Chapter 01
“பொய்…”
ஒரே வார்த்தையில் மோகனின் ஆறுநிமிட விளக்கப் பேச்சையும் ஊதித் தள்ளி விட்டாள் சுசரிதா.. அருகில் நின்ற மோகனின் நண்பனாகும் வரத்தைப் பெற்றுப் பிறந்திருந்த அன்பழகன் வாய்க்குள் சிரித்துக் கொண்டான்.. அவன் கண்களில்..
‘நான் அப்பவே சொன்னேனே கேட்டியா..?’ என்று கேள்வி இருந்தது..
கிழக்கும் மேற்கும் இணைவதைப் போல.. பொய்யை வெகு இயல்பாக தண்ணீரைக் குடிப்பதைப் போல பேசி வைக்கும் மோகனும்… உண்மையைத் தவிர வேறு எதையும் பேசித் தொலைக்க முடியாத அன்பழகனும் விதியின் போக்கில் நண்பர்களாகி தொலைத்திருந்தார்கள்.. அதைத்தான்..
“விதி வலியதுடா மோகன்..” என்று அன்பழகன் அடிக்கடி சொல்லி வருத்தப் படுகிறானோ என்ற நெடுநாள் சந்தேகம் மோகனின் மனதில் இருந்தது..
‘அப்படியாடா..?’ என்று அன்பழகனிடம் அவன் கேட்டு விடலாம்தான்.. அதற்கு அவன் ஆமாம் என்ற உண்மையைச் சொல்லிவிட்டால் என்ன செய்வது..?
அன்பழகன் பொய் சொல்ல மாட்டான்.. அவன் சொல்ல மாட்டான் என்பதைவிட.. அவனுக்கு பொய் சொல்ல வந்து தொலைக்காது.. ஒரு சின்னப் பொய்யைச் சொல்ல வேண்டுமானாலும்..
“இதைச் சொல்லித்தான் ஆகனுமாடா..?” என்று காலையில் இருந்தே கவலையாகிப் போவான்..
அவன் பொய்யைச் சொல்ல வேண்டிய நேரம் நெருங்குவதற்குள் அதை நினைத்து நினைத்தே அவனுக்கு நெஞ்சுவலி வந்துவிடும்.. வியர்வை ஆறாக பெருக்கெடுத்து ஓட.. நிற்க முடியாமல் கால்கள் இரண்டும் வெடவெடக்க அவன் படுகிற பாட்டைக் காண முடியாமல் அவன் சொல்ல வேண்டிய பொய்யை மோகனே சொல்லி நண்பனைத் தடுத்தாட்கொண்டு காப்பாற்றுவான்..
“இப்படியாடா உயிரை எடுப்ப..?” நண்பனிடம் எரிந்து விழுவான்..
“நான் என்னடா செய்யட்டும்..? நானும் பொய் சொல்லிப்புடனும்னு தான் பாக்கறேன்.. கழுதை.. அது வந்து தொலைவேனான்னு அடம் பிடிக்குதே..” பரிதாபமாகச் சொல்வான் அன்பழகன்..
அவனும்தான் என்ன செய்வான்..? நண்பர்களின் கேலியிலிருந்து தப்பிக்க எப்படியாவது ஒரு பொய்யைச் சொல்லிவிட வேண்டுமென்று அவனும் எத்தனையே பிரயத்தனங்களை மேற்கொள்கிறான்தான்..
“எப்படியும் இன்னைக்கு ஒரு பொய்யாவது சொல்லிப் புடனும்டா..” என்று சூளுரைக்கிறான்தான்..
ஆனால்.. வாய்மை எனப்படும் விலங்கு அவனை கண்ணுக்குத் தெரியாத தளைகளால் பிணைத்து வைத்துப் படாத பாடு படுத்துகிறதே.. அவனே நினைத்தாலும்.. அவன் வாயில் பொய் வந்து தொலைக்காது.. உண்மையோடு ஒட்டிப் பிறந்து தொலைத்தவன் அவன்.. மற்ற நண்பர்கள் அதைப் பற்றி வியக்கும் போது..
‘நானாடா பொய் சொல்ல மாட்டேங்கிறேன்..? அது வந்து தொலைக்கனுமேடா..’ என்று மனதுக்குள் புலம்பிக் கொள்வான்..
அன்பழகனின் அந்த குணாதிசயத்தைப் பற்றி ஒரு போதும் மோகன் வியக்க மாட்டான்..
“பய புள்ளைக்கு தைரியம் பத்தாதுடா..” என்று கடுப்படிப்பான்..
“ஆமாண்டா மச்சி.. பொய் சொல்லி தர்ம அடியை வாங்கறதைவிட உண்மையைச் சொல்லி கை காலை பத்திரமாப் பார்த்துக்கலாம் பாரு..” என்று சொல்லி விடுவான் அன்பழகன்..
அவன் என்ன உண்மையை மட்டும்தான் பேசுவேன் என்று சங்கல்பமா எடுத்திருக்கிறான்..? அவன் என்னதான் படாத பாடு பட்டாலும் உண்மையைத் தவிர வேறு பேச அவனுக்கு தோன்றித் தொலைக்க மாட்டேன் என்கிறதே..
