Chapter 13

எங்கிருந்து இது போன்ற பாடல்களை அவன் தேடிப் பிடிக்கிறான் என்றிருந்தது திவ்யாவிற்கு.. அவள் ரம்யாவின் பக்கத்தில் கூட உட்காராமல் வாய்க்கால், வரப்புத் தகராறு இருப்பதைப் போலத் தள்ளி உட்கார்ந்து.. வசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர், சிறுமியரை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்..

புழுக்கம் அகன்று.. இதமான குளிர் காற்று உடலைத் தழுவியதில்.. அவள் உணர்ந்த புத்துணர்வை அவளது முகம் பிரதிபலித்ததை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் சுரேஷ்.. துருதுருப்பான முகமும்.. அலட்சியமாக பின்னலிடப் பட்டதால் கலைந்திருந்த முடியுமாக.. இயல்பான அவளின் தோற்றம் ரவிவர்மா வரைந்து வைத்திருந்த சித்திரத்தைப் போல இருந்ததாக அவன் மனம் கூறியது..

ஏதோ ஒரு வகையில் மற்ற பெண்களிடமிருந்து அவள் மாறுபட்டிருந்தாள்.. அந்த மாறுபாட்டைத் தேடிக் கொண்டிருந்த சுரேஷ் வெகு துல்லியமாக அதைக் கவனித்து விட்டான்.. ரம்யாவின் மீது கோபமாக உட்கார்ந்திருந்தவள் விரைவில் அதை மறந்து சிறுவர், சிறுமியரின் விளையாட்டில் ஆழ்ந்து போனதை கனிவுடன் அவன் ரசித்துக் கொண்டிருந்தான்..

“கண்ணாமூச்சி ரே.. ரே..”

கண்களைத் துணியில் கட்டியபடி மற்றவர்களைத் தேடிப் பிடித்து உற்சாக குதி குதித்த குழந்தைகளின் விளையாட்டில் ஈர்க்கப்பட்டவள்..

“நானும் வரேண்டா..” என்று அவர்களுடன் ஐக்கியமானதில் அவன் கண்கள் மின்னின..

கண்களைத் துணியால் கட்டிவிட்டு குழந்தைகள் தள்ளி நின்று கும்மாளமிட.. அவர்களின் சிரிப்புச் சத்தத்தில் துழாவிப் பிடிக்க முயன்றாள் திவ்யா..

“சாப்பிட வாங்க..” குரல் கேட்டது..

நலங்கு முடிந்ததில் பந்தி ஆரம்பமாகியிருந்தது.. குழந்தை களைச் சாப்பிட அழைத்ததில் அவர்கள் ஓடி விட்டார்கள்.. அதையறியாத திவ்யா குழந்தைகளைப் பிடிக்கிறேன் பேர்வழியென்று துழாவி சுரேஷை பிடித்து வைத்தாள்.. அவள் அருகில் வருவதில் கண்களில் மின்னலோடு.. உதட்டைக் கடித்துக் கைகளை மடித்துக் கட்டி அசையாமல் நின்ற சுரேஷ்.. அவளின் மென்மையான கைகளின் தொடுகையில் மின்சாரத்தை உணர்ந்தான்..

“பிடிச்சுட்டேன்..”

அவன் கைகளை இறுக்கிப் பிடித்தபடி கூவிய திவ்யா.. கண்களை மறைத்திருந்த துணியை அவிழ்த்துப் பார்த்தாள்..

‘இவனா..?’

அவன் கைகளை இறுக்கிப் பிடித்திருந்தவள் அவசரமாய் கைகளை உதறிவிட்டுப் பின்னால் நகர்ந்து கொண்டதில் அவன் உதட்டை மடித்துக் கடித்தபடி ஒர் தினுசாய் அவளைப் பார்த்து வைத்தான்..

“என்ன..? வம்பு பண்றீங்களா..?”

அவன் கைகளைத் தொட்டுவிட்ட அதிர்ச்சியில் படபடத்தாள் திவ்யா..

“என்னங்க இது..? அபாண்டமா இருக்கு.. நான் உங்ககிட்ட வம்பு பண்ணினேனா..? நீங்கதானேங்க என் கையைப் பிடிச்சு இழுத்தீங்க..?” நிதானமாக சுரேஷ் கேட்டு வைத்ததில்..

“என்னது..?” என்று அரண்டு விட்டாள்..

அவன் சொன்னது யார் காதிலாவது விழுந்து வைத்தால் அவள் நிலைமை என்ன ஆவது என்ற பதட்டத்தில் அவள் உடல் வெடவெடத்து விட்டது.. சுற்று முற்றும் பார்த்தாள்.. நல்ல வேளையாக.. எல்லோரும் பந்திக்கு முந்தியிருந்ததில் அவளது மரியாதை தப்பிப் பிழைத்தது..

