Chapter 15

0Shares

பம்பு செட்டில் குளித்த ஈரத்தலை வீட்டுக்கு வருமுன் உலர்ந்திருந்ததில் தலைமுடியை சிலுப்பிக் கொண்டு வீட்டுப் படியேறினான் சுரேஷ்.. எதிரே வந்தது ‘எதிர் வீட்டு வாத்து..’ என்று அவனால் நாமகரணம் சூட்டப் பட்டிருந்த எதிர் வீட்டுப் பெண்..

‘இவ எங்கே இங்க வந்தா..?’

அவளை ஒரு தினுசாக பார்த்தபடி அவன் மாடிப் படியில் காலை வைக்க.. அவனை விட பல தினுசாக அவனைப் பார்த்தபடி ஒற்றைக் கேள்வியைக் கேட்டுவிட்டு சிட்டாக பறந்து விட்டாள் அவள்..

“கொழுப்பு..” வாய் விட்டுத் திட்டியபடி அவள் ஓடிச் சென்ற திசையை முறைத்துக் கொண்டிருந்த சுரேஷிடம்..

“என்னது.. கொழுக்கட்டையா..? இதையெல்லாம் நேத்தே சொல்லியிருக்க வேணாமா..? இப்பப்பாரு.. இட்டிலிய அவிச்சு வைச்சிருக்கேன்.. கொழுக் கட்டைக்கு எங்கே போறது..?” என்று கேட்டு வைத்தாள் பொன்னுரங்கம்..

“இது வேறயா..? நான் ஏற்கனெவே செம கடுப்பில இருக்கேன்.. நீங்க வேற அத அதிகப்படுத்திக்கிட்டு இருக்காதீங்க அறிவிருக்காம்மா..?”

“டேய்ய்.. என்னையாடா இந்தக் கேள்வியக் கேட்கிற..?”

“இல்லேம்மா.. எதிர்வீட்டு வாத்தக் கேக்கிறேன்..”

“ஏண்டா.. அந்தப் பொண்ணு குள்ளமா இருந்தா நீ வாத்துன்னு பேரு வச்சிருவியா..? இப்ப அவ மேல எதுக்கு கோபப் படற..?”

“குளிக்கலையான்னு கேக்கிறா.. பம்பு செட்டில குளிச்சுட்டு வந்தவனுக்கு எப்படி இருக்கும்..?”

“இப்படிக் கொட்டாவியோட வந்து நின்னா வேற எப்படிக் கேப்பா..?”

“விட்ட விடிகாலையில வயலுப் பக்கம் தண்ணி பாச்சப் போனவன்.. குளிச்சுட்டு வந்தாலும்.. கொட்டாவி யோடதான் திரும்பி வருவான்.. அதில இவளுக்கு என்ன அக்கறைங்கிறேன்.. நான் குளிக்கலைன்னு சொன்னா இவ குளிப்பாட்டி விடப் போறாளா..?”

“வாயிலயே போட்டிருவேன்.. அடுத்த வீட்டுப் பொண்ணப் பத்தி பேசறோம்ங்கிற நினைப்போட பேசு..”

“அவளும் அடுத்த வீட்டு ஆம்பளைகிட்டப் பேசறோம்ங்கிற நினைப்போட பேசனும்.. இதே கேள்விய அவளப் பாத்து நான் கேட்டா எப்படியிருக்கும்..?”

“அடப்பாவி..! கல்யாணமாகாத பொண்ணுகிட்ட குளிக்கலையான்னு கேட்டு வைப்பியா..?”

“எனக்கு மட்டும் கல்யாணமாகிருச்சா..?”

“அடேய் சுரேஷீ.. உனக்குக் கோடி புண்ணியமா போயிரும்டா..”

“இப்ப எதுக்காக இந்த ஆசிர்வாதத்த அள்ளி வீசறிங்க..?”

“அப்படி எதுவும் கேட்டுத் தொலைச்சிராதேடா.. எதிர்வீட்டு பொண்ணோட அம்மாவும்.. நானும் நகமும் சதையுமா பழகிக்கிட்டு இருக்கோம்..”

“பாத்தும்மா.. நகச் சுத்தி வந்திரப் போகுது..”

