Chapter 16
சுகந்தி யதேச்சையாகத்தான் அந்தப் படங்களைப் பிடித்தாள்.. அவளுக்குப் பிரசன்னாவின் பேச்சும்.. தோற்றமும்.. கனிவான அவனது அணுகு முறையும்.. காதலைச் சொல்லிப் புரிய வைத்த விதமும் மிகவும் பிடித்திருந்தது..
அவனைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போல் அவளுக்குள் தோன்றிவிட.. அவள் பிரசன்னாவை பால்கனியின் மறைவில் நின்று கொண்டு படம் பிடித்தாள்.. ஆனால்.. அவன் தனியாகப் படத்தில் விழவில்லை.. அவன் தோள் தொட்டுப் பேசிக் கொண்டிருந்த வாசவியும் சேர்ந்தே படத்தில் விழுந்தாள்..
அதோடு விடாமல்.. பிரசன்னாவின் பெற்றோரைப் படம் பிடிக்க அவள் முயன்றபோது.. திலகத்தின் தோளில் தலை சாய்த்துச் சிரித்துக் கொண்டிருந்த வாசவியும் சேர்ந்தே படத்தில் விழுந்தாள்..
“அண்ணா..! வீட்டில் சொல்லி விடாதே.. இதுதான் அவருடைய படம்.. நான் படம் எடுத்து வைத்திருப்பது யாருக்கும் தெரியாது.. இது அவருடைய பேரண்ட்ஸ்..”
சுகந்தி ரகசியமாய்த் தன் செல்போனில் இருந்த படங்களைக் காட்ட.. சந்தோஷின் முகம் சட்டென்று மாறியது.. அவன் பிரசன்னாவை விட்டு விட்டு.. அவன் தோள் தொட்டு ஏதோ சொல்லிக் கொண்டிருந்த வாசவியையே.. வைத்த கண் வாங்காமல் பார்த்தான்..
“இது யார் சுகந்தி..?”
“இவள்தான் வாசவி..”
“என்னவோ.. இதுதான் விக்டோரியா மகாராணி என்பது போலச் சொல்கிறாயே.. இவள் என்ன அவ்வளவு பெரிய ஆளா..?”
“அண்ணா.. உண்மையிலேயே இவள் பெரிய ஆள் தான்.. என் வருங்கால நாத்தனார்..”
“ஈஸிட்..”
அவன் திரும்பவும் படத்தைப் பார்த்தான்.. சீராக இல்லாமல் கலைந்த கூந்தலும்.. அலட்சியமாய்க் கிடந்த துப்பட்டாவும்.. அவள் முகத்தில் தெரிந்த குறுகுறுப்பும்.. அவனை மீண்டும் மீண்டும் அவளைப் பார்க்கத் தூண்டின..
“இதுதான் உன்னவரின் பேரண்ட்ஸா.. நல்ல மாதிரி யாகத்தான் தெரிகிறார்கள்..”
சந்தோஷ் காளிதாஸையும்.. திலகத்தையும் விட்டு.. திலகத்தின் தோளின் மேல் சாய்ந்து சிரித்துக் கொண்டிருந்த வாசவியைப் பார்த்தான்.. அவளது ‘பளீர்’ச் சிரிப்பு அவனை ஈர்த்தது..
‘எப்பேர்ப்பட்ட சிரிப்பு இது.. மனதிலிருந்து வரும் சிரிப்பு.. இயல்பான சிரிப்பு.. காமெராவுக்காக இல்லாமல்.. தான் படம் எடுக்கப்படுவதைக்கூட அறியாத சிரிப்பு..’
“என்ன அண்ணா.. அவளையே அப்படிப் பார்க்கிறாய்..?”
“இல்லை சுகந்தி.. இப்படி வாய் விட்டுச் சிரிக்கிறாளே.. அதைப் பார்த்தேன்..”
“உண்மையில் சொல்லப் போனால்.. அவளோடு பேசினால் நாம்தான் விழுந்து விழுந்து சிரிப்போம்.. அப்படி ஒரு வாயாடி..”
“நிஜமாகவா..?”
சந்தோஷ் ஆச்சரியத்துடன் படத்தைப் பார்த்தான்.. சீராகப் படர்ந்து நிற்கும் மலர்களை விட.. காடுகளில் தானாகப் பூத்துக் குலுங்கும் மலர்களிடம் இயற்கையின் வனப்பு அதிகம் இருக்கும்..
‘இவள் காட்டு மலரா..?’
“நிஜமாகத்தான் அண்ணா.. அவள் வாயைத் திறந்தால் மூடவே மாட்டாள்.. பேசிக் கொண்டே இருப்பாள்..”
“நன்றாக ரம்பம் போடுவாள்ன்னு சொல்லு..”
“நீ ஒருமுறை அவளிடம் பேசிப் பார்த்து விட்டுச் சொல்லு.. அவள் ரம்பமா.. இல்லை இன்டரெஸ்டிங் பெர்ஸனாலிட்டியான்னு..”
‘ஊம்.. அப்படியா.. உன்னைப் பார்த்து விடவா..?’ அவன் மனதுக்குள் கேட்டபடி போட்டோவை மீண்டும் பார்த்தான்..
“ஓகே.. அவளிடம் பேசிப் பார்த்து விட்டு.. நீ சொன்னது.. உண்மையா.. இல்லை பொய்யான்னு சொல்கிறேன்..”
“அப்படியானால் நாளை மறுநாள்.. எனக்கு முகூர்த்தப் பட்டுச் சேலை எடுக்க என் மாமனார் வீட்டிலிருந்து இங்கே பொள்ளாச்சிக்கு வரப் போகிறார்கள்.. நீயும் கடைக்கு வா.. என் நாத்தனாரை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்..”
சுகந்தி விளையாட்டாகத்தான் அழைத்தாள்.. சந்தோஷிற்கு இருக்கும் வேலைப்பளுவில் அவன் ஜவுளிக்கடைக்கெல்லாம் எங்கே வரப்போகிறான் என்று தான் அவள் நினைத்தாள்..
ஆனால் சந்தோஷ் சொன்னபடியே.. ஜவுளிக் கடைக்கு வந்து விட்டான்.. சுகந்தியிடம் பேசியபடியே.. வாசவியைக் கண்களால் தேடினான்.. அப்போதுதான் அது நிகழ்ந்தது..
திலகத்திடம் பேசிக் கொண்டே திரும்பிய வாசவி அவனைப் பார்த்துக் கண்சிமிட்டி விட்டாள்..
சந்தோஷ் பேசவே மறந்து.. ‘ஆ’வென்று வாய் பிளந்து நின்று விட்டான்..
‘என்னடா இது.. இவள் என்னைப் பார்த்துக் கண்ணடிக்கிறாளே..’
அவன் ஆச்சரியத்துடன் அவளைப் பார்க்க.. அவளது முகம் பேயறைந்தது போல் ஆகிவிட்டது.. அவள் பதட்டத்துடன் திலகத்தின் பக்கம் நெருங்கி அமர்ந்து கொண்டாள்..
Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.