Chapter 22
அடுத்து வந்த நாள்களில் அவனுக்காக பார்க்கில் காத்திருந்து அவன் வராத ஏமாற்றத்துடன் வீடு திரும்பினாள் திவ்யா.. விசயத்தைக் கேள்விப்பட்ட ரம்யா..
“இப்பவே இப்படின்னா.. நாளைக்குத் தாலியக் கட்டிட்டா எப்படியோ..? விட்டுருடி திவ்யா..” என்று உபதேசித்தாள்..
‘விடுவதா..? அவனையா..?’
அதைவிட உயிரை விட்டுவிடலாம் என்று மனதுக்குள் மறுகினாள் திவ்யா..
“நீ தேறாத கேஸ்டி.. அவனுக்கு சொக்குப்பொடி போட்டு உன்னைச் சுத்தி வர வைக்கிறத விட்டுட்டு.. அவன் போடற சொக்குப் பொடியில சொக்கிப் போயி அவனைச் சுத்தி வந்துக்கிட்டு இருக்கியே..”
ரம்யா தலையில் அடித்துக் கொண்டாள்.. நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்.. எனக்கு அதைப் பற்றிக் கவலையில்லை என்று ரம்யா கூறிய அறிவுரைகளை ஒருகாதில் உள்வாங்கி.. மறுகாதில் வெளியில் பற்றி விட்டு திவ்யா சுரேஷின் மனம் திரும்பாதா என்று தவித்துக் கொண்டிருந்தாள்..
சுழல் போன்ற அந்தச் சூழலில்.. திவ்யாவின் தாய்மாமன் மகளுக்கு வளைகாப்பு நடந்தது.
“அவ கல்யாணத்திலதான உன் ஆள மீட் பண்ணின.. பாரு.. அவ வளைகாப்பு வரைக்கும் போயிட்டா.. நீ என்னடான்னா மடமடன்னு காதலில ஏணி போட்டு ஏறிட்டு.. மளுக்குன்னு கீழே விழுந்து ஆரம்பிச்ச புள்ளியிலேயே வந்து நிற்கிற..” ரம்யா சீண்டினாள்..
திவ்யா வழக்கம்போல அதை காதில் போட்டுக் கொள்ளாமல் பற்றி விட்டுவிட்டு.. அம்புஜம் என்ன செய்யப் போகிறாள் என்பதைக் கண்காணிக்க ஆரம்பித்தாள்..
“எங்க அண்ணன் மக வளைகாப்புக்கு போகனும்..”
அம்புஜம் பேச்சை ஆரம்பித்தபோது அறியாப் பெண் போல கூடப் போய் உட்கார்ந்து கொண்டாள்..
“போயிட்டு வா.. இங்க யாரும் வேணாம்ன்னு சொல்லலையே..”
“சொல்லித்தான் பாருங்களேன்..”
“அந்தச் சவால் எனக்கெதுக்குடி.. உங்க அண்ணன் மக வளைகாப்புக்கு போகிறவள.. வழிய மறிக்கறதைப் போலயில்ல பேசி வைக்கிறவ..?”
“வழியை மறிச்சுருவீங்களோ..”
“இங்கனபாரு.. உங்க அப்பன் வீட்டுப் பெருமையில மோதிப் பாக்கலாமுன்னு வம்பிழுக்க வந்தேன்னு வைய்யி.. திருவிழா கொண்டாடிப் புடுவேன்.. ஆமாம்.. சொல்லிப்புட்டேன்..”
“கொண்டாடுவீங்க.. கொண்டாடுவீங்க.. நான் எங்க அப்பன் வீட்டுக்கு பொட்டியக் கட்டிருவேன்..”
“கட்டு.. கட்டு.. இப்ப உங்க அண்ணன் மகளுக்கு கட்டிச் சோறக் கட்டிக்கிட்டு எப்புடிப் போகப் போறிங்கன்னு விளக்கம் சொல்லு..”
