Chapter 05

0Shares

அந்த விடிகாலை அழகாக விடிந்திருப்பதைப் போல ஏன் சுரேஷீக்கு தோன்றி வைத்தது என்று அவனுக்குச் சொல்லத் தெரியவில்லை.. எப்போதும் போல விடிந்த அந்தக் காலையில் என்றும் இல்லாத வகையில் மனதோரம் சந்தோச ஊற்றுத் தோன்றியிருந்தது.. எதனால் அந்த ஊற்று உற்பத்தியானது என்று கண்டு பிடிக்க அவனும் ஆன மட்டும் யோசித்துப் பார்த்து விட்டான் ஊற்றின் காரணம் பிடிபடவேயில்லை..

‘ஒருவேளை.. ராசுக்குட்டி மாமாவோட எலிவால் சடை பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருக் கிறதால இருக்குமோ..?’

நினைக்கும் போதே அதிலிருந்த அபத்தம் அவனைப் பார்த்து பல்லைக் காட்டிச் சிரித்தது..

‘எலிவால் சடைக்கு நிச்சயமானா எனக்கென்ன..? ஆகாட்டி எனக்கென்ன..? ராசுக்குட்டி மாமா மட்டுமா தூண்டில கையில வைச்சுக்கிட்டு அலையறாரு..? ஊரில இருக்கிற, அத்தன மாமான்மார்களும் அதத்தான செய்துக்கிட்டு இருக்காக..’

வழக்கம் போல தென்னந்தோப்பிற்குச் செல்ல அவன் மோட்டார் சைக்கிளை எடுத்த போது.. அவன் வரவுக்காகவே வாசலில் கோலம் போடுவதைப் போல காத்திருந்த எதிர்வீட்டு மயிலு.. அவனைக் கண்டதும் தங்கச் சங்கிலியைக் கடித்துக் கொண்டே அவனை ஓரவிழிப் பார்வையாலே பார்த்து வைத்தாள்..

இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று அவன் நேரடியாக முறைத்ததில் அரண்டு போனவளாக பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.. அதைப் பார்த்தபடி வாசலுக்கு வந்த கீர்த்தனா.. 

“அவனவன் சைட் கிடைக்காதான்னு அலையறான்.. நீயும் இருக்கியே.. எவளாவது சைட் அடிக்க வந்தா அவளைத் துரத்தி விடறதிலேயே குறியாய் இருக்க..” என்று சொன்னாள்..

“இவளை சைட் அடிச்சிட்டாலும்.. கழுதையில..” சுரேஷ் தோள்களைக் குலுக்கினான்..

“பின்ன எவளை சைட் அடிக்கப் போற..?”

கீர்த்தனாவின் கேள்விக்கான பதிலைச் சொல்லத் தெரியாமல் உதட்டைக் கடித்தான் சுரேஷ்.. சில சிந்தனைகளுக்கு வார்ததைகளால வடிவம் கொடுத்து விட இயலாது..

“நான் சைட் அடிக்க மாட்டேன்னு யார் சொன்னது..?”

அவன் பேச்சை திசை திருப்ப புரிந்து கொண்ட பாவனையில் தலையை ஆட்டிச் சிரித்தாள் கீர்த்தனா..

“நீ சைவப் பட்ஷின்னு யாரு சொன்னது..? பண்ற அளப்பறை யையெல்லாம் பண்ணிட்டு.. பொண்ணுக கிட்டத்தில நெருங்கி வந்தா எட்டிக்காயப் போல ஏன் முறைக்கிறேன்னுதான கேக்கறேன்..?”

ஏன் முறைக்கிறான்..? சுரேஷ் பெருமூச்சை விட்டான்.. அவன் மனதிலிருந்த எதிர்பார்ப்பை இட்டு நிரப்ப எதிர்வீட்டு மயிலால் முடியுமா..?

“அவ தினமும் உன்னப் பாக்கிறதுக்காகத்தான் கோலம் போடறேன் பேர்வழின்னு வாசலத் தேச்சுக்கிட்டு இருக்கா.. அது உனக்கும் தெரியும்.. அவ கோலம் போடறதைப் போல உன்னப் பாக்க.. அத நீயும் பாக்கன்னு கொஞ்சநாளா சார்ட் பிலிம் ஒன்னு ஓடுச்சே.. அது இன்னைக்கு எங்க போச்சு..?”

“பருந்து வந்து தூக்கிக்கிட்டுப் போயிருச்சு..”

“உனக்கு என்னதான் வேணுண்ணா..?”

அவனுக்கு என்ன வேண்டும்..? ரதியைப் போன்ற அழகியை அவன் தேடவில்லை.. பார்த்தவுடன் மனதில் ‘பச்சக்’ என்று பதியும் ஒரு மாநிறத்து மஞ்சள் முகத்தைத்தான் தேடிக் கொண்டிருக்கிறான்..

