Chapter 02
சுசரிதாவை ஏமாற்றி விட முடியாது.. அவள் அந்த அலுவலகத்தில் சேர்ந்த முதல் நாளிலேயே..
“உங்களை எங்கேயோ பார்த்ததைப் போல இருக்கே..” என்று ஜொள்ளி வைத்தவன்தான் மோகன்..
டேபிளை ஒழுங்கு பண்ணிக் கொண்டிருந்த சுசரிதா நிமிர்ந்து ஒர் பார்வை பார்த்தாள்.. மோகனை அல்ல.. அன்பழகனை..
அந்த ஓர் பார்வையிலேயே அவள் புத்திசாலி என்று அன்பழகனுக்குப் புரிந்து விட்டது.. யாரையும் ஈர்க்கும் பேச்சுத்திறனும்.. முகலட்சணமும் கொண்ட மோகனை விட்டு விட்டு… எதுவுமே பேசாமல் தேமே என்று வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் அன்பழகனை அவள் பார்த்து வைக்கிறாள் என்றால் அது ஆச்சரியமான நிகழ்வில்லையா..?
“என்னை அவர் பார்த்திருக்க முடியாதுன்னு உங்க பிரண்டு கிட்டச் சொல்லுங்க சார்..”
என்னவோ காலம் காலமாக பழகிய நண்பனிடம் சொல்வதைப் போல அன்பழகனிடம் அவள் சொல்லிய விதத்தில் அன்பழகனுக்கு அவளைப் பிடித்துப் போய் விட்டது..
அதைவிட அதிகமாக மோகன் சொன்ன பொய்யை அவள் கண்டு கொண்டதை வெகு நாசுக்காக அவள் உணர்த்திய விதத்தை அவனுக்குப் பிடித்துப் போனது..
அன்பழகனின் கேலிப் பார்வையில் மோகன் சுழல் நாற்காலியில் சுழன்று திரும்பி சுசரிதாவை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தான்..
“ஏண்டா அன்பழகா..! அதை அவங்க நேரடியா என்கிட்டயே சொல்ல வேண்டியதுதானே..? ஊடே எதுக்காக உன்னை போஸ்ட் மேனாக்கறாங்க..? உன் கிட்டப் பேச வாய் வரும்.. என்கிட்டப் பேச வாய் வராதா..?”
சுசரிதாவைப் பார்த்தபடியே அன்பழகனிடம் வினவி வைத்தான்.. மின்னல் வெட்டுவதைப் போல ஓர் நொடி உயர்ந்து அவனை வெட்டி இறங்கியது அவள் பார்வை.. அந்த ஓர் நொடியில் அவன் கண்களில் மின்னல் வந்து போனது..
“எப்படி வாய் வரும் சார்..? பொய் சொல்ற வாய்க்கு போஜனம் கிடைக்காதுன்னு என் பாட்டி சொல்லுவாங்க.. உங்க பிரண்ட் எடுத்த எடுப்பிலேயே பொய்யிலேயே பேச்சை ஆரம்பிக்கிறார்.. இவர்கிட்டப் பேசல்லாம் எனக்கு வாய் வராதுன்னு சொல்லுங்க சார்..” சுசரிதா உடனடியாக பதில் கொடுத்தாள்..
“மெல்ல.. வாய் வலிக்கப் போகுதுன்னு சொல்லுடா..” கேலியாகச் சொன்னான் மோகன்..
“வலித்தாலும் அது என் வாய்தான்னு சொல்லுங்க சார்..” சுசரிதா திருப்பிக் கொடுத்தாள்..
“அடேங்கப்பா..!”
மோகனின் பார்வை சுவராஸ்யத்துடன் அவளை உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை அளந்தது.. அதுவரை அவன் அத்தனை சுவராஸ்யத்துடன்.. எந்தப் பெண்ணையும் பார்த்ததில்லை என்பதால் அன்பழகன் மிரண்டு போனான்..
“ஸ்ஸ்ஸ்…” என்று நண்பனுக்கு எச்சரிக்கைக் குரல் கொடுத்தான்..
