Chapter 03

0Shares

லைப்ரரியைச் சுற்றியிருந்த மரங்களில் இருந்து வீசிய குளுமையான காற்று கபிலனின் உடலின்மேல் படிந்தது.. அதைவிட, அவனுக்கு எதிரே.. அறியாமை கலந்த அழகோடு இருந்த ஆர்த்தியின் அண்மை தந்த குளுமை.. அதிகமாக அவனது மனதில் படிந்தது.

அவன் அதட்டுவதைக் கேட்டு அவள் மருண்டு போவதைக் காண்பதில் அவனுக்கு தனி இன்பம் வந்தது..

“இப்ப சொல்லு.. வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்ந்த மண்ணில் என்ன இருக்கும்..?” அவன் கேட்டான்..

“என்ன இருக்கும்..?” அவள் அதையே திருப்பிக் கேட்டாள்..

“நீ என்ன சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளையா..? என் கேள்வியை என்னிடமே திருப்பி அனுப்புகிறாயே.. கெட்டிக்காரிதான்.. வீரபாண்டியன் வாழ்ந்த மண்ணில் வீரம் இருக்கும்மா..”

“அட.. ஆமாம்.. இது ஏன் எனக்குத் தோன்ற வில்லை..?”

“ம்ம்.. அதை என்கிட்ட வந்து கேளு.. நானே, இப்படி ஒரு மக்கை மீட் பண்ணிவிட்டோமேன்னு வருத்தத்தில் இருக்கிறேன்.. நீ வேற.. கடுப்பைக் கிளப்பாதேம்மா..”

“நான் ஒன்னும் மக்கில்லை..”

“உன் புத்திசாலித்தனத்தை வெளியில் சொல்லி விடாதே.. இந்த காலேஜின் மண், பாஞ்சாலங்குறிச்சி மண்ணுன்னு சொன்னால் அந்த ஊர் மண்ணைக் கொண்டு வந்து கொட்டியிருக்கிறாங்களான்னு கேள்வி கேட்கிற.. அப்புறம்.. உன்னை மக்குன்னு சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வாங்க..?”

இவன் ஏன் பாஞ்சாலங் குறிச்சி மண்ணைப் பற்றி இவ்வளவு பேசுகிறான் என்று – பேனாவை நெற்றியில் தட்டியபடி யோசிக்க ஆரம்பித்தான் ஆர்த்தி…

“எதுக்கு நெத்தியை பேனாவால் டொக்கு.. டொக்குன்னு தட்டுகிற..?”

“யோசிக்கறேன்..”

“அதையெல்லாம் மூளை இருக்கிறவங்க செய்யணும்.. நீ செய்யக்கூடாது. பேனாவைக் கீழே வை.. உடைஞ்சிடப் போகுது..”

“சும்மா என்னை கிண்டல் பண்ணாதீங்க..”

“இந்த ரோசத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை..”

“இப்ப உங்களுக்கு என்ன வேணும்..? பாஞ்சாலங் குறிச்சி மண்ணைப் பற்றி நான் சொல்லணும் அவ்வளவு தானே..”

“எப்படி சொல்லப் போகிறாய்..? இந்த லைப்ரரியில் பாஞ்சாலங்குறிச்சியைப் பற்றிய புத்தகத்தை எடுத்துப் படித்து முடித்து விட்டு சொல்லப் போகிறாயா..?”

“அப்படி ஒன்றும் நான் ஜீரோ இல்லை.. பாஞ்சாலங்குறிச்சியைப் பற்றிச் சொல்கிறேன்.. கேட்டுக்கங்க..”

“ஒப்பிக்கப் போகிறாய்ன்னு சொல்லு..”

“ஏதோ ஒன்று.. அதைப் பற்றி உங்களுக்கென்ன..”

“எனக்கொன்றும் இல்லைதான்.. நீ மேலே சொல்லும்மா..”

“ஒரு முயலை.. ஒரு வேடன் துரத்திக் கொண்டு போனானாம்..”

“ஊம்…”

“அந்த முயல்.. பயந்துபோய் ஓடியதாம்..”

“ஊம்…”

“ஒரு குறிப்பிட்ட இடத்திற்குப் போனதும், பயந்து ஓடிய முயல்.. திரும்பி வேடனை எதிர்த்து நின்றதாம்..”

“ஊம்..”

“நான் என்ன கதையா சொல்கிறேன்..? இப்படி ‘ஊம்’ போடுகிறீங்க..”

“இது கதையில்லையா..? சரி.. சரி.. முறைக்காதே.. விசயத்திற்கு வா..”

“என்னடா..”

“யாரை ‘டா’ ன்னு சொன்ன… என்னையா..?”

“ஐயையோ… அந்த வேடன் அப்படி நினைத்துக் கொண்டானாம்..”

“உனக்கு, தப்பிக்க இப்படி ஒரு வழி இருக்கா..?”

“நிஜமாவே… நான் வேடன் நினைத்ததைத்தான் சொன்னேன்..”

