Chapter 16

0Shares

“தட்ஸ் ஆல் யுவர் ஆனர்..” என்றபடி தன் இடத்தில் வந்து அமர்ந்தான் கபிலன்..

அரசாங்க தரப்பு வக்கீல் எழுந்து தன் வாதத்தை ஆரம்பிக்க.. அசுவாரஸ்யமாய் அதைக் கவனித்தபடி பார்வையை வெளியில் ஓட்டியவனின் முகம் மாறியது..

‘அங்கே நிற்பது யார்..? ஆர்த்தியா..?’

அவன் கோர்ட்டை விட்டு வெளியே வந்து நீண்ட வராண்டாவில் நடந்த போது தூணின் மீது சாய்ந்து அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்த ஆர்த்தி நிமிர்ந்தாள்..

“என்ன ஆர்த்தி.. எதுவும் அவசரமா..? போன் பண்ணியிருந்தால் நானே உன்னைத் தேடி வந்திருப் பேனே..” என்று கேட்டபடி ஆர்த்தியின் முகத்தைப் பார்த்தவன் துணுக்குற்றான்..

ஆர்த்தியின் கண்கள் கலங்கியிருந்தன..

“என்ன ஆச்சு ஆர்த்தி..?”

“எனக்கு பயமாய் இருக்கிறது..”

அவள் மெலிதாக விம்மினாள்.. கபிலன் சுற்று முற்றும் பார்த்துவிட்டு அவசரமாய் அவள் கை பிடித்து அழைத்துக் கொண்டு கோர்ட்டின் நீண்ட படிக்கட்டுகளில் இறங்கினான்.. வேகமாகக் காரை அடைந்தவன் அவளுக்கு கதவைத் திறந்து விட்டான்..

“ஏறிக்க..”

ஆர்த்தி ஏறியதும் காரைக் கிளப்பினான்.. ஆள் நடமாட்டம் அதிகமில்லாத சாலையோர மரத்தடியில் காரை நிறுத்திவிட்டு அவள் பக்கம் திரும்பினான்..

“இப்போ சொல்லு.. என்ன நடந்தது..?”

“அப்பா எனக்குக் கல்யாண ஏற்பாடு பண்ணுகிறார்..”

“இவ்வளவுதானே..? இதுக்குப் போயா இப்படி அழுதே.. நான் என்னவோ ஏதோன்னு பதறிப் போய் விட்டேன்.. உன் அக்காள்கள் கல்யாணம் முடிந்ததும் 

உன் கல்யாண ஏற்பாட்டைப் பண்ண ஆரம்பிப்பார் என்பது தெரிந்த விசயம்தானே..? இதற்காகத்தானே நாம் இத்தனை நாள் காத்திருந்தோம்..? இதற்கு ஏன் பயப்படுகிறாய்..? நான் வந்து உன் அப்பாவிடம் பேசுகிறேன்.. பயப்படாதே..”

“கபிலன்..!”

அத்தனை வருடங்களில் அன்றுதான் ஆர்த்தி முதன் முதலாக அவனது பெயரைச் சொல்லி அவனை அழைத்தாள்.. அதற்கு முன்னால் அவன் எவ்வளவோ கெஞ்சியும் பெயர் சொல்லி அழைக்க மறுத்துவிட்டாள்..

“ஏய்ய்.. என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது நீதானா..? இரு.. என் கையைக் கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன்.. ஸ்.. ஆ.. வலிக்கிறதே.. அப்போ நீ கூப்பிடுவது நிஜம்தான்..”

“ப்ளீஸ் கபிலன்..”

“இதோ பார் ஆர்த்தி.. நான் சமர்த்துப் பிள்ளையாக தள்ளி உட்கார்ந்திருக்கிறேன்.. உன் கையைப் பிடித்தேனா.. காலைப் பிடித்தேனா..? என்னிடம் ஏன் தேவையில்லாமல் ப்ளீஸ் போடுகிறாய்..”

