Chapter 21
‘சிவந்த மண்..’ திரைப்படத்தை எத்தனை முறை பார்த்தான் என்ற புள்ளி விவரத்தை அவனே அறிய மாட்டான் என்று சுரேஷ் ஓர்முறை திவ்யாவிடம் சொல்லியிருக்கிறான்.. அது பழைய படமாயிற்றே என்ற அவளது கேள்விக்கு.. அதைவிட அரதப் பழசான அற்புதப் படங்களை எல்லாம் அவன் விடிய விடிய.. கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டு பார்த்து வைப்பது பழக்கம் என்று அன்று சொன்னான்..
‘சிவந்த மண்..’ திரைப்படத்தைப் பற்றி அவன் சொல்லக் கேட்டுக் கொண்ட திவ்யா.. ‘சிவந்த கண்..’ என்றால் எப்படியிருக்கும் என்பதை அவன் பார்த்த பார்வையில் தெரிந்து கொண்டாள்..
“எவன்டி இப்படிக் கதை அளந்தது..?”
அவன் குரலில் புயலை உள்ளடக்கிய பூகம்பம் இருந்ததில் திவ்யாவுக்குள் பயம் வந்தது.. அவள் அச்சத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல்..
“அதைப்பத்தி உங்களுக்கென்ன..? அந்த ஷில்பாகூட கோயம்புத்தூரில கொட்டமடிச்சது உண்மைதான.. அதப்பத்தி மட்டும் பேசுங்க..” என்று சொல்லி விட்டு கன்னத்தில் ‘அறை’ வாங்கினாள்..
‘ஙொய்..’ என்ற வண்டு ரீங்காரமிடும் சப்தம் போல காதில் கேட்க.. காதையும், கன்னத்தையும் சேர்த்துப் பிடித்த கையோடு அவள் அதிர்ந்து விழித்துப் பார்த்த பார்வையில் சுரேஷின் மனம் வலித்தது.
“ஏண்டி என்னை மிருகமாக்குற..?” அவன் பொருமினான்..
திவ்யாவின் விழிகளில் இருந்து வழிந்த நீரில் அவன் மனதில் வாழ்ந்த தேவதையின் மறுகல் இருந்தது..
“இதே கேள்வியை வேற யாரும் கேட்டிருந்தா வெட்டிப் பொலி போட்டிருப்பேன்.. கேட்டது நீயாப் போயிட்டேடி.. அதனாலதான் என் கோபத்தை அடக்கிக்கிட்டு நிக்கறேன்.. உன்னால எப்புடிடீ யோசிக்காம இப்படி ஒரு கேள்வியைக் கேக்க முடிஞ்சது..?”
அநியாயத்தை அவன் செய்துவிட்டு.. அவளிடம் நியாயம் கேட்டதில் அவனுக்கு ஆணாதிக்க மனப்பான்மை என்று அவள் கொதித்தாள்..
“போடின்னு சொல்லிட்டு உன்னைத் திரும்பிப் பாக்காம போகிறதுக்கு ரொம்ப நேரம் ஆகாது..”
சுரேஷின் வெறுப்பில் போய் விடுவானோ என்று அதிர்ந்து போனாள் திவ்யா.. அவளது அதிர்ந்த பார்வையில் அசையாமல் நின்ற சுரேஷ் இமைக்காமல் அவளையே பார்த்தான்.. அந்தச் சூழலிலும் முகம் சிவக்க அவள் தலை குனிந்ததில் அவன் உதட்டைக் கடித்து தன் உணர்வுகளை அடக்கியபடி..
“போக முடியலையேடி..” என்றான்..
அதில் சட்டென்று தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் திவ்யா..
அவளது பார்வையைச் சந்தித்தவனின் பெருமூச்சு அவளை அலைக்கழித்தது.. குற்றம் இழைத்தவன் இத்தனை நிமிர்வாக அவளை எதிர்கொள்வானா..?
“உன் வாயில இருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வரலாமாடி..? பெண்ணுக்குப் பெண்ணே எதிரியா..? எந்த எடுபட்ட பயலோ போட்டுக் கொடுத்தா.. நீ யோசிக்காம அபாண்டமா பழி போட்டிருவியா..?”
அவளை அவன் குற்றவாளியாக்கியதில் குற்றஉணர்வு கொண்ட திவ்யா.. மறைத்துப் பேசத் தெரியாமல்..
“எந்த எடுபட்ட பயலும் போட்டுக் கொடுக்கலை.. எல்லாம் உங்க கூட வேலை பாக்கிற சோமசுந்தர அண்ணன்தான் சொன்னார்..” என்று சோமசுந்தரத்தைக் காட்டிக் கொடுத்து விட்டாள்..
“ஓ..! அந்த அண்ணாதான் இந்த வேலயச் செஞ்சானா..?”
சுரேஷ் ஒரு தினுசான குரலில் கேட்டதும் திவ்யாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது..
“அவர்மேல குத்தம் சொல்லாதீங்க.. உங்களைப் பத்தின உண்மையைச் சொன்னதுக்கு அவர்மேலே பாய்வீங்களா..?” என்று படபடத்தாள்..
