Chapter 04

அடைமழை போல கோடைமழை பெய்து கொண்டிருந்த அந்த நண்பகல் வேளையில் அடுக்களையில் ஐக்கியமாகியிருந்தாள் அம்புஜவள்ளி..

“ம்மா.. ஒரு கப் காபி ப்ளீஸ்..” ரம்யா குரல் கொடுத்தாள்.. 

“என்னாது..?”

“ஒன் கப் காபி.. ப்ளீஸ்..”

“ஏன்..? அதைத் தமிழ்ல சொல்ல மாட்டீகளோ.. இங்கீலீஸிலதான் வெளுத்துக் கட்டுவீகளோ..”

“ஸாரிம்மா..”

“என்னாது..? ஸாரியா..?”

கடவுளே..! என்றிருந்தது ரம்யாவுக்கு.. விடாது மழையடிக்கும் அடாத மழையின் குளிர் பொறுக்காமல் ஒரு வாய் காபியைக் கேட்டு விட்டக் குற்றத்திற்காகவா இந்த அம்மா இந்தப் பாடு படுத்துவது..?

“மன்னிச்சுக்கங்கம்மா.. போதுமா..”

“போதாது.. ஒழுங்கா காபியக் கேளு..”

“என்னைப் பத்து மாதங்கள் சுமந்து ஈன்றெடுத்த என் அன்னையே..! முத்தமிழ் செல்வியே..! நீர் வாழ்க..! நின் கொடை வாழ்க..! மழையடிக்கும் இந்த தருணத்தின் குளிர் போக்க.. ஒரு டபரா நிரம்பிய காபியென்னும் பானத்தைப் பருகத் தருவீராக..”

“இந்த வியாக்கினத்துக்கு ஒன்னும் குறைச்சலில்ல.. ஒரு கிளாஸ் காபி கொடுங்கம்மான்னு உருப்படியாக் கேளுடின்னா.. ஒன்னு அந்தப் பக்கம் நிக்கிறா.. இல்லேன்னா இந்தப் பக்கம் நிக்கிறா.. இந்தா.. நீ கேட்ட காப்பி..”

அம்புஜவள்ளி ‘ணங்’கென்ற ஓசையுடன் வைத்த காபித் தம்ளரில் இருந்த காபி தளும்பி விழுகவா என்று கேட்டதில் அவசரமாக காபித்தம்ளரைக் கைப்பற்றிக் கொண்டாள் ரம்யா..

“எங்கேடி.. உங்க அக்காகாரியக் காணோம்..?”

“ரிசல்ட்டப் பாக்கப் போயிருக்காம்மா..”

“அதப் பாத்துத்தான் தெரிஞ்சுக்கணுமா என்ன..? பெரிய குட்டிக்கு வாய்தான் நீளம்.. இந்தக் காதில இருந்து.. அந்தக் காதுவரை கிழியும்.. படிப்பில கெட்டில்ல..”

அங்கே இல்லாத பெரிய மகளை அம்புஜம் புகழ்ந்து தள்ளியதில் பொறாமைக்கு ஆட்பட்டாள் ரம்யா.. அது என்ன எத்தனைதான் திட்டினாலும்.. என் மூத்த மகளைப் போல உண்டுமா என்று கேள்வி கேட்பது..?

பேசாமல்.. மூத்த பிள்ளைதான் செல்லப் பிள்ளை..! இளைய பிள்ளை எடுப்பார் கைப்பிள்ளை.. என்பதைத் தாங்கள் நிருபித்து விட்டீர்கள் தாயே..! என்று சீற்றம் கொண்டு மலைமீது ஏறி உட்கார்ந்து விடலாமா என்று யோசித்தாள்..

மதுரைக்குப் பக்கத்தில் உள்ள மலைகளை எல்லாம் சிவபார்வதி தம்பதியினரின் இளைய பிள்ளையான முருகன் ஆல்ரெடி ஆக்குப்பை செய்து விட்டார் என்பதாலும்.. மலையேறினால் கால் வலிக்கும் என்பதாலும்.. அந்த யோசனையை கைவிட்டுவிட்டு கையில் இருந்த காபியின் சுவையில் கவனமானாள்..

“ஆத்தா..! நான் பாஸாயிட்டேன்..”

அந்தக் காலத்து கருப்பு வெள்ளை படத்தின் முதல் காட்சியின் வசனத்தைப் போலக் கூவிக் கொண்டு உள்ளே ஓடி வந்து அம்புஜ வள்ளியின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் திவ்யா..

