Chapter 26

0Shares

ரகுநந்தனின் ஈரத்தலையைத் துவாலையால் துடைத்து விட்ட போது.. அவன் ஈரமுகத்துடன் அவள் வயிற்றில் முத்தம் பதித்தான்….

‘இவனுக்கு இதே பிழைப்பாய் போய் விட்டது..’ சட்டென்று விலகிக் கொண்டாள் சந்தியா.. டீப்பாயில் அமர்ந்து அவள் தலை துவட்டவாகாக தலையைக் கொடுத்திருந்தவன்…

“ஏண்டி..?” என்று ஏமாற்றமாகக் கேட்டான்…

“இன்னைக்கு ஆபிஸ் போகிற உத்தேசமில்லையா..? அவள் பேச்சை மாற்ற முயன்றாள்…”

“இல்லை..” என்றபடி சட்டைக்குள் நுழைந்தான் அவன்…

‘இனி பட்டனைப் போட்டு விடனுமா..?’ சலிப்பாக அவனருகே நெருங்கினாள் சந்தியா…

அவன் சட்டையின் பொத்தான்களைப் போட்டு விடும் போது தெரிந்த அவனது அகன்ற மார்பில் அடர்ந்த முடியில்.. அதில் முகம் புதைக்க நேர்ந்த தருணங்கள் நினைவுக்கு வந்து அவளைத் தடுமாறச் செய்தன.. விழிகளை மூடிக்கொள்ளலாம்.. அதற்கும் அவன் ஏதாவது ஒன்றைச் சொல்லுவான்.. அதனால் பார்வையைத் தாழ்த்திக் கொண்டு பட்டனைப் போட்டு விட்டாள்.. டையின் முடிச்சைப் போடும் போது அவனது உருண்டு.. திரண்ட புஜத்தின் மீது அவள் பார்வை போனது.. அதில் தலைசாய்த்து அவன் அணைப்பில் அடங்கி நின்ற நேரங்கள் நினைவுக்கு வந்து அவளை இம்சை செய்ய ஆரம்பித்தன…

இவன் எதற்காக இந்த வேலைகளையெல்லாம் செய்யச் சொல்லி படுத்தி எடுக்கிறான் என்று எரிச்சல்பட்ட போதே… இதுதான் அவனுடைய யுக்தியோ என்று அவளுக்குத் தோன்றியது.. அவனை நெருங்கி நிற்க வேண்டும்.. அப்போது வெளிப்படும் அவனது உடலழகில் அவள் மயங்கிப் போய் விடவேண்டும்…

‘போடா..’ அவள் மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்..

‘நீ உலக அழகனாவே இரு.. உன்னிடம் நான் மயங்க மாட்டேன்…’

அவள் மனதில் உறுதி எடுத்துக் கொண்டு சில வினாடிகள் கூட ஆகியிருக்காது.. 

“என்னடி.. பலமா திங்க் பண்ணிக்கிட்டு இருக்க..? அத்தானுக்கு என்ன அள்ளி கொடுக்க திட்டம் போட்டுக் கிட்டு இருக்க..?” என்று வரிசைப்பற்கள் தெரிய சிரித்து.. அவன் அவளுடைய மன உறுதியை சோதித்து வைத்தான்.

‘இப்படிப் படுத்தறானே..’ என்றிருந்தது அவளுக்கு..

‘இருந்தாலும் இவனும் இத்தனை ஹேண்ட்சம்மாய் இருந்து தொலைக்கக் கூடாது.. இவனை யார் இப்படி இருக்கச் சொன்னது..?’

“உன் தலையில் என்ன குடையுது…?” அவன் செல்லமாக அவள் தலையில் குட்டினான்…

‘காதலித்துக் கட்டிக்கிட்ட பெண்டாட்டியைக் கொஞ்சுவதைப் போலக் கொஞ்சி தொலைப்பான்…’ தலையைத் தடவிக் கொண்டு அவனை முறைத்தாள் சந்தியா…

“எதுக்காக ஆபிஸ் போகலைங்கிற நினைப்புத்தான் குடையுது..”