“போடி..”
சுரேஷ் தள்ளிய தள்ளலில் புல்தரையில் பொத்தென்று விழுந்து வைத்தாள்.. சுரேஷின் கண்கள் இன்னும் அதிகமாக சிவந்து போனதில் அவளை பயம் பிடித்துக் கொண்டது..
“போடி.. போய் உன் அண்ணாத்தகிட்டயே பேசு.. தங்கச்சி.. நீ செம கட்டம்மா.. சூப்பர் ஃபிகரு.. தக்காளிப் பழமாட்டம் தளதளன்னு இருக்கிற.. வெள்ளரிப்பிஞ்சப் போல வாட்டமா தெரியற.. உன்னப் பாக்கறப்பவே குடும்பம் நடத்தலாம் போல இருக்கு.. அவன் பொறுக்கிப் பயம்மா.. என்னப் போல கண்ணியமா பொம்பளகளை பாக்கிற பார்வையிலேயே துகிலுரிய மாட்டான்ம்மா.. காஞ்ச மாடு கம்மங்கொல்லயில பாஞ்சதைப் போல.. மேய்சசல் நிலமா பொண்ணுகளப் பாக்க மாட்டான்ம்மா.. அதுக்கெல்லாம் இந்த சோமசுந்தரம்தான்ம்மா லாயக்குன்னு சொல்லுவான்.. காது குளிரக் கேட்டுட்டு வா.. உனக்கெல்லாம் அவன்தாண்டி லாயக்கு..”
“இங்க பாருங்க.. அவரு ஜெண்டில் மேன்..”
“எவனடி சொல்ற..?”
“சோமசுந்தர அண்ணாவைத்தான்..”
“அடிச்சுப் பல்லக் கழட்டிருவேன்.. அவன் ஜென்டில் மேனாம்.. அந்த ஜெண்டில் மேன்தான் உன்ன சூப்பரு பிகருன்னு சொன்னான்.. அதைக்கூடப் பொறுத்துக்கிட்டுப் போயிருக்கலாம்.. ஆஹா என் ஆளு அப்படித்தான் இருக்கான்னு நினைச்சு மகிழ்ந்துகிட்டுப் போயிருக்கலாம்.. அதுக்கும் மேலே சொன்னான் பாரு.. ‘செம கட்ட’ன்னு அதுக்குத்தாண்டி என்கிட்ட மாத்து வாங்கினான்..”
“என்னது..?”
“என்ன ‘நொன்னது..’ ஆளப்பாரு.. என்னைப்பத்தி எவன் எதைச் சொன்னாலும் நம்பிருவியா..? ஏன், எதுக்குன்னு யோசிக்க மாட்டியா..? இருந்திருந்து இரண்டு பிள்ளைகளைப் பெத்த முப்பத்தைஞ்சு வயசுப் பொம்பள கூட என்ன இணை சேர்த்து அவனும் சொல்லியிருக்கான்… நீயும் காதைக் கொடுத்துக் கேட்டிருக்க.. என்னைப் பத்தி எம்புட்டு உயர்ந்த அபிப்ராயம்டி உனக்கு..! ப்பா..! உன்னைப் போல காதலி கிடைச்சாப் போதும்.. ஒருமனுசன் வாழ்ந்துருவான்..”
சுரேஷ் பேசப்பேச திவ்யாவின் மனதில் இருந்த புகைச்சல்கள் மேகமாய் கரைந்து விலகியோடினாலும் அவன் கூறிய.. ‘இருந்திருந்து..’ என்ற வார்த்தை அவள் மனதை நெருஞ்சி முள்ளாய் நிரடி விட்டது..
“இருந்திருந்து முப்பத்தைஞ்சு வயசுப் பொம்பளகூட இணை சேர்த்திருக்கானேன்னு வருத்தப்படறதைப் போல இருக்கு.. அப்ப இருபது வயசுப் பொண்ணுகூட இணை சேர்த்தா ‘ஓகே’ போல இருக்கே..” என்று சொல்லி விட்டாள்..
சுரேஷின் கொதித்த பார்வையில் நாக்கைக் கடித்துக் கொண்டாலும்.. அவள் முகம் சிணுங்கலிலேயே இருந்தது..
“நீ திருந்த மாட்டேடி..”
கோபத்துடன் வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவன் அவளைத் திரும்பிப் பார்க்காமல் போயே போய் விட்டான்..
‘இவ்வளவுதானா..?’
திவ்யா அதிர்ந்து போனவளாக நெடுநேரம் அங்கேயே நின்றிருந்தாள்.. அவள் தோளில் மென்மையான கரம் படிந்ததில் அவன்தானோ என்று ஆனந்தமாகத் திரும்பினாள்..
“அண்ணி..”
“கீர்த்தனா..”
விம்மியபடி தோளில் சாய்ந்தவளின் முதுகில் தாய்மைப் பெருக்குடன் தட்டிக் கொடுத்தாள் கீர்த்தனா..
