Chapter 04

0Shares

‘என்ன ஆச்சு..?” கார்த்திகேயன் புரியாமல் வினவினான்.. அவனது கேள்வியில் தந்நிலை மீண்ட நிவேதா..

‘ஒன்றுமில்லையே..” என்று தோளைக் குலுக்கினாள்..

‘அதனால்தான் சொல்கிறேன்.. கிராமத்தில் காதல் வந்தால் அதை மனதிற்குள் பொத்தி வைத்துக் கொள்வார்கள்.. வெளியே தெரிய விட மாட்டார்கள்..”

‘ஒரு வேளை.. அந்த பொத்தி வைத்த காதல் நிறைவேறவில்லைன்னா..?”

‘மனசுக்குள்ளேயே புதைத்து விடுவார்கள்..”

என்ன கொடுமைடா சாமி.. என்றிருந்தது நிவேதாவிற்கு.. கொலை செய்தால் கூட மன்னித்து  ஏற்றுக் கொள்வார்களாம்.. காதல் செய்தால்.. மன்னிப்பே கிடையதாம்.. சுழல்கின்ற வாழ்க்கை சக்கரத்தில்.. சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் பயணித்து விட்டதைப் போல உணர்ந்தாள் அவள்..

‘என்ன.. பேச்சையே காணோம்.. திரும்பி ஓடி விடாலாமுன்னு தோணுதா..?” கேலியாக வினவினான் கார்த்திகேயன்..

‘ஓடுவதா..? நானா..? ஒரு நாளும் இல்லை.. திரும்பி ஓடவா இத்தனை தூரம் கஷ்டப்பட்டுத் தனியாக பயணம் செய்து வந்திருக்கிறேன்..?”

‘ஸோ.. நினைத்ததை முடிக்காம திரும்ப மாட்டிங்கன்னு சொல்லுங்க..” அவன் இலகுவாகச் சிரிக்க.. அவள் கூடச் சேர்ந்து சிரிக்கவில்லை.. சிந்தனையுடன் வெளியே தெரிந்த வீட்டை பார்த்தாள்..

பெரிய பெரிய தூண்களுடன்.. அரண்மனையைப் போல.. சுற்றுச் சுவர்களுடன்.. வெகு பிரம்மாண்டமாக.. ஊரின் மையத்தில் அந்த வீடு இருந்தது.. அந்த வீட்டில் பலகாலம் வாழ்ந்ததைப் போல அவளது பார்வை இருந்தது..

அவள் பார்வையைத் தொடர்ந்து கார்த்திகேயனும் அந்த வீட்டைப் பார்த்தான்..

‘என்ன பார்க்கறீங்க..?”

‘அது யார் வீடு..?”

‘ஏன் கேட்கறீங்க..?”

‘தூசும்.. தும்புமா.. பாழடைஞ்ச பங்களாவைப் போல இருக்கே.. அதுதான் கேட்டேன்..”

அவன் பதில் சொல்லாமல் காரை ஓட்டினான்..  பின்னர் ஒரு பெருமூச்சுடன் அவளைப் பார்த்தான்..

‘அது எங்க வீடுதான்..”

‘உங்க வீடுன்னா.. ஏன் இப்படி தூசும்.. தும்புமா.. கவனிப்பாரில்லாம கிடக்கு.. நீங்க இதில் குடியில்லையா..?”

‘இல்லை..”

‘ஏன்..”

‘ஏன்னா.. வீட்டுக்கு பெரியவங்களான.. என் தாத்தாவும்.. பாட்டியும் இப்ப உயிரோட இல்லை..”

‘அவங்க உயிரோடு இல்லைன்னா.. வீடு இப்படி பாழடைஞ்சு போயிடுமா..? கிராமத்தில் பரம்பரையில் வரும் வீடுகளையும்.. நிலங்களையும்.. நேசிப்பாங்கன்னு கேள்விப் பட்டிருக்கேன்..”