கவித்துவமாய் வாழ்ந்து விட வேண்டுமென்று அவன் கனவு காணவில்லை.. மழை நேரப் பொழுதுகளில் மனதுக்குப் பிடித்த பாடல்களை அவன் கேட்கும்போது.. அவளது மனதுக்குப் பிடித்த பாடல்களாக அவற்றை அவளும் கேட்டு ரசித்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றுதான் கனவு காண்கிறான்..

அவன் கனவை அவனுக்காகவே பிறந்து எங்கோ வளர்ந்து கொண்டிருக்கும் அவனுடையவளின் செவிகளில் சேர்க்கச் சொல்லி பெயர் தெரியாத பட்ஷியிடம் அவன் தூது சொன்னான்..

தென்னந்தோப்பின் குயிலோசை அவன் தூதைக் கொண்டு சேர்ப்பதாகக் கூறுவதைப் போல பதிலுக்கு கூவியதில் அவன் இதழோரம் சிறு சிரிப்பு துளிர்த்தது..

வழக்கத்தை விட விரைவாக வீட்டுக்குத் திரும்பி விட்டவனைப் பார்த்து..

“மழை வரப் போகுது..” என்று அதிசயித்தாள் கீர்த்தனா.. 

“மழைத் தண்ணியிலயாவது குளிச்சுட்டு காலேஜீக்கு கிளம்பற வழியப் பாரு..” அவள் தலையில் குட்டு வைத்து விட்டு மாடியேறினான் சுரேஷ்..

அவனுடைய அறையில் நுழைந்தவன் ஜன்னலை அடைத்த போது உள்ளே வந்து பொன்னுரங்கம்..

“எதுக்குடா இந்த ஜன்னலை அடைக்கிற..?” என்று விழித்தாள்..

“நீங்கதானம்மா சொன்னீங்க..”

“என்னத்தைச் சொன்னேன்..?”

“பக்கத்து வீட்டுப் பொண்ணுக்கு மாப்பிள்ள பார்த்துட் டாங்கன்னு..”

“அதுக்கு..?”

“இதுக்கு மேலேயும் நான் இந்த ஜன்னல் வழியா அந்தப் பொண்ண நோட்டம் விட்டா அது நல்லாயிருக்குமா..?”

“எதுடா..?”

“நோட்டம் விடறது..”

“ஏய்ய்.. நீதானடா அந்தப் பொண்ணப் பிடிக்காதுன்னு சொன்ன..?”

“பிடிக்கலைங்கிறதுக்காக நோட்டம் விடாம இருக்க முடியுமா..?”

“நீ இருக்கியே.. உன்னப் புரிஞ்சுக்க என்னால முடியாதுடா சாமி..”

“அதுக்குன்னு ஒருத்தி பிறந்திருப்பா.. நீங்க ஏம்மா அலட்டிக்கறிங்க..?”

“எங்க இருக்கா..?”

“தேடிக்கிட்டு இருக்கேம்மா..”

“அவ எங்க இருந்தாலும் சல்லடை போட்டுத் தேடிப் பிடிச்சு சீக்கிரமா கொண்டு வந்து சேர்த்திருடா சாமி.. உன் ரோதனய தாங்க முடியல..”

“அப்புடி என்னத்த நானு ரோதனை பண்ணிப்புட்டேன்..? எனக்கென்னன்னு இருக்கேன்..”

“யாரு..? நீ..? எனக்கென்னன்னு இருக்கே..? வெளியே சொல்லிப்புடாதே..”

“வெளியில சொன்னா என்னவாம்..?”

“எனக்கு நல்லா வந்திரும் வாயில.. ஏண்டா.. பக்கத்து வீட்டுப் பொண்ண ஊள மூக்கிம்பியே.. அப்புறம் என்ன அலுவலுக்கு அவள நோட்டம் போட்ட..? பாவம் அவங்கப்பா.. உனக்குப் பொண்ணக் கட்டிக் கொடுத்துப்புடனும்னு ஒத்தக்காலில நின்னாரு..”

“அடப்பாவமே..! இன்னொரு காலுக்கு என்னம்மா ஆச்சு..? அடி.. கிடி பட்டிருக்கா..? டாக்டர்கிட்ட காமிச்சாரா..?”

“டேய்.. அடங்குடா.. உன் தொல்ல பெருந்தொல்லையா இருக்கு..”

பொன்னுரங்கம் தலையில் அடித்துக் கொண்டாள்.. இப்படி அடிக்கடித் தலையில் அடித்துக் கொள்ளும் அம்மாவிற்கு தலையை வலிக்காதா என்ற கரிசன நினைவு சுரேஷீக்கு வந்தது.. பொன்னு ரங்கத்திடம் அதைப் பற்றிக் கேட்டால்.. போடா.. நீயும் உன் கரிசனமும் என்று கட்டையைத் தூக்குவாள் என்பதினால் அதை விட்டு விட்டு எதிர் பக்க ஜன்னலைத் திறந்தான்..

“இப்ப என்ன அலுவலுக்கு அந்த ஜன்னலை திறந்து வைக்கிற..?”

