Chapter 17

0Shares

வாசவி பதட்டத்துடன் நகம் கடிக்க ஆரம்பித்தாள்.. நிமிடத்திற்கு ஒரு முறை சந்தோஷின் பக்கம் பார்ப்பதும்.. அவனது பார்வையைக் கண்டு பதட்டத்துடன் தாயின் பின்னால் மறைந்து கொள்வதுமாய் இருந்தவளைப் பார்த்த சந்தோஷிற்கு உண்மை விளங்கி விட்டது..

அவள் நிஜத்தில் அவளுடைய அண்ணனைப் பார்த்தோ இல்லை.. சுகந்தியைப் பார்த்தோ கண் சிமிட்டியிருக்க வேண்டும்.. ஆனால்.. எதிர்பாராத விதமாய் சந்தோஷ் அதைப் பார்த்து விட்டான்.. அந்தச் சங்கடத்தில் நாணப்பட்டு அவள் ஒளிந்து கொள்கிறாள்..

சற்று முன் குறும்பு கொப்புளிக்கும் விழிகளுடன் அவள் கண் சிமிட்டியது அவன் மனதில் ஆடியது.. அவன் உதட்டைக் கடித்துக் கொண்டு அவளையே பார்த்தான்..

சுகந்தி வாசவியை அழைக்கவும்.. வாசவி தயங்கிக் கொண்டே வந்தாள்.. சந்தோஷ் பேச்சை வளர்த்து.. குரங்கிலிருந்து உருவான இனம்.. மனித இனம் என்பதில் வந்து நின்றான்..

சுகந்தி.. சந்தோஷை இனம் கண்டு கொண்டாள்.. வாசவியைப் பார்த்தாள்.. இது எதுவும் அறியாதவளாய் அவள் சண்டைக் கோழி போல் சிலிர்த்துக் கொண்டு.. சந்தோஷிடம் சண்டைக்குப் போனாள்..

“அண்ணி..! உங்க அண்ணன்கிட்ட சொல்லி வையுங்க.. குரங்கிலிருந்து வந்தது முதலில் உங்கள் அண்ணன் தான்.. அதற்கப்புறம்தான் நான்..”

“அது ஏன் அப்படியாம் சுகந்தி..?”

“உங்கள் அண்ணனுக்கு என்ன நேற்றுப் பிறந்த பாப்பா என்ற நினைப்பா..? அண்ணி.. என்னைவிட வயதில்.. மிக.. மிக.. மிக.. மூத்தவர்.. அதனால்.. அவர்தானே குரங்கு இனத்திலிருந்து வந்த மனித இனத்திலும் மூத்தவர்..”

“அது என்ன சுகந்தி உன் நாத்தனார் மிக… மிகன்னு நீட்டி முழக்குகிறாங்க.. அப்படியொன்றும் நான் தடியூன்றி நடக்கும் தொண்டுக் கிழவனில்லைன்னு சொல்லம்மா..”

“அதற்காக லாலிபாப் சாப்பிடும் குட்டிப் பையனு மில்லை..”

விட்டால் அவர்கள் இருவரும் அன்று முழுவதும் வார்த்தைப் போரில் ஈடுபட்டிருப்பார்கள்..

ஆனால்.. மயில்வாகனம் அதற்கு விடவில்லை.. அவர் மரியாதையுடன் பிரசன்னாவின் அருகே வந்து..

“சாப்பிடப் போகலாமா மாப்பிள்ளை..?” என்று கேட்டார்..

பிரசன்னா தயக்கத்துடன் காளிதாஸைப் பார்த்தான்..

“கல்யாணம் முடியாமல் சம்பந்தி வீட்டில் கை நனைக்க வேண்டாமென்று சொன்னேன், பிரசன்னா.. அதற்குச் சம்பந்தி அவருடைய ஒன்று விட்ட அண்ணன் மகனின் ஹோட்டலில் மதிய விருந்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்கிறதாகச் சொல்கிறார்.. அவங்க மனம் கோண வேண்டாம்.. சாப்பிட்டு விட்டே போகலாமே..” என்று காஸிதாஸ் மகனிடம் பச்சைக் கொடி காட்டினார்..

பிரசன்னா.. சுகந்தியின் முக மலர்ச்சியைக் கவனித் தான்.. இன்னும் சிறிது நேரம்.. அவனுடைய அருகாமையில் இருக்கலாம் என்பதில் வந்த முகமலர்ச்சி அது.. பிரசன்னாவின் மனம் மென்மையாகியது.. அவனது கண்கள் சுகந்தியின் கண்களைச் சந்தித்தன..

அவர்கள் இருவரும் கண்களால் கவிதை பேசிக் கொண்டிருக்க.. வாசவி.. மனதிற்குள் அலை பாய்ந்தாள்..

‘ஒன்றுவிட்ட அண்ணன் மகனின் ஹோட்டல் என்றால்.. அது.. இந்த சந்தோஷின் ஹோட்டல்தானே.. இவன் முகத்தை இன்னும் கொஞ்ச நேரம் பார்க்க வேண்டுமா..?’

அவளுக்குத் தெரியாது.. இது சந்தோஷின் ஏற்பாடு தான் என்பது..

சந்தோஷிற்கு அவளைப் பிடித்திருந்தது.. ஏதோ ஒரு வகையில்.. அவனால் இனம் காண முடியாத விதத்தில்.. வாசவி அவனைப் பாதித்தாள்..

அதைக் ‘கண்டதும் காதல்’ என்று வகைப்படுத்த அவன் தயாராக இல்லை.. ஆனால் அவளை நேரில் பார்த்த முதல் வினாடியிலேயே.. விழி சிமிட்டிய அந்த மலர் முகத்தை அவனால் ஒதுக்கவும் முடியவில்லை..

சந்தோஷ்.. வாசவியினால் வசீகரிக்கப்பட்டான்.. அதே சமயம்.. அவளைப் பற்றி இன்னும் அறிந்து கொள்ள விரும்பினான்.. அவளை உள்ளம் தேடுவது எதற்காக என்பதில் தெளிவு பெற விரும்பினான்..

கூடுமானவரை அவளுடன் சேர்ந்திருக்க.. அவளது செயல்பாடுகளைக் கணித்து ஒரு முடிவுக்கு வர விரும்பித்தான் தன் ஹோட்டலில்.. சுகந்தியின் வருங்கால மாமனார் குடும்பத்திற்கு விருந்து அளிக்க விரும்புவதாக மயில்வாகனத்திடம் சொன்னான்.. அவர் மகிழ்ந்து போய் விட்டார்..

வாசலில் நின்ற வெளிநாட்டுக் காரில் ஏறியபடி சந்தோஷ் தோரணையாய்த் திரும்பி.. வாசவியின் முக மாற்றத்தைக் கவனித்தான்.. அவள் முறைத்தாள்.. அவனுக்கு அது திருப்தியாக இருந்தது..

‘ஸோ.. இவள் எனது அதிகப்படி வசதிகளால் ஈர்க்கப்படவில்லை..’

0Shares

Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link