“விடுங்க சார்..” என்றாள் சுசரிதா.. அவள் பார்வை உயர்ந்து மோகனின் மீது படிந்தது..
“உங்க பிரண்டுக்கு என்னவோ இது வேலை பார்க்கிற ஆபிஸ்ங்கிற நினப்பில்ல போல தெரியுது..”
“வேற என்னன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேண்டா அன்பழகா..?”
“பொண்ணுப் பார்க்க வந்த மாப்பிள்ளை போல நினைச்சுக்கிட்டு இருக்காரு.. பார்வையெல்லாம் பலமா இருக்கு..”
சுசரிதாவின் பேச்சில் மோகனின் முகத்தில் சிரிப்புப் படர்ந்தது.. அவளைக் கூர்மையாக பார்த்தான்.. காட்டன் புடவையில் இருந்தாள்.. அழகான பின்னலிட்டு அதில் ஒற்றை ரோஜாவை செருகியிருந்தாள்.. பாந்தமான அவள் தோற்றம் ஒரு மெல்லிசை போல அவன் மனதை கயிறு கட்டி இழுத்தது..
‘வாவ்..’ அவன் மனம் வியந்தது..
அதிக ஒப்பனையில்லாமல் தேவதை போல இருந்தவளின் தெளிவான பேச்சு அவனை ஈர்த்தது.. அவளுடன் உரையாடுவதில் ஓர் சுகானுபவத்தை அவன் உணர்ந்தான்..
எங்கோ ஒரு பறவை கூவிச் செல்வதை போல உணர்ந்தவன் இது போல எல்லாம் தனக்குத் தோன்றாதே என்று புருவங்கள் சுருங்க யோசித்தான்..
அன்பழகனுக்குத்தான் இது தோன்றும்..
“வேப்பமரத்து பூங்குயில்டா..” என்று பரவசப் பட்டுப் போவான்..
ஜன்னல் வழி தெரியும் அருகாமை வேப்ப மரத்தின் கிளையில் அமர்ந்திருக்கும் குயில் பாட்டில் அவன் லயித்திருக்க.. மோகனின் கவனமோ.. நான்கு மேஜைகள் தள்ளியிருக்கும் லதிகாவின் முகத்தில் நிலைத்திருக்கும்.. லதிகா கொஞ்சும் நிறம் கம்மியாக இருப்பாள்..
“குயில்தாண்டா.. ஆனா பூங்குயில் இல்லை..” என்பான் இவன்..
“போடா இவனே.. இவ்வளவு நேரமும் அது என்னமா கூவுச்சு..?” ரசனையுடன் சொல்வான் அன்பழகன்..
“இவ கூவுனா கேக்கச் சகிக்காதுடா.. குரலா அது..?”
மோகன் முகம் சுளிக்கும் போதுதான் அது நேரம் வரை அவன் பார்த்துக் கொண்டிருந்தது வேப்பமரத்தின் பூங்குயிலை அல்ல.. அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கும் பெண் குயிலை.. என்ற விவரமே அன்பழகனின் தலையில் ஏறும்..
“அப்பாசாமி.. உன்கிட்ட வந்து குயிலைப் பத்தி பேச நினைச்சேனே.. என்னைச் சொல்லனும்..” அவன் தலையில் அடித்துக் கொள்வான்..
அப்பேற்பட்ட இசை ரசனை உடைய மோகனுக்குத் தான் அன்று அது போல் தோன்றி வைத்தது..
‘என்னடா இது..!’ அவன் ஆச்சரியமாக உணர்ந்தான்..
‘எனக்கா இப்படியெல்லாம் தோணுது.. இவ என்ன வந்த முதல் நாளிலேயே ஏதாச்சும் பொடி போட்டு என் புத்தியை மாத்திட்டாளோ..’
