Chapter 15
இளம் வயதில் திறமையான வக்கீல் என்று பெயர் எடுத்து விட்டான் கபிலன்.. ஆர்த்திக்கு அதில் மனம் நிறையப் பெருமை..
“இந்த வருஷம் என் படிப்பு முடியப் போகுது.. பேசாமல் நான் உங்களிடமே ஜூனியராக சேர்நது விடவா..?”
“உன் அப்பா என் பெயரைச் சொல்ல வேண்டுமே..”
“இதுதானே வேண்டாம்கிறது.. எதற்கெடுத்தாலும் என் அப்பாவை வம்பிழுக்க வேண்டுமா..?”
“நீ உன் அப்பா சொல்லாமல் என்னிடம் ஜூனியராக சேர்ந்து விடுவாயா..?”
மாலை நேரத்துக் காற்றில் சேலை முந்தானை பறந்து வந்து அவன் முகத்தில் படிய.. அவன் அதன் வாசம் பிடித்தான்.. ஆர்த்தி அவசரமாய் சேலையை இழுத்து செருகிக் கொண்டாள்..
“இப்போ என்ன நடந்து விட்டதுன்னு இப்படி வரிந்து கட்டிக் கொள்கிற..? உன் முந்தானைச் சேலை என் முகத்தின் மீது படக்கூடாதா..? இல்லை ஏற்கெனவே பட்டதில்லையா..?”
இது கபிலனுக்கு பிடித்த விளையாட்டு என்பது.. இத்தனை வருடங்களில் ஆர்த்திக்கு அத்துபடியாகி யிருந்தது.. ஆனாலும் அவன் சொன்னதும் முகம் சிவந்து விடுவதை அவளால் நிறுத்த முடியவில்லை..
“ஆயிரம்தான் சொல்லு.. இந்த மாலை நேரத்துக்கே ஒரு தனி அழகு இருக்கு ஆர்த்தி..”
“பகbல்லாம் வெப்பமாக இருப்பதால் வெப்பம் தணிந்ததும் நமக்கு அப்படித் தோன்றுகிறது..”
“இந்த ஆராய்ச்சிக்கெல்லாம் நான் வரவில்லை.. சிலுசிலுவென்று இந்தக் காற்றுக்கூட எனக்கு மாலை மயக்கத்தை கொடுக்கிறது..”
“ஏன்.. காலை நேரக் காற்றுக்கூட நல்லாத்தானே இருக்கு..”
“ஆனால் நேரம் செல்லச் செல்ல.. வெயில் வந்து விடுமே.. இதுவே மாலை நேரமானால் நேரம் செல்லச் சொல்ல இரவுதான் வரும்.. இன்னும் குளுமையா இருக்கும்..”
“கவிஞராகவே ஆகிவிட்டீங்க போல..”
“கவிஞரே மாலை மயக்கத்தைப் பற்றித்தான் நிறைய பாட்டு எழுதியிருக்கிறார் தெரியுமா..?”
“அது தெரியும்..”
“இதைப் பாருடா.. நான் கேட்டு நீ தெரியும்ன்னு சொல்வது இதுதான் முதல் தடவை..”
ஆர்த்திக்கு ரோசம் வந்து விட்டது.. அவள் சன்னக் குரலில் அவன் காதோரமாக சரிந்து பாடினாள்..
“இது மாலை நேரத்து மயக்கம்..
பூ மாலை போல் உடல் மணக்கும்..
இதழோடு இதழ் சேர.. அந்த
இன்பம் தேடுது எனக்கும்..”
பாடிக் கொண்டிருந்தவள் பாதியிலேயே பாட்டை நிறுத்திவிட்டு.. உதட்டைக் கடித்துக் கொண்டு முகம் சிவந்தாள்.. கபிலன் அவளருகில் நெருங்கி அமர்ந்தான்..
“ஆர்த்தி..”
“ம்ம்ம்..”
“உனக்கு அந்தக் காலை நேரம் நினைவுக்கு வரவில்லைய..?”
“இல்லை.. மாலை நேரத்து மயக்கத்தைப் பற்றி கவிஞர் பாடிய இன்னொரு பாட்டுத்தான் நினைவுக்கு வருகிறது..”
ஆர்த்தி பேச்சை மாற்றுகிறாள் என்பது கபிலனுக்கும் புரிந்தது..
“அங்கே.. மாலை மயக்கம்
யாருக்காக..?
இங்கே.. மயங்கும் இரண்டு
பேருக்காக..
இது நாளை வரும்..
என்று காத்திருந்தால்..
ஒரு நாளல்லவோ
வீணாகும்..?”
கபிலன் ஆர்த்தியின் தோள் மீது கை போட்டுக் கொண்டான்.. ஆர்த்தி அவன் தோள் மீது தலை சாய்த்துக் கொண்டாள்.. மாலை மயங்கி இரவு வேளை வரும்
வரை அவர்கள் பேசிக் கொண்டிருந்து விட்டுப் பிரிந்து சென்றனர்..
கேஸ் கட்டுக்களை பார்த்துக் கொண்டிருந்த கபிலன்,
“மே ஜ கமின் சார்..” என்ற குரலைக் கேட்டதும் புருவம் சுருக்கினான்..
‘இது ஆர்த்தியின் குரல் போல இருக்கே..’
“யெஸ் கமின்..”
ஆர்த்திதான் உள்ளே வந்தாள்.. கபிலன் முகம் மலர்ந்தான்..
“ஏய்ய்.. என்ன இது சொல்லாமல் கொள்ளாமல் சர்ப்ரைஸ் விசிட் கொடுக்கிற..?”
“உங்களுக்கு ஒரு குட் நியூஸ்..”
“என்ன..? என்னிடம் ஜூனியராக சேரப் போகிறாயா..?”
“ஊஹூம்.. நம் ரூட்டில் இருக்கும் இன்னொரு ஸ்பீடு பிரேக்கரையும் நாம் தாண்டப் போகிறோம்..”
கபிலனின் முகம் பிரகாசமானது..
“அனிதாவிற்கு கல்யாணமா..?”
“அதே..! இந்தாங்க இன்விடேசன்..”
“நீ பரீட்சையில் பாஸ் பண்ணிவிட்டதை விட இதுதான் இனிப்பான செய்தி.. மாப்பிள்ளை என்ன செய்கிறார்..?”
“கனடாவில் சாஃப்ட்வேர் என்ஜீனியர்..”
“ஒரு அக்கா அமெரிக்கா.. இன்னொரு அக்கா கனடாவா..? நடத்து.. நடத்து.. நாமும் கல்யாணமானவுடன் இரண்டு நாட்டுக்கும் விருந்துக்குப் போய்வர தோதாக போய் விட்டது..”
அனிதாவின் திருமணத்திற்கு முதல் ஆளாக வருகை தந்தான் கபிலன்.. அவனிடம் இந்தமுறை அருகில் அமர்ந்து ஆர்த்தி பேசிக் கொண்டிருந்தாள்.. திருமணம் முடிந்து அவன் கிளம்பிய போது வாசல் வரை போய் வழியனுப்பி வைத்தாள்..
Reviews – Poovum Puyalum / பூவும் புயலும்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.