Chapter 14

பெண் வீட்டார் தங்கியிருந்த வீட்டின் மாடியில் வரிசையாக ஜமுக்காளங்கள் விரிக்கப்பட்டு தலையணைகள் போடப் பட்டிருந்தன.. அவற்றில் வரிசை கட்டிப் படுத்து உறங்கிய பெண் வீட்டைச் சேர்ந்த பெண்களின் மத்தியில் படுத்திருந்த திவ்யா.. உறங்க முடியாமல் எழுந்து மாடியின் பால்கனிக் கைப்பிடிச் சுவரில் சாய்ந்து கீழே பார்த்தாள்..

அந்த வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி இருந்த கல்யாண வீட்டின் முன்புறக் கொட்டகையில் வரிசை கட்டியிருந்த நாற்காலிகளில் கல்யாணத்துக்கு வந்திருந்த ஆண்மக்கள் உட்கார்ந்து நடுநாயகமாக ஒரு மேஜையைப் போட்டு சீட்டுக் கச்சேரியை நடத்திக் கொண்டிருந்தார்கள்..

‘ஆம்பளைங்க…’

உதட்டைப் பிதுக்கிய வண்ணம் திரும்ப முயன்ற திவ்யா திகைத்து நின்றாள்.. அங்கே.. சீட்டுக் கச்சேரி மக்களுடன் ஐக்கியமாகாமல் தனித்து நாற்காலியைப் போட்டு அதில் சரிந்து அரை மயக்கம் போல இமைகளை அரை குறையாக மூடியபடி பாட்டில் லயித்திருந்தான் சுரேஷ்..

திவ்யாவுக்கு அது ஆச்சரியத்தைத் தரவில்லை.. அவன் கேட்டுக் கொண்டிருந்த பாடல்தான் ஆச்சரியத்தைத் தந்தது..

“எவனோ ஒருவன் வாசிக்கிறான்..

இருட்டிலிருந்து நானும் யாசிக்கிறேன்..

தவம்போல் இருந்து யோசிக்கிறேன்..

அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்..”

இவனா மன்மதனின் மலரம்புகளை கண்களில் ஏந்தி அவளைக் கலாய்த்தவன் என்று அதிசய மடைந்தாள் திவ்யா.. 

மாலை முதல் அவள் கண்ட சுரேஷ் வேறு.. இந்தப் பாடலில் மனம் கரைய கண்களை மூடியும் மூடாமலும் அதில் மூழ்கியிருக்கும் இந்த சுரேஷ் வேறு என்று அவளுக்குத் தோன்றியது..

“கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்..

கேட்பதை எவனோ அறியவில்லை

காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே..

அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை..”

அந்தப் பாடலின் ஆழத்தில் அவளும் புதைந்தாள்.. அந்த இரவு நேரத்தின் நிசப்தமும்.. கிராமத்தின் இருளும்.. பகலின் வெயில் இல்லாத இரவு நேரத்தின் குளுமையான காற்றும்.. எதையோ உணர்த்திய அந்தப் பாடலின் ஆழமும் எங்கோ ஒரு சிந்தா நதிச் சுழலுக்குள் அவளை இழுத்துக் கொண்டு போவதைப் போல அவள் உணர்ந்தாள்..

“புல்லாங்குழலே..! பூங்குழலே..!

நீயும் நானும் ஒரு ஜாதி..

உள்ளே உறங்கும் ஏக்கத்திலே..

உனக்கும் எனக்கும் சரிபாதி..”

மனதுக்குள் இறங்கிய பாடலின் வரிகளில் இதுபோன்ற பாடல்களையும் இவன் ரசித்துக் கேட்பானா என்ற ஆச்சரியம் மிகுந்தது திவ்யாவுக்கு.. அந்தப் பாடலை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்ததிற்கு மனதிற்குள் அவனுக்கு நன்றி சொன்னாள் அவள்.

“கண்களை வருடும் தேனிசையில்..

என் காலம் கவலை மறந்திருப்பேன்..

இன்னிசை மட்டும் இல்லையென்றால்..

நான் என்றோ.. என்றோ..  இறந்திருப்பேன்..”

திவ்யாவின் மனம் அதிர்ந்தது.. உணர்ந்து விழுந்த வார்த்தைகளில் அவளது உயிர் உருகியதில் கண்ணீர் பெருக்கெடுக்க அவள் சிலையாக நின்றாள்.. அந்தப் பாடலை அவளுக்கு உணர்த்திய அந்த இரவுப் பொழுதை என்றுமே அவளால் மறக்க முடியாது என்று அவளுக்குத் தோன்றிப்போனது..