அப்படியாவது அவனை அலுவலகத்தின் பக்கம் பற்றி விட்டு விடலாம் என்கிற ஆசையோடு அவள் கேட்டாள்…

“எதுக்காகண்னா.. எனக்கு ஒரு அர்ஜன்ட் பிஸினெஸ் மீட்டிங் சோழா ஹோட்டலில் இருக்கு.. அதை முடிச்சிட்டு வந்ததும் நாம ஹனிமூனுக்கு கிளம்ப வேண்டியிருக்கு.. ஸோ.. கொஞ்ச நாளுக்கு நான் ஆபிஸ் பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டேன்…”

அவள் மாட்டிவிட்ட கோட்டை மாட்டிக் கொண்டபடி அவன் பேச.. அவளுக்கு ‘திக்’ என்று ஆனது…

‘ஹனிமூனா..? இவன் என்ன சொல்றான்…’

“என்னடி பேய் முழி முழிக்கற..?” அவள் கன்னம் தட்டினான் ரகுநந்தன்.. 

“ஒன்.. ஒன்.. ஒன்னுமில்ல…”

“உலகத்திலேயே ஹனிமூன் போகலாம்ன்னு சொன்னவுடனே பேய்யடிச்சதைப் போல ஆன ஒரே பெண்டாட்டி நீயாத்தாண்டி இருப்ப..”

அவன் அப்போதும் அவளைக் கட்டி அருகில் இழுத்து வாசம் பிடித்தான்.. அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு தேநிலவு பயணத்தை ரத்து செய்தால் என்ன என்று அவளுக்குத் தோன்றியது…

“இப்ப ஹனிமூனுக்கு என்ன அவசரம்..?”

என்னதான் கொஞ்சலாக அவள் கேட்க முயன்றாலும்.. அவள் குரல் கொஞ்சலாக வெளிவரவே யில்லை.. பட்டுக் கொள்ளாமல்தான் வந்து தொலைத்தது.. நல்ல வேளையாக அவன் அதைக் கண்டு கொள்ளவே இல்லை..

“இப்பப் போகாம எப்ப போகிறது..? இரண்டு குழந்தைகளை நீ பெற்ற பின்பு குடும்பத்தோட ஹனிமூன் போகலாமா..?” என்று கேட்டுவிட்டு அவன் நகைச்சுவையை ரசித்து அவனே பலமாக சிரித்து வைத்தான்..

‘ஜோக்கு..?’ சந்தியா பல்லைக் கடித்தாள்…

“அடி என் அருமைப் பெண்டாட்டியே..! உன் வீட்டுக்கு மறுவீட்டு விருந்துக்குன்னு போய் வந்தாச்சு.. அம்மா சொன்னதுக்காக குலதெய்வம் கோவிலுக்கும் போய் பொங்கல் வைத்து வந்தாச்சு.. நமக்குக் கல்யாணமாகி ஒரு மாதமும் ஓடிப் போயாச்சு.. இப்பவே லேட்.. இனிமேலும் ஹனிமூனைத் தள்ளிப் போட்டா.. நாளைக்குப் பிறக்கப் போகிற என் பிள்ளை.. என் அம்மாவை ஏமாத்தறயான்னு என்ன அடிக்க வந்துருவான்..”

‘இப்ப எதுக்காக நாளைக்குப் பிறக்கப் போகிற பிள்ளையை இவன் இழுக்கிறான்..’ எரிச்சல் பட்டாள் சந்தியா…

என்னதான் பிரயத்தனங்களை மேற்கொண்டாலும் தேனிலவு பயணத்தைத் தவிர்க்க முடியாது என்பது புரிந்து போக.. அவள் உதட்டைக் கடித்துக் கொண்டு 

நகர முற்பட்டாள்.. அவள் கைபிடித்து அவன் தடுத்து நிறுத்தினான்.. அவள் உதட்டின் மீது அவனது கூர்மையான பார்வை பட்டதில் அவள் தடுமாறிப் போனாள்…

“போய் வரவா..?”