‘எங்க வீடும் அப்படிப்பட்டதுதான் நிவேதா.. என்ன ஒன்று.. என் தாத்தா.. பாட்டியின் காலத்துக்குப் பின்னாலே.. அநதப் பரம்பரைப் பெருமையை யார் கட்டிக் காப்பாத்தறதுன்னு போட்டி வந்துருச்சு.. பண்ணையார் குடும்பமில்லையா..? ஒரே வீட்டில் ஒன்றாக இருந்தால்.. என் அப்பாவை மட்டும்தானே.. பண்ணையாருன்னு சொல்வாங்கன்னு என் சித்தப்பாவுக்கு தோன்றி விட்டது.. அவர் பங்கை பிரித்துக் கொண்டு போனார்.. அவரில்லாத வீட்டில்..தான் மட்டும் உரிமை கொண்டாடுவதான்னு  அப்பாவுக்கு தோன்றி விட்டது.. இவரும் வெளியேறி விட்டார்..

‘ஸோ..எல்லோரும் கூடி வாழ்ந்த வீடு.. இப்ப பாழடைஞ்சு கிடக்குது.. அப்படித்தானே..?”

‘ம்ம்ம்'”

‘ப்ளீஸ்.. எனக்கு அந்த வீட்டைச் சுற்றிப் பார்க்கனுமுன்னு ஆசையாய் இருக்கு.. கூப்பிட்டுக்கிட்டுப்  போறீங்களா..?”

நிவேதாவின் கோரிக்கையை கேட்ட கார்ததிகேயன்.. ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தான்..

‘எதுக்காக.. அந்த வீட்டைப் பார்க்கனுமுன்னு ஆசைப் படறீங்க..?”

‘தெரியலை..  ஆனாப் பார்க்கனும்..”

அவளது குழந்தைதனமான பிடிவாதத்தைக் கண்டவனுக்கு சிரிப்புத்தான் வந்தது.. ஆனால் அவள் சிரிக்கவில்லை.. தீவிரமாக வீட்டைப் பார்த்தாள்..

‘ஆமாம்.. நீங்க.. என்ன வேலையா வந்திருக்கீங்கன்னு உங்களுக்கு நினைப்பிருக்கா.. இல்லையா..”

‘எல்லாம் நினைவில் இருக்கு.. ஏன் இப்படிக் கேட்கறீங்க..?”

‘வந்த வேலையை மறந்துட்டு.. வேற எந்த வேலையையோ பார்க்கறீங்களேன்னு தோணிச்சு.. அதான் கேட்டேன்…”

‘வந்த வேலையை மட்டும்தான் பார்க்கனுமுன்னு ஏதும் சட்டமிருக்கா..?”

‘இல்லைதான்..?”

‘நான் எந்த வேலையையும் பார்ப்பேன்.. இப்ப நீங்களா அந்த வீட்டுக்குள்ள என்னைக் கூப்பிட்டுக்கிட்டு போறீங்களா.. இல்லை..  நானாக காரிலிருந்து குதித்து உள்ளே ஓடிப் போகவா..?”

‘நீங்க ஓடிப்போகிறதிலேயே குறியாய் இருங்க..”

‘இப்ப.. நீங்க ஒரு முடிவுக்கு வாங்க..”

‘என்ன முடிவுக்கு வருவது..? காரை வீட்டுக்குள்ள விட வேண்டியதுதான்.. எங்க வீட்டுக்கு வந்த விருந்தாளியை வருகிற வழியிலேயே விரட்டி விட்ட பழி எனக்கு எதற்கு..?”

அவன் போலியாக அலுத்துக் கொண்டே.. அந்த வீட்டின் காம்பவுண்டிற்குள் காரை விட்டான்.. வீட்டின் முகப்பிலிருந்த.. நான்கு கால் மண்டபம் போல நீண்டு அமைந்திருந்த போர்டிகோவில் கார் நின்றது..

