Chapter 01
ஆர்த்திக்கு முகம் வியர்த்தது. நடுக்கமாக உணர்ந்தாள்.. அந்த சட்டக்கல்லூரியின் வாசலைக் கடந்து உள்ளே செல்லும் பாதையில் கால்வைத்த போது கால்கள் பின்னிக்கொண்டன.. வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறந்தன..
சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருந்த மாணவர் கும்பலைக் கண்டதும் அவளுக்கு ‘பகீர்’ என்றது.
‘பேசாமல் வீட்டுக்குத் திரும்பிப்போய் விடலாமா..’ என்று யோசித்தாள்..
அவள் அதுவரை படித்தது, பெண்களுக்கான பள்ளியில், மாணவர்களின் ஆரவாரக் கூச்சலை அவள் அறிந்ததில்லை. இன்று கல்லூரியில் அவள் படிக்கப் போகும் முதல்நாள் வேறு..
“அந்த லா காலேஜிலா படிக்கப் போகிற…? அங்கே படிக்கும் பசங்க எல்லாரும் ரௌடிக் கூட்டமாச்சேடி ஆர்த்தி..?”
ஆர்த்தியின் தோழி தீபிகா வேறு அவள் பங்குக்கு ஆர்த்தியின் வயிற்றில் புளியைக் கரைத்து ஊற்றி யிருந்தாள்..
“ரௌடியா..? அப்படி அவங்க என்ன செய்வாங்க..?”
“எதுவும் செய்வாங்க..”
“எதுவும் செய்வாங்கன்னா..?”
ஆர்த்தி மிரட்சியுடன் விழி விரிக்க, தீபிகா அந்த லா காலேஜின் மாணவர்களின் வீர தீர பராக்கிரம செயல்களைப் பற்றி விவரிக்கத் தொடங்கி விட்டாள்..
“மத்த ரௌடீஸ் எல்லாம் எப்படி இருப்பாங்க..?”
“எனக்கென்ன தெரியும்..? நான் ரௌடிகளைப் பார்த்ததே இல்லையே..”
பாவம்.. வீடு விட்டால் பள்ளி, பள்ளிவிட்டால் வீடு. விடுமுறை தினங்களில் குடும்பத்தினரின் மத்தியில் பாதுகாப்பாய் போகும் கோயில், சினிமா என்றிருக்கும் ஆர்த்தியிடம் ரௌடிகளைப் பற்றிக் கேட்டால், அவளுக்கு என்ன பதில் சொல்லத் தெரியும்?
“அதுசரி.. நீயெல்லாம் சென்னையில் பிறந்து வளர்ந்தவள்ன்னு சொல்லிக்கிறதே வேஸ்ட்..”
“ஏண்டி.. சென்னையில்தான் அதிகமாய் ரௌடீஸ் இருப்பாங்களா..?”
“அது எல்லா ஊர்களிலும்தான் இருப்பாங்க.. சென்னை தலைநகரமாச்சே.. கொஞ்சம் கூடுதலா இருப்பாங்க..”
தீபிகா என்னவோ, ரௌடிகளின் நடமாட்டம் பற்றிய புள்ளி விவரங்கள் அனைத்தையும் அறிந்தவள் போல் உதார் விட, ஆர்த்தி ‘ஆ’ வென்று வாய்ப்பிளந்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்..
இதுபோன்ற வெளியுலக செய்திகளை பக்கத்தில் இருந்து பார்த்தவள் போல் தீபிகா அள்ளி வீசுவதால், அவளின் மேல் ஆர்த்திக்கு ஒருவித குரு பக்தியே உண்டு..
“பேசாமல் நீயும் என்கூட ‘லா’ படிக்க வந்திருக்கலாம் தீபிகா.. எனக்கு கொஞ்சம் தைரியமாக இருந்திருக்கும்..”
“‘லா..’ படிக்கணும்னு எனக்கென்ன தலை விதியாடி..?”