அவன் அவள் முகம் நோக்கிக் குனிந்து.. அவள் உதட்டில் முத்தமிட்டபோது.. இதை தள்ளி நின்று சொல்ல வேண்டியதுதானே என்ற எரிச்சல் அவளுக்கு ஏற்பட்டது…

“ம்ம்ம்..” முணுமுணுத்தபடி அவள் விலகிக் கொண்டாள்…

அவர்கள் பேசியபடியே படியிறங்கினார்கள்.. அதாவது.. அவன் பேச அவள் ‘உம்’ கொட்டிக் கேட்பதைப் போல பாவனை செய்து கொண்டிருந்தாள்.. அதையறியாத  கௌசல்யா.. மகனும்.. மருமகளும் ரகசியமாக பேசியபடி இறங்கி வருகிறார்கள் என்ற நினைவில் மெச்சிப் போனாள்..

“சாப்பிடலாமாம்மா..”

“முதலில் சாமி கும்பிடு…”

கௌசல்யா காட்டிய தீபாதரணைத் தட்டைத் தொட்டு.. நெற்றியில் குங்குமத்தை லேசாகத் தீற்றிக் கொண்டவனைப் பார்த்தபோது.. இவனா வெளியே ‘சிங்கம்’ என்று வர்ணிக்கப்படும் ரகுநந்தன் என்ற ஆச்சரியம் சந்தியாவுக்குள் ஏற்பட்டது…

“நீயும் வாம்மா..” கௌசல்யா அன்புடன் அழைத்தாள்

அவர்கள் மூவரும் பேசியபடியே சாப்பிட ஆரம்பித் தார்கள்.. இயல்பாக ரகுநந்தனுக்குத் தேவையானதை நகர்த்தி வைத்தபடி சாப்பிட்ட மருமகளின் செயலில் மகிழ்ந்து போய் விட்டாள் கௌசல்யா…

‘என் மருமகளுக்குத்தான் என் மகன்மேல் எவ்வளவு ஆசை…’

சந்தியாவின் ஆசையின் அளவைத் தெரிந்து கொள்ளாமல் அவள் மகிழ்ந்து கொண்டிருக்க.. ரகுநந்தன் கிளம்பினான்…

“ஈவினிங் பிளைட்டில் நாங்க கிளம்பனும்மா…”

“டிக்கெட்டுக்கு ஏற்பாடு பண்ணிட்டியா..?”

“டன்.. எல்லா ஏற்பாடையும் பக்காவா செய்து முடித்தாச்சு..”

“அப்ப சீக்கிரமா வந்துரு.. சந்தியா ஒருத்தியா எல்லாத்தையும் பேக் பண்ணனும்னா திண்டாடிருவா..”

“எனக்குத் தெரியாதா… லன்ச்சுக்கெல்லாம் வந்திருவேன்..”

அவன் அக்கறையுடன் சொல்ல.. இந்த அத்தை வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கக் கூடாதா என்றிருந்தது சந்தியாவிற்கு…

அவன் உதவி வேண்டுமென்று சந்தியா கேட்டாளா..? அவன் உதவி செய்யும் லட்சணம் எப்படியிருக்குமென்று கௌசல்யாவுக்குத் தெரியுமா..?

மனைவியிடம் ரகசியமாக கண்சிமிட்டி விட்டு ரகுநந்தன் கிளம்பிய போது.. அவன் வேண்டாத கணவன் என்ற விவரமே சந்தியாவுக்கு சுத்தமாக மறந்து போனது.. இவனை மட்டும் கல்பனாவுக்காக நியாயம் கேட்டுச் சந்திக்காமல் வேறு முறையில் சந்திந்திருந்தால் நிச்சயமாக இவனை மட்டும்தான் நான் காதலித்திருப்பேன் என்று மனதுக்குள் அவள் சொல்லிக் கொண்டாள்.. 

