Chapter 07

0Shares

மதுரை மாநகரம், மீனாட்சியின் ஆட்சிக்கு உட்பட்டது.. ஒருபுறம் அன்னை, தந்தையின் நான்மாடக் கூடலும்.. மறுபுறம் அழகு மைந்தன் முருகன் திருக்கல்யாண கோலம் கொண்ட திருப்பரங்குன்ற படைவீடும்.. எதிர்புறம்.. அண்ணன் உறைந்திருக்கும் அழகர் கோவிலும்.. அதன் அருகாமையில் உள்ள பழமுதிர் சோலையுமாக பக்தி மணம் கமழும் நகரம்..!

கோவில் நகரமான அது தூங்கா நகரமும் கூட.. இருபத்தி நான்கு மணி நேரமும் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கும் உயிர்ப்பைக் கொண்ட மாநகரம் மாமதுரை..

அன்று முதல் இன்றுவரை தொன்று தொட்டு வரும் பாரம்பர்யப் பெருமைகளைப் பாதுகாக்கும் அந்நகரில் தெருவுக்கு ஒரு கோவில் உண்டு.. திருவிழாக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.. நகரின் ஏதாவது ஒரு மூலையில் இரவு பகல் என்றில் லாமல் நடமாட்டம் இருந்து கொண்டிருப்பதால் தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரை மாநகரம் தொடர்ந்து வரும் திருவிழாக் களால் ‘விழா நகரம்’ என்ற சிறப்புப் பெயரையும் பெற்றிருக்கிறது..

திவ்யாவுக்கு அவள் பிறந்த மதுரை மண்ணைப் பற்றி மனம் கொள்ளாப் பெருமை உண்டு.. மதுரை மல்லி முதல் ஜிகிர்தண்டா வரை தன்னை வேறுபடுத்தி இனம் காட்டிக் கொள்ளும் மதுரை மாநகரின் அடையாளத்தில் அவள் மெய் சிலிர்ப்பாள்..

சித்திரைத் திருவிழாவாக ஒரு மாதம் முழுவதும் மதுரை மாநகரத்தில் மக்கள் கொண்டாடி மகிழும் மீனாட்சியம்மன் கோவில் திருவிழாவின் ஒவ்வொரு நாளிலும் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்க அவளும் ரம்யாவும் ஓடி விடுவார்கள்..

“ஏண்டி.. உன்ன படிக்க வைச்சு ஒரு கவர்ண்மென்டு உத்தியோகத்தில உக்கார வைச்சுப் புடனும்னு உங்கப்பா கனவு கண்டுக்கிட்டு இருக்காரு.. நீ என்னடான்னா.. சின்னப் புள்ள போல திருவிழா பாத்துக்கிட்டு இருக்க..”

அதற்கும் எதையாவது சொல்லுவாள் அம்புஜம்.. அதைக் கொஞ்சம் கூடக் காதில் போட்டுக் கொள்ள மாட்டாள் திவ்யா..

“ஏம்மா திருவிழாப் பாத்தா குறைச்சு மார்க்கு எடுப்பேன்னு யாரு சொன்னது..? சாமி கொடுக்கிற வரத்தில காலேஜ் பர்ஸ்ட்டா வரலாமில்ல..”

கணக்காக திவ்யா கேட்கும் கேள்விக்கு பதில் கூற அம்புஜத்தால் முடியவே முடியாது.. அதற்குப் பதில் அவள் வேறு பிரச்னைக்குத் தாவி விடுவாள்..

“காலேஜில பர்ஸ்டா வந்து என்ன பண்ண..? வீட்டுல உதவி செய்யற மனசிருக்கனும்.. பட்டப்படிப்பப் படிச்சா வீட்டு வேலையில உதவி செய்யக் கூடாதுன்னு சட்டமிருக்கா..? என்னடா நம்ம அம்மாகாரி காலையில கோழி கூவறதுக்கு முன்னாடியே எழுந்திருச்சு ஜாமக்கோழி கூவற வரைக்கும் சட்டி பானையை உருட்டிக்கிட்டு கிடக்கிறாளே.. அவளுக்கு ஒத்தாசையாய் இருப்போம்ங்கிற எண்ணம் கொஞ்சமாவது உன் மனசில இருக்கா..?”

மூச்சு வாங்க அம்புஜம் முறைப்பாள்.. இதுபோன்ற அம்புஜத்தின் அட்டாக்குகளை இலகுவாக எதிர்கொண்டு சமாளிப்பதில் திவ்யாவுக்கு நிகர் திவ்யாதான்…

“பாருங்கப்பா.. அம்மா.. அடுப்படியில பாத்திரத்த உருட்டச் சொல்றாங்க..” சத்தமில்லாமல் சொக்க நாதரிடம் போட்டுக் கொடுத்து விடுவாள்..