“அடச்சீ..! கழுத்தை விடு.. கையில இருக்கிற பணத்த எல்லாம் சேத்து வைக்காம உங்கள இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில சேத்து விட்டுப் படிக்க வைச்சது இதுக்குத்தானா..?”

“ஏம்மா.. என்னாச்சு..?”

“புள்ளயா.. லட்சணமா.. மம்மி பாஸ் பண்ணிட்டேன்னு சொல்றதுக்கென்ன..? அத விட்டுட்டு.. அரதப் பட்டிக்காடா.. ஆத்தா நான் பாஸ் பண்ணிட்டேன்னு ஓடி வர்றா..”

“மாம்.. எங்கேயோ போயிட்டிங்க..!”

“இஃது..! இப்ப எப்புடி இருக்கு.. இரு காபி கொண்டாரேன்..”

அம்புஜம் அடித்த அந்தர் பல்டியில் காபியை மறந்து ‘ஆ’ வென்று வாய் பிளந்தாள் ரம்யா.. அவள் வாய்க்குள் விச்ராந்தியாக பறந்து சென்று பார்வையிட்டு வந்த கொசுவை அடித்த திவ்யா.. அவள் வாயில் ஓர் அப்பு அப்பி வாயை மூடவைத்தாள்..

“எதுக்குடி இப்புடி திறந்த வாயை மூடாம பிரமை பிடிச்சுப் போயி உக்காந்திருக்கிற..?”

“ஏன் கேட்க மாட்ட..? நரம்பில்லாத நாக்குங்கிறதை நம்மளப் பெத்த தெய்வத்தாய் அடிக்கடி புரூவ் பண்ணிக்கிட்டே இருந்தா திறந்த வாய் எப்புடி மூடும்..?”

“ஓ…! இது அம்மாவோட திருவிளையாடல்ல வந்ததா..?”

“ஆமாமாம்.. இப்பத்தான் மலையேறலாமான்னு யோசிச்சேன்..”

“கால் வலிக்கும்ன்னு விட்டிருப்ப..”

“அதே.. ஒரு வழியா டிகிரி முடிச்சாச்சு.. அப்புறம்..?”

“பி.ஜி. பண்ணிக்கிட்டே சர்வீஸ் கமிசன் பரிட்சைகளை எழுத வேண்டியதுதான்..”

“ஆரம்பிச்ச புள்ளிக்கே காலம் நம்மளக் கொண்டு வந்து நிறுத்திருச்சு பார்த்தியா.. பத்துப் பதினைஞ்சு வருசத்துக்கு முந்திதான் டிகிரி படிச்சுட்டு சர்வீஸ் கமிசன் பரிட்சைகளைத் தேடிப் பிடிச்சு அப்ளைபண்ணி எழுதிக்கிட்டு இருந்தாங்க.. அதுக்கப்புறம் சுனாமி போல பெரிய அலையா கம்யூட்டர் என்ஜினியர்.. ஐடி ஃபீல்டில வேலை.. வெளிநாட்டிக்கு பறக்கற சான்ஸீன்னு காலம் மாறுச்சு.. ப்ளஸ் டூ முடிச்ச அத்தன புள்ளைகளும் போட்டி போட்டுக்கிட்டு இன்ஜினியரிங் படிப்பில குமிஞ்சாங்க.. இப்பப்பாரு.. மறுபடியும் டிகிரி.. சர்வீஸ் கமிசன்னு காலம் நம்மளக் கொண்டு வந்து நிப்பாட்டிருச்சு..”

“அதைச் சொல்லு..”

அக்காவும் தங்கையும் ஆழ்ந்து பேசிக் கொண்டிருந்த போது வீட்டுக்குள் வந்த சொக்கநாதர்.. திவ்யாவிடம்..

“பாஸ் பண்ணிட்டியாமில்ல.. பர்ஸ்ட் கிளாசாமில்ல..?” என்று பெருமையுடன் விசாரித்தார்..

“ஆமாம்ப்பா.. யாரு சொன்னது..?”

“வரதராஜன் சொன்னான்.. அவன் பொண்ணு உன் கிளாஸ் மேட்தானே..?”

“சௌந்தர்யா பாவம்.. ரெண்டு சப்ஜெக்ட்டில் போயிருச்சு..”

“நீ கொடுத்து வைச்சவன் சொக்கநாதா.. அப்படின்னான்..”

கணவர் பேசுவதை கேட்டபடி அங்கே வந்த அம்புஜம்..

“நீங்க சும்மாவா வந்தீங்க..?” என்று இடுப்பில் கை வைத்தாள்..

“இதுக்கெல்லாம் சண்டைக்குப் போக முடியுமாடி..?” சட்டையைக் கழட்டி ஹேங்கரில் மாட்டியபடி சொன்னார் சொக்கநாதர்..