நடந்தது அவ்வாறு இல்லையே.. அவன் கல்பனாவின் வீட்டை அபகரிக்கப் பார்த்தவன்.. சந்தியாவின் கழுத்தில் கத்தியை வைத்துக் காதல் சொல்லச் சொன்னவன்..

என்னதான் முயற்சி செய்தாலும் அந்த விவரங்களை மறக்க சந்தியாவால் முடியவில்லை.. அவள் சோர்வுடன் மாடிப்படியேறினாள்… ரகுநந்தன் வரும்வரைக்கும் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று கட்டிலில் சரிந்து கண்மூடியவளின் பக்கத்திலிருந்த செல்போன் அலறியது.. எடுத்துப் பார்த்தாள்.. கல்பனா அழைக்கிறாள் என்று செல்பேனின் சின்னத்திரை அறிவித்தது… எடுத்துப் பேசினாள்…

“சந்தியா…”

“சொல்லு கல்பனா.. எப்படியிருக்க..? அப்பா அம்மா சௌக்கியமா..?”

“நான் கேட்க வேண்டியதையெல்லாம் நீ கேட்டுக் கிட்டு இருக்க.. இரண்டு மாதமா நான் ஊரில இல்லை.. திரும்பி வந்தா நம்ம பிரண்ட்ஸ் என்னென்னவோ சொல்றாங்களே.. அதெல்லாம் நிஜமா..?”

“எதைச் சொல்ற..?”

“நீ மிஸஸ் ரகுநந்தனா ஆகிட்டியாமே.. அப்படியா..?”

இதைக் கேட்ட கல்பனாவின் குரலில் அப்பட்டமான பொறாமை பிரதிபலித்ததில் அதிர்ந்து போனாள் சந்தியா…

‘எப்படி இவளால் இப்படிப் பேச முடிகிறது..?’

“என்ன சந்தியா.. எதுவும் பேச மாட்டேங்கிற..?”

“ம்ம்ம்.. நிஜம்தான் கல்பனா.. மேரேஜ் முடிந்து ஒரு மாதமாகுது…”

“உனக்கு அவரை எப்படித் தெரியும்…? ஏன் கேட்கிறேன்னா.. உங்க மேரேஜ் லவ் மேரேஜ்ன்னு நம்ம பிரண்ட்ஸ் பேசிக்கிட்டாங்களே.. எனக்குத் தெரிந்து நீ அவரைப் பற்றிப் பேசியதே இல்லை.. அவரைத் தெரியும்ன்னு நீ சொன்னதே இல்லை… எங்க வீட்டு விசயமா அவரைப் பார்க்க நீ போனப்பதான் உன்னை அவர் பார்த்திருக்கனும்னு நான் நினைக்கிறேன். ஐ திங்க்.. அதுதான் உங்க பர்ஸ்ட் மீட்டிங்.. ஆம் ஐ கரெக்ட்..?”

“ஆமாம்.. எதுக்காக இதை நீ கேட்கிற..?”

சந்தியா குழம்பிப் போய் கேட்டபோது.. கல்பனா அவளைப் பார்த்து கேட்டாளே ஒரு கேள்வி…

“திட்டம் போட்டுத்தானே நீ தனியாக அவரைப் பார்க்கக் கிளம்பிப் போன..?”

“கல்பனா..!” சந்தியா அதிர்ந்து விட்டாள்…

“அவரைப் போல ‘ஸ்டார்’ இமேஜ் இருக்கிற ஆள்களை சாதாரணமா எந்தவிதக் காரணமுமில்லாம யாரும் பார்த்துவிட முடியாது சந்தியா.. அந்தக் காரணமா நீ என் வீட்டு விவகாரத்தை பயன் படுத்திக்கிட்ட..”