பொய் சொல்வது ஒரு கலை என்று அன்பழகனுக்குத் தோன்றி விட்டது.. ஆயகலை அறுபத்தி நான்கையும் கற்றுத் தேர்ந்து விடும் வல்லமை பெற்றவன்தான் அவன்.. ஆனால் பொய் எனும் மாயக்கலையை மட்டும் அவனால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது போல அது அவனுக்கு ஆட்டம் காட்டியது..
‘எப்படித்தான் இவனுக பொய் சொல்றானுகளோ..’
நண்பர்களை அவன் பொறாமையுடன் பார்ப்பான்.. அதிலும் அவனுடைய ஆருயிர் நண்பன் மோகனின் மீது அபரிதமான பொறாமை அவனுக்குள் எழும்..
மோகன் உண்மையைப் போல பொய்யைப் பேசுவதில் வல்லவன்..
“அவன் வாயைத் திறந்தா வரிசை கட்டிக்கிட்டு பொய்களா வந்து விழுகும்டா..” என்பார்கள் மோகனின் நண்பர்கள்..
“ப்ப்பா.. என்னமா அழகா இருக்கீங்க மேடம்..” என்று அவனுடைய உயர் அதிகாரியிடம் ஜொள்ளுபவன்..
அந்தப் பெண்மணி இருக்கும் அறையை விட்டு வெளியே வந்ததும்..
“மூஞ்சியாடா அது..?” என்று விமரிசிப்பான்..
“அடேய் பாவி.. இப்பத்தானடா அவங்களை புகழ்ந்து பேசின..?”
கூடப் போன அன்பழகனுக்கு ஆற்றாமையாக இருக்கும்..
“ஏய்ய்.. இது பொய்யின்னு அவங்களுக்கே தெரிஞ்சிருக்கும்டா..” என்று தோளைக் குலுக்குவான்..
அது உண்மையோ என்று அன்பழகனுக்கே தோன்றும்.. ஏனெனில் மோகன் பொய்யாக வியந்த அந்த உயரதிகாரி மிகவும் புத்திசாலி.. மனிதரை எடை போடுவதில் வல்லவள்.. அவளாவது மோகன் பேசும் பொய்யை கண்டு கொள்ளாமல் இருப்பதாவது..
“இந்தாப்பாரு.. இப்படியாப்பட்ட பொய்கள்லதான் வாழ்க்கையே ஓடிக்கிட்டு இருக்கு.. கசப்பான உண்மைகளை விட இனிப்பான பொய்களை விரும்பற சிலபேரும் உலகத்தில இருக்கத்தான் செய்கிறாங்க.. நம்ம சுப்பீரியர் மாதிரி..”
“அப்ப அவங்களோட ஹஸ்பெண்டும் இதைப் போலதான் பொய் சொல்லி காலத்தை ஓட்டிக்கிட்டு இருப்பாரோ..?”
“அவனுக்கென்ன தலையெழுத்தா..? உனக்கும் எனக்கும்தான் இந்த தலையெழுத்து..! இல்லைன்னா நாம கொண்டு போற ஃபைலிலே ஆயிரத்தஞ்சு ஓட்டையக் கண்டு பிடிச்சு அந்தம்மா நம்ம மூஞ்சியிலேயே விட்டெரியுமே.. தேவைதானா..? அதுக்கு அவங்க மூஞ்சியைப் பாராட்டி ஒரு பொய்யச் சொல்லிட்டா.. நம்ம முகரையை பெயர்க்க வேண்டிய வேலை அவங்களுக்கும் மிச்சமாகிரும்ல..?”
இதுதான் மோகன்.. அவனின் இப்படியாகப்பட்ட வியாக்கினங்களைக் கேட்டுக் கேட்டு அன்பழகனுக்குப் பொய்யின் மீது ஒர்விதமான ஆதர்சமே வந்து விட்டது..
“எப்படிடா பொய் சொல்றது..?”
இவனும் கேட்டுப் பார்த்து விட்டான்.. மோகன் கொலை வெறியாகிப் போனானே தவிர இவனுக்கு பொய்யைக் கற்றுக் கொடுக்க முன்வரவில்லை.. அதற்கெல்லாம் தனி மூஞ்சி வேண்டும்.. அந்த மூஞ்சி அன்பழகனுக்கு இல்லை என்று சொல்லி விட்டான்.
‘என் மூஞ்சிக்கென்ன குறை..?’
அன்பழகன் ஆற்ற மாட்டாமல் பலமுறை கண்ணாடி பார்த்து விட்டான்.. அவன் முகத்தில் எத்தனை மாசு மருக்கள் இருக்கின்றன.. என்பன மட்டும் அவனுக்குத் தெரிந்தேயொழிய அவன் முகத்தில் என்ன குறை என்று மட்டும் தெரியவில்லை..
“உன் கொணத்துக்கு எப்படிடா அவன்கிட்டப் போய் மாட்டின..?”
