Chapter 02

0Shares

சிரிக்கும் போது கண்களும் கூடச் சேர்ந்து சிரிக்கும் சிரிப்பைக் கபிலனிடம்தான் முதன் முதலில் கண்டாள் ஆர்த்தி.. மனதிலிருந்து வெளிப்பட்ட அந்த உண்மையான சிரிப்பு அவளை வசீகரித்தது..

கபிலனோ.. அவளை மற்ற மாணவர்கள் ராகிங் செய்யாமல் காப்பாற்றுவதில் முனைப்பாக இருந்தாள்..

“விடுங்கடா.. பாவம்.. பயந்த பெண் போல இருக்கு..!”

“பயந்த பெண்ணுன்னா விட்டுவிடனும்ன்னு இதற்கு முன்னால் நீ சொல்லியிருக்கிறயா..?”

“டேய்.. போனதையே பிடித்துக் கொண்டு ஏண்டா தொங்குகிற..? நடப்பபைப் பாரு..”

“அதைத்தானே பார்த்துக்கிட்டு இருக்கோம்..”

“இப்ப என்னதாண்டா செய்யணுங்கிற..?”

“ரூல்ஸ்ன்னா.. எல்லாருக்கும் ஒரே ரூல்ஸ்தான்..”

“இவன் பெரிய ரூல்ஸ் அண்ட் ரெகுலேசனை ஃபாலோ பண்ணுகிறவன்.. போடா டேய்..”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது கபிலா.. இந்தப் பெண்ணைக் கேள்விகூடக் கேட்காமல் அனுப்புவது அநியாயம்..”

“அநியாயத்தைப் பற்றி நீ சொல்கிறயா..?”

“இப்ப கேள்விகளை நீ கேட்கிறியா..? இல்லை நான் கேட்கட்டுமா..?”

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. நீ வாயை மூடு.. இப்ப என்ன… இந்தப் பெண்ணை இரண்டு கேள்விகள் கேட்கனும்… அவ்வளவு தானே..”

“டேய்… நான், கேள்விகள் கேட்கணும்னுதான் சொன்னேன்… இரண்டுன்னெல்லாம் கணக்குச் சொல்லலை..”

“எத்தனை கேள்விகளைக் கேட்பதாக இருந்தாலும் சரி.. நானே கேட்டுக் கொள்கிறேன்…”

“இது ரொம்ப ஓவர்டா கபிலா..”

“எல்லாம் எனக்குத் தெரியும்..”

கபிலனின் ஆளுமை கலந்த அதட்டலை செவி மடுத்தபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஆர்த்தி..

‘இவன்தான் எவ்வளவு தைரியசாலியாக இருக்கிறான்..!’

கபிலன் ஆர்த்தியைப் பார்க்க – என்னவோ நேர்முகத் தேர்விற்கு தயாராவது போல் ஆர்த்தி விறைப்பாக நின்றாள்..

“ஏன் இப்ப.. இப்படி போஸ் கொடுக்கிற..?” கபிலன் புருவம் உயர்த்தினான்..

“நீங்க கேள்வி கேட்க ஆரம்பிக்கப் போகிறீங்க இல்லையா..? அதற்கு பதில் சொல்ல வேண்டாமா..?” ஆர்த்தி பயந்த குரலில் கூறினாள்..

சிரிப்பை அடக்க கபிலன் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொள்ள, மாணவர்களின் மத்தியில் மீண்டும் சிரிப்பலை பரவியது.

“உன் பெயர் ஆர்த்திதானே..?”

“ஆமாம்.. கே. ஆர்த்தி..”

“கே. ஆர்த்தியா..?”

“ஆமாம்.. எங்க அப்பா பெயர் கனகவேல்.. அதனால் கே. ஆர்த்தி..”

அவளின் விளக்கத்தைக் கேட்ட அஜய் விழுந்து விழுந்து சிரித்தான்..

“மச்சான்.. பொண்ணு.. அறிவுக்கொழுந்துடா..”

“ஸ்ஸ்.. அஜய்..”

கபிலன் கண்டிப்புடன் அஜய்யை அடக்கி விட்டு ஆர்த்தியின் பக்கம் பார்வையைத் திருப்பினான்.. அவளுடைய கண்களில் தெரிந்த பயரேகையைக் கண்டதும் அவன் மனதில் இரக்கம் சுரந்தது..

“இப்ப ஏன் அட்டென்ஷன் பொஸிஸனில் நிற்கிற..?”

“சும்மாத்தான்..”

“சாதாரணமாக நில்..”

“சரி..”

ஆர்த்தி.. கால் மாற்றி நின்று கொண்டாள்.

“ஏன் ‘லா’ படிக்க வந்த..?”