“உறக்கம் இல்லை முன்னிரவில்..

என் உள்மனதில் ஓர் மாறுதலா..?

இரக்கம் இல்லை இரவுகளில்..

இது எவனோ அனுப்பும் மாறுதலா..?”

சுரேஷின் கலைந்த முடி அவனது நெற்றியில் முரட்டுத்தனமாகப் படிந்திருந்ததில் ஓர் வசீகரத்தை உணர்ந்தாள் திவ்யா.. அவன் மீதான ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது அந்த நொடியில்தான்..

“எந்தன் சோகம் தீர்வதற்கு..

இதுபோல் மருந்து பிரிதில்லையே..

அந்தக் குழலைப் போல் அழுவதற்கு

அத்தனை கண்கள் எனக்கில்லையே..”

மனம் தாளாத துயரத்தை அவள் மனதில் விதைத்த பாடல் வரிகளில் கலந்து உயிர் கொண்ட திவ்யாவுக்கு.. தன்னை மன்மதன் என்று சொல்லிக் கொண்ட மாயக்காரனின் மீது மயக்கம் போன்ற ஏதோ ஒன்று வந்து தொலைத்தது..

“ஏம்ப்பா.. ஏய்ய்.. எவன்ப்பா இந்தப் பாட்டப் போட்டது..”

சீட்டுக் கச்சேரியில் ஐக்கியமாகியிருந்தவர்களில் ஒருவன் அதட்டினான்..

“ஏண்ணே..?” என்றான் பழனி..

“ஏம்ப்பா.. கல்யாண வீட்டில போடற பாட்டாப்பா இது..? பாட்ட மாத்துப்பா..”

பழனி மாற்றுவதற்குள் தானாக அந்தப் பாட்டு..

“எவனோ ஒருவன் வாசிக்கிறான்..” என்று முடிந்து விட்டது..

ஏதோ ஒரு மாய உலகில் பயணித்து விட்டுத் திரும்பியவனைப் போல இமை திறந்த சுரேஷின் பார்வை அவனைப் பார்த்தபடி பால்கனியில் கோட்டோவியம் போல நின்று கொண்டிருந்த திவ்யாவின் மீது படிந்தது..

அவன் எழுந்து உட்கார்ந்தான்.. அவள் நிற்பதை அவன் பார்த்து விட்டதை அவள் உணர்ந்து கொண்டாள்.. அவன் பார்வையும் அவள் பார்வையும் கலந்தன.. வாழ்நாள் முழுவதும் பேசக்கூடிய பேச்சுக்கள் அனைத்தையும் கணப்பொழுதின் அந்தப் பார்வைகள் சொல்லி முடித்துவிட்டதை அவர்கள் இருவருமே உணர்ந்தார்கள்..

திவ்யாவின் உடல் சிலிர்த்தது.. ரம்யா புரண்டு படுத்து பக்கத்தில் அவள் இல்லாததை உணர்ந்து..

“திவ்யா..” என்று கூப்பிட்டதில் அவள் பால்கனியை விட்டு விலகி நடந்தாள்..

மறுநாள் காலையில் கல்யாண வீட்டில் சுரேஷை அவள் பார்த்தபோது அவன் யாரோ ஒருவரை ‘லந்து’ பண்ணி சிரித்துக் கொண்டிருந்தான்.. குறுகுறுப்பும்.. குறும்பும் நிறைந்த அந்த முகத்தில்.. முதல் நாள் இரவில் அவள் கண்ட ஆழ் மயக்க, ஆழமான உணர்வுகள் நிறைந்த முகத்தை அவளது விழிகள் தேடின.. அந்தத் தேடுதலில் அவன் கண்களில் மின்னல் வந்தது.. எவரும் அறியாமல் அவன் புருவங்களை உயர்த்தி இறக்கியதில் அவளது உடலில் மின்சாரம் பாய்ந்ததைப் போன்ற ‘ஜிவ்..’ என்ற ஓர் உணர்வு ஏற்பட்டுத் தொலைத்தது..

அவளுக்கும்.. அவனுக்குமான ரகசியப் பார்வைப் பரிமாற்றங்களைக் கவனித்துக் கொண்டிருந்த ரம்யா..