அன்பழகனை அறிந்த நண்பர்கள் கேட்பதுண்டு..
‘நானாடா மாட்டினேன்..? விதி..! மாட்டி விட்டிருச்சுடா..’ இவன் மனதுக்குள் சொல்லிப் புலம்புவான்..
அவனையும் மோகனையும் அந்த மத்திய சர்க்கார் அலுவலகத்தில் அடுத்தடுத்த மேஜைகளில் பணி புரிய வைத்து இணைத்த விதி… அந்த இணைப்பினால் அன்பழகனுக்கு அனேக நன்மைகள் கிடைக்க வழிவகை செய்து வைத்தது..
அனேக நேரங்களில் அன்பழகன் தான் இக்கட்டுகளில் மாட்டிக் கொள்வான்.. அப்போதெல்லாம் அந்த இடுக்கண்களைக் களையும் நண்பனாக மோகன் தான் உதவிக்கரம் நீட்டி அன்பழகனை காப்பாற்றியிருக்கிறான்..
அது எப்படித்தான் அவன் வாயில் வருமோ.. மிகச் சரளமாக அது சம்பந்தமான அடுக்கடுக்கான பொய்களைச் சொல்லி அன்பழகனை விடுவித்து விடுவான்..
அது போன்ற சமயங்களில் ஆபத்தில் மாட்டியிருக்கும் அன்பழகனே வாயைத் திறந்து உண்மையை உளறி வைத்து மோகனை சோதித்து வைப்பான்… மோகன் அதற்கும் அயர மாட்டான்..
“உளருகிறான் சார்.. இப்படியாகிருச்சேங்கிற பதட்டத்தில வாயில வந்ததை வைச்சுத் தள்ளரான் பார்த்தீங்களா..? என்னடா இல்லாததைச் சொல்லி நாமளே வம்பிலே மாட்டிக்கிறோமேன்னு இந்த புத்தி சிகாமணி யோட மண்டையில உறைக்குதான்னு பாருங்க.. பயபுள்ள நல்லவன் சார்..” என்று எதையெதையோ பேசித் தள்ளி.. கேட்பவரை சிகையைப் பிடித்துக் கொள்ள வைத்து அன்பழகனை அந்தப் பிரச்னையிலிருந்து ஓரம் கட்டி ஒதுக்கி வெளியே அழைத்து வந்து விடுவான்..
“உதை வாங்கப் போறடா ராஸ்கல்.. உனக்காக அங்க மல்லுக்கட்டிக்கிட்டு இருக்கேன்.. நீ பெரிய உண்மை விளம்பி போல வாயத் திறந்து வைக்கிற..? நீ பேசலேன்னு யாராச்சும் அழுதாங்களா..?”
“இல்லேதாண்டா மோகன்.. ஏதோ.. அந்த நேரத்தில யோசிக்காம வாயைத் திறந்துட்டேன்..”
“நீ வாயைத் திறந்தாத்தான் வம்பாச்சே.. உண்மையைக் கட்டிக் காப்பாதி உன்னை விட்டா ஊருக்குள்ள ஆள் இல்லன்னு உண்மை உன்கிட்ட வந்து சொல்லுச்சா..?”
மோகன் எக்குத்தப்பான கோபத்துடன் கேள்வி கேட்டால்.. அன்பழகன் அதற்கும் வியந்து தொலைத்து மோகனின் கோபத்தீயில் எண்ணைக் கிணறை தோண்டி வைப்பான்..
“அப்படியாடா மோகன்.. உண்மை வந்து சொல்லுமா..?”
“உன்னப் போல ஆளக்கண்டா வந்து சொல்லும்..”
எரிச்சல்பட்டாலும் மோகனுக்கு அன்பழகன்தான் ஆருயிர் நண்பன்.. யாருக்கும் கெடுதல் நினைக்காத ஒரேயொரு ஒற்றுமை மட்டும் இரண்டு நண்பர்களையும் இறுக்கிப் பிணைத்திருந்தது..
எது எப்படியோ.. உண்மையை மட்டும் பேச முடிந்த வரம் வாய்க்கப் பெற்ற அன்பழகனும்.. பொய்யைத்தவிர வேறு எதையும் பேச வாய் வராத மோகனும் நகமும் சதையுமாக பழகிக் கொண்டிருந்தார்கள்..
இப்படிப்பட்ட விசித்திர நண்பர்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தாமல் புகுந்த புத்தம் புதிய பூதான் சுசரிதா…
அவர்களுடைய உயர் அதிகாரியை விட இவள் புத்திசாலி.. பார்த்த முதல் பார்வையிலேயே அன்பழகனைக் கண்டு கொண்ட கனிவையும்.. மோகனைக் கண்டு கொண்ட கேலிச் சிரிப்பையும் கண்களில் காண்பித்தவள் அவள்.. புத்திசாலியான பெண்கள் அழகாக இருக்க மாட்டார்கள் என்று யார் சொன்னது..? சுசரிதா பேரழகுடன் இருந்தாள்..
Reviews – Poiselanerangalil Azhakanathu / பொய் சில நேரங்களில் அழகானது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.