Chapter 13

0Shares

“தான்யா…”

சோர்வாக மாடிப்படியில் இறங்கிக் கொண்டிருந்தவளை அழைத்தார் சோமசுந்தரம்..

அவரது அழைப்பில்.. அவர் பக்கத்தில் அமர்ந்திருந்தவன் ஆவலுடன் திரும்பி அவளைப் பார்த்தான்..

“யெஸ் டாட்..”

தான்யா ஹாலுக்கு வந்து நின்றாள்..

அவளின் அகன்ற கருவிழிகளையும்.. அழகான முகத்தையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனின் செய்கையில் முகம் சுருங்கினாள்..

“இவர் அரவிந்தன்.. மேக்னா குரூப் ஆப் கம்பெனியின் எம்.டி.”

சோமசுந்தரத்தின் அறிமுகத்திலேயே அவனது உயரம் தெரிந்தது.. அவனும் அதை உணர்த்துகிறவனைப் போல.. கால் மேல் கால்போட்டுக் கொண்டு.. தோரணையாக அமர்ந்திருந்தான்..

“ஹலோ..” அவன் முகம் பார்க்காமல் சொன்னாள் தான்யா…

“ஹாய்..” அவன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்..

அவனது பார்வை அவள் மீதே படிந்திருப்பதை உணர்ந்து கொண்டவளால் அங்கே நிற்க முடியவில்லை..

“பை டாட்.. நான் காலேஜூக்கு கிளம்பறேன்..” நகர முற்பட்டாள்..

“இன்றைக்கு ஒரு நாள் காலேஜூக்கு லேட்டாப் போயிக்கலாம்.. அதனால் ஒன்றும் கெட்டு விடாது.. இப்படி உட்கார்..” சோமசுந்தரத்தின் குரலில் கண்டிப்பு இருந்தது.

வேறு வழியின்றி.. அவர்களுக்கு எதிரேயிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டதில் அவளுக்கு சங்கடம் அதிகரித்தது..

அவளது படிப்பு.. ரசனை.. தோழர் தோழிகள் என்று கேட்பதற்கு அவனிடம் நிறைய கேள்விகள் இருந்தன..

பதிலுக்கு கேட்க.. தான்யாவிடம் ஒரு கேள்விகூட இல்லை..

அகிலாண்டேஸ்வரி.. அமைதி தவழும் முகத்துடன் அவனுக்கு காபி.. டிபன் கொடுத்து.. தான்யலட்சுமியை அசத்தினாள்..

“அம்மாவா.. இது..?”

எப்போதும் அகிலாண்டேஸ்வரி இது போன்ற கருணை வடிவத்துடன் இருந்தால் எப்படியிருக்கும்.. என்ற ஏக்க அலை அவள் நெஞ்சில் தோன்றி மறைந்தது..

மனைவி.. மகளின் மீது பாசமும்.. அக்கறையும் இருந்தாலும் அதற்காக.. குடும்பத்துடன் அளவுக்கு அதிகமான நேரத்தை சோமசுந்தரம் செலவிட்டது இல்லை.. அதற்கான நேரமும் அவரிடம் இல்லை.. அப்படிப்பட்டவர் அன்று.. அங்குமிங்கும் நகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்ததைக் கண்டவளுக்கு ஆச்சரியம் உண்டானது..

ஒரு நொடி நேரம் கூட அதிகமாக நின்று பேசிவிட்டாலும்.. கைக் கடிகாரத்தை கவனித்து விடுபவர் அவர்.. கட்டின மனைவியுடனும்.. பெற்ற மகளுடனும் நேரத்தை செலவழிக்க.. கணக்குப் பார்க்கும் அவரது செய்கையில் தான்ய லட்சுமிக்கு ஆழ்ந்த வருத்தம் உண்டு.

அந்த சோமசுந்தரம் அன்று ஒரு வினாடி கூட கைக்கடிகாரத்தின் மீது பார்வையை ஓட்டவில்லை.. நிதானமாக ஒவ்வொரு வார்த்தையையும்.. பவ்யமாய்.. யோசித்துப் பார்த்து பேசினார்.. அவன் உதிர்த்த பதில் வார்த்தைகளை கவனமாக.. முக்கியத்துவம் கொடுத்து.. கூர்ந்து கேட்டுக்கொண்டார்…

‘இங்கே என்னதான் நடக்குது..?’