கிண்டலாகக் கூறிவிட்டு ஆபிஸைப் பார்த்துக் கிளம்பினான் சுரேஷ்.. அவனுடைய அத்தை மகனின் வீட்டு வாசலில் நடந்து முடிந்த கல்யாணத்திற்கான அடையாளங்கள் மீதமிருந்தன.. அவன் மனதில் மல்லிகையின் வாசம் பரப்பி வந்து நின்றது திவ்யாவின் நினைவு.. 

‘இப்ப என்ன செய்துக்கிட்டு இருப்பா..?’

அவள் காலேஜீக்கு ஓடிக் கொண்டிருந்தாள்.. மூச்சிரைக்க கிளாஸ் ரூமுக்குள் நுழைந்தவளைப் பார்த்த வனிதா..

“எதுக்குடி இப்புடி ஓடி வர்ற..?” என்று விசாரித்தாள்..

திவ்யா பதில் பேசாமல் உட்கார்ந்தாள்.. வனிதா அவள் கையைத் தட்டி உள்ளங்கையை விரித்து ஏன் என்று பாவனையில் கேட்டபோது..

“நான் பேசா மடந்தை..! பேச மாட்டேன்..” என்றாள்..

“யாரு..? நீ..? பேசாமடந்தை..? ஹா..”

“உஸ்ஸ்..! மங்கையர்குல திலகம் வந்தாச்சு.. அடங்கு..”

திவ்யா முணுமுணுத்தாள்.. அவளால் மங்கையர் குல திலகம் என்று விளிக்கப்பட்ட விரிவுரையாளர் வேதவள்ளி.. கழுத்தை மூடி.. முழங்கை வரைக்கும் நீண்டிருந்த ரவிக்கையும் தழையத் தழைய பட்டுச் சேலையும்.. மலர்சரம் சுற்றி வளைத்திருந்த கொண்டையுமாக.. நெற்றியை மறைத்த பொட்டுடன் வகுப்பறைக்குள் வந்தாள்..

“பின்னாலே கணகணன்னு மணிச் சப்தம் கேட்கறாப்பில இருக்கில்ல..”

திவ்யா முணுமுணுத்ததில் அவளின் அருகிலிருந்த தோழிகள் அவளைப் பார்த்தபடி சிரித்து வைத்தார்கள்.. வேதவள்ளி மூக்குக் கண்ணாடியை சரி செய்தபடி சிரித்தவர்களை விட்டுவிட்டு திவ்யாவை முறைத்து வைத்தாள்..

“அடிப்பாவிகளா..! மிஸ்ஸக் கலாய்ச்சா என் மூஞ்சியப் பாத்து ஏண்டி சிரிச்சு வைக்கறிங்க..? வெளியே வாங்கடி.. இருக்கு உங்களுக்கு..”

திவ்யா அடிக்குரலில் அதட்டியதில் தோழிகள் கப்..சிப்.. என அமைதி காத்தார்கள்.. மதிய உணவு இடைவேளையில் ரம்யா வந்து சேர்ந்தாள்.. இருவரும் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்..

“யாருடி அது..? அச்சு அசல் கோட்டான் மாதிரியே இருக்கா..”

ரம்யா விரல் நீட்டிய திசையில் திரும்பிப் பார்த்த திவ்யா..

“வேணாம்டி ரம்மு.. அவளக் கலாய்க்காதே..” என்று எச்சரித்தாள்..

“ஏண்டி..?”

“அவ புருசன் வெட்ட வந்துருவான்..”

“என்ன சொன்ன..?”

தான்தான் தவறாக புரிந்து கொண்டு விட்டோமோ என்ற சந்தேகத்தில் ரம்யா.. திருதிருக்க.. திவ்யா அழுத்தம் திருத்தமாக அதே வார்த்தைகளைத் திருப்பிச் சொன்னாள்..

“ஏய்ய்.. அவ நம்ம கிளாஸ் மேட்டுடி..”

“ஆனா.. கல்யாணமான கிளாஸ் மேட்டாச்சே..”

“இது எப்ப..?”