‘அப்பாடி..’ ஆசுவாசப் பெருமூச்சு விட்டவள்..

“நான் கை நீட்டற இடத்தில ஏன் நின்னீங்க..?” என்று சுரேஷின் மீது பாய்ந்தாள்..

“இது சுதந்திர இந்தியா.. யார் வேணும்னாலும்.. எங்கே வேணும்னாலும் நிக்கலாம்.. நீங்க கை நீட்டற இடத்தில நிக்கக் கூடாதுன்னு சட்டம் ஏதும் போட்டிருக்கா..?”

“நல்லாத்தான் பேசறிங்க..”

“பேச்சு மட்டுமில்லைங்க.. ஆளும் நல்லாத்தான் இருக்கேன்னு நாலு பேரு சொல்லிக்கிறாங்க..”

“அந்த நாலு பேரும் உங்க அம்மா, அப்பா, அண்ணன், தங்கையா இருக்கும்..”

“பரவாயில்லையே.. என் பேமிலிமெம்பர்ஸ் யார் யாருன்னு கணக்கா கண்டுபிடிச்சு வைச்சிருக்கீங்களே.. யார்கிட்ட விசாரிச்சீங்க..?”

“ஹ…! உங்களைப் பத்தி நான் ஏன் விசாரிக்கனும்..?”

“ஒரு இண்ட்ரெஸ்டதான்..”

சுரேஷின் இண்ட்ரெஸ்டை அவனது கண்கள் வெளிப் படுத்தியதில் உதட்டைச் சுழித்து அழகு காட்டினாள் திவ்யா..

“நினைப்புத்தான்..”

“என் மேலயா..?”

“பேசாம போயிருங்க..”

“இல்லேன்னா என்ன செய்வீங்க..?”

“பஞ்சாயத்தைக் கூட்டிருவேன்..”

“தேங்க்ஸீங்க.. எனக்கு வேலை மிச்சமாகிருச்சு.. இப்பத்தான் என் கையைப் பிடிச்சு நீங்க இழுத்த கோராமைக்கு நியாயம் கேட்டுப் பஞ்சாயத்தைக் கூட்டலாமான்னு நினைச்சேன்.. எனக்கு வேலை வைக்காம நீங்களே அந்த வேலையைச் செய்கிறதாச் சொல்லிட்டிங்க.. சீக்கிரமா பஞ்சாயத்தைக் கூட்டுங்க.. நான் நியாயம் கேட்கனும்..”

அவர்கள் இருவரும் வழக்கடிப்பதைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்த ரம்யா எழுந்து வந்தாள்..

“என்ன..? பஞ்சாயத்து.. அது.. இதுன்னு காதில விழுந்துச்சே..” என்று விவரம் விசாரித்தாள்..

“நீங்களே இதுக்கு ஒரு நியாயத்தைச் சொல்லுங்க ரம்யா..” சுரேஷ் அவளை லேடி நாட்டாண்மை யாக்கினான்..

“சொல்லிட்டாப் போச்சு.. என்னன்னு சொல்லுங்க..”

“உங்க அக்கா என் கையைப் பிடிச்சு இழுத்திட்டாங்க.. அதை நீங்களும் பார்த்துக்கிட்டுத்தான இருந்தீங்க..?”

தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு சுரேஷ் கேட்ட கேள்வியில் ரம்யாவுக்கு சிரிப்பு வந்து விட்டது.. அவள் சிரிப்பை அடக்கியபடி..

“ஆமாமாம்..” என்று சுரேஷீக்கு ஜால்ரா போட்டாள்..

“பார்த்தீங்களா திவ்யா..”

“எதைப் பார்க்க..?”

“என்னைப் பாருங்க..”

“உங்களையெல்லாம் என்னால பார்க்க முடியாதுங்க.. மூஞ்சியும்.. முகரையும்..”

“பாருடா.. இவ்வளவு குமட்ட வைக்கிற மூஞ்சியா என் மூஞ்சி..? அந்த மூஞ்சியப் பிடிக்காமத்தான் என் கையைப் பிடிச்சு இழுத்தீங்களா..?”

அலட்டிக் கொள்ளாமல் சுரேஷ் மடக்கிய விதத்தில் திவ்யாவுக்கு வெறி.. வெறியாக வந்தது..

“அதுக்கு உங்க தங்கச்சியே கண் கண்ட சாட்சி..!” என்று அவன் மூக்கை உறிஞ்சியதில் அந்த வெறி அதிகரித்தது..

