Chapter 03

“கால் காசு உத்தியோகமா இருந்தாலும் கவர்ண்ட்மென்ட் உத்தியோகம் பார்க்கிறவனுக்கு பொண்ணக் கட்டிக் கொடுக்கனும்ப்பு..”

சுத்துப்பட்டி கிராமங்கள் எல்லாம் ஒன்று போல இந்தப் பொன்மொழியை உதிர்த்து வைத்ததில்.. பெண்ணைப் பெற்ற மகராசன்கள் சுரேசை முற்றுகையிட்டனர்.. அந்த மகராசன்களில் ஒரு ராசாவான ராசுக்குட்டி மாமா.. சுரேஷைக் காணும் போதெல்லாம் ‘கண்ணி’ வைக்கத் தவறுவதில்லை..

என்னதான் அவர் பார்த்துப் பார்த்து நண்டுப்பிடி போட்டாலும்.. அதில் சிக்காமல் எஸ்கேப் ஆவதில் படுகில்லாடி யான சுரேஷை அவரால் வலை போட்டு பிடிக்க முடியவில்லை..

‘பயபுள்ள.. அத்தன பேச்சுக்கும் வினயமா பதிலச் சொல்றவன்.. பொண்ணக் கட்டிக்கிற பேச்சு வந்தா மட்டும் அத கேலிப்பேச்சா மாத்திப் புடறானே..’

அவருக்கு ஆற்றாமையாக இருந்தது..

‘என் பொண்ணுக்கு என்ன குறைச்சல்..?’

சுரேஷிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால் எல்லாமே குறைச்சல் என்று சொல்லி வைப்பான் என்பதால்.. அவனை மடக்கிப் பிடிக்கும் வழிகளை யோசித்தபடி வரப்பில் வழுக்கி விழுகாமல் வீட்டைப் பார்த்து நடையைக் கட்டினார்..

‘ஆரியக் கூத்தாடினாலும் ராசுக்குட்டிமாமா காரியத்தில கண்ணாயிருக்காரே..’

மண்வெட்டியும் கையுமாக சென்று கொண்டிருந்தவர் வரப்பில் வழுக்கி விழ மாட்டாரா என்று உற்று உற்றுப் பார்த்து சுரேஷிற்கு கண்வலி வந்ததுதான் மிச்சம்.. ராசுக்குட்டி மாமா வழுக்கி விழுகாமல் போயே போய் விட்டார்..

‘இந்த மனுசன் மட்டும் வழுக்கி விழுகாம நடயக் கட்றதில கில்லாடியா இருப்பாராம்.. நான் மட்டும் ஏமாந்த சோணகிரியா இவரு பேச்சில வழுக்கி விழுந்து இவரு பெத்த எலிவால்சடை பொண்ணு கழுத்தில தாலியக் கட்டிப்புடனுமாம்.. யாருகிட்ட..?’

சுரேஷ் பம்புசெட் தண்ணீரில் தலையைக் கொடுத்து குற்றால அருவிக் குளியலைப் போட்டு முடித்தான்.. மோட்டாரை நிறுத்தி விட்டு ஈரம் சொட்டும் தலையைத் துடைத்தபடி தென்னந்தோப்பில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் ஏறினான்.. வண்டியைக் கிளப்பிய போது.. அவனது முதுகிற்குப் பின்னாலிருந்து..

“மாப்பிள்ளை..” என்ற சத்தம் கேட்டது..

‘போச்சுடா.. அடுத்த அட்டாக்குக்கு ஆள் வந்திருச்சா..’

சுரேஷ் திரும்பியே பார்க்காமல் காற்றை விட படுவேகமாய் வண்டியை விரட்டி வீடு போய் சேர்ந்தான்.

உரமூட்டை வாங்க டவுனுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த சுப்பையா… மின்னலைப் போல அவரருகில் வந்து நின்ற மோட்டார் சைக்கிளைக் கண்டதும் அலறி வீட்டுக்குள் ஓடப் போனார்..

“வேற ஒன்னுமில்லப்பா… நம்ம சின்ன அண்ணன் தென்னந் தோப்பு பம்பு செட்டில குளிச்சுட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கு..”

தகப்பனாரை இறுக்கிப் பிடித்து நிறுத்திய கீர்த்தனா சுரேசைப் பெற்றெடுத்த அப்பாவித் தகப்பனான சுப்பையாவுக்கு ஆறுதல் கூறினாள்..

“என்னடா இது… கண்கட்டி வித்தயாயில்ல இருக்கு..” சுப்பையா நெஞ்சைப் பிடித்துக் கொண்டு ஆசுவாசமானார்..

அதற்குள் மாமனாரின் அலறலைக் கேட்டுக் கையில் மோர் செம்புடன் வாசலுக்கு வந்திருந்த சுமதி.. மைத்துனனைப் பார்த்து..

