Chapter 16
நகத்தைக் கடித்துக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தாள் திவ்யா.. சற்றுத் தொலைவிலிருந்த சறுக்கு மரத்தில் குழந்தைகள் சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.. அவர்களின் குதூகலத்தைப் பார்க்கும்போது குழந்தையாகவே இருந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் திவ்யாவின் மனதில் எழுந்தது.. கைக்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.. ஆறு என்றது..
“டாண்ணு மணி ஐஞ்சடிச்சதும் உன் முன்னாலே வந்து நிப்பேன் பாரு..”
செல்போனில் சொன்னவனின் குரல் காதுகளில் ஒலித்ததில் கோபத்துடன் உட்கார்ந்திருந்த சிமிண்ட் பெஞ்சில் கையைக் குவித்து முஷ்டியாக்கி ஓங்கிக் குத்தினாள்..
‘பேசறதெல்லாம் பொய்.. இவனைப் பத்தித் தெரிஞ்சிருந்தும் புத்தி கெட்டுப் போயி நாலே முக்காலுக்கே பார்க்குக்கு ஓடி வந்தேன் பாரு.. என்னைச் சொல்லனும்..’ கோபத்தில் அவளுக்குக் கண் கலங்கி விட்டது..
அவனுக்கு சிரமத்தை உண்டாக்கக் கூடாது என்று.. அவன் வேலை பார்த்துக் கொண்டிருந்த கலெக்டர் ஆபிசின் பக்கத்தில் இருக்கும் பார்க்குக்கு வந்து விடுவதை வழக்கமாக வைத்திருந்தாள் திவ்யா..
‘அதுக்கு ஒரு தேங்கஸாவது சொல்லி யிருப்பானா..? என்னடா.. ஊரில உலகத்தில காதலிக்கிற பொண்ணுக உலகத்தையே சுத்திக் காட்டுன்னு இழுத்தடிக்கிறப்ப.. இந்தக் கேணச்சி மட்டும்.. நோகாம நோன்பு கும்பிடு மச்சான்னு.. நம்ம தலமாட்டில இருக்கிற பார்க்குக்கே வந்து காத்திருக்கிறாளேன்னு கொஞ்சமாவது நினைச்சுப் பார்க்கிறானா..? வரட்டும்.. இன்னைக்கு இருக்கு அவனுக்கு..’ மனதுக்குள் கறுவிக் கொண்டாள்..
பூங்காவை ஒட்டியிருந்த மெடிகல் காலேஜின் லேடிஸ் ஹாஸ்டலுக்கு போய் வந்து கொண்டிருந்த மாணவிகளின் கையிலிருந்த வெள்ளை கோட்டைப் பார்த்தவளுக்கு சன்னமான பொறாமை வந்தது..
‘நான் டாக்டருக்கு படிச்சுக்கிட்டு இருந்தா இவன் என்ன பண்ணியிருப்பான்..? கலெக்டர் ஆபிசிலி வேலை பார்க்கிறவனுக்கு டாக்டர் பொண்ணு செட் ஆகாதுன்னு ஒதுங்கிப் போயிருப்பானோ.’
இந்த எண்ணம் வந்த மாத்திரத்தில் அவள் மனதில் இழையோடிய டாக்டர் படிப்பைக் குறித்த ஏக்கம் விலகியோடி விட்டது.. அதை உணர்ந்தவளுக்கு அவன் மீதான அவளது காதலில் ஆழம் புரிந்தது..
அவன் வருகிறானா என்று பார்க்கின் வாசலைப் பார்த்தாள்.. குழந்தையுடன் ஒரு பெண்தான் வந்து கொண்டிருந்தாள்.. அவள் கையில் ஃபீடிங் பாட்டில் இருந்தது.. அதில் பாலை நிரப்பியிருப்பாள் என்று நினைத்துக் கொண்டாள் திவ்யா.. சறுக்கு மரத்தின் பக்கத்தில் சென்ற அந்தப் பெண்.. அவள் கையிலிருந்த பெண் குழந்தையை இறக்கி விட்டாள்.. அந்தப்
பெண் குழந்தைக்கு மூன்று வயதிருக்கலாம் என்று திவ்யாவுக்குத் தோன்றியது.. ஒவ்வொரு படியாக அது ஏற.. அந்தத் தாயின் பார்வை தனது குழந்தையைப் பின் தொடர்ந்தது.. திவ்யாவுக்கு ஏனோ அம்புஜத்தின் பார்வை நினைவுக்கு வந்தது.. அவளும் இப்படித்தான்.. திவ்யா எங்கே சென்றாலும் அம்புஜத்தின் பார்வை அவளைத் தொடர்ந்து கொண்டேயிருக்கும்..
“அம்மாவுக்கு லேசர் கண்ணுடி..”