“உங்களை சண்டைக்குப் போங்கன்னு யாரு சொன்னது..?”

“இப்ப நீ பாயுறதுக்கு அர்த்தம் என்ன..?” பேண்டிலிருந்து கைலிக்கு மாறியபடி சொக்கநாதரும் கேட்டார்..

“அந்த ஆளு கண்ணே கொள்ளிக்கண்ணு..! அவரு காலடி மண்ண எடுத்து வந்து திவ்யாவுக்கு திருஷ்டி சுத்திப் போட்டிருக் களாமில்ல..? அதச் சொன்னா.. இவரு வேற எதையோ சொல்றாரு.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக் காளய அடக்கிட்டு வந்தவரப் போல சிலுப்பிக்கிறாரு.. அங்கன சத்தம் கேட்டா.. இங்கன ஜன்னல அடைச்சுக்கிற மனுசன்கிட்டப் போயி நான் சண்டைக்குப் போகச் சொன்னேனாம்..”

சொக்கநாதரையும் தாளித்து விட்டு வெற்றிகரமாக அம்புஜம் டைனிங் ஹாலுக்குச் சென்று விட.. ரம்யா.. அவள் பெற்ற துன்பத்தைத் தானும் பெற்ற தந்தையை வெகு பிரியத்துடன் பார்த்து வைத்தாள்.. அதை உணராத அப்பாவி சொக்கநாதர்.. மகளின் பிரியத்தில் மனம் நெகிழ்ந்து போனவராக..

“என்னடா..?” என்றார்..

“ஒன்னுமில்லேப்பா..”

“சாப்பிட வாங்க.. பசிக்கலையா..”

சொக்கநாதருடன் பேசியபடி சாப்பிடப் போன மகள் களைப் பார்த்து..

“பொண்ணா.. லட்சணமா உதவிக்கு வருதுகளான்னு பாரு.. என்னவோ.. ஆம்பளப் பயலுகளப் போல அப்பாகூடக் கூட்டுச் சேர்ந்துக்கிட்டு சாப்பிட வருதுக..” என்று எரிந்து விழுந்தாள்..

“நீங்க கூப்பிட்டு நாங்க வரமாட்டோம்ன்னு சொன்னோமா..?”

ரம்யாவுக்கு கோபம் வந்து விட்டது.. முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டவளைச் சமாதானப் படுத்தி சாப்பிட வைத்தார் சொக்கநாதர்..

“இப்புடியே பொட்டப் புள்ளைகளுக்கு செல்லம் கொடுங்க..” அதற்கும் குறை கூறினாள் அம்புஜம்.

“பெத்தது ரெண்டும் பொம்பளப் புள்ளைகன்னா செல்லம் கொடுத்துத்தாண்டி ஆகனும்..”

சொக்கநாதர் மனைவியை சட்டை செய்யாமல் ரம்யாவுக்கு ஊட்டி விட ஆரம்பிக்க.. ரம்யாவின் கோபம் பறந்தோடி விட்டது.. அம்புஜத்தை வெற்றிப் பார்வை பார்த்தபடி அவள் குருவியைப் போல வாயைத் திறந்து சொக்கநாதர் ஊட்டிய உணவுக் கவளத்தை வாங்கிக் கொண்டாள்..

“ஏழு கழுதை வயசாகுது.. இன்னைக்குத்தான் பிறந்ததைப் போல செல்லம் கொஞ்சுது.. அடங்கித் தட்டப் பாத்துச் சாப்பிடுடி..” இளைய மகளை அதட்டினாள் அம்புஜம்..

“சாப்பிடறப்ப அதட்டாத அம்புஜம்..”

சொக்கநாதரின் கண்டிப்பில் அம்புஜம் வாய்க்குள் முணுமுணுத்தபடி ரம்யாவை முறைத்தாள்.. அம்மாவின் கட்டிப் போடப்பட்ட நிலையில் கள்ளூரும் உற்சாகம் கொண்ட ரம்யா.. சொக்கநாதரிடம் செல்லம் கொஞ்சி கதை பேசியபடி சாப்பாட்டை ஒரு கை பார்த்தாள்.. இளைய மகளின் மீதிருந்த கோபத்தை அம்புஜம் பாத்திரங்களின் மீது காட்டியதில் அடுக்களையில் டமார்.. டுமீல் என்று சப்தங்கள் எழும்பின.. அந்தச் சப்தம் ரம்யாவின் உற்சாகத்தை அதிகப்படுத்தியது..

0

Subtotal