பொன்னுரங்கம் சந்தேகத்துடன் கேட்டாள்.. அவளைச் சொல்லியும் குற்றமில்லை.. அவளறிந்த அவளுடைய மகனின் குணாதிசயம் அப்பேற்பட்டது.. ஒரு கட்டுக்குள் அடங்காதது.. ஒரு கணிப்பிற்குள் தெளிவு படுத்திவிட இயலாதது..

அவளது சந்தேகம் பொய்க்கவில்லை.. அவளுடைய அருமைப் புதல்வன் அலட்டிக் கொள்ளாமல் பதிலைச் சொன்னான்..

“என்னம்மா செய்யறது..? பக்கத்து வீட்டுப் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்திட்டாங்க..”

“அதுக்கு நீ சோகத்தைப் புழிஞ்சு வேசத்தக் கட்டாத.. அவ கல்யாணம் கட்டிக்கிட்டுப் போகப் போறதுக்கும்.. நீ எதுத்த வீட்டுப் பக்க ஜன்னலைத் திறந்து வைக்கிறதுக்கும் என்னடா சம்பந்தமிருக்கு..?”

“எனக்கு பொழுது போக வேணாமா..?”

“சொல்றத விளங்கச் சொல்லித் தொலைடா..”

“எதுத்த வீட்டுப் பொண்ண போகஸ் பண்ணலாம்ன்னுதான்..”

“டேய்ய்..”

பொன்னுரங்கம் மகிழ்ந்து போனாள்.. இந்தக் காரியத்துக்கு மகனை நான்கு திட்டு திட்டாமல் மகிழ்ந்து போகும் தாயை விசித்திரமாகப் பார்த்தான் சுரேஷ்..

“இப்ப எதுக்காகம்மா சந்தோசம் கொண்டாடறிங்க..?”

“உனக்கு அந்தப் பொண்ண பிடிச்சிருக்கா..? பேசி முடிச்சிரவா..?”

இதற்குத்தான் இந்த மகிழ்ச்சியா என்று கடுப்பாகிப் போனான் சுரேஷ்.. அன்னைக்கும் மகனுக்குமான அந்த அற்புத உரையாடல் தொடர்ந்தது..

“அடங்கும்மா.. பக்கத்து வீட்டுப் பைங்கிளி.. ஊளமூக்கு சுந்தரின்னா.. எதுத்த வீட்டு குமரி ஒரு வாத்து..! சுத்த தத்தி அது.. அதக் கட்டிக்கிட்டிடு காலம் பூராவும் கருமாயப்படச் சொல்றியா..? அதுக்கு வேற ஆளைப் பாருங்க..”

“அப்ப ஜன்னல மூடு..”

“அவ வருத்தப் படுவாம்மா..”

இந்த வியாக்கினத்தில் இன்னும் குழம்பிப் போனாள் பொன்னுரங்கம்.. 

“நீ பாக்கலைன்னா அவ சந்தோசமில்ல படனும்..?”

“நினைச்சுக்கிட்டே இருங்க.. நாலு பேரு சைட்டடிச்சாத்தான் நாமளும் அழகா இருக்கோம்ன்னு அந்தப் பொண்ணுக்குள்ள ஒரு தன்னம்பிக்கை வரும்.. நாம பாத்தா.. அவ உதார் காட்டிக்கிட்டுப் போனாலும் மனசுக்குள்ள சில்லுன்னு ஒரு பச்சக்கிளி பறப்பதைப் போல ஃபீல் பண்ணுவாம்மா.. அதுக்குத்தான் இது.. இப்பப் பாருங்களேன்.. நான் பாப்பேன்.. அவ பெரிய 

இவ மாதிரி பிலிம் காட்டிக்கிட்டே நான் அவள பாக்கிறேனான்னு பாத்து வைப்பா..”

பொன்னுரங்கத்திற்கு சுரேஷ் பாடம் எடுக்க.. அவள் சுவராஸ்யமாக எதிர் வீட்டு ஜன்னலைப் பார்த்தாள்.. சுரேஷ் சொன்னதுதான் நடந்தது..

“அடேய் மகனே..! எப்புடிடா..?” விழி விரித்தாள்..

“நீங்க இன்னும் உங்க காலத்திலேயே இருந்தா இப்புடித்தான்.. உங்க காலத்தை விட்டு வெளியே வாங்க.. இன்னும் நிறைய இருக்கு..”

“அத நீயே வைச்சுக்க.. சுரேஷ்..!”

“என்னம்மா..?”

“உன் தங்கச்சிக்கும் எதுத்த வீட்டுப் பொண்ணோட வயசுதான்.. அதயும் ஞாபகத்தில வைச்சுக்கடா மகனே..!”

போகிற போக்கில் ஒரு சொல்லம்பை வீசிவிட்டுப் போய் விட்டாள் பொன்னுரங்கம்..

0Shares

Reviews – Mannavan Vandhanadi Thozhi! / மன்னவன் வந்தானடி தோழி!

5.0
5.0 out of 5 stars (based on 1 review)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

Amazing Book! Fun and Enjoyable to read

February 7, 2026

Fun book to read

PVG

Response from MR Novels

Glad that you liked it!

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link