Chapter 08

ஆள்.. அரவமற்ற.. இருள் நிறைந்த சாலையில்.. வெளிச்ச வெள்ளத்தைப் பாய்ச்சியபடி பஸ் ஓடிக் கொண்டிருந்தது.. பஸ் முழுவதுமாக நிறைந்திருந்த உறவு ஜனங்கள்.. ஒருவரோடு ஒருவர் குசலம் விசாரித்து.. கதை பேசி முடித்து.. கண்ணயர்வாக விழி மூடி சீட்டில் சாய்ந்திருந்தனர்..

“ஆஹா.. தூது சொல்ல

ஒரு தோழி இல்லையென

துயர் கொண்டாயோ தலைவி..?

துள்ளும் காற்று வந்து

மெல்ல சேலை தொட

சுகம் கண்டாயோ தலைவி..!”

பழைய பாடல் பஸ்ஸை நிறைத்திருந்தது.. ஜன்னலோர சீட்டில்.. கம்பிகளின் மீது முகம் பதிய சாய்ந்து சரிந்து அமர்ந்திருந்தாள் திவ்யா.. அருகே உட்கார்ந்திருந்த ரம்யா அரைத் தூக்கத்தில் ஆழ்ந்து போயிருக்க.. இவள் மட்டும் கடந்து போன ஊர்களின் வெளிச்சப் புள்ளிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்..

கூட்டத்தின் மத்தியிலும் ஏகாந்தத்தை அளித்த அந்தச் சூழலை அவளுக்குப் பிடித்துப் போயிருந்தது.. ஏனென்று இனம் காண முடியாத ஓர் இன்பப் பரபரப்பு அவள் மனதை ஆக்ரமித்திருந்தது..

இத்தனைக்கும் அது தொலைதூர பயணமல்ல.. மதுரைக்கு அருகாமையில் உள்ள கிராமத்தில் அவளுடைய தாய்மாமன் மகளைத் திருமணம் செய்து கொடுப்பதாக இருந்ததால் அந்தக் கிராமத்திற்கு பயணமாகிக் கொண்டிருந்தார்கள்..

பெண்ணழைக்க மாப்பிள்ளை வீட்டாரின் சார்பாக கார் வந்தது.. பெண்ணுடன் அவளைச் சேர்ந்த உறவினர்கள் கிளம்ப பெண் வீட்டாரின் சார்பாக பஸ் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது..

அம்புஜத்தின் கோபத்திற்கு அஞ்சிக் கிளம்பிய திவ்யாவின் மனதில் திடிரென்று புகுந்து கொண்ட உல்லாச ஊர்வலத்தில் அவள் திகைத்தாள்.. இந்தக் கல்யாணக் கூட்டத்தில் அவளுக்கான ஏதோ ஒன்று காத்திருப்பதைப் போல அவள் மனது படபடவென்று அடித்துக் கொண்டது..

“சித்திரைப் பூவிழி வாசலிலே வந்து

யார் நின்றவரோ..?

இந்தக் கட்டிக் கரும்பினைத் தொட்டு சுவைத்திட..

யார் வந்தவரோ..?”

லயம் கலந்த பாடலின் சுவையில் அவள் மனம் மயங்கியது.. தூரத்தில் தெரிந்த விளக்குகளின் ஒளி வெள்ளமும்.. வானத்தில் சிதறிய வாண வேடிக்கைகளின் வர்ண ஜாலமும்..

“கல்யாணச் சாப்பாடு போடவா..?

தம்பி கூட வா..

இந்த ஊருக்கெல்லாம் பாக்கு வைச்சு

மேளம் கொட்டவா..?”

என்ற ஒலிப் பெருக்கியின் எட்டு ஊருக்கும் கேட்கும் சப்தமான பாடலும் திருமண வீட்டை நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்த்தியதில் பஸ்ஸே விழித்துக் கொண்டு சலசலக்க ஆரம்பித்தது..

“ஏண்டி அகிலாண்டம்..”

“என்னாக்கா..?”

“ஊரைப் பாத்தா பெரிசாத்தான் இருக்கும் போல இருக்கு..”

“ஆமாக்கா..”

“சொர்ணா..”

“அம்மா..”

“இந்தா இருக்கிற மதுரையில இருந்து வாரதுக்குள்ள இப்புடியா தலையக் கலைச்சு.. தாவணியக் கசக்கிக்கிட்டு தூங்கிக் கிட்டு வருவ..? சீப்ப எடுத்துத் தலயச் சீவி.. தாவணிய சரி பண்ணுடி.. தூங்கு மூஞ்சியா இல்லாம சிரிச்ச முகமா இரு..”

