Chapter 16

0Shares

வழியில் தென்பட்டவர்களிடம் பேட்டி எடுப்பதைப் போல விசாரித்தபடி மேகநாதனின் வீட்டுக்குள் சென்று விட்டாள் நிவேதா..

அப்போதுதான் வெளியே கிளம்பிக் கொண்டிருந்த மேகநாதன் நிவேதாவைக் கண்டதும்.. புருவங்களை உயர்த்தினர்.. அவருக்கு காபி கொடுத்தக் கொண்டிருந்த அமராவதிக்கு நிவேதாவை தெரிந்து விட்டது..

‘இந்தப் பொண்ணுதான்.. அந்தப் பொண்ணுங்க..” என்றாள்..

‘எந்தப் பொண்ணு..?” அவருக்கு புரியவில்லை..

‘அதுதான்.. உங்க அண்ணன் வீட்டுக்கு வந்திருக்கிற பொண்ணு.. என்னவோ.. நாட்டுப்புற பாட்டுக்களை ஆராய்ச்சி பண்ண வந்திருக்காம்..”

‘ஓ.. அந்தப் பொண்ணா..”

மேகநாதன் .. அவளை உச்சி முதல்.. உள்ளங்கால்வரை பார்வையிட்டபடி எதிர் சோபாவைக் காட்டினார்..

‘உட்காரும்மா..”

நிவேதா உட்கார்ந்தாள்..

அது கிராமம்.. வெளியிலிருந்து ஒரு பறவை வந்தால் கூட.. ஒரு மணி நேரத்திற்குள் ஊர் பூராவும் அந்தச் செய்தி பரவி விடும்..

அவளோ.. அந்தக் கிராமத்திற்கு ஒட்டாத முகக்களையுடன்.. சினிமா நடிகையைப் போன் நாகரிகமான தோற்றத்துடன் அந்த ஊருக்குள் நுழைந்திருக்கிறாள்..

அவளைப் பற்றிய செய்திகள் மேகநாதனின் செவிகளுக்கும் எட்டியிருந்தன..

‘சென்னைதான உன் ஊராம்மா..?” என்று ஆரம்பித்த மேகநாதன்.. மற்றவர்களின் வழக்கப்படி.. அவளது அப்பா.. அம்மா.. பெயர் முதற்கொண்டு.. அவள் வீட்டு கார் டிரைவரின் பெயர் வரை விசாரித்து கைக்கடிகாரத்தை பார்த்துக் கொண்டார்..

;ஸாரி அங்கிள்.. உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா..?”

அவள் வினயத்துடன் வினவிய விதத்தில் அவர் முகத்தில் மெலிதான ஆச்சரியத்தின் நிழல் படிந்தது..

‘அங்கிளா..?”

‘ஆமாம் அங்கிள்.. உங்க அண்ணணை நான் அப்படித்தான் கூப்பிடுவேன்.. அவர் எனக்கு அங்கிள்ன்னா.. நீங்களும் எனக்கு அங்கிள்தானே.. அண்ணனுக்கும் .. தம்பிக்கும்.. ஒரே உறவு முறைதானே அங்கிள் வரும்..? இரண்டு பேரும் ஒன்றுதானே..”

நிவேதா குழந்தைத்தனத்துடன் பேசியது மேகநாதனின் மனதையும்.. அமராவதியின் மனதையும் தொட்டுவிட்டது..

‘ஒன்றாய் இருந்தவங்கதாம்மா..” மேகநாதன் வருத்தத்துடன் சொன்னார்.. 

‘யார் கண் பட்டதோ.. தெரியலை.. இப்ப ரெண்டாப் பிரிஞ்சுட்டோம்..”

வெளியே கிளம்ப வேண்டிய வேலையை சுத்தமாக மறந்து விட்டார் அவர்..

‘பிரிவுங்கிறதெல்லாம் பெரிய வார்த்தை அங்கிள்.. உடம்புக்குத்தானே பிரிவு வந்திருக்கு..? மனசுக்கு ஏது பிரிவு..?”