“போன வாரம்.. லவ் மேரேஜாம்.. காலேஜீக்கு வர்றேன்னு சொல்லிட்டு காதலனை இழுத்துக்கிட்டு ஓடிட்டா.. இவளோட பேரண்ட்ஸ் காலேஜீக்கு வந்து கலாட்டா பண்ணிட்டுப் போனாங்க..”

“அனேகமா அடுத்த லவ் மேரேஜ் உன்னோடதாத்தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்..”

“அடச்சீ.. வாயை மூடு..”

சொன்னவளின் உதடுகளில் இருந்த ரகசியப் புன்னகை அவள் மனதை காட்டிக் கொடுத்து விட்டது.. அவர்களுடைய தாய் மாமன் மகளுக்கு ‘பலகாரக் குடம்’ என்று மதுரை வட்டாரத்தில் அழைக்கப்படும் சீர்வரிசையுடன் கூடிய பலகார வகைகளைக் கொடுக்கச் சென்ற உறவினர் கூட்டத்துடன் தானும் ஒட்டிக் கொண்டாள் திவ்யா..

“எனக்கென்ன அங்கே காதலனா காத்திருக் கிறான்..?” என்று பிகுசெய்தபடி திவ்யாவுக்காக கூட வந்தாள் ரம்யா.

அவர்கள் எதிர்பார்த்தபடி மாப்பிள்ளை வீட்டில் சுரேஷ் வளைய வந்தான்.. இந்தமுறை அவனுடைய பார்வை உரிமையுடன் அவளைச் சுற்றி வட்டமடித்தது.. கீர்த்தனா வேறு அவனுக்காக உதவிக்கரம் நீட்டி திவ்யாவுடன் பேச வந்தாள்.. தங்கையிடம் பேச வருகிறவனைப் போல அவன் வர.. கீர்த்தனா அங்கிருந்து சிட்டாகப் பறந்து விட்டாள்.. மரங்கள் அடர்ந்த மாப்பிள்ளையின் வீட்டுப் பின்புறத்தில் சுரேஷீம்.. திவ்யாவும் மட்டும் தனித்து நின்றார்கள்..

“காதலைப் பத்தி என்ன நினைக்கறிங்க..?” சுரேஷ்தான் பேச்சை ஆரம்பித்தான்..

“காதலில் நம்பிக்கை இல்லை.. காதலிக்கவும் ஆசையில்லை..” மனதை மறைத்துப் பதில் சொன்னாள் அவள்..

அவனுக்கு அவள் மீது காதல் வந்து தொலைத்தது.. கடந்து போன காலங்களை மீட்டெடுத்து அவளுடன் கழிக்க முடியுமானால் எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டான் அவன்..

கைக்குட்டையாலே கடல்நீரை உறிஞ்ச முயலும் வாழ்க்கை இது..!

திவ்யா நகர்ந்து நின்றாள்.. வீட்டுக்குள் இருந்து வந்த பேச்சு சப்தத்தில் அவன் பேசியது அவள் காதில் விழவில்லை..

“ஸ்..ஸ்..ஸ்..” என்று சப்தம் கொடுத்தான்..

“என்ன..?” காது கேட்காமல் இயல்பாக அவனருகில் குனிந்து விட்டாள்..

அருகில் வந்து காதைக் கொடுத்தவளின் பட்டுக் கன்னம் அவனை வசீகரித்ததில் அவன் இமைக்கும் பொழுதிற்குள் யோசிக்காமல் ‘கிஸ்’ அடித்து விட்டான்.. அவள் ஸ்தம்பித்துப் போனவளாக பஞ்சாயத்தைக் கூட்டப் போவதாக அவனிடம் மிரட்டினாள்..

“தாலிக்கயிறு ரெடியா இருக்கு..”

சட்டைப் பையிலிருந்து அவன் எடுத்து அவள் முன்னால் ஆட்டிக் காண்பித்த தாலிக் கயிறில் பின்னால் நகர்ந்து கொண்டாள் திவ்யா..

‘இவனை நம்ப முடியாது.. கட்டினாலும் கட்டிருவான்..’

அதை உணர்ந்து கொண்ட முறுவல் அவன் உதடுகளில் தவழ்ந்தது..