“ஏம்மா..?”

“சொன்னதைச் செய்யி..”

“அதுவா சொர்ணம்.. வயசுக்கு வந்த பொண்ணு.. கல்யாணக் கூட்டத்தில முறை மாப்பிள்ளைக இருப்பாங்க.. அவுக கண்ணில படறப்ப பளிச்சுன்னு இருக்கணுமுன்னுதான் உன் அம்மா தலயச் சீவி சிரிச்ச முகமா இருன்னு சொல்றாக.. இல்லையா சின்னம்மா..?”

“விளக்கம் சொல்லுடின்னு உன்கிட்ட வந்து நான் கேட்டேனா..?”

“இல்ல சின்னம்மா.. சொர்ணா பாவம்.. உங்க அளவுக்கு அதுக்கு விவரம் பத்தாதில்ல..?”

“ஏ புள்ள மருக்கொழுந்து..”

“என்னாத்தா..?”

“ஒன் கழுத்தில கிடக்கிற கல் அட்டிகை திருப்பிக் கிடக்குது பாரு.. அதச் சரியாப் போட்டுக்க தாயி..”

“ஆமாமாம்.. இல்லேன்னா.. மாப்பிள்ளை வீட்டாளுக.. நம்ம பக்கத்து ஆளுகள ஏப்பை, சாப்பைன்னுல்ல நினைச்சுப்புடுவாங்க..?”

கல்யாண வீட்டுக்கு உரித்தான சம்பாஷனைகள் அங்கே ஆரம்பமாகின.. ரம்யா விழித்துக் கொண்டு கண்களைக் கசக்கியபடி நிமிர்ந்து அமர்ந்தாள்..

“ஊர் வந்திருச்சா..?”

“கல்யாண வீடே வந்திருச்சு.. அங்கே பாரு…”

சீரியல் விளக்குகளால் ஜொலித்த கல்யாண வீட்டைச் சுட்டிக் காட்டினாள் திவ்யா.. தெருவை அடைத்துப் போடப் பட்டிருந்த பந்தலில் வரிசை கட்டி நாற்காலிகள் போடப் பட்டிருந்தன..

அந்த இரவுப் பொழுதிலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த கல்யாண வீட்டின் உயிர்ப்பில் மனதிற்குள் ஓர் புத்துணர்வு பரவுவதை உணர்ந்தாள் திவ்யா..

“சுத்த போர் திவ்யா..” ரம்யா முணுமுணுத்தாள்..

“எனக்கொன்னும் அப்படித் தோணலையே.. கொஞ்சம் இண்ட்ரெஸ்டிங்காத்தான் இருக்கு..” என்ற திவ்யாவை விசித்திர மாகப் பார்த்த ரம்யா.. அவள் முதுகில் ஒரு மொத்து மொத்தி..

“அடிப்பாவி..! என்னோட அக்காதானா நீ..?” என்று சடைத்துக் கொண்டாள்..

அவரவரின் பைகளைத் தேடிப் பிடித்து கைகளிலும்… தோள்களிலும் மாட்டிக் கொண்ட உறவினர் கூட்டம் பஸ்ஸை விட்டுக் கீழே இறங்க ஆரம்பித்தது..

“என்னமோ பெரிசா எங்கண்ணன் பாசமலர் கண்ணன்னு பெரும பீத்திக்கிட்ட..? அந்த அண்ணன்காரன் நாம வந்து போறதுக்கு தனிக்கார ஏற்பாடு பண்ணிக் கொடுக்காம.. கூட்டத்தோட கூட்டமா பஸ்ஸில வந்து போக வைக்கிறான் பாரு..” சொக்கநாதர் அம்புஜத்தை சீண்டி விட்டார்..

“ஏன்..? எங்க அண்ணன் ஏற்பாடு பண்ற காரை நீங்க ஏற்பாடு பண்ண முடியாதா..? உங்க அண்ணன் மகன் கல்யாணத்துக்கு அப்புடித்தானே தனிக்காரை வாடகைக்கு கூப்பிட்டு பகுமானமா குடும்பத்தோட போயி இறங்கினீங்க..? அந்தக் கார் வாடகையை யாரு கொடுத்தது..? உங்க அண்ணனா..? நீங்கதான கொடுத்தீக..? அதப் போல எங்க அண்ணன் வீட்டுக் கல்யாணத்துக்கும் பகுமானமா தனிக்கார வாடகைக்குப் பிடிச்சிருக்கலாமில்ல..? உங்க அண்ணன் மகன் கல்யாணத்துக்குப் போக மட்டும் நீங்க வாடகை கொடுப்பீக.. என் அண்ணன் மக கல்யாணத்துக்கு மட்டும் என் அண்ணன் வாடகையை கொடுக்கனுமா..?”