ஏதோ ஒன்று நடக்க ஆரம்பிப்பதை தான்ய லட்சுமியால் அனுமானிக்க முடிந்தது.. அந்த ஒன்று எதுவென்றுதான் அவளால் கணிக்க முடியவில்லை…

அவருடன் பேசியபடியே அவளைப் பார்வையால் அவன் விழுங்கிக் கொண்டிருந்ததை.. ஒரு கட்டத்திற்கு மேல் அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை..

அவளும்தான் எவ்வளவு நேரத்துக்கு முள்ளின் மேல் அமர்ந்திருப்பதைப் போல பொறுமையாக அமர்ந்திருப்பாள்..?

“நான் போகனும் டாட்..” அவள் எழுந்தே விட்டாள்..

சோமசுந்தரத்தின் முகத்தில் நொடிப் பொழுதில் கடுமை தோன்றி மறைந்தது.. அதை அந்த அரவிந்தன் அறியாமல் மிகச் சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டார் அவர்..

“காலேஜூக்குத்தானே..?” அரவிந்தன் கேட்டான்..

“யெஸ்.. யெஸ்..” தான்யாவுக்குப் பதில்.. சோமசுந்தரம் பதிலைச் சொன்னார்..

“நான் டிராப் பண்ணட்டுமா..?” அவனும் அவரிடமே கேள்வியைக் கேட்டான்..

“ஓ.. யெஸ்..” சோமசுந்தரம் மகிழ்ந்து போய்விட்டார்.

அகிலாண்டேஸ்வரியின் விழிகளிலும் அதே மகிழ்வு தெரிய என்னடா இது.. என்று ஆகிவிட்டது தான்ய லட்சுமிக்கு.. காலேஜூக்கு போகப்போவது அவள்.. யாரோ ஒரு அரவிந்தனின் காரில் போய் காலேஜில் இறங்குவதற்கு அவளுக்குச் சம்மதமா என்று ஒரு வார்த்தை கூட அவளிடம் கேட்கப்படவில்லை..

மாறாக.. அவளுக்குப் பதிலாக.. சம்மதத்தை அவளின் தந்தை கொடுக்கிறார்.. தாய் மகிழ்ந்து போகிறாள்..

‘என்னை என்னன்னு இவங்க நினைச்சிட்டாங்க..?’

அவளுக்குள் சினம் துளிர்த்தது.. அது வேர்விட்டு.. வளர்ந்து விருட்சமாவதற்கான அறிகுறிகள் அப்போதே ஆரம்பித்து விட்டதை அவளால் உணர முடிந்தது..

“டாட்.. அவரை ஏன் டிஸ்டர்ப் பண்றீங்க.. நான் போய்க்கிறேன்..” அவள் அழுத்தமாக மறுத்தாள்..

அவளுக்கு குறையாத கோபத்தை சோமசுந்தரம் கண்களில் காட்டினார்..

“நீ இவருடன் போ…” அவர் கட்டளையிட்டார்..

தான்யா.. திகைத்துப் போனாள்.. ‘இது என்ன அநியாயம்..’ என்று அவளுக்குள் கோபம் கொந்தளித்தது..

‘இந்த வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அவர் உணர்வாரா..’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள் தான்யா…

அவள் சொல்லலாம்.. சொன்னால் அது விரசமாகி விடாதா..? ஒரு தந்தையிடம் மகள் சொல்ல வேண்டிய விளக்கமா அது..? அதை வாய்திறந்து அவள் பேசலாகுமா..? இல்லை பேசத்தான் முடியுமா..?

“நோ அதர் வே..” என்ற ஆங்கிலச் சொற்றொடருக் கான விளக்கத்தை அன்று பரிபூரணமாக உணர்ந்தாள் தான்யலட்சுமி..

0Shares

Reviews – Ponmakal Vanthal / பொன்மகள் வந்தாள்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link