மோகன் அவளை ஊன்றிப் பார்த்த அதே நேரத்தில் சுசரிதா நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.. அவளின் உதடுகள் சுழித்ததில் அவனது புருவங்கள் ஏறி இறங்கின.. அவளிடமிருக்கும் பொடி ‘சொக்குப்பொடி..’ என்று அவனுக்குத் தோன்றியது..
“ஏண்டா அன்பழகா.. இப்பல்லாம் சேலையை மியூசியத்தில வைச்சு.. இதுதான் இளம் பெண்களோட அந்தக் காலத்து உடைன்னு காட்டிக்கிட்டு இருக்காங்களே.. இவங்க எங்கயிருந்துடா இதைக் கண்டு பிடிச்சாங்க.?”
மோகனின் கேள்வியில் அன்பழகனின் கையில் இருந்த பேனா நழுவி தரையில் விழுந்தது..
“அடேய்..” அவன் பதட்டமானான்..
“இது புத்திசாலிப் பொண்ணு போல இருக்குடா மச்சி.. உன் டகுல்பாச்சி வேலையை எல்லாம் வேற பக்கம் வைச்சுக்கடா.. அங்க சுத்தி இங்க சுத்தி ஈவ்டீஸிங்கில வந்து நின்னுரப் போகுது..”
“ஒரு டீஸிங்கிலயும் வந்து நிக்காது..” சுசரிதா ஊடே தலையிட்டு உத்தரவாதம் கொடுத்தாள்..
“சாரைச் சமாளிக்க முடியாம நான் ஈவ் டீஸிங் கம்ப்ளெயின்ட் கொடுத்தா எனக்கே என்மேல நம்பிக்கை இல்லேன்னுதான் அர்த்தம்.. இப்ப என்ன சார்.. உங்க பிரண்டுக்கு மியுசியத்தில இருந்த சேலையை நான் எங்கே பிடிச்சேன்னுதான தெரியனும்..?”
“அம்மா.. தாயே.. அது எனக்குத் தெரிய வேணாம்மா.. இவனுக்குத் தெரிஞ்சாப் போதும்.. நான் போஜனம் வேணும்ன்னு நினைக்கிற அப்பாவி.. பொய் பக்கமே போக மாட்டேன்.. ஆபிசுக்கு வந்தோமா.. வேலையைப் பார்த்தோமா.. வீட்டுக்குத் திரும்பினோமான்னு இருக்கிற ஜாதி.. இவன்தான் வேலயத்தவிர மத்த எல்லாத்தையும் பாப்பான்..”
“அதான் பாத்தாலே தெரியுதே.. நீங்க வேற விளக்கம் சொல்லனுமா..?”
“அப்பாடி.. நான் பிழைச்சேன்..”
“அவரும் பிழைப்பார்.. நீங்கதான் சார் நடுங்கறிங்க.. ஐயாவைப் பாத்தீங்களா.. ஆடிக்காத்துக்கும் அசராத அம்மிக் கல்லைப் போல இல்ல உக்காந்திருக்காரு..?”
“பாருடா.. வாயத் திறந்தா பழமொழியா வரிசை கட்டி வருது.. ஏண்டா அன்பழகா.. வந்திருக்கிறது இவங்களா..? இல்ல இவங்க உருவத்திலே இவங்க பாட்டியோட ஆவி வந்திருக்கா..?”
“ஹலோ.. என் பாட்டி இன்னும் கல்லுக்குண்டு போல ஆரோக்கியமா இருக்காங்க.. ஆவி.. அது.. இதுன்னு இவர் சொன்னா நடக்கறதே வேற.. சொல்லி வையுங்க சார்..”
“இன்னுமா பாட்டி போகல..? அப்போச் சரி.. இந்தப் புடவய இவங்களோட பாட்டியோட டிரங்குப் பெட்டியில இருந்து கண்டு பிடிச்சு எடுத்துக் கட்டிக்கிட்டு வந்திருப்பாங்க..”