சத்தமின்றி சண்டை போடுவதில் சொக்கநாதரை விட திறமை மிக்கவள் அம்புஜம்.. அவள் பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டதில்.

“விடுடி.. விடுடி..” சொக்கநாதர் ஜகா வாங்கினார்..

“வீட்டுக்கு வாங்க.. பேசிக்கறேன்..”

எச்சரிக்கை விடுத்து விட்டு பஸ்ஸைவிட்டு இறங்கினாள் அம்புஜம்.. தற்காலிகமாக தப்பித்து விட்ட நிம்மதியுடன் அவளைப் பின் தொடர்ந்தார் சொக்கநாதர்..

“இறங்குடி ரம்யா..”

“இறங்கனுமா..?”

ரம்யா தூக்கக் கலக்கத்துடன் கொட்டாவி விட்டாள்..

“இங்கேயே படுத்துறலாம்டி திவ்யா.. சீட்டெல்லாம் குசன் வைச்சு.. எம்புட்டு வசதியா இருக்கு.. பாரு.. கல்யாண வீட்டுல ஜமுக்காளத்த விரிச்சு வரிசையாத் தலையணைகளைப் போட்டுப் படுக்கனும்.. கஷ்டம்டி..”

ரம்யா சீட்டில் சரியப் போக.. திவ்யா அவள் தலையில் ஒர் போடு போட்டு உலுக்கி எழுப்பி நிறுத்தினாள்..

“அடச்சீ.. இறங்கு.. பஸ்ஸே காலியாகப் போகுது..”

“ஹைய்யா.. அப்பப் பேச்சுச் சத்தமில்லாம நிம்மதியாத் தூங்கலாம்ன்னு சொல்லு..”

“மண்டையிலேயே போட்டிருவேன்..”

“அதான்.. ஏற்கனெவே போட்டாச்சே..”

“இப்பப் பேசாம பஸ்ஸை விட்டு இறங்கறியா..? இல்ல.. அம்மாவக் கூப்பிட்டு உங்க அண்ணன் மக கல்யாணத்துக்கு வர ரம்யாவுக்கு இஷ்டமில்லையாம்.. ரொம்பக் கஷ்டம்ன்னு சொல்றாம்மான்னு வத்திக்குச்சியக் கொளுத்திப் போடவா..?”

“அடிப்பாவி..! உனக்கு நான் என்னடி கெடுதல் பண்ணினேன்..?”

“அதெல்லாம் அப்புறமா பஞ்சாயத்துப் பண்ணி ஒரு முடிவுக்கு வரலாம்.. இப்ப என்ன முடிவு பண்ணியிருக்க.. இறங்கறியா.. இல்லையா..?”

“அம்மாவ நீ இழுத்த பின்னாலும் இறங்காம இருப்பேனா..?”

“அஃது..! இறங்கு.. இறங்கு..”

தங்கையை முன்னால் தள்ளி.. பின்னால் இறங்கிய திவ்யாவிடம்..

“வாங்க.. வாங்க..” என்று கை கூப்பினான் அவன்..

“எவன்.. இவன்..?” ரம்யா திவ்யாவிடம் காதோரமாக முணுமுணுத்தாள்..

“தெரியலைடி.. பொண்ணு வீட்டுக்காரனா இருக்கும்..” திவ்யாவும் பதிலுக்கு முணுமுணுத்தாள்..

“பொண்ணு வீட்டுக்காரன் என்னத்துக்குடி மத்த பெரிய மனுசங்கள விட்டுப்புட்டு உனக்கும்.. எனக்கும் வரவேற்புக் கொடுக்கிறான்..? நாம என்ன அம்புட்டுப் பெரிய அப்பா டக்கரா..?”

ரம்யாவின் கேள்வியில் இருந்த உண்மையில் திவ்யா அவனை முறைத்தாள்.. அவளது முறைப்பை லட்சியம் செய்யாத அலட்சியப் புன்முறுவல் ஒன்று அவன் உதடுகளில் ஒட்டியிருந்தது..

அறிமுகமற்ற பார்வை பார்த்த திவ்யாவை அறிமுகமான வனைப் போல அவன் பார்த்து வைத்தான்..

0

Subtotal