“ஏய்ய்…”

“அதட்டாதே.. உண்மையைச் சொன்னா உடம்பு எரிகிறதா..? அவரைப் பார்க்கப் போனவ ஏன் என்னையும் உன்கூட கூப்பிட்டுக்கிட்டுப் போகலை..? என்னைப் பார்த்தா… அவர் உன்பக்கம் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்ன்னு தானே.. நீ என்ன அவாய்ட் பண்ணிட்டு தனியாக் கிளம்பிப் போன.. அவரைப் பார்க்க என் பெயர் உனக்கு வேணும்.. நான் மட்டும் கூடவர வேணாம்.. கெட்டிக்காரிடி நீ..” கல்பனா குமுறினாள்…

எதற்காக அவள் அப்படியெல்லாம் பேசித் தொலைக் கிறாள் என்ற எந்த விவரமும் சந்தியாவுக்கு பிடிபடவில்லை.. இதில் கெட்டிக்காரத்தனத்திற்கு என்ன வேலை இருக்கிறது..? ரகுநந்தனைப் போன்ற கெட்டிக்காரனை வெல்ல எந்தக் கெட்டிக்காரத் தனத்தினாலும் முடியாதே.. அவள் நியாயம் கேட்டுப் போனாள்.. நியாயம் கேட்டாள்.. அதில் தானே அவன் ஈர்க்கப் பட்டதாக அவன் சொல்லித் தொலைத்தான்.. சந்தியாவின் அழகில் ஈர்க்கப்பட்டதாக ஒருநாளும் அவன் சொல்லியதில்லையே…

“முட்டாள்தனமா உளராதே..” சந்தியா அதட்டினாள்..

“நான் முட்டாள்தாண்டி.. இல்லைன்னா.. ரகுநந்தனைச் சந்திக்க என் பெயரை நீ உபயோகிக்க நான் விட்டிருப்பேனா.. நானும் கூட வந்திருக்க மாட்டேனா..? எனக்கு ஏண்டி இந்த யோசனை முதலிலேயே தோணாமல் போயிருச்சு..? இதைச்சாக்கா வைத்து அவர்கூடப் போனில் பேசிறலாம்ன்னு அவர் ஆபிசுக்கு போன் போட்டேன்.. லைன் கொடுக்க மாட்டேன்னுட்டாங்க.. நேராவே கிளம்பிப் போனேன்.. அவர் ஆபிஸ் ரூமுக்குள் அலோவ் பண்ண மாட்டேனுட்டாங்க.. எனக்கு உபயோகப் படாத என் பெயர் உனக்கு மட்டும் எப்படிடீ உபயோகமாச்சு…”

“உன் தலை..” என்றாள் சந்தியா…

“நன்றாகக் கவனி கல்பனா.. நான் உனக்காகத்தான் அவரைப் போய் பார்த்தேன்.. பட்.. உன் பெயரையோ.. உன் அப்பாவின் பெயரையோ யூஸ் பண்ணிப் போய் பார்க்க வில்லை… உங்க பெயரைச் சொன்னா உள்ளே விட மாட்டாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. என் அப்பாவின் பெயரை யூஸ் பண்ணித்தான் ரகுநந்தனை மீட் பண்ணினேன்.. உன் மரமண்டையில் முதலில் இதை ஏத்திக்க…” கோபமாக பேசினாள் சந்தியா…

“உன் அப்பாவின் பெயரை யூஸ் பண்ணினயா..? எப்படி..?”

“எப்படின்னா.. ரகுநந்தனின் பேங்க் அக்கவுண்ட்ஸ்ல ஒன்னு என் அப்பாவின் பிரான்சில.. இருந்தது.. அந்த பேங்க் மேனேஜரோட பொண்ணுங்கிறதுதான் ரகுநந்தனைச் சந்திக்க நான் யூஸ் பண்ணிக்கிட்ட ஐடெண்ட்டி போதுமா..?”

“இதிலயும் நீ கொடுத்து வைத்தவதாண்டி.. உனக்கு அப்படியொரு அப்பா கிடைத்திருக்கார்.. அவர் பெயரைச் சொன்னவுடன் ரகுநந்தனை நீ பார்க்க முடிந்திருக்கிறது.. இதுவே என்னைப் பார்.. என் அப்பாவின் பெயரைச் சொன்னால் ரகுநந்தன்… கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விடுவார்.. எனக்கு இப்படியொரு அப்பா.. ரகுநந்தன் கேட்டபோதே வீட்டைக் கொடுத்திருந்தா.. எங்களுக்கான அறிமுகமும் சுமுகமா இருந்திருக்கும்.. எங்கே.. என் அப்பாவுக்குத்தான் எதுவும் உறைக்கலையே..”