“ஆமாம் சார்.. நான் என் பாட்டியோட டிரங்குப் பெட்டியில இருந்துதான் இந்தச் சேலையைக் கண்டு பிடிச்சு எடுத்துக் கட்டிக்கிட்டு வந்திருக்கேன்.. நம்ம சுப்பிரியர் மேடம் எந்தப் பாட்டியோட டிரங்கு பெட்டியில இருந்து அவங்க சேலையை கண்டு பிடிச்சு எடுத்துக் கட்டிக்கிட்டு வந்தாங்களாம்..? கேட்டுட்டு வந்து சொல்லவா..? எப்படி வசதி..? ஏன்னா.. அவங்க எப்பவுமே காட்டன் புடவையிலேதான் இருப்பாங்கன்னு இந்த ஆபிஸிக்குள்ள பேசிக்கிறாங்க…”
‘அடிச்சாடா சிக்சர்..’ அன்பழகன் மகிழ்ந்து போய் விட்டான்..
மோகன் அடிக்கும் வாய்க்கு சரியான பதிலடி கொடுக்க இனிமேல்தான் ஒருவர் பிறந்து வர வேண்டும் என்று நொந்து போயிருந்தவனுக்கு.. ஏற்கனெவே பிறந்து விட்டேன் என்று வந்து நிற்கும் அந்தப் பெண்ணின் அசாத்திய வாய் திறமையில் பக்தியே ஏற்பட்டு விட்டது..
“அதுசரி..” அயராமல் பதில் சொன்னான் மோகன்..
“மேடத்துக்கு சாம்பிராணி காட்டத்தான் காட்டன் புடவையில வந்திருக்காங்களா..? நமக்கு இது தோணாம போச்சேடா அன்பழகா..”
“இப்பத் தோணிருச்சுல்ல.. உடனே போய் எங்கேயாச்சும் காட்டன் புடவையைக் கண்டெடுத்து சுத்திக்கிட்டு வரச்சொல்லுங்க அன்பழகன் சார்..” அம்பு போல சுசரிதாவின் பதில் பாய்ந்து வந்தது..
“ஹா.. ஹா..” அன்பழகனுக்கு வேலை செய்யவே தோன்றவில்லை..
“நான் சுத்தினா என்ன.. இவங்க சுத்தினா என்ன..? ரெண்டு பேரும் ஒன்னுக்குள்ள ஒன்னுதானேடா அன்பழகா..?”
“என்னது..?”
“பாருடா.. இதுக்குப் போயி கண்ணகி மதுரையைப் பார்த்த பார்வைய பாக்கிறதை.. இப்ப என்னத்தடா தப்பாச் சொல்லிப்புட்டேன்..?”
“பேசறது எல்லாமே தப்பு.. இதில எதைன்னு தனித் தனியா கண்டு பிடிக்கப் போறாராம் அன்பழகன் சார்..?”
“ஒரே ஆபிசில வேலை பாக்கிறோம்ங்கிறத ஒன்னுக்குள்ள ஒன்னுன்னு சொன்னேன்.. இது ஒரு தப்பாடா அன்பு..?”
“அடடா.. இவரு பச்சைப்புள்ள.. பேசத் தெரியாது..”
“எனக்குத் தெரியறது இருக்கட்டும்.. இவங்களுக்குத் தான் ஒன்னும் தெரியல.. நான் இளம் பெண்கள் தான் புடவையை மியுசியத்தில வைச்சிட்டாங்கன்னு சொன்னேன்.. நம்ம சுப்பிரியர் மேடம் என்ன இளம் பெண்ணா..? அவங்க பேரிளம் பெண்டா அன்பழகா..”
“இப்பத்தான் இவரு அவங்ககிட்ட உங்களப் பாத்தா பதினாறு வயதினிலே படத்தில வர்ற ஹீரோயின் மாதிரியே இருக்குன்னு சொல்லிட்டு வந்தார் அன்பு சார்..”
சுசரிதாவின் இதழ்கள் சுழித்து கேலிச் சிரிப்பைச் சிந்த ஆரம்பித்தது அந்த நொடியில் இருந்து தான்…
Reviews – Poiselanerangalil Azhakanathu / பொய் சில நேரங்களில் அழகானது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.