“அப்பா சொன்னார்.. அதனால் படிக்க வந்தேன்..”

“ம்ஹூம்.. இதை அப்பாதான் சொல்லணுமா..? அதுசரி, உன் அப்பா ஏன் அப்படிச் சொன்னார்..?”

“என் பெரியக்கா டாக்டர்..”

“வெரிகுட்..”

“சின்னக்கா என்ஜினீயர்..”

“குட்..”

“நான் லாயர்ன்னு சொல்லிக்கணுமாம்..”

“யார் சொல்லிக்கணுமாம்..?”

“என் அப்பா..”

“ஆர்த்தி.. ஆர்த்திதானே உன் பெயர்..?”

“கே. ஆர்த்தி..”

“ஓ.கே. ஆர்த்தி..! நீயாய் எதையும் டிசைட் பண்ணமாட்டாயா..? எல்லாவற்றையும் உன் அப்பா தான் டிசைட் பண்ணுவாரா..?”

“ஏன்.. அப்பா டிசைட் பண்ணினால் என்ன..? அப்பா என் நல்லதற்குதானே எதையும் சொல்லுவார்..?”

“அது சரி.. நீ போ..”

“அவ்வளவுதானா..?”

“அவ்வளவே தான்..”

“நீங்க மட்டும்தானே கேட்டீங்க.. இவங்கள்லாம் இன்னும் கேள்வி கேட்க வில்லையே..”

நகர்ந்தால் தவறாகி விடுமோ என்ற பயத்துடன் இடத்தைவிட்டு அசையாமல் நின்ற ஆர்த்தியைப் பார்த்த கபிலனுக்கு சிரிப்பதா இல்லை அழுவதா என்று புரியவில்லை..

‘இந்த மக்கு ஏன்.. இப்படி உயிரை வாங்குகிறது.. நானே இவனுக எக்குத்தப்பாய் கேட்டு வைப்பாங்கன்னு காப்பாத்தி போகச் சொன்னால்.. இதுவாய் வாய் விட்டு மாட்டிக் கொள்கிறதே..’

“ஏண்டா கபிலா.. நாங்க கேள்வி கேட்கணுமுன்னு கே.ஆர்த்தியே ஆசைப்படுது.. நீயேண்டா குறுக்கே நிற்கிற..?”

“தினேஷ் வேண்டாம்.. அப்புறம் என் கோபத்தை நீ பார்க்க வேண்டி இருக்கும்..”

“நீயேண்டா கபிலா இவ்வளவு டென்ஷன் ஆகிற.. தினேஷ் எப்போதும் போலத்தானே பேசினான்..?”

“அஜய்.. நீ அவனை சப்போர்ட் பண்ணாதே.. நீ கிளம்பும்மா.. இன்னும் ஏன் நிற்கிற..”

ஆர்த்தி அப்போதும் தயங்கி நிற்க, கபிலனுக்கு கோபம் வந்து விட்டது..

“இப்போது போகிறாயா.. இல்லையா..?”

ஆர்த்தி அரண்டு போய் ஓட்டமும் நடையுமாக காலேஜை நோக்கி ஓடி விட்டாள்..

சண்டைக் சேவல்கள் போல.. கபிலனும் தினேஷூம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சிலிர்த்துக் கொண்டு நிற்க.. அஜய் அவர்கள் இருவரையும் பிரித்து விட்டான்..

“விடுங்க.. சின்ன விசயத்தைப் போய் பெரிசு பண்ணிக்கொண்டு..”

“எதுடா சின்ன விசயம்..? இன்றைக்கு வந்திருக்கும் பர்ஸ்ட் இயர் பெண்ணிற்காக இத்தனை வருசமாய் கூட இருக்கும் என்னையே தூக்கி எறிந்து விட்டானே…”

“கபிலா..! இவன் சொல்வதும் நியாயம் தானேடா..?”

“என்னத்தைடா நியாயத்தைக் கண்டு விட்ட..? நான்தான் விட்டுவிடுன்னு சொல்கிறேனில்ல.. இவன் விடாமல் கிண்டல் பண்ண நினைத்தால் என்பேச்சிற்குத் தான் என்ன மரியாதை..? நீ அதைக் கேட்கமாட்டியா..?”

“விடுடா.. விடுடா.. இரண்டு பேரும் கைகொடுங்கடா..” கபிலனும் தினேஷூம் முறைத்துக் கொண்டே கை கொடுத்துக் கொண்டாலும், இருவரும் முகம் கொடுத்துப் பேசிக் கொள்ள முழுதாய் ஒரு நாள் ஆனது..

“சரியான ஆளுடா அந்தப் பொண்ணு.. அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு வெடியைக் கொளுத்திப் போட்டு விட்டுப் போய் விட்டாளே..”