“என்ன கொழுந்தனாரே..! எந்தப் பேய் விரட்டுச்சுன்னு இந்த ஓட்டம் ஓடி வர்றீக..?” என்று கிண்டலாகக் கேட்டாள்..

“நீங்க வேற அண்ணி.. இதப் போயி எந்தப் பேய் விரட்டப் போகுது.. இது பேய விரட்டினாப் பத்தாதா..?” சுரேஷின் செல்லத் தங்கையான கீர்த்தனா உதட்டைச் சுழித்தாள்..

“ஏய்ய்.. வாண்டு.. நீ காலேஜீக்குக் கிளம்பலையா..?” சுரேஷ் அவள் காதைப் பிடித்துத் திருகினான்..

“ஸ்ஆ..! வலிக்குதே..” போலியாய் நடித்து காதை விடுவித்துக் கொண்ட கீர்த்தனா.. அண்ணனைப் பார்த்து நாக்கைத் துறுத்திப் பழிப்புக் காட்டியபடி..

“அதெல்லாம் அப்பவே கிளம்பியாச்சு.. நீதான் தென்னந் தோப்பில வயலுக்குத் தண்ணி பாய்ச்சறேன் பேர்வழின்னு காலத்தைக் கடத்திட்டு இப்ப வந்து சேர்ந்திருக்க.. இப்பப் பாவின நெல்லு நாத்துக்கு அறுவடையை முடிச்சுட்டுத்தான் நீ வீடு வந்து சேருவியோன்னு நான் பயந்தே போயிட்டேன்..” என்று இமைகளைக் கொட்டினாள்..

“யாரு..? நீ..? பயப்புடற ஆளு..?” சுரேஷின் கேலியில்..

“உன் தங்கச்சி வேற எப்புடி இருப்பா..? உன்னப் போலதான் நக்கலும்.. நையாண்டியுமா இருந்து வைப்பா.. நீ சாப்பிடவா சாமி.. உன் தங்கச்சிய காலேஜில விட்டுப்புட்டு காலாகாலத்தில வேலைக்குப் போக வேணாமா..” பொன்னுரங்கம் அழைத்தாள்..

“வந்துக்கிட்டே இருக்கேன்ம்மா..”

வீட்டுக்குள் போகப்போன சுரேஷ்.. சுப்பையாவைப் பார்த்து புருவங்களை உயர்த்தினான்..

“நீங்க எங்கேப்பா கிளம்பிக்கிட்டு இருக்கீங்க..?”

“டவுனுக்கு உரமூட்டை வாங்கப் போறேன்ப்பா..”

“அண்ணன் எங்கே..?”

“அத என்னைக் கேளுங்க கொழுந்தனாரே..! என்னைக்கும் இல்லாத சொந்தம் கொண்டாடிக்கிட்டு உங்க அத்த மகன் வந்து இழுத்துக்கிட்டு போயிருக்காப்புல..”

“அவன் துபாயில இல்ல இருந்தான்..?”

“இன்னைக்குக் காலம்பரதான் ஊரில வந்து இறங்கினாராம்..”

“வந்தவன் பெத்தவங்க.. கூடப் பிறந்தவங்கன்னு உட்காராம இங்கன எதுக்கு வந்தானாம்..?”

“அவரும் உங்க அண்ணனும் ஒன்னாப்புல ஒன்னாப் படிச்சவகளாம்.. அந்தப் பாசத்த புழிஞ்சுட்டு.. உங்க அண்ணனுக்கு பாட்டிலக் கொடுக்க கிளப்பிக்கிட்டுப் போயிருக்கான்..”

“இதுவேறயா..? அண்ணன சும்மாவா விட்டீங்க..”

“அவருகிட்டக் கேட்டா.. அது சென்டு பாட்டிலுடின்னு கதையடிக்கிறாரு.. கத்தரிக்கா முத்தினா கடை வீதிக்கு வந்துதான ஆகனும்ன்னு விட்டுட்டேன்.. செண்டு பாட்டில மேலதான அடிச்சு விட்டுக்க முடியும்.? தண்ணியோட கலந்தா அடிக்க முடியும்..? எங்கிட்டு உலாப் போனாலும் ராத்தூங்க வீட்டுக்கு வந்துதான ஆகனும்..? அப்ப இருக்கு கொழுந்தனாரே.. உங்க அண்ணனுக்கு கச்சேரி..!”

“ஹா..ஹா..! அதுசரி அண்ணி..”

“என்ன கொழுந்தனாரே..?”

“இவன் என்னத்துக்கு திடிர்ன்னு அண்ணன் மேல இம்புட்டுப் பாசத்தப் புழியறான்..? ஒன்னாப்புல ஒன்னாப் படிச்சது இப்பத்தான் நினப்புக்கு வந்துச்சா..?”

“ம்ஹீம்.. எல்லாம் உங்களாலதான் கொழுந்தனாரே..”

“என்னாலயா..? நான் என்ன பண்ணினேனாம்..?”

