Chapter 02

வரப்பில் கிடந்த மண்வெட்டியை எடுத்துக் கொண்டு வாய்க்கால் நீரில் இறங்கிய சுரேஷ்.. தண்ணீரை வயலின் பக்கமாகத் திருப்பி விட்டுவிட்டு மண்வெட்டியை வரப்பில் போட்டான்.. அருகிலிருந்த வேப்பமரத்திலிருந்து வேப்பங்குச்சியொன்றை ஒடித்து மென்று கடித்துத் துப்பி பல் தேய்க்க ஆரம்பித்தான்..

ஆறடி உயரமும்.. அகன்ற மார்பும்.. சிவந்த நிறத்தவனுமாக இருந்த சுரேஷ் இருபத்தி ஆறு 

வயதில் இருக்கும் கட்டிளங்காளை.. கைலியை மடித்துக் கட்டி நின்றிருந்தவனின் தோற்றம் அந்தக் காலத்தின் அரசகுமாரன் ஒருவன் கம்பீரமாக நின்று கொண்டிருப்பதைப் போல இருந்தது..

“ஏம்ப்பா.. எவன்ப்பா அது..? நம்ம சுப்பையா பெத்த மகனா..?”

எதிரில் இருந்த வரப்பில் வேட்டியை வரிந்து முழங்கால் களுக்கு இடையில் கொடுத்து இறுக்கிக் கட்டி.. துண்டைச் சுருட்டி முண்டாசாய் கட்டி.. தோளில் மண்வெட்டியைப் போட்டபடி கன கம்பீரமாய் வந்த ராசு சப்தம் எழுப்பினார்… நமது சுரேஷின் பாசையில் சொல்வதாக இருந்தால்.. ‘உழவன் மகன் சவுண்டு விட்டார்..’

“வந்துட்டாங்கய்யா.. வந்துட்டாங்க..”

வேப்ப மரத்தின் பக்கமாகத் திரும்பி என்னவோ வேப்ப மரத்திடம் பேசுவதைப் போல வேப்பங்குச்சியுடன் சேர்த்து வார்த்தைகளையும் கடித்துத் துப்பி விட்டு.. ஒன்றும் அறியாத சாதுப் பிள்ளைபோல முகத்தை வைத்துக் கொண்ட சுரேஷ்..

“சுப்பையாவோட வயல்ல சுப்பையாவோட மகன்தான் தண்ணி பாய்ச்ச முடியும் மாமா..” என்று சொன்னான்.

“இதப்பாருடா.. எம்மச்சினன் மகன் எகனைக்கு மொகனையாய் பேசறத..! ஏனப்பு.. சுப்பைய்யா வயல்ல சுப்பையா மகன்தான் தண்ணி பாச்சனும்னு சட்டம் கிட்டம் போட்டிருக்காகளா என்ன..? பண்ணையாள் தண்ணி பாய்ச்சினா வயலு வேணாம்ன்னு சொல்லிருமா..?” என்று மீசையின் மேல் கைவைத்து முறுக்கியபடி இடிச்சிரிப்பொன்றை சிரித்து வைத்தார் ராசு..

‘இங்கன பாருடா.. நம்ம ராசுக்குட்டி மாமா என்னக் கலாய்ச்சுப்புட்டாராம்.. சிரிச்சு மகிழ்ந்து போறாரு..’

கடுப்பாகி கனலாகிப் போன சுரேஷ்.. அவரை மெல்ல முடியாமல் வேப்பங்குச்சியை மென்று துப்பி தன் கோபத்தை தணித்துக் கொண்டபடி..

“எந்தக் காலத்தில இருக்கீக மாமா..?” என்று கேட்டு வைத்தான்..

“என் மாப்பிள்ளைக்கு இதிலயும் சந்தேகமா..? ஏன் மாப்பிள்ள.. இப்படி இருந்தீகன்னா நான் எப்புடி உங்கள நம்பி என் பொண்ணக் கட்டிக் கொடுப்பேன்..?” மறுபடியும் ராசுவின் கை மீசையை முறுக்கி விட்டது.. அடுத்த இடிச்சிரிப்பும் வெளிவந்தது..

‘யோவ் மாமா..! உன் பொண்ணக் கட்டிக்கிற கொடுமை வந்தா நான் கூறாம சன்யாசம் வாங்கிக்கிட்டு ஓடியே போயிருவேன்..’

சுரேஷ் இமைக்காமல் ராசுவை பார்த்து வைத்த பார்வையை அந்த மனுசன் மனத்தாங்கல் என்று எடுத்துக் கொண்டு..

“பாருடா.. பொண்ணு இல்லைன்னு சொன்னதும் என் மாப்பிள்ள விசனப்படறத..” என்று சொல்லி வைத்தார்..