“ம்ம்.. சொல்லு..”

“என்னடான்னு சொல்லலாமா..?”

“உன் ஆசையைக் கெடுப்பானேன்.. சொல்லிக் கொள்..!”

“என்னடா.. இவ்வளவு நேரமாய் பயந்து ஓடிய முயல் இப்படி எதிர்த்து நிற்குதேன்னு அந்த வேடனுக்கு ஒரே ஆச்சரியமாய் போய் விட்டதாம்..”

“கதை பிரமாதம்..”

“இன்னும் நான் முடிக்கவில்லையே..”

“சீக்கிரமாய் முடிம்மா.. இப்போதே எனக்கு கொட்டாவி வந்து விட்டது.. என்னைத் தூங்க வைக்கணும்கிற முடிவோடு நீ இருக்கிறாயா..?”

“நீங்கதானே பாஞ்சாலங்குறிச்சி முயலைப் பற்றி பேச்சை எடுத்தீங்க..”

“நீ இப்படி ரம்பம் போடுவேன்னு தெரியாமல் பேசி விட்டேன்ம்மா..”

“நீங்க என்ன சொன்னாலும்.. நான் சொல்ல வந்ததை சொல்லாமல் விடமாட்டேன்..”

“நான்தான் ‘நீ ஒரு முடிவோடு இருக்கிற’ன்னு சொல்லி விட்டேனே.. சொல்லு.. சொல்லு..”

“எதனால் அந்த முயலுக்கு அந்த தைரியம் வந்ததுன்னு பார்த்தால்.. அது நின்று கொண்டிருந்த மண்.. பாஞ்சாலங்குறிச்சியாம்..”

“ஹாவ்..”

கபிலன் நீளமாய் கொட்டாவி விட்டான்.. ஆர்த்தி அழமாட்டாத குறையாய் அவனைப் பார்த்தாள்..

“எதையுமே இப்படித்தான் நீளமாக பேசி வைப்பாயா..? சட்டுபுட்டுன்னு ஒரே வார்த்தையில் முடிக்க உனக்குத் தெரியாதா..?”

“நீங்கள் தானே என் வாயைக் கிளறினீங்க..?”

“அதுதான் அனுபவித்து விட்டேனே.. இனி வாயைக் கொடுப்பேனா..? ஆமாம்.. அது என்ன கையில் தடித்தடியாய் புத்தகங்களை அள்ளி வைத்திருக்கிற..? தூங்கப் போகிறயா..?”

‘ஏன் இப்படிக் கேட்கிறான்..? தூக்கத்திற்கும்..? புத்தகத்திற்கும் என்ன சம்பந்தம்..?’ ஆர்த்தி புரியாமல் அவனைப் பார்த்தாள்..

“என்ன லுக் விடுகிற..?”

“ஏன் அப்படிக் கேட்டிங்க..?”

“தலைக்கு அணைவாய் தலையணை போல் வைத்துக்கொள்ள எடுத்துக் கொண்டு போகிறாயோன்னு தோணுச்சு.. கேட்டேன்..”

ஆர்த்திக்கு கோபத்தில் மூக்கு நுனி சிவந்தது.. ‘இவன் என்ன இப்படி மட்டம் தட்டுகிறான்..’ என்று ரோசம் பொத்துக் கொண்டு வந்தது..

“என்னைப் பார்த்தால் படிக்கிறவள் போல உங்களுக்குத் தெரியலையா..? எப்படி நீங்க.. இப்படி ஒரு கேள்வியைக் கேட்கலாம்..?”

“பஸ்.. பஸ்.. ஏன் இப்படிக் கோபப்படுகிற..? காலேஜ் ஆரம்பித்து எவ்வளவு நாள்களாகிறது..?”

“பதினைந்து நாள்கள் ஆகிறது..”

“அதற்குள் இப்படி புத்தகத்தைக் கரைத்துக் குடிக்க உட்கார வேண்டுமா..? இதற்கெல்லாம்.. இன்னும் நாள் இருக்கும்மா..”

“ஆனால்.. அப்பா சொன்னாரே..”

“நினைத்தேன்.. நீயாய் எதையும் பண்ண மாட்டாயே.. நிச்சயம் – இந்த தடிமனான புத்தகங்களுக்கு பின்னால் உன் அப்பா இருக்கணுமேன்னு நினைத்தேன்.. உன் அப்பா என்னதான் சொன்னார்..?”

“எதையும் அந்தந்த நேரத்தில் செய்துவிட வேண்டுமாம்..”

“அட..”

“காலம் பொன் போன்றதாம்..”

“அடடா..”

“காசு பணத்தைக் கூடத் திரும்பச் சம்பாதித்து விடலாமாம்.. ஆனால்.. கழிந்து போன காலத்தை திரும்பச் சம்பாதிக்க முடியவே முடியாதாம்..”

“ச்ச்.. ச்ச்.. ச்ச்..”