“காலாகாலத்தில எவ கழுத்திலயாவது மூணு முடிச்சப் போட்டிருந்தா இந்தக் கருமாயமெல்லாம் நடக்காதுல்ல..? உங்க அத்த மக ரத்தினத்த உங்க தலயில கட்டறதுக்காக.. துபாயில இருந்து பறந்து வந்த உங்க அத்த மகன்.. உங்க அண்ணன மடக்கிப் போட்டு.. அவரு மூலமா உங்கள மடக்கிப் போட பாட்டிலு ஆசை காட்டி இழுத்துக்கிட்டுப் போயிருக்கான்..”

“யார..? அந்த ஊளமூக்கிய என் தலயிலகட்ட இவன் பிளான் போடறானா..? இருக்கு அவனுக்கு.. துபாய்க்கு அவன் திரும்பறதுக்குள்ள திருவிழா கொண்டாடிப் புடறேன்..”

“இப்புடி ஊரில இருக்கிற மாமன்காரன்களுக்கு திருவிழா கொண்டாறதுக்குப் பதிலா சட்டுப் புட்டுன்னு ஒரு கல்யாணத்தப் பண்ணிக்கலாமில்ல.. உங்களால உங்க அண்ணனையுமில்ல கெடுத்துக் குட்டிச் சுவராக்கப் பாக்கிறாங்க..”

சட்டுப் புட்டென்று முடித்துக் கொள்வதா கல்யாணம்..? 

சுரேஷ் பதில் சொல்லாமல் வீட்டுக்குள் போனான்.. அவனது மனதுக்குள் கோபம் விரவியிருந்தது.. மற்றவர்களுக்காக வாழ்வதா வாழ்க்கை..? மூன்று முடிச்சுப் போடுவது பெரிதல்ல.. அதன் பின்னான வாழ்க்கைதான் பெரியது.. இதை எப்படிச் சொல்லி அந்த வீட்டில் உள்ளவர்களுக்குப் புரிய வைப்பான்..?

“அப்புடிச் சீமையில இல்லாத எந்த ரதியை மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டு இருக்கீக..?”

சுமதியின் கேள்வியில் அவனுக்கு ஆயசாமாக இருந்தது.. மனதில் இடம் பிடிக்க ரதியாக இருக்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை என்று யார் அவனுடைய அண்ணியிடம் சொல்வது..?

“இதில வேற ஊரில இருக்கிற அத்தன சனமும் உங்க அப்பாவுக்கு மைச்சினன்களாவும் உங்க அம்மாவுக்கு அண்ணன், தம்பி வகையறாக்களுமா இருந்து வைக்கிறாங்க.. பொழுது விடிஞ்சு பொழுது சாயறதுக்குள்ள ஊருல இருக்கிற அத்தன முறைப் பொண்ணுக வீட்டிலயும் ஆக்கற கொழம்பக் கொண்டுவந்து வீடு பூரா நிறைச்சுப்புடறாங்க.. பொண்ணக் கட்டறவ வீட்டில கை நனைக்கலாம்.. கட்டாதவக வீட்டுக் குழம்ப எடுத்துட்டுப் போன்னும் சொல்ல முடியாம.. கீழயும் கொட்ட முடியாம படற அவதி இருக்கே.. அப்பப்பா..! இதுக்கு ஒரு முடிவக் கொண்டு வாரதுக்காவது நீங்க காலகாலத்தில கல்யாணத்தைப் பண்ணிக்கங்க கொழுந்தனாரே..”

“பாக்கலம் அண்ணி..”

“பொண்ணத்தான..?”

“ஊஹீம்.. வேலயப் பாக்கலாம்ன்னு சொன்னேன்.. அம்மா.. நான் கிளம்பறேன்.. கீர்த்தனா.. ரெடியா..?”

“நான்தான் எப்பவோ ரெடின்னு சொன்னேனில்ல..”

கீர்த்தனா சுரேஷின் மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொள்ளப் போனபோது டி.வி.எஸ் பிப்டியைக் கிளப்பியிருந்த சுப்பையா.. 

“என் கூட வர்றியாம்மா.. நானும் டவுனுக்குத்தான போறேன்.. போற வழியில உன் காலேசில இறக்கி விட்டுட்டுப் போறேன்..” என்று அன்பொழுக கூப்பிட்டார்..

“நீங்கதானே.. நடக்கறவனெல்லாம் உங்கள ஓவர் டேக் பண்ணிட்டு என்னப் பகுமானமா பாத்து வைப்பானுக.. அண்ணன்தான் புயல் வேகத்தில என்னக் காலேசில சேர்க்கும்.. உங்களுக்குப் புண்ணியமாப் போகும்.. நீங்க கிளம்புங்கப்பா..”

கீர்த்தனா சுரேஷின் மோட்டார் சைக்கிளில் ஏறிஉட்கார்ந்து விட்டாள்..

0

Subtotal