மேகநாதன் அயர்ந்தே விட்டார்.. நிவேதாவின் வார்த்தைகள் அவரை நெகிழ வைத்து விட்டன..

‘அதைச் சொல்லு.. மனசு பூராவும் அண்ணன்தான்.. ஆனா.. அவர் மனசுலதான் வன்மம் வந்திருச்சே..”

‘யார் சொன்னது..?”

‘இந்த ஊரே சொல்லுது.. அவரும்.. நானும் பகையாளிகள்ன்னு..”

‘உங்க மனசு சொல்லுதா..?”

ஆழ்ந்த குரலில் வினவினாள் நிவேதா.. மீண்டும் அயர்ந்து போனார் மேகநாதன்..

“இந்தப் பெண் என்ன யட்சிணியா..? மனதை படிக்கும் வித்தை இந்தப் பெண்ணுக்கு எப்படி வந்தது..’

‘ஏன் அங்கிள் பேசாம இருக்கறீங்க.. உங்க மனசுக்கு தெரியும்.. பெரிய அங்கிள் உங்க மேல எவ்வளவு பாசம் வைச்சிருக்காருன்னு.. உங்களுக்குத் தெரியுமா.. தினமும் ஒருதரமாவது உங்க பெயரை அவரை அறியாமல் சொல்லிட்டு.. அவர் நாக்கைக் கடித்துக் கொள்கிறார்..”

‘நிஜமாவா..” மேகநாதனின் முகத்தில் வெளிச்சம் பரவியது..

‘ஆமாம் அங்கிள்.. எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம்.. என்னடா தம்பி கூட பகைன்னு சொல்கிறாங்க.. அங்கிள் என்னடான்னா.. தம்பியை மறக்காம தினமும் அவர் பெயரைச் சொல்கிறாரேன்னு தோணுச்சு.. அதான் அந்த தம்பி எப்படியிருப்பார்ன்னு பார்க்கலாமுன்னு உங்க வீட்டுக்கு வந்தேன்.. வராலாமில்லையா..?”

அண்ணனின்.. மறுபக்கத்தை அறிந்ததில் மகிழ்ந்து போயிருந்தார் அந்த தம்பி..

‘;இதென்னம்மா.. இப்படிக் கேட்டுட்ட.. அண்ணன் வீட்டு விருந்தாளி.. என் வீட்டுக்கும் விருந்தாளிதான்.. இன்னைக்கு மதியச் சாப்பாடு உனக்கு எங்க கூடத்தான்.. அமராவதி..?”

‘என்னங்க..”

‘பாப்பா இன்னைக்கு நம்ம  வீட்டிலதான் மதியச் சாப்பாடு சாப்பிடப் போகுது.. ஆத்து மீனை பிடிச்சுட்டு வரச் சொல்லி.. வறுத்து வைய்யி..”

‘அதுக்கென்னங்க.. அப்படியே செஞ்சிட்டா போகுது..”

அமராவதி சமையல்காரம்மாவை அழைத்து விவரம் சொல்லி அனுப்பி வைத்துவிட்டு.. முன்னறைக்கு வந்தாள்..

நிவேதா அவளைப் பார்த்து சிநேகிதமாகச் சிரித்தபடி..

‘அங்கிள்.. என் பெயர் பாப்பா இல்லை..” என்றாள்..

‘ஹா..ஹா.. பிரியமா நான் பாப்பான்னு சொன்னேம்மா..”

‘ஓஹோ.. உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் அங்கிள்..?”

‘இரண்டு பேர்ம்மா.. ஆனொன்னு.. பெண்ணொன்னு..” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அமராவதி குறுக்கிட்டாள்..

‘உனக்குத் தெரியுமேம்மா.. சுகந்தியை கோவிலில் பார்த்தயே..”

‘ஆமாமாம்.. அவங்க கூட என்ஜினியரிங் படிக்கிறாங்க இல்ல..?”

‘ஆமாம்மா.. சுகந்திதான் மூத்தவ.. அடுத்தவன் சுந்தரம்.. ப்ளஸ் டூ படிக்கிறான்..”

‘எந்த ஸ்கூலில் ஆண்ட்டி..”