“என்னது..?” மீசையை முறுக்கி விடுவார் சொக்கநாதர்.. 

மற்ற சமயங்களில் எல்லாம் அவர் வீட்டில் மதுரை மீனாட்சியின் ஆட்சிதான் நடைபெறும்.. அவர் பெற்ற பெண்கள் சம்பந்தப்பட்ட விசயம் என்றால் சிதம்பரம் நடராஜரின் ஆட்சி வந்து விடும்.. அவர் பெற்ற பெண்களை இடித்துரைப்பது அம்புஜமாக இருந்தாலும் அவர் கொதித்து எழுந்து விடுவார்..

அவர் பெண்களைப் பெற்று வளர்த்து வைத்திருப்பது படித்து வேலைக்குப் போய் அவருக்குப் பெயர் வாங்கிக் கொடுக்கத்தான்.. அம்புஜத்திற்கு சமைத்துப் போடுவதற்காக இல்லை.. அடுப்பங் கரையில் பெண்களை அடைத்து வைத்திருந்த காலம் மலையேறி விட்டது.. இப்போது புதுயுகம் பிறந்து விட்டது.. இந்தப் புது யுகத்தில் பெண்கள் ராக்கெட் விடப் போய் கொண்டிருக்கிறார்கள்.. அம்புஜம் என்னடாவென்றால் சொக்கநாதர் பெற்றெடுத்த குலக்கொழுந்தை அடுப்படியில் வேலை செய்யச் சொல்கிறாள்.. அவள் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள்..? அவளைத் தட்டிக் கேட்பதற்கு ஆள் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறாளா..? சொக்கநாதர் இருக்கிறார்.. அவர் அம்புஜத்தை ஏனென்று தட்டிக் கேட்பார்..

சொக்கநாதர் கொதிக்கும் கொதிப்பிற்கு அம்புஜம் அளிக்கும் பதிலே தனியானதாக இருக்கும்.. அவள் அடுப்படி வேலைகளை அம்போவென்று விட்டுவிட்டு வெளியே வந்து விடுவாள்..

‘போச்சு.. இன்னைக்கு சாப்பாடு ஹோட்டலிலதான்..’ திவ்யாவும், ரம்யாவும் ஒருவரையொருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொள்வார்கள்.. அந்த அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாத சொக்கநாதர்..

“என்னடி..” என்று புருவங்களை உயர்த்துவார்..

“என்னடின்னா..? என்ன அர்த்தம்..? இத்தன நாளா புத்தி கெட்டுப் போயி உங்களுக்கும் உங்க பொண்ணுகளுக்கும் வடிச்சுக் கொட்டிக்கிட்டு இருந்தேன்.. இப்பத்தான் நீங்க என் அறிவுக் கண்ண திறந்து விட்டுட்டீங்களே..”

“உன் அறிவுக் கண்ண.. நான் திறந்து விட்டேனா..? என்னடி சொல்ற..?”

“ஆமாம் சாமி.. என்னோட அறிவுக் கண்ணத் தொறந்து வைச்சது நீங்கதான் சாமி.. இத்தன நாளா இந்தப்புத்தி எனக்கில்லாம போயிருச்சே சாமி.. பொம்பளைகன்னா ஆம்பள கட்டற தாலிக்கு கழுத்த நீட்டனும்.. அவன் வீட்டக் கவனிச்சுக்கனும்.. புள்ள பெத்துக் கொடுக்கனும்.. அத்தனை பேருக்கும் ஆக்கிப் போடனும்ங்கிற நினைப்பிலயே இருந்துட்டேன்.. இப்பத்தான் என் புத்தி தெளிஞ்சிருக்கு சாமி..”

“அதுக்கு..?”

“உங்களுக்கும்.. உங்க புள்ளைகளுக்கும் பொங்கிப் போட என்னால முடியாது.. நான் போறேன்..”

“எங்கேடி..?”

“ராக்கெட் விடறதுக்கா போக முடியும்..? அத உங்க மகளுக விடுவாளுக.. நானு என் ஆத்தா வீட்டுக்கு நடயக் கட்டறேன்..”

“ஆத்தாடி..”

“உங்களுக்கு உங்க பொண்ணுக உசத்தின்னா.. என்னப் பெத்த என் அப்பாவுக்கு நான்தான் உசத்தி..”

அம்புஜம் போட்ட வெடிகுண்டில் சொக்கநாதர் அலறி விட்டார்..

“வேண்டாண்டி அம்புஜம்.. உன் வீட்டாளுகள பஞ்சாயத்துக்குக் கூப்பிடாதேடி.. அவனுக பேசிப்பேசி என் காதில ரத்தம் கொட்ட வச்சிருவானுகடி..”