“ஏன் தீபிகா அப்படிச் சொல்கிறா…? என் அப்பா, நான் ‘லா’ படிக்கணும்ன்னு சின்ன வயதிலிருந்து சொல்லிச் சொல்லி வளர்த்திருக்கிறார் தெரியுமா..?”
“இப்படி கூமுட்டை லட்சியத்தையெல்லாம் நான் வைத்துக் கொள்வதில்லை.. பி.காம். படிப்பேன்.. சி.ஏ பண்ணுவேன்.. பெரிய ஆடிட்டர் ஆவேன்.. லட்சலட்சமாய் சம்பாதிப்பேன்..”
“லாயர் மட்டும் சம்பாதிக்க மாட்டாங்களா..?”
“இதோ பார் ஆர்த்தி இதைப்பற்றி என் வாயைக் கிளறாதே.. நான் இருக்க மாட்டாமல் எதையாவது சொல்லி வைத்து விடுவேன்.. நீ.. நாளைக்கு காலேஜில் என்னைப் பற்றி வாய்விட்டு வைப்ப… உன் காலேஜ் பசங்கள், ஹாக்கி மட்டையைத் தூக்கிக்கிட்டு, என் வீடு தேடி வந்து விட்டால் என்ன செய்வது..?”
“என்னடி இப்படி பயமுறுத்துகிற..?”
“எதற்கும் முன் ஜாக்கிரதையாய் இருப்பது நல்லதும்மா..” இப்படி பயமுறுத்தினால் ஆர்த்திக்கு எப்படி இருக்கும்..?
அவள் கல்லூரிக்குப் போகவேண்டிய கட்டாயம் வந்து விட்டதே என்று கதிகலங்கிப் போனாள்.. முதல்நாள் இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்தாள்..
“அப்பா.. கட்டாயம் நான் ‘லா’ தான் படிக்கணுமா..?”
கடைசி விநாடியிலாவது தந்தை மனம் மாறிவிட மாட்டாரா என்ற கெஞ்சுதலுடன் கனகவேலிடம் கேட்டுப் பார்த்தாள்..
அவரோ பாசத்துடன் தன் கடைசி மகளின் முடி கோதி.. “பின்னே.. உன் பெரியக்கா டாக்டர்.. சின்னக்கா என்ஜினீயர்.. நீ லாயர்ன்னு இருந்தால் தானே எனக்குப் பெருமை..? மூன்று பெண்களைப் பெற்றேன்.. மூன்று பேரையும் ஒவ்வொரு துறையில் பெரிய ஆளாக்கினேன்னு என்னை இந்த ஊர் பாராட்ட வேண்டாமா..? என்று கேட்டார்..”
“ம்ஹூம்.. நீங்கள் பாராட்டு வாங்குவதற்காக நான் ‘லா’ படிக்க வேண்டுமா..?”
மனதிற்குள் பெருமூச்சு விட்டபடி தந்தையின் பின்னால் பைக்கிள் ஏறியவள், ஊரில் உள்ள கடவுள்களை எல்லாம் துணைக்கு வரும்படி வேண்டிக்கொண்டே கல்லூரிக்குப் போனாள்..
“பெஸ்ட் ஆஃப் லக்..”
முதல்நாள் என்பதால் கனகவேல் வாழ்த்துச் சொல்லி மகளை காலேஜ் வாசலில் இறக்கிவிட, இனி தப்பிக்க மார்க்கம் இல்லை என்பதை உணர்ந்தவளாய் ஆர்த்தி அடிமேல் அடி எடுத்து வைத்து, கோயில் பிராகாரத்தை அங்கப்பிரதட்சணம் செய்வதைப் போல உள்ளே செல்ல ஆரம்பித்தாள்..
“தைரியமாய் இருக்கணும் ஆர்த்தி எது வந்தாலும் ஃபேஸ் பண்ணு, அழ வேண்டும் போல்தான் இருக்கும். ஆனால் அழுதுவிடாதே..”