‘எல்லாம் டவுனில் இருக்கிற ஸ்கூலில்.. ஹாஸ்டலில் தங்கித்தான் படிக்கிறாங்க.. இந்தப் பட்டிக்காட்டில் என்ன இருக்கு..?”

அமராவதி கேட்ட கேள்விக்கு மேகநாதனை பார்த்து சிரித்தாள் நிவேதா..

‘எதுதான் இல்லை..? அழகான அருவி இருக்கு.. அது கொடுத்த ஆறு இருக்கு.. குல தெய்வ மலைக் கோவிலிருக்கு.. இத்தனைக்கும் மேலே.. அந்தக்கால அரண்மனையைப் போல அசத்துகிற உங்க பூர்வீக வீடிருக்கு..”

மேகநாதன் மண்ணின் மைந்தர்.. நிவேதா விவரித்தவைகளைக் கேட்டதும் குதூகலமாகி விட்டார்.. மனைவியைப் பார்த்து கட்டை விரலை உயர்த்திச் சிரித்தார்..

‘கேட்டுக்கிட்டியா அமரா.. இந்த ஊரு பெருமையை..”

‘ஆண்ட்டிக்கும் இதே ஊர்தானே அங்கிள்..?’

‘உள்ளூரில் பிறந்தவதான்.. ஆனாலும் இவளுக்கு டவுன்தான் உசத்தி.. ஏம்மா.. எங்க பூர்வீக வீட்டை நீ பார்த்தியா..?”

‘ஓ.. வந்த முதல் நாளே சுத்திப் பார்த்தேன்.. உங்க வீடு.. பெரிய அங்கிள் வீடுன்னு இரண்டையும் ஒன்னாச் சேர்த்தாக்கூட அந்த விட்டில் பத்தில் ஒரு பங்குதான் வரும்.. ஏன் அங்கிள்.. அப்படிப்பட்ட வீட்டில் வாழ்வதே பெருமையான விசயம் அப்புறம் எதுக்காக நீங்க இந்த வீட்டுக்கு குடிவந்தீங்க..?”

மேகநாதனின் கண்கள் கலங்கி விட்டன.. அமராவதி குற்ற உணர்வுடன் தலையைக் குனிந்து கொண்டாள்..

‘எல்லோரும் கூடி வாழ்ந்த கோவில்தாம்மா அது.. அதில் குடியிருக்க கொடுப்பினை வேணும்.. எனக்கு அது இல்லை..”

‘ம்ம்.. பெரிய அங்கிளும் இப்படித்தான் சொல்லுவாரு..”

‘எங்கப்பாவுக்கு அடுத்தபடி என்னை வளர்த்தவரு அவரு.. அப்பா காலத்துக்கு பின்னாலே அந்த பெருமை குலையாம பார்த்துக்கிட்வரு.. என்னாலே எங்க அண்ணனும் அந்த கோவிலில் குடியிருக்காம தனியாய் போயிட்டாரு..

‘ஆண்ட்டி சொன்னாங்க.. என் தம்பியில்லாத வீட்டில் எப்படி நான் இருக்கிறதுன்னு கேட்டாராமே…”

மேகநாதனின் விழிகளில் தெரிந்த பெருமையின் மின்னலைப் பார்த்தபோது “இவரா.. சிதம்பரநானுக்கு பகையாளி..? ‘ என்று நினைத்து கொண்டாள் நிவேதா..

அன்று மதிய உணவை அங்கே சாப்பிட்டு விட்டுக் கிளம்பியபோது மேகநாதனின் குடும்பத்தில் ஒருத்தியாக அவள் மாறிவிட்டிருந்தாள்..

செய்தி இறக்கை கட்டிக் கொண்டு பறந்து சிதம்பரநாதனின் செவிகளை எட்டியது.. அன்றைய இரவு உணவுக்கு எப்போதையும் விட முன்னாலேயே வந்து விட்ட சிதம்பரநாதன் உள்ளே நுழையும் போதே..

‘நிவேதா..” என்ற கர்ஜனையுடன் வந்தார்..