“இப்படிக் கல்யாணமாகாத கன்னிப் பையனோட கையைப் பிடிச்சு இழுத்திட்டிங்களே.. இனி என்னை யாரு கட்டிக்குவா..?” வராத கண்ணீரை அவன் துடைத்து வைத்ததில் தாங்க மாட்டாமல் பக்கத்து நாற்காலியில் கைக்கு வாகாக இருந்த ஏதோ ஒன்றைக் கைப்பற்றி அவனை நாலு சாத்து சாத்தினாள் திவ்யா.. அவன் அதைப் பிடித்து இழுத்ததில் அது வாகாக அவன் கழுத்தில் விழுந்து வைத்தது..

“பஞ்சாயத்தில இந்தத் தீர்ப்பத்தான் சொல்வாங்கன்னு முன் கூட்டியே என் கழுத்தில மாலயப் போட்டு நம்ம கல்யாணத்த நிச்சயம் பண்ணிட்டிங்க.. பார்த்தீங்களா..?”

சுரேஷ் சொன்ன பின்னால்தான் அவனை எதைக் கொண்டு அடித்தோம் என்பதையே உற்று நோக்கினாள் திவ்யா..

அது பூமாலை..!

“நலங்குக்கு வந்த மாலையில ஒன்னு எக்ஸ்ட்ராவா இருந்துச்சாம்.. எங்க அத்தை மகன் என் கழுத்தில போடவந்தான்.. அதை நீ போட்டா நல்லாயிருக்காது.. உன் தங்கச்சிதான் போடனும்னு சொன்னேனா.. அவன் இங்கேயே மாலையை போட்டுட்டு அவன் தங்கச்சியைக் கூப்பிட்டுக்கிட்டு வர ஓடினான்.. நீ முந்திட்ட…”

இலகுவாகச் சொன்ன சுரேஷின் கழுத்தை நெரித்த விடலாமா என்று யோசித்து அதைக் கைவிட்டாள் திவ்யா..

‘எதுக்கு வம்பு..? இவன் கழுத்தில கையை வைக்கிற நேரமாப் பாத்து யாராவது வந்து தொலைக்க.. இவன் அவங்ககிட்ட இவன் கழுத்தை நான் கட்டிக்கிட்டு நிக்கிறதாய் சொல்லி வைப்பான்.. வேண்டவே வேண்டாம்..’

சுரேஷிடம் மோதுவது என்பது வேலைக்கு ஆகாத ஒன்று என்று முடிவு கட்டிய திவ்யா.. வீட்டுக்குள் போகப் போனாள்..

“எனக்கு ஒரு வழியைச் சொல்லிட்டுப் போங்க..” என்றான் சுரேஷ்..

அடக்க முடியாமல் ரம்யா சிரித்து வைத்தாள்.. சுரேஷின் முகத்தில் மருந்துக்குக்கூடச் சிரிப்பில்லை.. தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு மற்றவர்களை வயிறு வலிக்கச் சிரிக்க செய்யும் அவனின் கில்லாடித்தனத்தில் திவ்யாவுக்கு லேசான ஈர்ப்பு வந்து தொலைத்தது..

“இப்ப என்னாங்கறிங்க..?”

“என் கையைப் பிடிச்சு இழுத்ததுக்கு நியாயம் சொல்லிட்டுப் போங்க..”

“நீங்க ஏங்க என் கையில அகப்படறதைப் போல நின்னீங்க..?”

“நல்ல கதையாய் இருக்கே.. கண்ணில துணியைக் கட்டினாலும் என்னைத் தேடி வந்து கையைப் பிடிச்சு இழுப்பீங்கன்னு நானென்ன கனவா கண்டேன்..? அதுதான் அப்படின்னா.. என் அத்தைமகள் என் கழுத்தில போட வேண்டிய மாலையை எடுத்து நீங்க போட்டுட்டிங்க.. ஏறக்குறைய பாதிக் கல்யாணம் முடிஞ்சதைப் போலதான்.. மீதிக் கல்யாணத்தை எப்ப வைச்சுக்கலாம்..?”

இப்போது ரம்யா வயிற்றைப் பிடித்துக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.. செய்வதறியாமல் கையைப் பிசைந்த திவ்யாவைத் தேடிக் கொண்டு அம்புஜம் வந்து விட.. திவ்யா அவளோடு ஒட்டிக் கொண்டு பந்திக்கு போகிறவளைப் போல தப்பித்துப் போய்விட்டாள்.. அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த சுரேஷின் உதட்டில் சிரிப்புப் படர்ந்தது..

அன்றைய இரவில் திவ்யாவுக்கு உறக்கம் வந்து தொலைக்க வில்லை.. கண்களை மூடினால் கழுத்தில் மாலையுடன் சுரேஷ் வந்து நின்றதில் அவள் பயந்து போய் எழுந்து உட்கார்ந்தாள்..

0

Subtotal