கபிலன்.. சுவாரஸ்யமாய் கன்னத்தில் கையூன்றி.. ஆர்த்தி சொன்னவற்றைக் கேட்டு ‘ச்’ போட.. ஆர்த்தி திரும்பி சுவரை ஆராய்ச்சியாகப் பார்த்தாள்..

“அங்கே என்ன பார்க்கிற..?”

“அப்பா சொன்னதை நான் சொன்னபோது.. அதுதான் சரி என்கிறது போல.. பல்லி சவுண்டு கொடுத்துச்சே.. உங்களுக்கு அது கேட்கவில்லையா..?”

கபிலன் பக்கென்று சிரித்து விட்டான்.. அவனுக்கு அறியாமை கலந்த அந்த அப்பாவிப் பெண்ணை மிகவும் பிடித்துப்போய் விட்டது..

“இப்போ ஏன் நீங்க இப்படிச் சிரிக்கறீங்க..?”

“அது பல்லி கொடுத்த சவுண்டு இல்லம்மா.. நான் கொடுத்த சவுண்டு..”

“நீங்களா.. அப்படி சொன்னீங்க..?”

அவள் சந்தேகத்துடன் வினவ.. கபிலன் மேலும் சிரித்தான்..

“ச்ச்.. ச்ச்.. ச்ச்..” என்று மீண்டும் அவன் சொல்ல..

“அட.. ஆமாம்.. அது நீங்கள்தான்..” என்று அவள் அதிசயித்தாள்..

அன்று இரவு படுக்கும் முன்.. தன் டைரியில் இவ்வாறு எழுதினான் கபிலன்..

      ‘அவள் பூப்போல இருக்கிறாள்..

       புதிதாக தெரிகின்றாள்..

       அவள் பின்னாலே என் மனம் போகிறது..

      இதுதான் காதலா..? அதுதான் தெரியவில்லை..’

பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்தது.. ஜன்னலோரமாக அமர்ந்திருந்த ஆர்த்தியிடம் தன் புத்தகங்களை நீட்டிவிட்டு.. கிளம்பி விட்ட பஸ்ஸில்.. ஓடி வந்து தொற்றிக் கொண்டான் கபிலன்..

‘அவன் விழுந்து விடுவானோ..’ என்ற பயத்துடன் அவள் பின்னால் திரும்பிப் பார்ப்பதை உணர்ந்தவனின் மனதில் சாரல் அடித்தது..

அடுத்த இரு ஸ்டாப்புகளில் பஸ்ஸில் இருந்தவர்களில் பாதிக்கு மேல் இறங்வி விட.. கபிலன் படிக்கட்டிலிருந்து ஏறி.. பஸ்ஸிற்குள் வந்து காலியாக இருந்த ஆர்த்தியின் பக்கத்து சீட்டில் அமர்ந்து கொண்டான்..

அவன் அருகே அமர்ந்து கொள்வான் என்பதை எதிர்பார்க்காத ஆர்த்தி ஒருவித பயத்துடன் பஸ்ஸுக்குள் பார்வையைச் செலுத்தினாள்.. அதைக் கவனித்து விட்ட கபிலன் முகம் சுளித்தான்..

“என்ன பார்க்கிற..?”

“இல்லை.. தெரிந்தவங்க யாராவது பார்த்து விட்டால் என்ன செய்வது..? அதுதான்..”

“உன் பக்கத்தில் உட்காருவது அவ்வளவுபெரிய விசயமா..? இப்படி அலட்டிக் கொள்கிறாயே..”

அவன் கோபத்துடன் அவள் கையில் இருந்த புத்தகங்களைப் பிடுங்கிக் கொண்டு அடுத்த ஸ்டாப்பில் இறங்கி விட்டான்..

ஆர்த்தி துடித்துப் போனாள்.. அன்று இரவு அவள் சரியாகவே சாப்பிடவில்லை. வேதவள்ளி.. அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்..

“சில்லுன்னுதான் இருக்கு.. அப்புறம் ஏண்டி.. காய்ச்சல் வந்தவள்போல.. முகம் இப்படி வாடிக் கிடக்கு..”

“ஒன்றுமில்லைம்மா..”

“என்னவோ போ.. உன் அக்காக்கள் இரண்டு பேரும் விட்டால் இந்த உலகத்தையே விற்றுவிட்டு வந்துவிடுவாங்க.. நீ ஒன்றும் தெரியாமல் கைக்குள்ளேயே வளர்ந்து விட்ட.. எதுக்கு சிரிக்கிற.. எதுக்கு அழுகிறன்னு ஒண்ணும் எனக்குப் புரிய மாட்டேன் என்கிறது..”

வேதவள்ளி புலம்பிக் கொண்டே அகன்று விட்டாள்.. விளக்கை அணைத்து விட்டு.. இருட்டில் படுத்த ஆர்த்தியின் விழியோரமாய் கண்ணீர் கோடிட்டு இறங்கியது..

0Shares

Reviews – Poovum Puyalum / பூவும் புயலும்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link