இறங்கி.. வீட்டின் முகப்பை அண்ணாந்து பார்த்த நிவேதா.. அதை பல்வேறு கோணங்களில் தன் செல் போனில் படம் பிடித்தாள்..

பராமரிக்கப் படாமலிருந்தாலும்.. தன் இயற்கையழகை இழக்காமல் பசுமையாகத் தெரிந்த தோட்டத்தை  ரசித்தாள்..

‘எப்படி செடிகளெல்லாம் வாடாமல் இருக்கு..?”

‘தினமும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ந்தால் எப்படி வாடும்..?”

‘ஈஸிட்..? யார்.. பாய்ச்சுவாங்க..?”

‘தோட்டக்காரன்..”

‘பரவாயில்லையே.. உங்க அப்பா இந்த வீட்டை விட்டுப்போனாலும்.. தோட்டத்தை நினைவு வைத்து.. ஒரு தோட்டக்காரனை ஏற்பாடு பண்ணியிருக்காரே..”

‘அவர் ஒன்னும் நினைவில் வைக்கலை..”

‘பின்னே..?”

‘நான் சின்ன வயதில் இந்த தோட்டத்தில்தான் குடியிருப்பேனாம்.. அம்மா சொல்வாங்க..”

‘ஓ..”

‘வளர்ந்த பின்னாலும்.. நானும்.. என் தங்கையும்.. சித்தப்பா பிள்ளைகளோடு.. இந்த தோட்டத்தில்தான் விளையாடுவோம்..”

கார்த்திகேயனின் பார்வை வெகு பிரியத்துடன் தோட்டத்து செடிகளை வருடிச் சென்றது..

அவனது இளமைக்கால நினைவுகள்.. தோட்டத்தோடு பின்னிப் பிணைந்திருப்பதை நிவேதாவால் உணர்ந்து கொள்ள முடிந்தது..

அவள் சிநேகிதத்துடன் கார்த்திகேயனைப் பார்த்துப் புன்னகைத்தாள்

‘உங்களுக்கு கஷ்டமா இருக்கா..?”

‘கஷ்டமா இருக்காதா..? அதனால்தான் தோட்டக்காரனை வேலைக்குப் போட்டேன்.. அவன் குடும்பத்தோடு.. தோட்ட வீட்டில் குடியிருக்கிறான்.. தோட்டத்தையும் தண்ணீர் பாய்ச்சி பார்த்துக்குவான்.. வீட்டையும் சுத்தமா வைச்சுக்குவான்..”

‘வீடும்.. தோட்டமும் அப்படியொன்னும் சுத்தமாயில்லையே..”

‘அவனால முடிஞ்சது இவ்வளவுதான்.. பத்திருபது ஆளுக கூடி சுத்தம் பண்ண வேண்டிய வீடு இது.. தோட்டமும் அப்படித்தான்.. பாவம்.. அவன் ஒரு ஆளாய் என்ன பண்ணுவான்..?”

வேலையாளின் பக்கமிருந்த நியாயத்தை உணர்ந்து பேசும்.. முதலாளியாக அவன் பேசினான்..

‘பரவாயில்லையே.. அருமையான முதலாளியாய் இருக்கீங்களே..”

வீட்டின் முதல் படியில் கால் வைக்கு முன்னால் நிவேதா செய்த செய்கை.. கார்த்திகேயனை புருவங்களை உயர்த்த வைத்தது..

குனிந்து.. முதல் படியை வலது கையால் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு காலடி எடுத்து வைத்தாள் அவள்..

பொதுவாக கோவிலுக்குப் போகிறவர்கள்தான் இப்படிச் செய்வார்கள்.. வீட்டில் அதைப் போல்  செய்வதை அவன அப்போதுதான் பார்க்கிறான்..

நிவேதாவிடமே அதைக் கேட்கவும் செய்தான்..

‘வீடும் கோவிலும் ஒன்றுதான்..” என்றாள் நிவேதா..