“நீங்க வரலையா..?”
“இது பொம்பளைக விசேசம்.. நான் என்னத்துக்கு..?”
“இத ஒன்னச் சொல்லிருங்க.. அண்ணன் வீட்டுல பஸ் ஏற்பாடு பண்ணியிருக்காங்க.. அதிலதான் போய் வரனும்..”
பேச்சு முடிந்து விட்டது என்பதற்கு அறிகுறியாக அம்புஜம் தரையில் கை ஊன்றி.. ‘அப்பாடா..’ என்ற பெருமூச்சுடன் எழுந்து கொள்ளப் போனாள்.. அதற்குள் அவசரமாக குறுக்கிட்ட திவ்யா.. தன் ஆவலை வெளிக்காட்டிக் கொள்ளாமல்..
“நானும் வரட்டுமாம்மா..?” என்று கேட்டாள்..
“நீ எதுக்கு..?” அம்புஜம் மறுத்தாள்..
“கல்யாணத்துக்கு மட்டும் நாங்க வரனும்னு கட்டாயப் படுத்தினீங்க..?”
“அது கல்யாணம்..! அண்ணன் வீட்டுக் கல்யாணத்துக்கு குடும்பத்தோட போய் நிக்கனுமுன்னு வரைமுறை இருந்துச்சு… இது அப்படியில்லடா கண்ணு.. கட்டிச்சோறு கொடுக்கிறதுக்கு கல்யாணமான பொண்ணுகதான் போகனும்.. நீ வீட்டில இரு..”
“இல்லம்மா.. அந்த ஊரப் பாக்கனும் போல இருக்கு..”
“இது என்னடி அதிசயமா இருக்கு..? அந்தக் கரிசல்காட்டுப் பூமியில என்ன இருக்கு..?”
‘எனது காதலன் இருக்கிறான்..’ பொங்கியது திவ்யாவின் மனது.. அதைச் சொல்ல முடியாமல் தவித்தவளைப் பார்த்து கண் சிமிட்டிய ரம்யா.. தமக்கைக்கு கை கொடுக்க முன் வந்தாள்..
“கரிசல் காட்டுப் பூமிதானம்மா.. பச்சைப் பசேல்ன்னு.. வயலும் வரப்புமா அழகா இருக்கும்..?”
“அதைச் சொல்லு.. அந்த ஊரு அழகான ஊருதான்..”
“அதப் பாக்கனுமுன்னு நாங்க ஆசைப்பட்டா அது தப்பா..?”
“நீயும் வரேங்கறியா..?”
“பின்னே..? என்ன விட்டுட்டு உங்க மூத்தமகள மட்டும் கூப்பிட்டுக்கிட்டுப் போகலாம்ன்னு பிளான் பண்ணியிருக்கீங்களா..? மூத்த மகதான் உங்க புள்ள.. இளைய மக எடுப்பார் கைப்புள்ளையா..? இருங்க.. இருங்க.. நான் கோவிச்சுக்கிட்டு நம்ம வீட்டு உச்சியிலே போய் உக்காந்துக்கறேன்..”
“ஏண்டி.. இந்த வசனத்தப் பேசின முருகன் பழனிமலை உச்சியிலதானேடி போயி உக்காந்தாரு..? நீ வீட்டு உச்சிங்கறே..?”
“மொட்டை மாடியத்தான்ம்மா அப்படிச் சொல்றா..”
“இவ இருக்காளே..” மனம் விட்டுச் சிரித்த அம்புஜம்..
“வந்து தொலைங்கடி..” என்று அனுமதி வழங்கி விட்டாள்..
“உனக்காக எம்புட்டு டயலாக்க அள்ளி விட வேண்டியிருக்கு பாரு..”
ரம்யா அலுத்துக் கொள்வதைப் போல பாசாங்கு பண்ணினாள்.. திவ்யாவின் மனம் அடித்துக் கொண்டது.. சுரேஷின் ஊருக்குப் போகப் போவதில் அவள் பரபரப்பாக உணர்ந்தாள்..
