Chapter 04

0Shares

மரத்தடியில் வழக்கம் போல மாநாடு போட்டுக் கொண்டிருந்த.. அஜய்யின் நண்பர் குழாம்.. கபிலனைக் கண்டதும் கிண்டலுடன் வரவேற்றது..

“டேய்.. மச்சானைப் பார்த்துக்கங்கடா.. எல்லாரும்.. பஸ்ஸில் போகப் பயந்து கொண்டு டூவீலர் வாங்குவாங்க.. நம்ம மச்சான் டூவீலரை காலேஜில் தூங்கப் போட்டு விட்டு பஸ்ஸில் போகிறானாம்..”

“சும்மாவும் போகவில்லைடா அஜய்.. படிக்கட்டில் தொற்றிக் கொண்டு போகிறானாம்..”

“இதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம் என்னவாக இருக்கும்டா மாப்ளே..?”

“என்னைக் கேட்டால்.. எனக்கென்னடா தெரியும்..? நானே ஒரு அப்பாவி..”

தினேஷ், ஆர்த்தியைப் போல அறியாமையுடன் இமைகளைக் கொட்டி விழிக்க, நண்பர் குழாம்.. ‘ஹோ..’ வென்ற கூச்சலுடன் கபிலனைச் சுற்றி வளைத்துக் கொண்டது..

“விடுங்கடா.. டேய்..” கபிலனின் முகத்தில் லேசான வெட்கச் சிரிப்பு வந்தது..

“ஏண்டா.. உன் பின்னால் சுற்றுகிற பெண்களை யெல்லாம் விட்டுவிட்டு அவளிடம் என்ன இருக்குன்னு.. அவள் பின்னால் ஓடுகிற..?”

‘அவளிடம் என்ன இருக்கிறது..?’

கபிலன் யோசித்தான், லைலாவின் கண்களுக்கு மஜ்னுதான் அழகு.. சலீமீன் கண்களுக்கோ அனார்கலிதான் அழகு.. கபிலனின் கண்களுக்கு ஆர்த்தி ஏனோ அழகாய் இருந்து தொலைத்தாள்..

“காலேஜ் ஆரம்பித்து இரண்டு மாதங்கள் ஆகி விட்டன.. அவளும் அவள் கிளாஸில் ஐக்கியமாகி விட்டாள்.. இன்னும் நீயேண்டா.. பாடிகார்டு போல.. அவள் பின்னால் சுற்றுகிற..?”

“ச்ச்.. நீயாக எதையாவது சொல்லாதே தினேஷ்..”

“நானாய் சொல்கிறேனா..? உன் மனச்சாட்சியைக் கேளு.. நான் சொல்வது.. உண்மையா.. இல்லை.. உண்மையில்லையான்னு அது சொல்லும்..”

“விடுடா.. டேய்.. இதைப் போய் பெரிய விசயம் போல பேசிக்கிட்டு..”

“ஃபைனல் இயர் ஸ்டூடண்ட்டிற்கு, ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்டுடன் என்ன ஃபிரண்ட்சிப் வேண்டிக்கிடக்கு..?”

“ஃபைனல் இயர் ஸ்டூடண்ட் ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடண்டுடன் பேசக்கூடாதுன்னு எதுவும் சட்டம் இருக்கா..?”

“சட்டம் போட்டெல்லாம் உன்னை அடக்க முடியாதுன்னு எங்களுக்குத் தெரியாதா..?”

“தெரியுதில்ல..? அப்புறமும் ஏன் வாய் விடுகிற..?”

வழக்கம் போல.. தினேஷும்.. கபிலனும் முறைத்துக் கொள்ள.. அஜய் விலக்கி விட்டான்..

“ஏண்டா.. இப்போதெல்லாம் நீங்க இரண்டு பேரும் சரக்குங்கிறதுக்குள்ள அடிச்சிக்கறீங்க..? உங்க இரண்டு பேருக்குள்ள என்னதாண்டா ஆச்சு..?”

“அதை அவனிடமே கேளுடா.. என் விசயத்தில் ஓவராய் கிராஸ் பண்ணுவது அவன்தான்..”

கபிலன் கோபமாய்.. தன் தோள் மேலிருந்த அஜய்யின் கையை விலக்கிக் கொண்டு.. காலேஜை நோக்கி நடந்தான்..

அஜய் யோசனையுடன் தினேஷின் முகத்தைப் பார்த்தான்.. அவன் எரிச்சலுடன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்..

“தினேஷ்.. கபிலன் சொல்வது சரி.. நீ தேவை யில்லாமல் அவனை அதிகமாய் சீண்டுகிற.. அதுவும் இந்த கொஞ்ச நாள்களாகத்தான்.. என்ன விஷயம்..?”

தினேஷ் எழுந்து.. கோபத்துடன் மணலைக் கால்களால் உதைத்துத் தள்ளிவிட்டு.. வேறொரு திசையில்.. காலேஜைப் பார்த்துப் போனான்..

