Chapter 11
சொந்தப் பகையை விட.. வந்த வேலையை முதன்மையில் வைத்து முடித்து விட்டுச் செல்வதே உசிதமானது என்று சுரேஷிற்குத் தோன்றிவிட்டது..
அவன் திவ்யாவை சுட்டிக் காட்டி..
“அந்தப் பொண்ணப் பாத்தா என்னோட சின்னம்மா மகளப் போலவே இருக்கில்ல..” என்று கேட்டு வைத்தான்..
“யாரைச் சொல்றீங்க..?”
திரும்பிப் பார்த்த கல்யாண மாப்பிள்ளை விகல்பமில்லாமல் சிரித்தபடி..
“அது உங்க சின்னம்மா மக இல்ல மச்சான்.. என்னோட சின்னம்மா மக..” என்றான்..
‘என்னாங்கடா இது.. எனக்குத் தெரியாத அத்தை மகளா..?’ குழம்பிப் போனாலும்.. அவன் மனம் கவர்ந்த மங்கை அவனுக்கு தங்கை முறையாகி விடவில்லை என்பதில் உற்சாகமானான் சுரேஷ்.
“அப்ப அது உங்க தங்கச்சிங்கறிங்க..?”
“ஆமாம் மச்சான் ஆமாம்.. நான் கட்டிக்கப் போற பொண்ணுக்கு இது சொந்த அத்தை பொண்ணாம்.. ஒன்னைக் கவனிச்சிங்களா..?”
‘உன்னைத் தவிர வேற எந்த ஒன்னையும் நான் கவனிப்பேண்டா என் அத்தையின் மகனே..!’
“நீங்க எனக்கு மாமா மகன்னா.. இந்தப் பொண்ணுக்கு நான் கட்டிக்கப் போற பொண்ணு மாமா மக..”
மகாப் பெரிய கண்டுபிடிப்பைச் சொல்லி விட்டதைப் போல மகிழ்ந்து போனான் கல்யாண மாப்பிள்ளை..
என்னத்தையோ சொல்லித் தொலை.. அதைக் கேட்க வேண்டுமென்ற தலைவிதி எனக்கில்லை என்று திவ்யாவைப் பார்வையிலே ஓரம் கட்டிக் கொண்டிருந்தான் சுரேஷ்..
“இப்பத்தான் என் மனசுக்கு நிம்மதியாச்சு..”
“ஓஹோ..”
“இனி என் தங்கச்சிய நீங்க கைவிட மாட்டிங்க..”
உணர்ச்சிப் பெருக்குடன் சுரேஷின் கையை கல்யாண மாப்பிள்ளை பற்றிக் கொள்ள..
‘டேய்.. எனக்கும் உன் தங்கச்சிக்கும் இடையில என்னடா இருக்கு..? என்ன அலுவலுக்கு இந்த டயலாக்கை அள்ளி விடற..’ என்று உஷ்ணமான சுரேஷ் திவ்யாவைப் பார்த்தபடி..
“அதுக்கென்னப்பா.. உன் தங்கச்சியக் கட்டிக்க எனக்கு மட்டும் கசக்குமா என்ன..?” என்று ‘பிட்’ டைப் போட்டு வைத்தான்..
சுரேஷின் அத்தையின் மகனைக் கல்யாணம் செய்து கொள்ளும் விதி வாய்க்கப் பெற்ற கல்யாணப் பெண்ணிற்கு திவ்யா அத்தையின் மகளென்றால்.. சுரேஷின் அத்தையின் மகனுக்கு.. திவ்யா தங்கை முறைதானே..?
அந்தத் தங்கையைத் திருமணம் செய்து கொள்ள சுரேஷிற்கு கசக்கப் போகிறதா என்ன..?
அது புரியாத அத்தையின் மகன் மயக்கம் போடாத குறையாக ஆனந்தத் திகைப்பில் ஆழ்ந்து விட்டான்.
“இது உங்க வீட்டுக் கல்யாணம் மச்சான்..”
“நீங்க சொல்லனுமா மாப்பிள்ள..?”
“உங்க தலைமையிலதான் என் கல்யாணம் நடக்கணும்..”
“நடத்திட்டாப் போச்சு..”