அந்த நாளும் வந்தது.. திவ்யாவின் தாய்மாமா வீட்டிலிருந்து புறப்பட்ட பஸ்ஸில் ஜன்னலோர சீட்டில் அமர்ந்திருந்தவளுக்கு இதைப் போல அவள் பயணித்த அந்த இரவு நேரப் பயணத்தின் நினைவு வந்தது..
அன்று அவள் அவளாக இருந்தாள்.. இன்று..?
‘என்னை நான் தொலைத்து விட்டேன்..’ அவள் விழிகளில் கண்ணீர் பெருகியது..
அவளைக் கண்டு தன்னுள் சேர்த்துக் கொண்டவனுக்கு அவள் நினைவு எட்டிக்காயாய் மாறிவிட்டதா..? அவள் மனதைக் களவாடியவன்.. அதில் உள்ள காதலை மறந்தானா..?
ஏக்கத்துடன் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டவளின் கையை ரகசியமாகக் கிள்ளினாள் ரம்யா..
“முட்டாள்..! அன்னைக்குப் போனது நைட் ஜர்னி.. உன்னயும் என்னையும் ஒரு சனமும் பாக்கலை.. இப்ப அப்புடியில்ல.. அன்னைக்கு கல்யாணமானவ ஏழே மாசத்தில கட்டிச்சோறக் கட்டிக்கிட்டு வர வைச்சிட்டா.. காலங்கார்த்தால சோத்துப் பானைகளோட பஸ்ஸில ஏறியிருக்கோம்.. சுத்தியிருக்கிற அத்தன சனமும் பஸ்ஸீக்கு வெளியே வேடிக்க பார்க்காம ஊருல இருக்கிற அத்தன பொறனியயும் பேசறதுக்கு ஒருத்தரு முகத்த ஒருத்தரு பாத்துக்கிட்டு வருதுக.. இந்த லட்சணத்தில உன்னோட விருமாண்டி பண்ணுற அழும்ப நினைச்சு நீ அழுதுக்கிட்டு வந்தேன்னு வைய்யி.. மொத்த சனமும் உன் முகத்தத்தான் உத்து உத்துப் பாத்து வைக்கும்.. தேவையா..?”
அது தேவையில்லை என்பதால் வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு ஜன்னல் வழி வெறித்துப் பார்த்த திவ்யா பெருமூச்சை விட்டாள்.. அதற்கும் ‘தடா’ சொன்னாள் ரம்யா..
“இப்ப என்ன கழுதைக்கு இழுத்துப் பெருமூச்சை விடற..? சுத்தி இருக்கிற சொந்த பந்தத்தில யாராவது அதைப் பாத்துட்டு.. ஏண்டி அம்புஜம்.. உன் மக இழுத்து இழுத்துப் பெருமூச்சை விடறாளே.. நம்ம மாமன் மகளுக்கும் நம்ம வயசுதான.. அவ கட்டிச் சோற திங்க வந்திட்டா.. நாம கட்டிச் சோறக் கட்டிக்கிட்டு போறோம்ன்னு ஏக்கப் படறாளோ..? காலகாலத்தில ஒரு கல்யாணத்தப் பண்ணி வைய்யி புள்ளன்னு பழமை பேசறதுக்கா இந்தப் பெருமூச்சை விடற..?”
“அடிதாண்டி வாங்கப் போற.. அவ படிப்பு ஏறாம.. பள்ளிக் கூடத்துப் பக்கம் தலையையே காட்டாம.. கல்யாணம் ஒன்னுதான் குறிக்கோளுன்னு கல்யாணக் கனவுகளோட வீட்டைத் தேச்சுக்கிட்டு உட்கார்ந்திருந்தா.. காலாகாலத்தில அவள விரட்டி விடுவோம்ன்னு கல்யாணத்தைப் பண்ணி வைச்சு பத்தி விட்டிருக்காங்க.. அவளையும் என்னையும் எப்புடிடீ இணை சேர்க்கிற..?”