“நடத்து.. நடத்து..” என்றாள்..

“அடச்சீ.. ஒன்னுமே இல்ல..” கன்னம் சிவக்க மறுத்தாள் திவ்யா..

“எது இல்லேங்கிற..? காதலா..? நேத்து நட்ட நடு ராத்திரியில.. பால்கனியில நின்னுக்கிட்டு அவன நீ பார்க்க.. அவன் உன்னப் பார்க்கன்னு ரெண்டு பேரும் ஆலவட்டம் போட்டத நான் பாக்கலைன்னு நினைக்கறியா..?”

“ஏய்ய்.. இது காதலா இல்லையான்னு எனக்கே குழப்ப மாயிருக்குடி..”

“அப்புறம் ஏன் அப்படிப் பார்த்த..?”

“அவனோட நேச்சர் என்னன்னு பிடிபடலைடி.. அந்த ஆச்சரியத்தில பாத்தேன்.. இப்படி அடாவடி பண்றவன்.. நேத்து ராத்திரி கேட்ட பாட்டு இருக்கே.. அப்பப்பா.. என்னையே ஒருவழி பண்ணிருச்சுடி அந்தப் பாட்டு..”

ரம்யா சுரேஷை கூர்ந்து பார்த்தாள்.. யாரிடமோ சட்டையின் முழங்கைப் பகுதியை மடக்கி விட்டு குஸ்திக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் சுரேஷ்.

“செம தெனாவெட்டுடி இவனுக்கு..” என்றாள்..

“ம்ம்ம்..” திவ்யா ஆமோதித்தாள்..

“சைட் அடிச்சதும்தான் அடிச்ச.. தம்பி இருக்கிறவனாப் பார்த்து சைட் அடிக்கக் கூடாதா..? தங்கச்சி இருக்கிறவனாப் பாத்து சைட் அடிச்சு வைச்சிருக்கயே.. உனக்கு ரொம்பத்தான் சுயநலம்டி..”

திவ்யா ரம்யாவை மொத்தும் போது சுரேஷ் அந்தப் பக்கம் வர..

“எல்லாம் உங்களால்தான்..” என்றாள் ரம்யா..

“ஏய்ய்..”

திவ்யாவின் சிவந்த கன்னம் சொல்லிய சேதியில் சுரேஷின் கண்களில் மின்னல் வந்தது.. அவன் அவளைத் தின்று விடுவதைப் போலப் பார்த்தபடி பழனியிடம் போனான்.. பாட்டு வரப் போகுது என்றாள் ரம்யா.. பாட்டும் வந்தது..

“தூரக்கிழக்கு கரை ஓரம்தான்..

தாழப் பறந்து வரும் மேகம்தான்..

உன்கிட்டச் சேராதோ.. என் பாட்டக் கூறாதோ..

ஒன்னாக நாம் கூடும் சந்தர்ப்பம்  வாராதோ..”

அடிச்சுத் தூள் கிளப்பறான் பாரு என்றாள் ரம்யா.. இல்லையென்று சொல்ல முடியாத திவ்யாவின் மனதில் ரகசிய சந்தோசம் முளைத்தது..

“உன்கூட நானும் சேர..

ஒத்தக் காலில் நின்னேனே..

தென் மானின் கூட்டத்தோடு..

சேதி ஒன்னு சொன்னேனே..

கண்ணாலம் காட்சி எப்போது..?

எந்நாளும் என் நேசம் தப்பாது..”

கேட்கிறான் பாரு.. பதிலைச் சொல்லு என்று தூண்டிய ரம்யாவிடமிருந்து தப்பி பஸ்ஸில் ஏறினாள் திவ்யா.. பாடல் அவளைத் துரத்தி வந்தது..

“நான் ஏரிக்கரை மேலிருந்து..

எட்டு திசை பார்த்திருந்து

ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல..

மணி ஏழு எட்டு ஆனபின்னும்

ஊரடங்கி போன பின்னும்..

சோறு தண்ணி வேணுமின்னு தோணல..”

திவ்யாவுக்கும் அப்படித்தான் இருந்தது.. நிறைந்திருந்த மனதோடு அவள் ஜன்னல் வழி 

எட்டிப் பார்த்தாள்.. புறப்பட்டுச் சென்ற பஸ்ஸிற்கு விடை கொடுத்து வழியனுப்பி டாட்டா காட்டிக் கொண்டிருந்தான் சுரேஷ்..

0

Subtotal