Chapter 15

0Shares

“உனக்குத் தெரியாது  ரூபிணி.. நான் ஒரே இடத்தில் நிற்க முடியாது.. பறந்து பறந்து வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவன். நீ இந்த ஊரில் இருக்கிறாய் என்ற ஒரே காரணத்திற்காக இந்த ஊரை விட்டு நான் இப்போதெல்லாம் நகர்வதேயில்லை.. எவ்வளவு வேலைகள் இருந்தாலும் இரவில் தூங்க விழுப்புரம் வந்து விடுகிறேன்.. எதற்காக..? உனக்காக.. ரூபிணி.. நீ லாரன்ஸிற்காக போனில் பரிந்து பேசியது எனக்குள் எந்த அளவு பாதிப்பை உருவாக்கியது தெரியுமா..? அவன் உனக்கு அவமரியாதையை உண்டு பண்ணினான்.. நீ அவன் மேல் கருணை காட்டினாய்.. பகைவருக்கும் இரங்கும் உன் உள்ளம் கண்டு நான் அதிசயப்பட்டுப் போனேன்.. எனக்குப் பழிவாங்கித்தான் பழக்கம்.. மன்னித்துப் பழக்கமே இல்லை.. என் வாழ்வில் முதன் முறையாக நான் அவனை மன்னித்தேன்.. நீ எனக்கு மன்னிக்கக் கற்றுக் கொடுத்தாய் ரூபிணி… என்னிடம் வேலை செய்பவர்கள் வீட்டிற்கு நான் போனது கிடையாது.. ஆனால் லாரன்ஸின் வீட்டிற்குப் போனேன்.. எதற்காக தெரியுமா..? உன் பரிதாபத்தை சம்பாதித்த அந்தக் குழந்தையின் முகம் பார்க்க.. அந்தப் பிஞ்சு முகத்தைப் பார்த்த போது உன் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.. ரூபிணி.. அன்று அந்தக் குழந்தையின் கையில் நான் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தேன்.. உன்னை எனக்குத் தெரியப்படுத்தியதற்காக.. உன் நெஞ்சம் எவ்வளவு உன்னதமானது என்பதை நான் அறிய வைத்தற்காக..” ஹரிஹரன் காரைக் கிளப்பினான்..

ரூபிணியின் கண்களில் கண்ணீர் ததும்பி வழிந்து கொண்டிருந்தது.. இவன் எவ்வளவு நல்லவன்..! 

இவனிடம் பேசிப் பழக ஊர் உலகம் தடை செய்கிறதே…

“என் நெஞ்சத்தைப் பற்றி நீ இன்னும் சரியாக அறிந்து கொள்ளவில்லை.. இப்போது உன்னை விட்டு விலகிப் போகிறேன்.. என்னால் நீ படும் வேதனைகளைத் தாங்க முடியவில்லை.. இங்கேயே இருந்தால் உன்னைப் பார்க்காமல் .. பேசாமல் இருக்க என்னால் முடியாது.. டெல்லிக்குப் போகிறேன்..” ஹரிஹரன் உணர்ச்சியற்ற குரலில் கூறினான்.

“எப்போது திரும்பி வருவீர்கள்..?” ரூபிணி அவசரமாய் கேட்டாள்.. அவளது விழிகளில் பிரிவைத் தாங்க முடியாத வேதனை இருந்தது.

அவளைத் திரும்பிப் பார்த்தவனின் விழிகள் மின்னின.. முகம் விகசித்தது.

“தெரியாது.. அங்கே ஹோட்டல் கட்டும் வேலை நடந்து கொண்டிருக்கிறது.. உன்னை நான் இனித் தொந்தரவு செய்ய மாட்டேன்.. நிம்மதியாய் போய் வா..”

ரூபிணியின் ஹாஸ்டல் முன்னால் கார் நின்றது.. இறங்க முடியாமல் ரூபிணி தவித்தாள்.. தாய் முகம் தேடும் மழலையாய் ஹரிஹரனின் முகம் பார்த்தாள்.. ‘நிம்மதியா.. நீ அருகில் இல்லாமலா..?’