‘அட மங்குண்ணி மாமா..! உன்னக் கடிச்சுத் துப்பலாமான்னு கோபத்தில இருக்கேன்.. நீ என்னடான்னா.. உன்னோட எலிவால் சடை பொண்ணைக் கட்டிக்க முடியாத துக்கம்ன்னு சொல்ற.. ஆனாலும் உனக்கு இம்புட்டு தன்னம்பிக்கை ஆகாதுப்பா… இப்படியாப்பட்ட அழகுராணியை பெத்ததுக்கே உனக்கு இம்புட்டுக் குசும்புன்னா.. நிசமாவே அழகுராணிய பெத்து வைச்சிருந்தா உன்னக் கையில பிடிக்க முடியாது போ.. நான் விசனப்படறnன்னு நீ கண்டியா..’

“கவலைப் படாதீங்க மாப்பிள்ள..”

‘அப்ப நிச்சயம் இந்த ஆளு என்ன கவலயில தள்ளத்தான் போறாரு.. கன்பர்ம்டா சுரேஷீ..’

“என் பொண்ணு உங்களுக்குத்தான்..”

‘இந்தக் கொடுமைக்கு இந்த ஆளு ஒரு பாட்டிலு விசத்தக் கொண்டுவந்து என் வாயில கவுத்திருக்கலாம்..’

“விசனப்படாதீக..”

‘உன் பொண்ணு பேச்ச எடுத்து வைச்சீன்னா.. நான் விசனப் படாம என்னத்த செய்யறது..?’

சுரேஷ் கையில் இருந்த வேப்பங்குச்சி முழுவதையும் கடித்துத் துப்பி விட்டு.. வேறொரு குச்சியை ஒடிக்கப் போனான்.. ராசுக்குட்டி என சுரேஷ் மனதிற்குள் அன்புடன் (?) விளிக்கும் ராசுவாகப்பட்டவர் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல்..

“என்னை எந்தக் காலத்தில இருக்கீகன்னு கேட்டு வைச்சிட்டு.. நீங்க இன்னும் அந்தக் காலத்திலயே இருக்கீகளே மாப்பிள்ள.. இந்தக் காலத்தில உங்களப் போல காலேசுக்குப் போயி.. படிச்சு.. பட்டம் வாங்கி.. கவர்ன்மெண்ட் வேல பாக்கிற யாரு வேப்பங்குச்சியை வைச்சுப் பல்லத் தேய்க்கிறாங்க..? பேஸ்டு.. பிரஷீன்னுல்ல இருக்காக.. மாப்பிள்ள காசக் கஞ்சத்தனம் பண்ணி சேத்து வைக்கீறிகளோ..” என்று கேட்டு வைத்தார்..

‘இந்த ஆளு கேள்விக்குப் பொறந்து தொலைச்சிருக்காரு.. பெரிய கேள்வியின் நாயகனைப் போல.. விட்ட விடிகாலையில வாயைப் பிடுங்கி வனவாசம் போயி வைக்கிறாரு..’

மூச்சை இழுத்து விட்டுத் தன் கோபத்தை சமனப் படுத்திக் கொண்ட சுரேஷ்.. கையில் புதிதாக வந்திருந்த வேப்பங்குச்சியையும் மென்று துப்பியபடி..

“ஆமா மாமா.. அப்படிக் காசு பணம் சேத்துப் பரிசம் போட்டாத்தான நீங்க உங்க கட்டழகு மகள எனக்குக் கட்டிக் குடுப்பீக…” என்று சொல்லி வைத்தான்..

அவ்வளவுதான்.. முறுக்குமீசை ராசு மாமா.. இடியிடித்து சிரித்து வைத்தார்.. அவர் சிரிக்கும் வேகத்தில் வரப்பில் இருந்த சேற்றில் கால் வழுக்கி வயலில் விழுந்து வைத்து விடுவாரோ என்ற பேராசையுடன் சுரேஷ் அவரை உற்று உற்றுப் பார்த்து வைக்க.. அவரோ எவ்வளவுதான் இடியிடித்த சிரிப்பைச் சிரித்தாலும் வரப்பில் வழுக்கி வயலில் விழ மாட்டேன் என்று சொல்லாமல் சொல்கிறவரைப் போல.. கால்களை வரப்பில் அழுத்தமாக ஊன்றி நின்றிருந்தார்..

‘ம்ஹீம்.. மனுசன் வழுக்கி விழுகாத மகராசனா இருந்து தொலைக்கிறாரே..’ நிராசையுடன் வேப்பங்குச்சியை மென்றான் சுரேஷ்..

“ஆக.. மாப்பிள்ள என் பொண்ணக் கட்டிக்கத்தான் பணம் காச மிச்சம் பிடிச்சு சேத்து வைக்கிறீகன்னு சொல்லுங்க..”

ராசு மாமாவின் கிடுக்கிப்பிடியில் ‘ஆஹா..’ என்று உஷாரானான் சுரேஷ்…

“மாமாவுக்கு எப்பவுமே கேலிப் பேச்சுத்தான்..”