ரம்யா அலுத்துக் கொள்வாள்.. அவளையும் தொடரும் அம்புஜத்தின் கண்காணிப்பு பார்வை வளையத்திற்குள் இருப்பதற்கு அவளுக்கு விருப்பமிருந்ததில்லை..
திவ்யா அப்படியல்ல.. அவளுக்கு அம்புஜத்தின் பார்வை வளையம் அவளைத் தொடர்வதைக் குறித்துப் பெருமையாகத்தான் இருக்கும்..
“சும்மாயிருடி..” தங்கையை அதட்டுவாள்..
“அம்மாவுக்கு.. எப்பவும் நம்ம நினைப்புத்தான்..”
திவ்யாவின் நெகிழ்ச்சியை விசித்திரமாக பார்த்து வைப்பாள் ரம்யா..
“இவங்க நம்மள நினைச்சு ஆகப் போறதென்ன திவ்யா..? நமக்குன்னு பிறந்திருக்கவனுக நினைக்கனும்டி.. அதுதான் முக்கியம்..”
“அடச்சீ.. வாயை மூடு..”
அன்று ரம்யாவின் வாயை மூடச் சொன்ன திவ்யாதான்.. அம்புஜத்திற்குத் தெரியாமல்.. அவளது பார்வை வளையத்தை மீறி.. அவளுக்காகவே பிறந்திருக்கிறான் என்று அவள் நம்பும் சுரேஷிற்காக மணிக்கணக்கில் பார்க்கில் காத்திருக்கிறாள்..
“ஏய்ய்.. குட்டிம்மா.. விழுந்துராதே..”
சறுக்குமரத்தின் உச்சியில் நின்று கொண்டிருந்த குழந்தையிடம் பதறினாள் அந்தத் தாய்..!
துறுதுறுப்பான அவளது குழந்தையோ.. விலகுவேனா என்று அடம் பிடித்தபடி.. சறுக்கு மரத்தில் சறுக்கி வராமல் இங்கும்.. அங்குமாக அசைந்து ஆட்டம் காட்டியது.. அதிக நேரத்திற்கு அந்தத் தாயை பரிதவிக்க விடாமல் அந்தக் குழந்தை சறுக்கு மரத்தில் உட்கார்ந்து மெதுவாக சறுக்க ஆரம்பித்தது..
“நகரும்மா..”
“நகரமாட்டேன்..”
பிடிவாதமாக சறுக்கி வந்த குழந்தையைத் தரை தொட விடாமல் கையில் ஏந்திக் கொண்டவளைப் பார்த்த திவ்யாவின் மனதில் குற்ற உணர்வு வந்தது..
‘இப்படித்தான எங்கம்மாவும் என்ன வளர்த்திருப்பாங்க..’
அந்தக் குற்ற உணர்வு மெல்ல அவள் மனதில் வியாபித்து சுரேஷின் மீது கோபமாக உருமாறியது.. இவனால்தான் எல்லாமும் என்ற ஆத்திரம் தோன்றியது.. ஏதுமறியாத அவளது கன்னி மனதில் கல்லெறிந்து மனக் குளத்தில் சலனங்களை உண்டாக்கியது அவன்தான்.. தாய்மாமன் மகளின் கல்யாணத்தில் கலந்து கொள்ள முதல்நாள் போனவளை மறுநாளைக்குள் வளைத்துப் பிடித்து அவள் மனதில் குடியேறி விட்டக் கள்வன் அவன்தான்..
‘அந்தக் கல்யாணத்துக்கு மட்டும் போகாம இருந்திருந்தா..?’
இந்த நினைவும் அவளுக்குப் பிடிக்கவில்லை.. சுரேஷ் என்ற அட்டூழியக்காரனை தனது வாழ்நாளில் சந்தித்திருக்கக் கூடாது என்று எண்ணக்கூட முடியாமல் அவன் வசம் தன் மனதை பறிகொடுத்திருந்த திவ்யா தலையைப் பிடித்தபடி பார்க்கை வேடிக்கை பார்த்தாலாவது தலைவேதனை குறையாதா என்று பொழுதைக் கழிக்க பார்க்கில் வந்து போகிறவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்..
பார்க்கைச் சுற்றிப் போடப்பட்டிருந்த சிமிண்ட் பாதையில் கைகளை வீசி நடந்து கொண்டிருந்த மூதாட்டி.. கூட வந்த இன்னொரு மூதாட்டியிடம் சுவராஸ்யமாக எதையோ சொல்லிக் கொண்டிருந்தாள்..
“தாளிதம் பண்ணினவுடனே கொட்டியிருக்கணும்.. எங்கே.. நான் சொன்னாக் கேட்டாத்தானே..? இந்தக் காதில வாங்கி.. அந்தக் காதில விட்டா இப்படித்தான் ஆகும்..”
