாறு ரோஜாரமணியிடம் கூறினாள் ஜமுனா.
“பெர்மிசன் கிராண்டட்” ரூபிணி சிரித்தாள்.
“அப்பா.. இப்போதுதான் நிம்மதியாச்சு. தேங்க் யூ ரோஸ். நீ போய் எனக்கும் இவளுக்கும் காபி கொண்டு வா..”
இப்படித்தான் விழுப்புரத்தில் ரூபிணி காலடி எடுத்து வைத்த ஒரு மணி நேரத்திற்குள் ஜமுனா அவளுக்குத் தோழியானாள்.
Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.