“இறங்க மனமில்லையா…”

ரூபிணி இதழ் கடித்து கண்ணீரைக் கட்டுப்படுத்த விழிகளைச் சிமிட்டினாள்.. ‘முடியவில்லையே.. என்னால் பிரிய முடியவில்லையே…’

“சொல் ரூபிணி.. இப்படியே என்னோடு வந்து விடுகிறாயா..? உன் மனம் மறைத்து ஏன் இந்தத் தவி தவிக்கிறாய்.. உன் மனதில் நான் இல்லையா..? உன் நெஞ்சில் என்மேல் நேசம் இல்லையா..? ஏன் இந்தப் போராட்டம்..? போய் விடலாமா..? என் வீட்டிற்குப் போய் விடலாமா..?” ஹரிஹரன் கரம் நீட்டி அழைத்தான்..

இன்னும் சற்று நேரம் தாமதித்தால் அவன் கேட்பதற்கு ‘சரி’யென்று சொல்லி அவன் பின்னாலேயே போய் விடுவோம் என்று தோன்றவும் ரூபிணி படக்கென்று கார்க் கதவைத் திறந்து கொண்டு இறங்கி விட்டாள்.. ஹரிஹரனின் முகம் கல்லைப் போல் கடினமானது..

“வருகிறேன்..” ஹரிஹரனின் குரல் காற்றோடு கலக்க அவனது கார் அந்தக் காற்றை விட வேகமாகப் பறந்தது… கண் பார்வையிலிருந்து மறைந்தது.

ஏன் இவ்வளவு வேகமாக ஓட்டுகிறான்..? அவளது பார்வையிலிருந்து மறைய அவ்வளவு ஆர்வமா..? அவளைப் பிரிந்து செல்ல இவ்வளவு துடிப்பா..?

‘இருக்காதா..?’ அவளது மனம் அவளைக் குத்திக் காட்டியது.

‘அன்பைச் சொல்கிறவனை வம்பு செய்கிறவன் போல் விலக்கி வைத்தாய்.. உன் முகம் பார்க்க அத்தனை வேலைகளையும் புறக்கணித்து விட்டு வந்தவனின் முகம் பார்க்க அஞ்சி நடுங்கினாய்.. இயல்பாக அவன் உதவி செய்வதை ஏற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டினாய்.. ஊரில் கொடிகட்டிப் பறப்பவன்.. உன் அருகே அமர்ந்து.. உன் முகம் பார்த்துப் பேசத் துடித்தான்.. அவன் துடிப்பை உணர்ந்தும் உணராதவள் போல் நடித்து அவனைப் புண்படுத்தினாய்.. இனி உன்னை விட்டு விலகி ஓடாமல் என்ன செய்வான்..?’

உயிரற்ற உடலுடன் அறைக்குள் நுழைந்தவள் கட்டிலில் விழுந்து கதறினாள்.. அழுது அழுது ஓய்ந்து.. தன்னையறியாமல் தூங்கிவிட்டாள்.. மாலையில் ஜமுனா வந்து எழுப்பி விடும் வரை எழுந்திருக்கவே இல்லை..

“ரூபிணி எழுந்திரு.. இந்தா காபி..” ஜமுனா அவள் கையில் காபித் தம்ளரைக் கொடுத்தாள்.. வாங்கிக் குடித்துக் கொண்டே,

“நீ இப்போதுதான் வந்தாயா..?” என்று கேட்டாள் ரூபிணி.

“ஆமாம்.. அது சரி… உன் உடம்புக்கு என்ன? மதியமே வந்து விட்டாயாமே.. உன் ஹேண்ட்பேகில் சாப்பாட்டுப் பொட்டலம் அப்படியே இருக்கிறதே.. மதியம் சாப்பிட வில்லையா..?”

“ஒரே.. தலைவலி ஜமுனா..”

“இப்போது எப்படியிருக்கிறது..?”

“பரவாயில்லை..”

மதியம் ஹரிஹரனின் காரில் வந்து இறங்கியதை யாரும் பார்த்து விட்டார்களோ.. ஜமுனாவிடம் சொல்லி யிருப்பார்களோ என்று மனதில் பயந்து கொண்டே இருந்தாள் ரூபிணி.. ஆனால் ஜமுனா அதைப் பற்றிக் கேள்வியே கேட்கவில்லை.