பெரிய கதவுகளைத்  திறந்து கொண்டு அவர்கள் வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்.. வீட்டைச் சுற்றி பார்வையை ஓட்டிய நிவேதாவின் விழிகளில் எல்லையற்ற வாத்சல்யம் பொங்கித் ததும்பியது..

விஸ்தீரமான.. பெரிய விளையாட்டு மைதானத்தைப் போல இருந்த யுhல்.. அதில் கிடந்த சோபாக்கள்.. நடுநாயகமாக இருந்த மாடிப்படிகள்.. யுhலில் மேற்புறக் கூரையிலிருந்து தொங்கிய அலங்கார விளக்குகள்.. என்று அந்த யுhலின் ஒவ்வொரு அங்குலமும் பணக்கார வீட்டின் செழுமையை பறைசாற்றின..

‘இந்த வீட்டை விட்டுப் போக எல்லோருக்கும் எப்படித்தான் மனசு வந்ததோ.. ” நிவேதா வருத்தத்துடன் கூறினாள்..

‘மனசுங்கறது.. எல்லோருக்கும் ஒன்று போல அமைந்து விடாது..” கார்த்திகேயன் ஓர் பெருமூச்சுடன் பதில் சொன்னான்.

‘நானாய் இருந்திருந்தா.. இப்படிப்பட்ட வீட்டைவிட்டு ஒரு அடிகூட வெளியே கால் வைத்திருக்க மாட்டேன்.. ” என்ற நிவேதாவின் விழிகளில் கனவு தெரிந்தது..

‘அந்த அளவுக்கு இந்த வீட்டை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா..?”

‘ஆமாம்..”

மாடிப்படிகளின் மீது கால் வைத்தபடி நிவேதா கூறினாள்.. அந்த வார்த்தையிலே உண்மையிருந்தது.. அவர்கள் இருவரும் மாடியை வலம் வந்தார்கள்..

‘பால்கனியே பெரிய ஹாலைப் போல இருக்கு..”

‘எங்க வீட்டில் எல்லோரும் ஒன்றாய் உட்கார்ந்து பேசும் இடம் இதுதான்.. அதுக்கு வசதியா பெரிசா கட்டிட்டாங்க போல..”

‘ஏன் ஹாலில் பேச மாட்டிங்களா..?”

‘பண்ணையார் வீடு.. யாராவது வந்துக்கிட்டே இருப்பாங்க.. வேலை செய்கிறவங்க குறுக்கேயும்.. நெடுக்கேயும் நடந்துக்கிட்டு இருப்பாங்க.. அதனால குடும்ப விசயங்களைப் பேச.. இங்கேதான் ஒன்றாய் கூடுவாங்க..”

பால்கனியில் சோபாக்கள் போடப்பட்டிருந்தன.. அதன் இரு பக்கங்களிலும் ஊஞ்சல்கள் தொங்கின..

அந்த ஊஞ்சல் கம்பிகளை வருடிய நிவேதா.. ஊஞ்சல் கம்பியில் முகம் பதித்து நெகிழ்ச்சியுடன் நின்றாள்..

“ஏன் இப்படி உணர்ச்சி வசப்படறா..? ‘

கார்த்திகேயனுக்குப் புரியவில்லை.. ஆனால் சற்று முன்தான் சந்தித்த பெண்ணிடம் அதுபற்றி விளக்கம் கேட்கவும் அவன் விரும்பவில்லை..

அந்த வீட்டை விட்டு வெளியில் வந்த போது.. அவர்கள் இருவருக்கும் இடையே சொல்ல முடியாத ஓர் தோழமை உணர்வு உருவாகி இருந்தது..

‘உங்க அப்பா இந்த வீட்டிலிருந்து எந்த பரினிச்சரையும் எடுத்துக்கிட்டுப போகலையா..?”

‘ஊஹும்..”

‘ஏன்..?”

‘சித்தப்பா எதையும் எடுத்துக்கிட்டுப் போகலை.. அதனால்.. இவரும் ரோசத்துடன் எதையும் தொடவில்லை..”