அவளை இயல்பாக்க.. கபிலன் விளையாட்டுத் தனமாய் பேசினான்.. ஆனால் அவன் முயற்சிதான் பலிக்கவில்லை.. ஆர்த்தியின் முகம் இறுக்கமாகவே இருந்தது..

“நீ கே. ஆர்த்தி இல்லை எ. ஆர்த்தி.. எஃபார் அழுமூஞ்சி.. அழுமூஞ்சி ஆர்த்தி..! இது எப்படியிருக்கு..? ஹா.. ஹா..”

“நல்லாவே இல்லை..”

“எது நல்லாயில்லை நானா..? இல்லை என் ஜோக்கா..?”

“நீங்க நல்லாத்தான் இருந்து தொலைக்கறீங்க.. ஜோக்குத்தான் சரியில்லை..”

“இப்போ எதுக்கு இப்படி மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிற..? நான் வந்து உன் அப்பாவிடம் பேசுகிறேன்னு சொன்னேனில்ல..”

“பேசினால் ஒன்றும் ஆகாது..”

“பெண் கேட்கிறேண்டி..”

ஆர்த்தி ஏக்கத்துடன் கபிலனைப் பார்த்தாள்.. அவனுக்கு அவளுடைய பார்வையின் பொருள் புரிய வில்லை..

“ஏன் அப்படிப் பார்க்கிற..? உன் அப்பாவின் முதல் இரண்டு மாப்பிள்ளைகளைவிட நான் ஒன்றும் வசதியில் குறைந்தவனில்லை.. சொந்தமாய் அபார்ட்மெண்ட், கார், தொழிலில் நல்ல எதிர்காலம்ன்னு பெரிய ஆளாய்த்தான் இருக்கிறேன்.. நான் பெண் கேட்டால் உன் அப்பாவால் மறுக்க முடியாது..”

“ஏற்கனவே ஒருவன் என்னைப் பெண் கேட்டு வந்துவிட்டான் கபிலன்..”

சட்டென்று முகம் கருத்தான் கபிலன்.. ஆர்த்தியை முறைத்துப் பார்த்தான்.. அவள் தலை குனிந்தாள்..

“பெண் கேட்டு வந்தானா..? பெண் பார்க்க வந்தானா..?”

“இரண்டும் தான்..”

“இதைச் சொல்ல உனக்கு வெட்கமாக இல்லை..? அவன் முன்னால் ஷோ கேஸ் பொம்மை போல பார்வைக்கு நின்றாயா..?”

“நான் என்ன செய்யட்டும்..?” இதைச் சொல்லி வாய் மூடு முன்னர் கன்னத்தில் ‘பளார்’ என்று அறை வாங்கினாள் ஆர்த்தி..

“பேசாதே..” கபிலன் பொங்கினான்..

“மனச்சாட்சி.. மனச்சாட்சின்னு ஒண்ணு இருக்கு.. அது உன்னிடம் இருக்கா..? இருந்திருந்தால் அவன் முன்னால் போய் நின்றிருப்பாயா..?”

“கபிலன்.. அவர்கள் என்னைப் பெண் பார்க்கத்தான் வந்திருக்கிறார்கள்னு அப்போது எனக்குத் தெரியாது..”

“தெரியாமல் எப்படி அலங்கரித்துக் கொண்டு அவன் முன்னால் போய் நின்றாய்..?”

“நான் அவனுக்காக அலங்கரித்துக் கொண்டேனா..? இல்லை.. அப்போதுதான் என் சீனியர் ஆபீஸிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வந்தேன்.. அப்பா, முன் ஹாலில் உட்கார்ந்திருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.. என்னைப் பார்த்ததும் ‘இதோ ஆர்த்தியே வந்து விட்டாளே..’ன்னு சொன்னார்.. நான் மரியாதைக்கு இரண்டு வார்த்தை பேசி விட்டு உள்ளே போய் விட்டேன்.. அதற்கு அப்புறம்தான் தெரிந்தது.. அவங்க என்னைப் பெண் பார்க்க வந்திருந்தாங்கன்னு..”