அஜய் அங்கலாய்க்க, கபிலன், அவனை முறைத்தான்..

“அடச்சீ.. இந்த அனல்பறக்கும் பார்வையை விட்டுத் தொலைடா.. என்னவோ காலம் காலமாய் தெரிந்தவள் போல ஏண்டா இப்படி பிலிம் காட்டுகிற..?”

அன்று இரவு படுக்கையில் விழுந்த போது.. அஜய் சொன்ன இந்த வார்த்தைகள்தான் கபிலனின் நினைவில் சுழன்றது..

‘காலம் காலமாய் தெரிந்தவள் போல..’

எவ்வளவு சரியாகச் சொல்லிவிட்டான் அவன்..? ஆர்த்தியிடம் ஏன் அப்படியொரு அன்யோன்ய உணர்வு அவனுக்குள் உதித்தது..?

மருட்சியுடன் நோக்கிய அவளுடைய பார்வையை யோசித்த வண்ணம் தூங்கி விட்டான் கபிலன்..

லைப்ரரியில் புத்தக அடுக்குகளைப் பார்வை யிட்டுக் கொண்டிருந்த கபிலனின் பார்வையில் மறுபக்கம் புத்தகத்தை உருவிக் கொண்டிருந்த ஆர்த்தி தென் பட்டாள்..

“ஹலோ..” என்றான் கபிலன்..

குரல் எங்கேயிருந்து வருகிறது என்று தெரியாமல் அவள் சுற்றுமுற்றும் பார்க்க..

“இங்கே பாரு..” என்றான் கபிலன்..

புத்தக அடுக்கின் மறுபக்கம் தெரிந்த சிறு சதுரமான இடைவெளியில் கபிலனின் முகம் தெரியவும் ஆர்த்தியின் முகம் விகசித்தது..

“நீங்களா..?” என்றாள் அவள் உற்சாகத்துடன்..

“நானே தான்..” என்றபடி, கபிலன் புத்தக மர அடுக்கை சுற்றிக் கொண்டு அவள் பக்கம் வந்தான்..

“எங்கே வந்த…?”

“லைப்ரரிக்கு வந்தேன்..”

“இது லைப்ரரின்னு எனக்குத் தெரியாதா..? இங்கே எதற்கு வந்த..?”

“லைப்ரரிக்கு வேறு எதற்காக வருவாங்க..? புத்தகம் எடுத்து படிக்கத்தான்..”

“பாருடா.. ஊமைகூட இந்தப்பேச்சு பேசுது.. உன்னைச் சொல்லிக் குற்றமில்லைம்மா.. இந்தக் காலேஜின் மண் விசேசம் அப்படி.. இது பாஞ்சாலங்

குறிச்சி மண் போல..”

“அப்படிங்களா..? இந்த காலேஜ் முழுவதும் அந்த ஊர் மண்ணைக் கொண்டு வந்து கொட்டியிருக் கிறாங்களா..?”

‘இவளை என்ன செய்தால் தேவலாம்..’ என்ற யோசனையோடு கபிலன் அவளை முறைத்தான்..

‘ஹிஸ்ட்ரி ஸ்டூடண்ட்தானே நீ..?’

“ஆமாம்..”

“பாஞ்சாலங்க குறிச்சி மண்ணுன்னு எதற்குச் சொல்வாங்கன்னு தெரியாமல் நீயெல்லாம் என்னத்தை படிச்சுக் கிழிச்ச..?”

ஆர்த்தி.. உதட்டைக் கடித்துக் கொண்டு திரு திருவென்று விழிக்க.. அவள் தலையில் ஓங்கி குட்டு வைக்கலாமா என்று பல்லைக் கடித்தான் கபிலன்..

“பாஞ்சாலங் குறிச்சி மன்னன் யாருன்னாவது உனக்குத் தெரியுமா..?”

“ஓ.. தெரியுமே.. வீரபாண்டிய கட்டபொம்மன்..”

“நல்லவேளை.. நடிகர்திலகம் சிவாஜிகணேசன்னு சொல்லி விடுவாயோன்னு பயந்து போய்விட்டேன்..”

“கேலி செய்கிறீங்களா..?”

“அதை இவ்வளவு லேட்டாகப் புரிந்து கொள் கிறாயே.. நீ என்ன டீயுப் லைட்டா..?”

“ஊஹூம்.. நான் கே.ஆர்த்தி..”

“அந்த கேயை கொஞ்சம் விட்டு விட்டு இப்படி உட்காரு..”

கபிலனும்.. ஆர்த்தியும் எதிரும்.. புதிருமாக அமர்ந்தனர்..

0Shares

Reviews – Poovum Puyalum / பூவும் புயலும்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link