அடுத்து வந்த நாள்களில் திவ்யாவின் காலேஜிக்குத் தேடிப் போய் அவளை சந்தித்தான்.. பார்க்கில் பேசும் அளவிற்கு பழக்கம் முற்றியது.. சுரேஷ் அவளிடம் காதல் சொல்லி விட்டான்.. அவள் யோசித்துப் பதில் சொல்வதாகச் சொல்லிவிட்டு அவனிடம் மற்றுமொரு முத்தத்தை வாங்கிக் கொண்டு அவன் மார்பில் ஒன்றினாள்..

“யோசிப்பியோ..” அவனின் தெனாவெட்டில்..

“திமிரு..?” என்று சிலிர்த்தாள் அவள்..

ஊரில் உள்ள பெண்களெல்லாம் சுரேஷை எண்ணிப் பாலும் அருந்தாமல் பஞ்சணையிலும் தூங்காமல் தவமிருப்பதாய் அவன் கதை அளந்தபோது..

“உங்களோட அளப்பறைக்கு ஓர் அளவே இல்லையா..?” என்றாள் அவள்..

“இது முக்காலும் உண்மை..”

“ஆமாமாம்.. நம்பிட்டேன்.. ஆளைப்பாரு.. இப்படியா ஊரில இருக்கிற அத்தனை பொண்ணுகளும் உங்க பின்னாலே ஜொள்ளு விட்டுக்கிட்டுச் சுத்தினாங்கன்னு கதை அளப்பீங்க..? ஸ்ஆ.. இப்பவே கண்ணைக் கட்டுதே.. உங்க மூஞ்சியைப் பிடிச்சிருக்குன்னு நான் ஒருத்தி சொன்னதே உலக அதிசயம்.. நினைப்பில வைச்சுக்கங்க..”

அவள் உடைத்ததில் வலிக்காத மூக்குடன் அவளது சீண்டலை ரசித்து அவன் சிரித்தான்.. அவளுக்கும் அவனுக்குமான கெமிஸ்ட்ரி அற்புதமாக இருப்பதாக அவள் சொல்லியபோது.. பிஸிக்ஸ்.. பயலெஜி எங்கே போனது என்று அவன் பதிலுக்கு அவள் மூக்கை உடைத்தான்..

“என்னிடம் என்ன குணங்களை எதிர்பார்க்கிற..?”

அவள் விரலோடு விரல் கோர்த்து அவன் கேட்டபோது அவள் வேண்டுமென்றே அவனிடம் இல்லாத குணங்களை சொல்லித் தொலைத்தாள்.

‘கருத்துக் கேட்டது தப்பாப் போச்சே.. இனிமே இவ முன்னால மௌனகுரு வேசம்தான் கட்டனும்..’

அவளுடைய அந்தத் துடுக்குத்தனம் அவனை வசீகரித்தது.. மெல்லக் காதலெனும் கடலில் வீழ்ந்தாள் திவ்யா.. அதன் விளைவாக ஏற்பட்ட அதீத உரிமை உணர்வில் அவனைக் கேள்விக் களைகளால் துளைத்தாள்..

“யார் சொன்னது..?”

“கீர்த்தனா சொன்னா..”

“அறிவிருக்காடி உனக்கு.. அவ போட்டுக் கொடுத்திருக்கா.. நீயும் ஏமாந்திருக்க.. கர்மம்.. தெப்பக்குளம் வரைக்கும் மீனாட்சி கூட நடந்துட்டு வந்தது உண்மைதான்.. அது வெறும் மீனாட்சி இல்ல.. என் நண்பன் மீனாட்சி சுந்தரம்.. ம்ஹீம்.. என் நல்ல மனசுக்கு அவன்ங்கிறது அவளா இருந்திருக்கலாம்.. எங்கே..?”

இப்படிச் சொல்லிவிட்டு திவ்யாவிடம் மொத்து வாங்கினான் சுரேஷ்..

0Shares

Reviews – Mannavan Vandhanadi Thozhi! / மன்னவன் வந்தானடி தோழி!

5.0
5.0 out of 5 stars (based on 1 review)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

Amazing Book! Fun and Enjoyable to read

February 7, 2026

Fun book to read

PVG

Response from MR Novels

Glad that you liked it!

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link