சுரேஷின் பெருந்தன்மையில் மகிழ்ந்து போன கல்யாண மாப்பிள்ளை விவரத்தைப் பெற்றவர்களிடம் சொல்லப் பறந்தோடி விட.. சுரேஷ்.. பெண் வீட்டார் இருக்கும் பகுதியில் சுற்றி வர ஆரம்பித்தான்.. திவ்யா செல்லும் இடமெல்லாம் நிழல் போல அவன் விழிகள் அவளைத் தொடர்ந்ததில் அவள் முறைக்க ஆரம்பித்தாள்.. மன்மதன் என்று அறிமுகப் படுத்திக் கொண்டவனின் ரதியானவள் அவனை அடையாளம் கண்டு கொள்ளாமல் முகம் திருப்பிக் கொண்டாள்.. சுரேஷ் விடாக் கண்டனாக அவளைப் பின் தொடர்ந்தான்.. அவள் தங்கையுடன் காற்றாட வாசலுக்கு வந்த போது.. ரம்யாவின் வயிற்றுக்கு டிபனை ஈந்து மச்சினிச்சியுடன் பேச ஆரம்பித்து விட்டான்.. அப்படியும் அந்தப் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வேனா என்று அடம் பிடித்த திவ்யாவுக்கு..
‘நின்னையே ரதியென்று..
நினைக்கிறேனடி கண்ணம்மா..’
என்ற பாடலைப் போட்டுத் தன்னை உணர்த்தி விட்டான்..
‘ஆஹா.. இவரு பெரிய மன்மதன்..! என்னை ரதின்னு நினைச்சுப்புட்டாரு.. அதில நான் மகிழ்ந்து போகனுமாக்கும்..’
திவ்யா உதட்டைச் சுழித்து அலட்சியமாக வீசிய பார்வை வீச்சில் தனக்கான சவால் இருப்பதை உணர்ந்தான் சுரேஷ்..
அவனுக்கு அந்த சவாலை பிடித்திருந்தது..
மனதுக்குப் பிடித்திருக்கும் பெண்ணின் மனதிற்குப் பிடித்தமானவனாக மாறிக் காட்டுவதைவிட சிறந்த சவால் வேறேதும் இந்தப் புவியில் இல்லை என்று பாடத் தோன்றியது அவனுக்கு..
அவள் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து அவனைப் பார்க்கத் தோதாக அவன் சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து விட்டான்.. போடா என்று அவள் முகம் திருப்பிக் கொண்டதில் உலகம் முழுதும் இனிப்பானதாக அவனுக்குத் தோன்றித் தொலைத்ததுதான் விந்தை..
“பழனி..” பாடலை ஒலிக்க விட்டுக் கொண்டிருந்தவனைக் கூப்பிட்டான்..
“என்னண்ணே..” உடனே அவன் ஓடிவந்து நின்றதில் திவ்யாவுக்கு ஆச்சரியமாக இருந்தது..
அவளும் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.. என்னவோ அகில உலகத்தையும் ஆளும் சக்கரவர்த்தியைப் போல வெகு தோரணையாய் அவன் கால்மேல் கால் போட்டுக் கொண்டு படு தெனாவெட்டாக சாய்ந்து உட்கார்ந்து விரல் சொடுக்குகிறான்.. அவன் கூப்பிட்ட குரலுக்கு யாராக இருந்தாலும் அவன் பக்கத்தில் ஓடி வந்து நின்று ஏன் என்று கேட்கிறார்கள்..
“யாருடி இவன்..?”
ரம்யாவிடம் அவள் கேட்ட கேள்விக்கு அவர்களைக் கடந்து போன சின்னாத்தாக் கிழவி..
“எங்க சுரேஷையா யாருன்னு கேக்கிற..? எங்க ஊரிலயே பெரிய படிப்புப் படிச்சுப்புட்டு கலெக்டரு ஆபிசில கவர்ண்ட்மெண்டு உத்தியோகம் பாக்கிற புள்ளம்மா அது.. அதத் தெரியாம கூறுகெட்டத்தனமா கேள்வி கேக்கறயே.. கேணத்தனமால்ல இருக்கு..” என்று நொடித்து விட்டுப் போனாள்..
திவ்யாவும், ரம்யாவும் திகைத்துப் போய் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்..
“என்னடி இது..?”