யுh௴; சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியில் நாடகம் பார்த்தபடி.. அதன் கதையையும்.. நடிக.. நடிகைகளின் நடிப்பையும் கேலி பேசிக் கொண்டிருந்த கல்யாணிக்கு தூக்கி வாரிப் போட்டது.. அவள் பயத்துடன் நிவேதாவைப் பார்த்தாள்..

‘என்னத்தை செய்து தொலைத்திருக்க நிவேதா.. அப்பா கோபமா கத்துகிறாரே..”

நிவேதா பதில் சொல்லாமல் எழுந்து நின்றாள்..

அப்போதுதான் வீட்டு காம்பவுண்டிற்குள் தனது டாடா சுமோவை நிறுத்திக் கொண்டிருந்த கார்த்திகேயனின் புருவங்கள் சுளித்தன.. அவன் அவசரமாக வண்டியை விட்டு இறங்கி வீட்டுக்குள் விரைந்தான்..

சமையலறையில் வேலையாக இருந்த மீனாட்சியிடம் ஓடிய மல்லிகா..

‘அம்மாம்மா.. ஐயா கோவமா வந்திருக்காரும்மா..” என்றாள்..

‘உங்க ஐயா கோவமில்லாம.. குணசித்திரக்காரரா.. இந்த வீட்டுக்குள்ள வந்தாத்தான் அதிசயம்.. இதைப் போயி ஒரு பேச்சுன்னு எங்கிகட் சொல்ல வந்துட்டியா..?” மீனாட்சி சலித்துக் கொண்டாள்..

‘அதிலம்மா.. அவர் கோப்படறது.. நிவேதாம்மாவப் பாத்து..”

‘என்னது..”

அதிர்ச்சியில் கையிலிருந்த கரண்டிய நழுவ விட்ட மீனாட்சி யுhலுக்கு ஓடினாள்..

மற்றவர்களின் முகத்தில் தெரிந்த பதட்டத்தில் துளியைக் கூட தன் முகத்தில் பிரதிபலிக்காமல்..

‘என்ன அங்கிள்..?” என்று நிதானமாக கேட்டாள் நிவேதா..

அவளின் நிதானம்.. கரையுடைந்த வெள்ளமாய் பொங்கிய சிதம்பரநாதனின் கோபத்திற்கு கொஞ்சம் அணை போட்டது..

‘இன்னைக்கு அந்தப் பயலின் வீட்டுக்குப் போனயா..?”

அவர் குரலில் புயலை உள்ளடக்கிய அமைதி இருந்தது..

‘யரைச் சொல்றீங்க அங்கிள்.. உங்க தம்பியையா சொல்கிறீங்க..?”

நிவேதா கேட்டபோது.. கல்யாணியும்.. மீனாட்சியும் கலவரமடைந்தனர்.. கார்த்திகேயனோ… பல்லைக் கடித்தான்..

“இவளுக்கு எதுக்கு இந்த வேலை..?’

‘என்னம்மா.. என்ன விசயம்..? அவன் என் தம்பின்னு நீ சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கனுமா..? அந்த வீட்டுக்கு போயிருந்தயா.. இல்லையா..?”

‘போயிருந்தேன் அங்கிள்..”

‘யாரைக் கேட்டுப் போன..?”

‘யாரைக் கேட்கனும்..?”

‘என்னைக் கேட்டிருக்கனும்.. நீ என் பொறுப்பில்.. என் வீட்டில் இருக்கிற.. நீ வந்து இரண்டு மாசமாச்சு.. இத்தனை நாளில் உனக்கு ஊர் நிலவரம் தெரிஞ்சிருக்கனும்.. அந்தப் பய வீட்டில் வேலைசெய்கிற ஆள்.. இந்த வீட்டில் வேலை செய்கிற ஆள்கிட்டப் பேசினாலே நான் வேலையை விட்டு தூக்கிருவேன்..”

அவர் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட மல்லிகா..

‘அப்பாடி.. நான் தப்பித்தேன்;” என்று வாய் விட்டே சொல்லி விட்டாள்.. மீனாட்சி அவளை முறைத்த முறைப்பில் அவசரமாக வாயை மூடிக் கொண்டாள்..