எப்படி ஆகும் என்ற கேள்வி திவ்யாவின் மனதில் வந்தது.. அதுஎன்ன.. பெண்கள் கூடினால் சமையலைப் பற்றியே பேசுகிறார்கள்..? அதைத் தாண்டி வேறு உலகத்தில் கால் பதிக்க அவர்களுக்கு விருப்ப மில்லையா..?
‘கிளம்பி விடலாமா..’ பொறுமையிழந்தாள் திவ்யா..
கூடப் படிக்கும் பெண்ணின் வீட்டில் கம்பைன் ஸ்டடி என்று அம்புஜத்தின் காதில் பூச்சுற்றி விட்டு வந்திருக்கிறாள்..
‘அம்மாகிட்டப் பொய் சொல்லிட்டேனே..’
அதற்கும் வேதனையாக இருந்தது.. அவளுக்கு.. டிவியில் இது போல வரும் விளம்பரம் ஒன்று அவள் நினைவுக்கு வந்தது..
‘அப்பா..’
‘என்னம்மா..?’
‘நான் கம்பைன் ஸ்டடி பண்ணப் போறேன்னு சொல்லிட்டு வந்தேன்ல்ல..’
‘ஆமாம்மா..’
‘இல்லேப்பா.. நான் இப்ப ஊட்டியில இருக்கேன்..’
‘இப்ப மட்டும் ஏன் சொல்ற..?’
‘நான் பொய் சொல்லிட்டேன்.. தூக்கம் வரல..’
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அந்தத் தகப்பனின் முகத்தில் வரும் நெகிழ்ச்சி இருக்கிறதே.. அதை உணர்ந்து பார்த்தவர்களுக்குத் தான் அந்த உணர்வின் அருமை புரியும்..
‘டேக் கேர்..’
அந்த ஒற்றை வார்த்தையில் மகளைக் குறித்த பெருமிதத்துடன் அவர் மகளை மன்னித்து விடுகிறார்.. அதைவிட.. அந்த ஒற்றை வார்த்தையைக் கேட்டதும் மகளின் முகத்தில் வருகிறதே ஓர் நிம்மதி…! அதையும் உணர்ந்து பார்த்தால்தான் அந்த உணர்வின் அருமை எத்தகையது என்று புரியும்..
இதே போல அம்புஜத்திடம் திவ்யா சரணடைந்தால் அவள் என்ன சொல்லுவாள் என்று கற்பனைச் சிறகை விரித்துப் பார்த்தாள் திவ்யா..
‘அம்மா…’
‘என்னத்த ‘நொம்மா..?’ வீட்டுககு வராம என்னடி கம்பைன் ஸ்டடி பண்ணிக்கிட்டு இருக்க..? பொழுதோட வீட்டுக்கு வந்து சேர்ற வழியப் பாரு.. இல்ல.. ஊரு சுத்தற காலில சூடு வைச்சிருவேன்..’
‘நான் கம்பைன் ஸ்டடி பண்றேன்னு சொல்லிட்டு வந்தேன்ல்ல..’
‘அந்த ‘நொம்பைன்’ ஸ்டடியத்தான் இம்புட்டு நேரமும் சொல்லிக்கிட்டு இருக்கேன்..? இதில நீ வேற புளி போட்டுத் தேச்சு விளக்கம் சொல்றயாக்கும்..?’
‘இல்லேம்மா.. இப்ப நான் பார்க்கில இருக்கேன்..’
‘அங்க என்ன அலுவலுக்குடி போன..? அப்பச் சொல்லாம இப்ப மட்டும் என்ன கழுதைக்குச் சொல்ற..?’
‘நான் பொய் சொல்லிட்டேன்.. தூக்கம் வரல..’
‘படிக்கப் போனவ.. பார்க்கில உக்காந்து தூக்கம் போடப் போனியா..? எதுக்கு..? ஊரில உலவற காத்துக் கருப்ப இழுத்துப் பிடிச்சுக்கிட்டு வரலாமின்னா..? வாடி வீட்டுக்கு.. இன்னைக்கு உனக்கு திருவிழாதாண்டி மகளே..!’
திவ்யாவுக்கு சிரிப்பு வந்தது.. கடிகார முள்ளைப் பார்த்தவள் வீட்டுக்குக் கிளம்பி விடலாமென்ற முடிவுக்கு வந்தாள்.. கால்கள் நகர மறுத்தன.. இரும்புக் குண்டை கட்டி விட்டதைப் போல கால்கள் கனத்து ஒர் அடிகூட எடுத்து வைக்க முடியாததில் மனம் சோர்ந்தாள் திவ்யா.. அவள் கண்களில் கண்ணீர் அரும்பியது..
‘அந்த மூஞ்சியப் பாக்க முடியலைன்னா எனக்கு இப்படி யெல்லாம் ஆகித் தொலைக்குமா..?’ அவளது மனம் கனக்க ஆரம்பித்தது..