நிம்மதியாய் உணர்ந்தவள் எழுந்து குளியலறைக்குள் சென்று முகம் கழுவிக் கொண்டிருந்த போது,

“ஏம்மா.. நம்ம ரூபிணியம்மா எங்கேம்மா…” என்று ரோஜாரமணி வினவுவது கேட்டது.

“ஏன் ரோஸ்.. என்னிடம் பேசமாட்டாயா..?”

“ஐய்யே.. உன்கிட்ட பேச என்னாம்மா கீது…”

“இந்த சென்னைச் செந்தமிழும் விழுப்புரம் மணித் தமிழும் சேர்ந்த கலவைத் தமிழ் இருக்கில்ல… அதைக் கொஞ்சம் பேசேன்.. என் காது குளிரக் கேட்கிறேன்..”

“நீயா.. ஏம்மா எனக்கு காது குத்தறே.. வெறுமே பேச்சைக் கேட்கிறதோட நீ நிறுத்திக்குவியாக்கும்.. உன்னை எனக்கு தெரியாதாக்கும்..”

“அப்படி என்ன என்னைப் பற்றி நீ தெரிந்து கொண்டாயாக்கும்..?”

“என் வாயைக் கிளறி வேடிக்கை பார்ப்பே…”

“கிளறிப் பார்க்க நீயென்ன உப்புமாவா.. எங்கள் ரோஸ் ஆச்சே..”

“அட போம்மா.. எனக்குப் பல ஜோலி இருக்கு..”

“எனக்கு மட்டும் ஜோலி இல்லையா..?”

“நீ ஜோலி முடிஞ்சு ஜாலியா வந்து உட்கார்ந்துக்கினுகீறே.. எனக்கு அப்படியா.. ராத்திரி கண் மூடுற வரைக்கும் வேலையிருக்கும்…”

“அதுக்காக ஒரு பேச்சுக் கூட பேசமாட்டியா..?”

“நீ ஒரு பேச்சோடு நிறுத்த விடுவியா..?”

என்னவோ தான் பேச்சை நிறுத்திவிட்டது போல் தன் வாயை உண்மையிலேயே கிளறி ஜமுனா பேச வைத்துக் கொண்டிருப்பதை அறியாதவளாய் ரோஜாரமணி பிகு பண்ணிக் கொண்டிருப்பதைக் கண்டு ரூபிணிக்கு சிரிப்பு வந்தது. முகத்தை டவலால் துடைத்துக் கொண்டே குளியலறையில் இருந்து ரூபிணி வெளியே வந்தாள்..

“என்ன ரோஜாரமணி…”

“இந்தா.. ரூபிணியம்மாவே வந்தாச்சு.. அம்மா உன் வண்டியை ரிப்பேருக்கு விட்டிருந்தியாமில்ல.. அதை ரிப்பேர் பண்ணி வொர்க் ஷாப் ஆள் கொண்டு வந்திருக்கான்.. கீழே நிக்க வைச்சிருக்கேன்.. ஜரூரா வா..”

“ஏன் ரோஸ்.. நான் பேசினால் பேச மாட்டாய்.. ரூபிணியிடம் மட்டும் இவ்வளவு நீளமா பேசுகிறாயே.. ஆனாலும் உனக்கு இவ்வளவு ஓர வஞ்சனை ஆகாது.. ரோஸ்..”

“நீ ரோஸ்.. ரோஸ்ன்னு என் பெயரைக் கொலை செய்யறே.. இந்தம்மா வாய் நிறைய ரோஜாரமணின்னு என் பெயரைச் சொல்லுது…”

“அதுக்காக இப்படியா..?”

ஜமுனா விடாமல் ரோஜாரமணியை வம்புக்கு இழுத்துக் கொண்டிருக்க ரூபிணி லேசாகச் சிரித்துக் கொண்டே படிகளில் இறங்கினாள்..

வாசலில் காக்கி உடையுடன் ஒரு ஆள் நின்று கொண்டிருந்தான்.. அவளைப் பார்த்ததும் வணக்கம் சொன்னான்.. அவள் கையில் ஒரு கவரையும் வண்டிச் சாவியையும் கொடுத்துவிட்டு விரைந்து சென்றுவிட்டான். அங்கு நிறுத்தப்பட்டிருந்த கைனடிக் ஹோண்டாவைப் பார்த்ததும் ரூபிணிக்கு தூக்கிவாரிப் போட்டது..

0Shares

Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link