‘அப்படியிருக்க.. எந்த துணிச்சலில் நீ அவன் வீட்டுக்கு போன..?”

சிதம்பரநாதனின் கோபத்தை கண்டு கொள்ளாமல் இயல்பாக பதில் சொல்வதைப் போல.. விழிவிரித்து பதில் சொன்னாள் நிவேதா..

‘நீங்க தான் அங்கிள்.. அவரை உங்க பகையாளின்னு சொல்கிறீங்க.. ஆனா.. அவரு நீ என் அண்ணன் வீட்டுக்கு வந்திருக்கிற விருந்தாளியான்னு கேட்டு என்னை பாசமாயில்ல பாத்தாரு..”

சிதம்பரநாதன் திகைத்து விட்டார்.. அவருடைய கோபம்.. “இருக்கவா.. இல்லை போகவா..’ என்று ஆட்டம் கண்டு விட்டது..

‘அந்தப் பய அப்படியா சொன்னான்..?”

‘ஆமாம் அங்கிள்.. அவரு வீட்டில சமையல் வேலை செய்கிற ராக்கம்மா.. நாட்டுப்புற பாட்டு பாடறதில கில்லாடியாமே..”

‘நிசம்தான்..”

‘அதுக்காகத்தான் நான் அவர் வீட்டுக்குப் போனேன்.. அவர் அவசர வேலையாக வெளியில் கிளம்பிக்கிட்டு இருந்தாரு.. உங்க பெயரை சொல்லிட்டு நான் போய் நின்னதுமே அந்த வேலையை கேன்சல் பண்ணிட்டு உட்கார்ந்துட்டாருன்னா.. பாருங்களேன்..”

இப்போது “இருக்கவா..’ என்ற கேள்விக்கே இடம் வைக்காமல் சிதம்பரநாதனின் கோபம் பறந்து விட்டது..

அவர் சோபாவில் உட்கார்ந்து விட்டார்..

‘ம்ம்ம்..? அப்புறம் என்ன சொன்னான்..?”

‘என் அப்பாவுக்கு அப்பாவா.. அண்ணன்தான் என்னை வளர்த்தாருன்னு சொன்னார்.. அப்ப அவர் முகத்தைப் பார்த்தப்போ.. அச்சு அசல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முகத்தைப் பார்த்ததைப் போலவே இருந்தது அங்கிள்..”

இப்போது சிதம்பரநாதன் நடிகர் திலகமாகி விட்டார்..

‘அப்படிச் சொல்கிறவன்.. ஏன் வீட்டை விட்டுப் போகனும்..? அவனை வளர்த்தவனுக்கு.. ஒரு சொல் சொல்ல உரிமையில்லையா..? அண்ணன் பெரிசில்ல.. பெண்டாட்டிதான் பெரிசுன்னு அவ பின்னாலே அவ சேலை முந்தானையை பிடிச்சுக்கிட்டு அவன் போகலாமா..? வேற ஒன்னுமில்லம்மா.. கிளிகளை வளர்த்தேன்.. அதுகளுக்கு ரெக்கை முளைச்சிருச்சு.. ஆளுக்கொரு திசையில் பறந்து போயிருச்சுக.. க்கும்.. க்கும்.. க்கும்..”

சிதம்பரநாதன் இரும ஆரம்பிக்க.. அவசரமாக மீனாட்சி தண்ணீர் செம்பை தூக்கிக் கொண்டு வந்தாள்.. அவர் தண்ணீரை பருகிக் கொண்டிருக்க.. கல்யாணியோ.. ஒற்றை விரலால் நெற்றியைத் தட்டி  யோசிக்க ஆரம்பித்தாள்..

“சித்தப்பா மட்டும்தானே.. தனியாய் பறந்து போனாரு.. அப்புறம் எதுக்கு இந்த அப்பா.. கிளிகளை வளர்த்தேன்.. அதுக ஆளுக்கொரு திசையில் பறந்து போயிருச்சுன்னு வசனம் பேசறாரு..?’

0Shares

Reviews – Puthiya Poovithu Puthathu / புதிய பூவிது பூத்தது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link