“எதுக்குடி தீபிகா இதையெல்லாம் சொல்கிற..?”
“ராகிங்.. ராகிங்ன்னு ஒன்னு இருக்கு கேள்விப் பட்டிருக்கிறாயா..? இல்லை.. அதுவும் தெரியாதா..?”
“தெரியும்.. தெரியும்.. ஆஷாவும், அனிதாவும் கதைகதையாய் சொல்லியிருக்கிறாங்க..”
“உன் அக்காக்கள் ஃபேஸ் பண்ணியதெல்லாம் சும்மா ஜுஜுபி.. நீ நாளைக்கு ஃபேஸ் பண்ணப் போகிற ராகிங் இருக்கே.. அதுதாண்டி உண்மையான ராகிங்.. எதற்கும் மனதைத் தேற்றிக் கொள்..”
எதற்கு தேற்றிக் கொள்ளவேண்டும் என்று சொல்லாமல் துக்கம் விசாரிப்பதுபோல.. ஆர்த்திக்கு ஜுரத்தை வரவழைத்து விட்டு தீபிகா போய் விட்டாள்..
“ஹூய்…”
யமஹாவில் சாய்ந்து நின்று கொண்டிருந்த மாணவன் ஒருவன் அவளைக் கண்டதும் வாயின் மேல் இரு கைகளையும் குவித்து சத்தம் கொடுக்க, ஆர்த்தி திரும்பி வீட்டிற்கு ஓடிப்போய் விடலாமா.. என்று யோசிக்க ஆரம்பித்து விட்டாள்..
“ஏய்ய்.. இங்கே வா..”
அந்தக் கும்பலில் இருந்த ஒருவன் கையாட்டி அவளைக் கூப்பிடவும் அவளும் வேறு வழியில்லாமல் கால்கள் நடுங்க அவர்களின் அருகே சென்றாள்..
“உன் பெயர் என்ன..?” அவளை அழைத்தவன் வினவ..
‘நிச்சயமாய் ‘ஏய்ய்..’ இல்லை..’ என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டாள் ஆர்த்தி..
“வாயைத் திறந்து பேசும்மா.. நீயென்ன ஊமையா..?” அவன் கிண்டலாகக் கேட்டான்..
ஆர்த்தி பதில் சொல்ல வாய் திறந்தாள்.. வார்த்தைகள் வரவில்லை.. கேள்வி கேட்டவனோ அவளை விசித்திரமாகப் பார்த்தான்..
“என்னடா தினேஷ்.. இந்தப் பொண்ணு நிஜமாவே ஊமைதான் போல..”
“இல்லைடா மச்சி.. இது வேற..”
“வேறன்னா என்னடா..?”
“கபிலா.. பாப்பாவுக்கு பேச முடியாமல் பிராப்ளம் வந்திருக்கு..”
‘பாப்பாவா..? நானா..?’ ஆர்த்திக்க ரோசம் பொத்துக் கொண்டு வந்தாலும், அதை வெளிக்காட்ட வழியில்லாமல் அடக்கிக் கொண்டாள்..
“அதைத்தானேடா நானும் சொல்கிறேன்.. இவளால் பேச முடியாது போல, பாவம்டா..”
“பாவமா.. டேய்.. இந்தப் பொண்ணு ஊமை யில்லைடா..”
“பின்னே..?”
“இஞ்சி இடுப்பழகனைப் பார்த்ததும் பாவம் பாப்பாவுக்கு பேச்சு வரவில்லை.. காத்துத்தான் வருது..”
அந்த மாணவர் குழாம் ‘ஹோ..’ வென்று சத்தம் போட்டுச் சிரிக்க.. ஆர்த்தியின் கண்களில் நீர் முட்டி விட்டது..