“நான் சேக்க மாட்டேண்டி.. நம்ம சொந்த பந்தம் சேர்க்கும்..”
“அதுக்கு..?”
“அடக்கி வாசிங்கறேன்.. அதான் உன் ஆளு இருக்கிற தோப்பு, துரவுக்கு கட்டிச் சோறக் கட்டிக்கிட்டு கிளம்பி வந்துட்டோமில்ல.. அப்புறமும் என்னத்துக்கு பெருமூச்சை காலி பண்ணற..? பஸ்ஸ விட்டு கீழே இறங்கினதும்.. இதுகள்ளாம் நம்ம மாமன் மகளுக்கு நலங்கு வைக்கறேன் பேர்வழின்னு சந்தனத்தை அப்பி.. சாப்பாட்ட ஊட்டட்டும்.. நாம நைசா நழுவி.. விருமாண்டியோட வீட்டப் பாத்து ஓடிப் போயிரலாம்..”
“ஓடிப் போறதா..?”
“அதுக்கேண்டி இம்புட்டு ஷாக் ஆகிற..? விருமாண்டியும், நீயும் ஓடிப் போனாத்தான் தப்பு.. நானும், நீயும் ஓடிப் போனா தப்பேயில்லை..”
‘எப்படித்தான் இப்படிப் பேசறாளோ..’ திவ்யாவின் உதடுகளில் மெலிதான சிரிப்பு வந்தது.. அவளும் அப்படி இருந்தவள் தான்.. அந்த ஓட்டு மொத்த கலகலப்பையும் பட்டாப் போட்டு சுரேஷ் பறித்துக் கொண்டு விட்டானே.. அவள் என்ன செய்வாள்..?
“ஏய்ய்..” ரம்யாவின் முழங்கையை சுரண்டினாள் திவ்யா..
“சொல்லு..” கறாராக கேட்டாள் ரம்யா..
“சுரேஷ் வீட்டுக்கு நான் வர்றது சரியாப் படலைடி.. என்னை என்னன்னு சொல்லிக்குவேன்..?”
“அந்தக் கவலை உனக்கெதுக்கு..? அதான் விருமாண்டியோட தங்கச்சி என் கிளாஸ்மேட்டா இருக்காளே.. ரெண்டு பேரும் இணைபிரியாத சிநேகிதிகள்ன்னு சொல்லிக்கறோம்..”
“இல்லையேடி.. அவ வேற செட்.. நீ வேற செட்டுன்னு சொன்னியே.. அவ உன் கிளாஸிலதான் படிக்கிறாங்கிற விசயமே இப்பத்தானே உனக்குத் தெரிஞ்சது..?”
“அதுக்கென்ன இப்ப..? இவ என் ரகசிய சிநேகிதி..! போதுமா..? பாவமே.. விருமாண்டி கூடப் பேசாம விம்மி.. விம்மி.. அழுதுக்கிட்டு இருக்காளேன்னு ஹெல்ப் பண்ண வந்தா.. பெரிய உண்மை விளம்பி மாதிரி கிராஸ் கொஸ்டினாப் பண்ணிக்கிட்டு இருக்க..? ரொம்பக்
கேள்வி கேட்டேன்னு வைய்யி.. மதுரையைப் பாத்து போயிக்கிட்டே இருப்பேன்.. எப்படி வசதி..? வாயை மூட முடியுமா.. முடியாதா..?”
திவ்யா ஏன் முடியாது என்று சொல்லப் போகிறாள்..? அவள் தனது திருவாயை இறுக மூடிக் கொண்டாள்.. பஸ் சுரேஷின் கிராமத்தில் பிரேக் அடித்து நின்றது.. திவ்யா இதயம் படபடக்க ரம்யாவுடன் ஒட்டிக் கொண்டு அந்த ஊரில் கால் பதித்தாள்..