‘உங்க சித்தப்பா ஏன் எடுத்துக்கலை..”

‘எப்படி எடுப்பார்..? அவர் ஒரு வகையில் அருமையான மனிதர் நிவேதா.. மனிதர்களைப் போல.. பொருள்களுக்கும் உயிர் இருக்கிறது என்று நம்புகிறவர்.. இந்த வீட்டைவிட்டு எந்த பொருள்களையும் வெளியேற்ற மாட்டேன்னு சொல்லி விட்டார்..”

‘அப்படிப்பட்டவர்.. வீட்டை விட்டுப் போயிருக்க வேண்டாமே..”

‘இந்தக் குடும்பம் எப்போதோ உடைந்து விட்டது.. உடைந்ததை வெளியில் தெரியாமல் ஒட்ட வைக்கும் சக்தியாக தாத்தா இருந்தார்.. பாட்டி போனாங்க.. பின்னாடியே தாத்தாவும் போனார்.. உடைந்த கண்ணாடி சிதறி.. துண்டு.. துண்டாகி விட்டது..”

‘ம்த்சு..”

‘கதை கேட்பதை இத்துடன் நிறுத்திக்கங்க..”

‘ஏன்..?”

‘என் வீடு வந்து விட்டது..”

கார்த்திகேயனின்  வீடு.. சென்னையில் இருக்கும் வீடுகளைப் போல அழகாகவும்.. நவீனமாகவும் இருந்தது..

‘கரிச்சான் பட்டியில் இப்படியொரு வீடா..?”

மனதிற்குள் நினைப்பதாக நினைத்துக் கொண்டு வாய் விட்டுச் சொல்லி விட்டாள்  நிவேதா..

‘ஏன்.. இருக்கக் கூடாதா..? சென்னைன்னாத்தான் உயர்த்தியா..? கரிச்சான் பட்டின்னா மட்டமா..?”  கார்த்திகேயன் சண்டைக்கே வந்து விட்டான்..

இப்போதுதான் சண்டை தீர்ந்து சமாதானமாகி இருக்கிறது.. திரும்பவும் சண்டையிணை ஆரம்பித்து தொலைத்து விட்டோமே என்று தன்னைத்தானே கடிந்து கொண்டாள் நிவேதா..

‘தெரியாமப் பேசிட்டேன்.. மனசில் வைத்துக்காதீங்க..”

‘உங்களைப் பார்த்தா தெரியாமப் பேசினதைப் போலத் தெரியலையே..”

‘தெரிஞ்சே பேச.. எனக்கென்ன பைத்தியமா..?”

‘அதுதானே தெரியலை..”

காரிலிருந்து இறங்கிக் கொண்டே.. அவன் இயல்பாகக் கூற.. அவளுக்கு கோபம் வந்து விட்டது..

‘என்ன சொன்னீங்க..? ” என்று சண்டைக்கு தயாரானவள் அவன் முகத்தைப் பார்த்ததும் திகைத்தாள்..

உயர் போலீஸ் அதிகாரியைக் கண்டதும்.. போலீஸ்காரரின் உடலில் தோன்றும் விறைப்பு.. அவன் உடலிலும் வந்தது..

“ஏன் இப்படி அட்டென்சனில் நிற்கிறான்..?’

அவள் புரியாமல பார்த்த போது.. அவன் சன்னக் குரலில் எச்சரித்தான்..

‘ஸ்ஸ்.. அப்பா…”

நிவேதா சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.. வீட்டின் முன்னாலிருந்த போர்டிகோவில் நின்று யாரோடோ பேசிக் கொண்டிருந்தவரை கண் பார்வையிலேயே காட்டி.. ‘அவரா..?” என்று வினவினாள்..

‘அவர்தான்..” என்ற பதில் வந்தது..

0Shares

Reviews – Puthiya Poovithu Puthathu / புதிய பூவிது பூத்தது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link