“சாரு கலெக்டர் ஆபிசில உத்தியோகம் பாக்கிறாராம்..”
“ஆளப் பாரேன்.. பெரிய கலெக்டரப் போல பிலிம் காட்டறத..”
“அவன் உன்னப் பாத்து மட்டும் தாண்டி பிலிம் காட்டறான்..”
ரம்யா சொன்னதும் திவ்யாவுக்கு பகீரென்று ஆகிவிட்டது.. அவளுக்கு மட்டும் தெரிந்த அந்தரங்கத்தை தங்கை உணர்ந்து கொண்டதில் அவளுக்கு உடன்பாடில்லை..
“சேச்சே.. அப்படியெல்லாம் இருக்காது..” உடனடியாக மறுத்தாள்..
நம்பாத பார்வை பார்த்தாள் ரம்யா.. திவ்யாவின் மறுப்பை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் சுரேஷை பார்த்தவள்..
“ஆனா ஒன்னு.. உன் ஆளு பாக்க மன்மதனைப் போலத்தான் இருக்கிறாண்டி திவ்யா..” என்று சொல்லி வைத்தாள்..
“அடிப்பாவி..! இவன் என் ஆனா..? முடிவே பண்ணிட்டியா..?” கொதிகலன் ஆனாள் திவ்யா..
“அவன் முடிவு பண்ணிட்டான் போல இருக்கே..” அமர்த்தலாகச் சொன்னாள் ரம்யா..
சுரேஷ் அதை மெய்ப்பிக்கும் விதமாக திவ்யாவைப் பார்வையால் தின்றபடி பாட்டுப் போடும் பழனியிடம் தீவிரமாக எதையோ சொல்லிக் கொண்டிருந்தான்..
“உன்னைக் கட்டி இழுக்கிற பாட்டைப் போடச் சொல்றான் போல இருக்கு..” என்றாள் ரம்யா..
“நீ கண்ட..”
“உன் ஆள கண்டுட்டுத்தான் பேசறேன்..”
“இன்னொருதரம் என் ஆளுன்னு அவனைக் கை காட்டின.. உன் கையை உடைப்பேன்..”
“இத உன் ஆளுகிட்டப் போயிச் சொல்லு.. முடிவு பண்ணினது அவன்தான்.. ஆளப் பாத்தா முடிவில இருந்து பின்வாங்க மாட்டான் போல தோணுதுடி திவ்யா..”
“பல்ல உடைப்பேன்.. அவன் முடிவு பண்ணினாப் போதுமா..? நான் முடிவு பண்ண வேணாமா..?”
“அவன் முடிவு பண்ண வைச்சிட்டா..?”
“பேத்தல்.. அவன் யாரோ எவரோ..”
“இல்லைடி.. இவன் இந்த ஊருக்காரன்.. பேரு சுரேஷீ.. மதுரையில கவர்ண்மென்டு உத்தியோகம் பாக்கிறான்.. இந்த அரசம்பட்டிக் கிராமத்திலேயே பெத்த படிப்பு படிச்சவனா இருக்கான்.. இவனப் போயி யாரோ.. எவரோங்கறியே.. இன்னும் சொல்லப் போனா நம்ம சொந்தக்காரனா வேற ஆகிட்டான்..”
“சொந்தக்காரனா..? நமக்கா..?”
“பின்னே.. வேற யாருக்கோவா இவன் சொந்தக்காரன்..? நமக்குத்தாண்டி..”
“நேத்து வரைக்கும் இல்லாத சொந்தம் இப்ப எங்கிருந்து ரெக்கை முளைச்சு பறந்து வந்துச்சாம்..?”
திவ்யா சொல்லி வாய் மூடும் முன்னால்..
“நேற்று இல்லாத மாற்றம்..
என்னது..?
காற்று என் காதில்..
சொன்னது..?
இதுதான் காதல் என்பதா..?”
என்று ஒலிபெருக்கி பாடி வைத்தது..
“துள்..!”
ரம்யா கண்சிமிட்டிச் சிரித்தாள்..
Reviews – Mannavan Vandhanadi Thozhi! / மன்னவன் வந்தானடி தோழி!
Write a Review
What others Say about this book!
Amazing Book! Fun and Enjoyable to read
Fun book to read
Response from MR Novels
Glad that you liked it!