அஜய் தாடையைத் தடவியவாறு, மற்ற நண்பர்களைப் பார்த்தான்..

“போன வருசம் வரைக்கும்.. இரண்டு பேரும் ஒற்றுமையாகத்தானேடா இருந்தான்க..? இந்த இரண்டு மாதத்தில் இப்படி.. எதிரும் புதிருமாய் ஆகிவிட்டானுகளே.. பாரு.. இரண்டு பேரும் காலேஜூக்கு போவதை.. ஆளுக்கொரு திசையில் போகிறானுகளேடா..”

மனம் தாங்காமல் அங்கலாய்த்த அஜய்யின் தோளின் மேல் கை போட்டான் சுந்தர்..

“மச்சி.. நீ சொன்னதிலேயே.. உன் கேள்விக்கான பதில் இருக்கு.. அது உனக்குத் தெரியலையா..?”

“நான் என்னடா சொன்னேன்..?”

“இந்த இரண்டு மாத காலத்தில்தான்.. இவங்க இரண்டு பேரும் அடிச்சுக்கிறாங்கன்னு சொன்னாயா.. இல்லையா..?”

“ஆமாம்..”

“காலேஜ் தொடங்கி எத்தனை நாள் ஆகிறது..?”

“இரண்டு மாதம்தான் ஆகிறது..”

“நாம்.. அந்த ஆர்த்திப் பெண்ணை ராகிங் பண்ணி எத்தனை நாள் ஆகிறது..?”

“அதுவும் இரண்டு மாதம்தான் ஆகிறது..”

சொல்லிக்கொண்டே வந்த அஜய்யின் தலைக்குள் மணியடித்தது.. அவன் கண்கள் விரிந்தன..

“சுந்தர்..” என்றான் அதிர்ச்சியுடன்..

“ஆமாம்.. நீ நினைப்பது சரிதான்.. இவனுக இரண்டு பேருமே.. அந்த ஆர்த்தியை நோட்டம் விடறானுக.. கபிலனிடம் மட்டும்தான் ஆர்த்தி பேசிப் பழகுறா.. அதனால் தினேஷ் மண்டை காயறான்.. தேவையில்லாமல் கபிலனை வம்புக்கு இழுக்கிறான்..”

“கபிலன்தானேடா.. முதல்நாளே அந்தப்பெண்ணிற்கு சப்போர்ட் பண்ணினான்..?”

“அதுதானே உனக்குத் தெரியும்.. ஆர்த்தி காலேஜ் வாசலில் நுழைந்தபோதே.. தினேஷ் அவளை விழுங்கி விடுவதைப் போலப் பார்க்க ஆரம்பித்து விட்டான்.. இது உனக்குத் தெரியாது..”

“அவன் எல்லாரையும்தான் அப்படிப் பார்த்து தொலைப்பான்..”

“இவளை ஸ்பெஷலாகப் பார்த்தாண்டா.. ‘யாருடா இந்தப் பெண்.. செம ஹோம்லி.. லுக்காக இருக்கிறாளே..!’ன்னு என்னிடம் சொன்னான்டா..”

“இதுவேறயா..?”

“அது மட்டுமில்லை.. அவளை ‘ஹுய்’ன்னு கத்திக் கூப்பிட்டதும் அவன்தான்.. அவளிடம் ராகிங் பண்ணுவது போல பேச ஆசைப்பட்டான்.. ஆனால் கபிலன் அதற்கு இடம் கொடுக்காமல், நந்தியைப் போல் வழி மறித்து விட்டான்..”

“ஐ.. ஸீ..”

“அதுக்குப் பின்னாலயும் தினேஷ்.. ஆர்த்தியிடம் பேச டிரை பண்ணிக் கொண்டுதான் இருக்கிறான்.. என்ன ஒண்ணு இவன் மனதிற்குள் நினைத்து முடிப்பதற்குள்ளேயே.. இவன் நினைப்பதை கபிலன் செய்து முடித்துவிடுகிறான்.. அதனால்தான் பயல் இந்த அளவிற்கு ஜெர்க் ஆகிறான்..”

“ஹா.. ஹா..”

“நேற்றுக்கூட இவன் வண்டியை காலேஜில் விட்டு விட்டு பஸ்ஸில் ஆர்த்தியைப் பாலோ பண்ண ஓடினான்.. ஆனால் ஆர்த்தியிடம் புக்ஸைக் கொடுத்து விட்டு பஸ்ஸில் தொற்றிக் கொண்டது கபிலன்தான்..”

“இவன் என்ன ஆனான்..?”

“இவன் போவதற்குள் பஸ் போயே.. போய் விட்டது..”

“விசயம் இப்படிப் போகிறதா..?”

“ஆமாம்.. அதனால் இதில் நாம் தலையிட்டு பிரயோசனம் இல்லை.. கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதுதான் சரி..”

“ஆனால் இரண்டு பேரும் அடிச்சுக்கிறானுங் களேடா..”