கல்பனா பேசப் பேச.. அதிர்ச்சியில் உறைந்திருந்தாள் சந்தியா.. இந்தக் கல்பனாதான் அவளுடைய அப்பா அவளுக்கு தள்ளுவண்டியைப் பிடித்து நடைபழகிக் கொடுத்த வீடு.. அந்த வீடு என்று சொல்லி அழுதாள்..

“கொஞ்சம் பிகு பண்ணினால் வீட்டுக்கு நல்ல விலை கிடைக்கும்.. ரகுநந்தன் பணத்தை வாரி இறைப்பார்ன்னு நினைச்சோம்.. அவர் கேட்டு நாங்க கொடுக்கலைன்னு வெளியே பரப்பி விட்டா.. அது ரகுநந்தனின் ஈகோவை பாதிக்கும்.. அப்ப.. எவ்வளவு பணம் வேண்டும்ன்னு கேட்டாலும் யோசிக்காமல் கொடுத்து விடுவார்ன்னு நினைச்சோம்.. மத்தபடி.. கமர்சியல் ஏரியாவில வீட்டை வைத்துக்கிட்டு இருக்க நாங்க என்ன முட்டாளா…?”

‘இல்லை கல்பனா.. நான்தான் முட்டாளாகி விட்டேன்..’ துயரத்துடன் நினைத்துக் கொண்டாள் சந்தியா..

யாராவது கானல் நீரை.. ஏரி நீர் என்று நம்புவார்களா..? சந்தியா நம்பினாளே.. கல்பனா சொன்ன கதைகளை நெஞ்சம் நெகிழக் கேட்டாளே.. அவள் விட்ட கண்ணீரில் கரைந்து போனாளே.. அதை உண்மையென்று நினைத்துக் கொண்டு நியாயம் கேட்டு ரகுநந்தனின் அலவலுகம் வரை சென்றாளே…

‘இப்படியா முட்டாளாக இருப்பேன்..?’ சந்தியா நொந்து போனாள்…

அதையறியாமல் ஆவேசத்துடன் பேசிக் கொண்டிருந் -தாள் கல்பனா.. அவள் பேசப்பேச.. அவள் மனதிலிருந்த கசடு வெளியே கொட்டிக் கொண்டிருந்தது..

“பிடித்தாலும் பிடித்த.. புளியங் கொம்பாய் பார்த்துப் பிடிச்சிட்டடீ.. இந்தக் கெட்டிக்காரத்தனம் என்கிட்ட இல்லாமல் போச்சே.. இப்படிப்பட்ட ஸ்டார் இமேஜ் இருக்கிற மனிதரை நீ அறிமுகம் பண்ணிக்க நான் காரணமா இருந்திட்டேனே.. எல்லாம் என்னைச் சொல்லனும்.. இந்த வீட்டு விவகாரத்தை வெளியே விடாமத்தான் வைத்திருந்தோம்.. ஆனா.. ரகுநந்தன் நாங்க நினைத்ததுக்கு நேர் எதிர்மாறா.. பணமே கொடுக்காம வீட்டைக் கைப்-பற்றிக்கப் பார்த்ததும் பயந்துட்டோம்.. அந்த பயத்திலே உன்கிட்ட அழுது தொலைக்காம இருந்திருந்தா… ரகுநந்தனின் நிழலைக் கூட நீ தொட்டிருக்க முடியாது…”

‘எப்படிப் பேசுகிறாள்..?’ கொதித்துப் போய் விட்டாள் சந்தியா… அதற்குப் பதில் சொல்லாவிட்டால் அவள் சந்தியா அல்லவே…

0Shares

Reviews – Puthithaga Oru Bubalam / புதிதாக ஒரு பூபாளம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link