“இம்புட்டு நேரமும் நீங்க பேசி நான் கேட்கலை..? உங்க பொண்ணுகளுக்காக நீங்க பேசறப்ப.. எனக்காக எங்க அப்பா பேச மாட்டாரா..?”

“அது பேச்சாடி அம்புஜம்..?”

“நீங்க பேசறது மட்டும் பேச்சா..?”

அம்புஜம் விடாமல் மலையேற.. வேறுவழியின்றி அவளுக்கு வேப்பிலை அடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி விடுவார் சொக்கநாதர்..

முள்ளை முள்ளால் எடுக்கும் வித்தையை கற்று வைத்திருப்பவர் அவர்.. அவருக்கா அம்புஜத்தை மலை இறக்கத் தெரியாது..?

“ஏண்டி எனக்கு மட்டும்தான் என் பொண்ணுக உசத்தியா..? உனக்கு இல்லையா..? நீ பெத்துக் கொடுத்து பேரை வைச்சு வளக்காமத்தான் இதுக ரெண்டும் இம்புட்டு உசரத்துக்கு வளந்து நிக்குதுகளா..?”

இந்தப் பேச்சில் கிளின் போல்டாகி விடுவாள் அம்புஜம்.. தாய்மைப் பெருக்குடன் மகள்களை முறைப்பவளை அதுதான் சாக்கென்று ஆளுக்கொரு தோளில் சாய்ந்து செல்லம் கொஞ்சி சமாதானப் படுத்தி விடுவார்கள் திவ்யாவும், ரம்யாவும்..

அன்பும் கோபமும் பின்னிப் பிணைந்த அற்புத வாழ்க்கை அவர்களுடையது.. கோபமிருக்கும் இடத்தில்தான் குணமிருக்கும் என்பதற்கான மிகச் சிறந்த உதாரணம் அம்புஜம்..!

அந்த அம்புஜம் அன்று அவள் பெற்று வளர்த்திருந்த ரத்தினங்களிடம் கோபப் பட்டுக் கொண்டிருந்தாள்..

“பேசுவீங்கடி.. ஏன் பேச மாட்டிங்க..? என் பக்கத்து கல்யாணம் காட்சின்னா.. உங்க ரெண்டு பேருக்கும் காலேஜிருக்கும்.. கிளாசிருக்கும்.. பரிட்சை இருக்கும்.. எல்லாமும் இருக்கும்.. இதுவே உங்க அப்பா பக்கத்துக் கல்யாணம்ன்னா.. எப்பவும் இருக்கிற காலேஜ் தானேம்பீங்க.. ஒருநா கிளாஸீக்குப் போகலைன்னா உலகம் உருண்டையா இல்லாம போயிருமாம்பீங்க.. பரிட்சையை கட் அடிக்க இது ஒரு சாக்கு.. ஜாலின்னு கும்மாளம் போட்டுக்கிட்டு கிளம்புவீங்க.. அப்புடியே உங்க அத்தைகாரிக வினயம் உங்க மனசில ஊறிப் போய்கிடக்குதுடி.. ம்ஹீம்.. விதை ஒன்னப் போட்டா.. சுரை ஒன்னா முளைக்கும்..? இனம் இனத்தோடதான சேரும்..?”

“ம்மா..”

“இப்ப என்னாத்துக்கு கன்னுக்குட்டியப் போல செல்லம் கொஞ்சி வைக்கிற..? என் அண்ணன் மக கல்யாணத்துக்கு ஒட்டு மொத்தக் குடும்பத்தோட போக முடிஞ்சா இந்தக் குடும்பத்தில நானும் ஒரு ஆளுன்னு குப்பையக் கொட்டறேன்.. இல்லேன்னா.. நான் தனி ஆளுன்னு முடிவு பண்ணிக்கிட்டு என் ஆத்தா வீட்டுக்கே பொட்டியைக் கட்டிடறேன்..”

“‘ஆ’ன்னா.. ‘ஊ’ன்னா.. இதச் சொல்லியே பயமுறுத்துங்க..”

தலையில் கை வைத்தபடியே அக்காவும் தங்கையும் பெட்டிகளைக் கட்டத் தயாரான பின்னர்தான் ஓய்ந்தாள் அம்புஜம்..

அடைமழை விட்டதைப் போல இருக்கிறது என்று நினைத்து கொண்டாள் திவ்யா..

0Shares

Reviews – Mannavan Vandhanadi Thozhi! / மன்னவன் வந்தானடி தோழி!

5.0
5.0 out of 5 stars (based on 1 review)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

Amazing Book! Fun and Enjoyable to read

February 7, 2026

Fun book to read

PVG

Response from MR Novels

Glad that you liked it!

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link