“ஒரே பெண்ணை.. இரண்டு பேரும் டாவடித்தால் ஒருத்தருக்கொருத்தர் அடித்துக் கொள்ளத்தான் செய்வார்கள்.. அப்புறம் கொஞ்சிக் கொள்ளவா முடியும்..?”

“இதற்கு என்னதாண்டா முடிவு..? என்ன தான் இருந்தாலும் இரண்டு பேரும் நம்ம ஃபிரண்ட்ஸுங்கடா..”

“அது எனக்கும் தெரியுது.. அந்த ஆர்த்தி.. இரண்டு பேரில் ஒருத்தனை செலக்ட் பண்ணி விட்டாள்ன்னா.. நாம் இதில் தலை கொடுத்து பஞ்சாயத்து பண்ணலாம்.. ஃபிரண்டின் காதலியை சைட் அடிக்கக் கூடாதுன்னு இன்னொருத்தனுக்கு புத்திமதி சொல்லலாம்.. ஆனால் அந்தப் பொண்ணோ பாவம்.. அறியாப் பொண்ணு.. அதுக்காக.. இவனுக இரண்டு பேரும் மோதிக் கொள்வது அதுக்கே தெரியாது..”

“எனக்கென்னவோ.. அந்தப் பெண்.. இரண்டு பேரில் எவனையும் லவ் பண்ணாதுன்னு தோனுது..”

“இரண்டு பேரையும் விட்டுவிட்டு உன்னை லவ் பண்ணும்ன்னு சொல்கிறாயா..?”

சுந்தர் சிரிக்காமல் வினவ.. அஜய்.. சுந்தரின் மார்பில் குத்திப் பலமாகச் சிரித்தான்..

“ஏண்டா.. அவனுக ரெண்டு பேரும் காய்ஞ்சுக்கிட்டு இருக்கிறது போதாதா.. என்னையும் அதில் மாட்டிவிடப் பார்க்கிறாயா..? இந்தக் காதலிக்கிற ரோதனையெல்லாம் எனக்கு வேண்டாம்டா சாமி.. ஆளைவிடு.. நான் கிளாஸிற்குப் போகிறேன்..”

“அங்கே எதுக்கு வேஸ்டாய் போகிற..?”

“நான் என்ன கிளாஸைக் கவனிக்கவா போகிறேன்.. நம்ம கிளாஸ் கேர்ள்ஸைக் கவனிக்கப் போகிறேன்..”

“அதுதானே பார்த்தேன்.. கொஞ்சம் இரு.. நானும் வருகிறேன்..”

“நீ எதுக்கு வருகிற..?”

“நீ செய்யப் போகும் உருப்படியான வேலையை.. நானும் ஃபாலோ பண்ணலாமேன்னுதான்..”

“வா.. வா..”

மரத்தடி மாநாடு கலைந்தது.. ஆர்த்தி.. ஓட்டமும் நடையுமாக.. விரைந்து வந்ததைக் கவனித்த சுந்தர்.. அஜய்யின் தோளைத்தட்டி ஆர்த்தியை கண்ஜாடையில் காண்பித்தான்..

பதற்றத்துடன் வந்த ஆர்த்தியின் பார்வை அங்கும் இங்கும் தேடியது.. அஜய்யும்.. சுந்தரும்.. தங்களுக்குள் அவளைப் பற்றிப் பேசியபடி நகரப் போகையில்.. ஆர்த்தியின் குரல் அவர்களைத் தடுத்து நிறுத்தியது..

“எக்ஸ்க்யூஸ்மி..”

அஜய்.. சுந்தரின் காதருகே கிசுகிசுத்தான்..

“என்னடா.. பாப்பா நம்மைக் கூப்பிடுது..?”

“என்னன்னு கேட்டு விடுவோம்..”

“அப்படிங்கறே.. அப்போ சரி.. வா.. என்னன்னு கேட்போம்..”

“என்னவோ இந்தியா, பாகிஸ்தான் ஒப்பந்தம் போடுவது போல.. இவ்வளவு பில்ட் அப் கொடுக்கிற..”

சுந்தர் அஜய்யை கிண்டலடிக்க.. அவன் சிரித்தபடி ஆர்த்தியைப் பார்த்து ஸ்டைலாக முடிகோதி..

“என்ன..?” என்று வினவினான்..

“ஒன்றுமில்லை..”

“ஒன்றுமில்லாததற்கா எங்களைக் கூப்பிட்ட..?”

“இல்லை.. உங்க ஃபிரண்ட் இங்க இருப்பாரே.. அவரைக் காணோமேன்னு..” ஆர்த்தி மென்று விழுங்கினாள்..

அஜய்யும்.. சுந்தரும்.. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.. அஜய் யோசனையுடன் கவலை ததும்பிய ஆர்த்தியின் முகத்தைப் பார்த்தான்..

0Shares

Reviews – Poovum Puyalum / பூவும் புயலும்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link