கபிலன்.. கண்கள் சிவக்க.. காரின் முன் புறம் தொங்கிக் கொண்டிருந்த பொம்மையைச் சுண்டி விட்டான்.. அது அவனுடைய மனத்தைப் போல இங்கும் அங்கும் வேகமாக ஆடியது..

“மரியாதைக்குக் கூட அவங்களிடம் நீ பேசணும்னு என்ன அவசியம் வந்தது..?”

ஆர்த்தி மௌனம் சாதித்தாள்.. அவளுக்குத் தெரியும்.. விவரம் சொன்னவுடன் கபிலன் கொந்தளிப்பான் என்பது அவனது கோபத்தை தாங்கிக் கொள்ளத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டுதான் அவள் வந்திருந்தாள்..

“சரி சொல்லு.. இப்போது நான் என்ன செய்யட்டும்..? உன் அப்பாவிடம் வந்து பேசட்டுமா..?”

“ம்ம்…”

“எப்போது வரட்டும்..?”

“இப்போதே கூடப் பேசப் போகலாம்..”

“சரி.. வா போகலாம்..”

“அதற்கு முன் ஒரு விசயம்..”

“சொல்லு..”

“அப்பா ஏறக்குறைய என் கல்யாணத்தைப் பேசி முடிவு பண்ணிவிட்டார்.. தேதி கூட குறித்தாகி விட்டது..” 

கபிலன் ஆர்த்தியைப் பார்த்த பார்வையில் கொலைவெறி தாண்டவமாடியது..

“இதைச் சொல்லவும் உனக்கு தைரியம் வந்திருக் கிறது பார்.. அதைச் சொல்ல வேண்டும் நீ மாறிட்டடி..”

“இல்லை.. விசயம் எந்த அளவுக்கு போய் விட்டதுன்னு நீங்கள் தெரிந்து கொள்ளணும்.. அதற்காக சொன்னேன்..”

“ஏன்.. இந்த அளவிற்குப் போக விட்டாய்..?”

“எனக்குத் தெரியாது கபிலன்..”

“இதை என்னை நம்பச் சொல்கிறாயா..?”

“இதுதான் உண்மை.. நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்..”

“உன்னைக் கேட்காமல் எப்படி உன் அப்பா இந்த அளவு ஏற்பாடுகளைப் பண்ணினார்..”

“அவன்… நான் அவனைக் காதலிப்பதாய் சொல்லியிருக்கிறான்..”

கபிலன் பல்லைக் கடித்துக் கொண்டு பார்க்க பரிதாபமாய் பதில் பார்வை பார்த்தாள் ஆர்த்தி..

“எவன் அவன்..?”

“தினேஷ்..”

“என்ன சொன்னாய்..?”

அதிர்ச்சியுடன் கேட்டான் கபிலன்.. தினேஷின் பெயரை ஆர்த்தி சொல்லுவாள் என்று கொஞ்சமும் அவன் எதிர்பார்க்கவில்லை..

“தினேஷா.. அவன் எப்படி உன் வீட்டிற்கு வந்தான்..?”

“வந்ததுமில்லாமல் அப்பாவின் மனதைக் கலைத்துக் கல்யாண தேதி வரைக்கும் போய்விட்டான்..”

“அன்றைக்கு நீ அவனைப் பார்க்கவில்லையா..?”

“ஊஹூம்.. அன்றைக்கு வந்திருந்தது.. அவனுடைய பேரண்ட்ஸாம்..”

தினேஷ் அன்றோடு தன் பாதையிலிருந்து ஒதுங்கி விட்டதாகத்தான் கபிலன் நினைத்துக் கொண்டிருந்தான்.. ஆனால் திடீரென்று முளைத்து வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்க கையில் தடியோடு வில்லனாக வந்து விட்டான் அந்த தினேஷ்..

0Shares

Reviews – Poovum Puyalum / பூவும் புயலும்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link