நொடிப் பொழுதில் அவர் பேச்சை அவன் கேலிப் பேச்சாக்கி விட்டதில் ராசு மாமாவிற்கு முகம் கருத்து விட்டது..

‘பயபுள்ள..! என்னதான் கண்ணி வைச்சாலும் எம்புட மாட்டேங்கிறானே..’ அவருக்கு ஆற்றாமையாக இருந்தது..

அந்தக் கிராமத்திலேயே மெத்தப் படித்த மேதாவி சுரேஷ் மட்டும்தான்.. வயலும்.. வயல் சார்ந்த வீடுகளுமாக.. மருதத் திணையை விட்டு வெளியே வர மனமில்லாத மண்ணின் மைந்தர்களின் மத்தியில் கிராமத்து உயர்நிலைக் கல்விப் படிப்பை முடித்துவிட்டு மேல்நிலைப் பள்ளிப் படிப்பைப் படிக்க சுரேஷ் பக்கத்து டவுனுக்கு சைக்கிள் மிதித்த போதே அவனுக்கான வியப்பு அந்தக் கிராமத்தில் ஆரம்பித்து விட்டது..

“ஏம்ப்பு சுரேஷீ..! உன்னோட அண்ணன்காரனே பத்தாவது வரைக்கும் படிச்சது போதும்ன்னு ஏருகட்டி உழுக வயலப் பாத்து போன பின்னாலே நீ என்ன அலுவலுக்கு சைக்கிள் ஓட்டிக் கிட்டு டவுனுப்பக்கம் போகிறவன்..?”

சுரேஷையும் சைக்கிளையும் உறுத்து உறுத்துப் பார்த்தபடி.. மேல்நிலைப் படிப்புக்கே பொறாமைப்பட்டது ஒரு கூட்டம்..

‘போங்கடா..’

சுரேஷ் இதிலெல்லாம் கரை கண்டவன்.. யாரிடம் எப்படிப் பேச வேண்டும் என்பதெல்லாம் அவனுக்கு அத்துபடி.. நக்கல்களை எடுத்து விட்டுவிட்டு.. ஒன்றும் தெரியாத சின்னக் கண்ணனைப் போல முகத்தை வைத்துக் கொள்வதில் சுரேஷை மிஞ்ச ஆளே கிடையாது.. உலகத்தில் உள்ள அத்தனை குசும்புகளையும் ஒட்டு மொத்தமாக பட்டாப் போட்டுக் கொண்டுள்ள பட்டாதாரர் சுரேஷ்தான் என்று அவன் பிறந்து வளர்ந்த அரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நண்டு, சிண்டு முதல்.. குடுகுடு தாத்தா வரை சான்றிதழ் வழங்குவார்கள்..

“அதுவா தாத்தா.. உங்க பேராண்டியப் போல.. காலயில முனியாண்டி விலாசில ஒரு வெட்டு வெட்டிட்டு.. மத்தியானம் டெண்டுக் கொட்டாயில சினிமாப் பார்த்துப்புட்டு.. சாயங்காலமா கம்மாக்கரையில சீட்டாடிப்புட்டு.. ராக்கோழி கூவுறப்ப வீட்டுப் பக்கம் எட்டிப்பாக்கலாம்ன்னு டவுனுப் பக்கம் போறேன்..”

அதற்க்கப்புறம் அந்தத் தாத்தா வாயைத் திறப்பாரா என்ன..? அப்பேற்பட்ட கிடுக்கிப்பிடி சுரேஷ்.. பிளஸ் டூவை முடித்து.. அதற்கும் மேலே டிகிரியையும் வாங்கியபோது..

“இருக்கிற பயலுகளுக்கே வேலயக் காணோம்.. இந்த லட்சணத்தில படிக்கப் போகிறேன் பேர்வழின்னு அப்பனையும்.. அண்ணன்காரனையும் கழனிப் பக்கம் பத்தி விட்டுட்டு பட்டத்த வாங்கி வைச்சு என்னப்பு செய்யப் போற..? ஆகாசத்தில பறக்க விடப் போறியா..?” என்று அதற்கும் நையாண்டி பேசிய ஊர்தான் அது..

சுரேஷ் எதையும் காதில் போட்டுக் கொள்ள மாட்டான்.. படிக்கும் நேரம் போக மீதி நேரங்களில் வயலில் இறங்கி வேலை செய்யத் தயங்கவும் மாட்டான்.. தன் போக்கில் சர்வீஸ் கமிசன் பரிட்சை எழுதியவனுக்கு கவர்ண்மென்ட் வேலை தேடி வந்ததில் ஊர் வாயை மூடிக் கொண்டது.. ஆனாலும் வேறு வகையில் சுரேஷீக்கு தலைவேதனை ஆரம்பமானது..

அதற்கான மிகச் சிறந்த உதாரணம்தான் ராசு மாமா..

0

Subtotal