“அண்ணன்தான் அனுப்பி வைச்சான்.. வீட்டுக்கு கிளம்பிப் போகச் சொன்னான்.. இருட்டின பின்னாடியும் அங்கேயே நின்னு தொலைப்பா.. வீட்டுக்கு அனுப்பி வைச்சுட்டு வான்னு சொல்லி விட்டான்..”
இதைத் தங்கையிடம் சொல்லி அனுப்பி வைக்கத் தெரிந்தவனுக்கு நேரடியாக வந்து சொல்ல மனமில்லையா என்று மனதுக்குள் மறுகினாள் திவ்யா.. அவளது அலைபாய்நத பார்வையில் இரக்கம் கொண்டாள் கீர்த்தனா.. திவ்யாவின் கைகளைப் பிடித்து அருகிலிருந்த பெஞ்சில் உட்கார வைத்துப் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
“என்னாச்சு அண்ணி..? அங்கே அவனும் நிம்மதியா இல்லை.. கோபமாய் மோட்டார் சைக்கிளை உதை.. உதைன்னு உதைச்சுக்கிட்டு இருக்கான்.. என்ன நடந்துச்சு..?”
திவ்யா கேவியபடி சொன்னதைப் பொறுமையாக கேட்டவள்..
“அவசரப்பட்டுட்டீங்களே அண்ணி..! அந்த சோமன் நல்லவனில்ல.. ஒரு மாதிரி டைப்.. ஒரு தடவ வீட்டுக்கு வந்தப்ப காபி கொடுத்த என் கையத் தொட்டுத் தடவி காபிய வாங்கி வைச்சான்.. அண்ணன்கிட்டச் சொன்னா அவன் தோலை உரிச்சுத் தோரணம் கட்டித் தொங்க விட்டிருவானேன்னு ரகசியமா முறைச்சு அனுப்பி வைச்சேன்.. அண்ணன் கவனிக்கலைன்னு நினைச்சேன்.. அண்ணன் கவனிச்சிருக்கான்.. வீட்ட விட்டுக் கிளம்பியவன் கூடப் போய் வழியனுப்பி வைச்சுட்டு வர்றேன்னு அவன் பைக்கிலேயே தொத்திக்கிட்டுப் போயி.. ஊர் எல்லையிலே தூக்கிப் போட்டு மிதிச்சு வழியனுப்பி வைச்சுட்டு வந்தான்.. அதுக்கப்புறமா உங்கள
‘செம கட்ட’ன்னு ஆபீசில வர்ணிச்சுட்டு வாங்கிக் காட்டியிருக்கான்.. அவன் சொன்னான்னு யோசிக்காம அண்ணன்கிட்டக் கேள்வி கேட்டுட்டீங்களே..”
“எனக்குத் தெரியல கீர்த்தனா.. உங்க அண்ணன் மனசு வேற ஒரு பெண்ணத் தேடுதுங்கிற வார்த்தைய என்னால தாங்கிக்க முடியல கீர்த்தனா..”
திவ்யாவின் தவிப்பில் சுரேஷ் கொடுத்து வைத்தவன் என்ற நிறைவைக் கொண்டாள் கீர்த்தனா..
‘அண்ணிக்குத்தான் அண்ணன் மேல எம்புட்டுக் காதல்..!’
“உன் அண்ணன் என்னை மன்னிக்க மாட்டாரா கீர்த்தனா..?”
ஏக்கத்துடன் கேட்டாள் திவ்யா.. அவளது கரத்தைப் பிடித்து ஆறுதலாக தட்டிக் கொடுத்தாள் கீர்த்தனா..
“மன்னிக்காம எங்கே போயிறப் போறான்..? உங்களை விட்டுட்டுப் போக அவனாலயும் முடியாது அண்ணி..”
“இப்ப விட்டுட்டுப் போயிட்டாரே..” குலுங்கி அழுதாள் திவ்யா..
“போனவன்.. உங்களப் பத்தின கவலையில என்னை அனுப்பி வைச்சிருக்கானே.. அதை மறந்துட்டிங்களா..?”
கீர்த்தனாவின் கேள்வியில் திவ்யாவுக்கு லேசான தெம்பு வந்தது.
“அவன் கோபக்காரன் அண்ணி..! அவனோட நேர்மையச் சந்தேகப் பட்டுக் கேள்வி கேட்டுட்டீங்க.. அந்தக் கோபம் அடங்க கொஞ்ச நாளாகலாம்.. பொறுமையா காத்திருங்க அண்ணி.. நிச்சயம் உங்ககிட்ட அவன் திரும்பி வந்திருவான்..”
கீர்த்தனாவின் வார்த்தைகளில் ஒருவாறாய் மனம் தேறி வீட்டுக்கு கிளம்பினாள் திவ்யா..
Reviews – Mannavan Vandhanadi Thozhi! / மன்னவன் வந்தானடி தோழி!
Write a Review
What others Say about this book!
Amazing Book! Fun and Enjoyable to read
Fun book to read
Response from MR Novels
Glad that you liked it!