‘நிற்கவா.. இல்லை விழுகவா..’ என்று கேட்ட நீர் முத்துக்களுடன், அவள் அந்த ‘இஞ்சி இடுப்பழகன்’ என்று அழைக்கப்பட்ட கபிலனாகப் பட்டவனை.. இறைஞ்சுதலாய் ஒரு பார்வை பார்த்தாள்..
முரட்டு ஜீன்ஸும், கார்கோ சர்ட்டும், அலட்சியமான முகபாவனையுமாக நின்று கொண்டிருந்தவன், அவளின் அந்த பயந்த பார்வையைக் கண்டதும் என்னவோபோல் ஆகிவிட்டான்..
“சிரித்தது போதும்.. அடங்குங்கடா..” என்று நண்பர்களைப் பார்த்து ஒரு அதட்டல் போட்டவன், அவளைப் பார்த்தான்..
ஊடுருவும் அந்தப் பார்வையைக் கண்டதும், ஆர்த்தியின் கண்கள் தரையைப் பார்த்தன..
‘என்னடா இது.. நேருக்கு நேராய் பார்க்கக் கூடப் பயப்படுகிறாளே..’
கபிலனுக்குள் ஆச்சரியம் கிளம்பியது.. அதுவரை அவன் பார்த்துப் பழகிய பெண்களிடம் இல்லாத ஏதோ ஒன்று – தன் முன்னால் மருட்சியுடன் பார்வையை தழைத்துக் கொண்ட – அந்தப் பெண்ணிடம் இருப்பதாக.. அவன் மனம் உணர்ந்தது..
“உன் பெயர் என்ன..?” இப்போது அவன் அதட்டல் இல்லாத தொனியில் கேட்டான்..
“ஆர்த்தி..” அவள் மென்றுவிழுங்கிக் கொண்டு பதில் சொன்னாள்..
“பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்டா..?”
“ஆமாம்..”
“பர்ஸ்ட் இயர்ங்கிற.. சீனியருக்கு சல்யூட் வைக்கணும்ங்கிறது உனக்குத் தெரியாதா..?”
“தெரியாது..”
“எது தெரியாது..?”
“எப்படி சல்யூட் வைக்கணும்கிறது தெரியாது..”
மற்றவர்கள் ஹோ.. ஹோவென்று சிரிக்க.. கபிலனின் முகத்திலும் – அவளுடைய அறியாமையைக் கண்டு.. மெலிதான புன்முறுவல் வந்தது..
‘இப்ப.. நான் என்ன சொல்லிவிட்டேன்னு இவங்க எல்லாரும் இப்படிச் சிரிக்கிறாங்க..’
ஆர்த்தி பயத்துடன் அவர்களைப் பார்த்தாள்..
“டேய்.. விடுங்கடா.. இந்தப் பெண்ணுக்கு உண்மையிலேயே அது தெரியாது போல இருக்கு..”
“ஹை.. ஹை.. என்னடா நீ ரொம்பத்தான் இந்தப் பொண்ணுக்கு சப்போர்ட் பண்ணுகிற.. என்ன விசயம்..?”
கூட இருந்த அஜய் விசமமாக வினவ.. ஆர்த்தியின் முகம் சிவந்துவிட்டது.. அதை ரசித்தபடி கபிலன், நண்பர்களிடம் சிரித்தான்..
“ஆயிரம்தான் இருந்தாலும் நம்ம காலேஜ் ஸ்டூடண்ட்.. அந்தக் கரிசனம்தான்..”
“தோடா.. இந்தக் கரிசனத்தை இதற்கு முன்னால் ராகிங் பண்ணின மற்ற பெண்களிடம் நீ காண்பிக்கவே இல்லையே..”
அஜய் மடக்க, இப்போது கபிலன் முடியைக் கோதி விட்டுக் கொண்டு தலையைச் சாய்த்து சிரித்தான்..
Reviews – Poovum Puyalum / பூவும் புயலும்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.