Chapter 17

உள்ளங்கைகளில் முகத்தைப் புதைத்து உட்கார்ந்திருந்தவளின் பக்கத்தில் யாரோ வந்து நிற்பதைப் போல இருந்தது.. பதறிப் போய் தலையை உயர்த்தினாள்.. எதுவுமே நடக்காததைப் போல இயல்பான புன்முறுவலுடன் நின்றிருந்தான் சுரேஷ்..

அவனைப் பார்த்ததும் பொங்கிய வெட்கம் கெட்ட மனதை திட்டித்தீர்த்தாள் திவ்யா.. ஐந்தடித்தால் வந்து விடுவேன் என்று சொன்னவனின் பேச்சை நம்பி.. நாலே முக்காலில் இருந்து அந்தப் பார்க்கில் பெஞ்சோடு பெஞ்சாக கோந்து போட்டு ஒட்டியதைப் போலக் காத்திருக்கிறாள்.. அவனோ.. வயதுப் பெண்ணைப் பார்க்கில் காத்திருக்கச் சொன்ன நினைவே இல்லாமல் ஆடி அசைந்து சாவாதானமாக ஆறு மணிக்கு வந்து நிற்கிறான்.. வந்தவனும் சும்மா இருக்காமல் பல்லை வேறு காட்டி வைக்கிறான்..

‘இவன் மனசில என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கான்..?’

பல்லைக் கடித்தபடி இமைக்காமல் அவனைப் பார்த்தாள் திவ்யா.. அதனால் துளிக்கூடப் பாதிப் படையாமல் புன்னகையைச் சிந்தியவனை என்ன செய்தால் தேவலாம் என்ற வெறி அவளுக்குள் கிளர்ந்தது..

“என்னடி.. இப்புடிக் கடிச்சுத் திங்கறதைப் போலப் பார்த்து வைக்கிறவ..? மாமன் அம்புட்டு அழகா இருக்கேனா..?”

அவன் கண்களைச் சிமிட்டினான்.. திவ்யாவின் கோபம் அதிகமானது..

‘காட்டான்..!’ மனதுக்குள் திட்டினாள்..

“கேக்கறேனில்ல.. பதில் சொல்லாம சும்மா உக்காந்திருந்தா என்ன அர்த்தம்..” அவளை உரசிக் கொண்டு உட்கார்ந்தான்..

‘எருமை மாடு..!’ அவனது உரசலில் அடுத்த திட்டு அவள் மனதில் வந்தது..

“ப்பா..! எம்புட்டு வாசனையா இருக்கிறேடி..” அவள் கூந்தலை முகர்ந்து வைத்ததில் திவ்யாவின் கடுப்பு இருக்கவா இல்லை பறக்கவா என்று கேள்வி கேட்டது..

‘இதை ஒன்னைக் கண்டு வைச்சிருக்கான்.. ஜல்சா பண்ணிச் சரசம் பேசியே கோபத்த பத்தி விட்டிருவான்..’

அவள் ஜாக்கிரதையாக நகர்ந்து உட்கார்ந்து கொண்டதில் அவனுக்கு சிரிப்பு வந்தது..

“ஏன் தள்ளி உட்காருகிறவ..?” ஒன்றும் அறியாத சின்னக் கண்ணனைப் போல கேள்வி வேறு கேட்டு வைத்தான்..

“வேற என்ன செய்ய..? வேணும்னா உங்க மடியில ஏறி உட்கார்ந்துக்கவா..?” பல்லைக் கடித்தபடி அவள் கேட்டதில்..

“இது பேச்சு..” என்று உற்சாகமானான் சுரேஷ்..

திவ்யாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.. அவளது கோபத்தைக் காட்ட அவள் கேள்வி கேட்டால்.. அவன் இஞ்சி தின்ற குரங்கைப் போலப் பல்லைக் காட்டி வைக்கிறான்.. இப்படிப் பேசி வைக்கிறவனிடம் எப்படி அவள் கோபத்தைக் காண்பிப்பது..?

“வா..வா..” சுரேஷ் தன் மடியைத் தட்டிக் காண்பித்து விட்டு பிடறியில் மொத்து வாங்கினான்..

“பிச்சுப் புடுவேன்.. படவா..! அஞ்சடிச்சா பார்க்கில இருக்கிற ஆளா நீங்க..? இப்ப மணி என்ன..?”

“வேலை இருந்துச்சுடி..”

“எனக்கு மட்டும் வேலையில்லையா..? வெட்டியா பார்க்கில வந்து உக்காந்திருக்கேனா..? நாலே முக்காலில இருந்து காத்திருக்கேன்..”

“உன்னை யாருடி நாலே முக்காலுக்கு வரச் சொன்னது..?”

சுரேஷின் இயல்பான கேள்வியில் திவ்யாவிற்கு அழுகை வந்து விட்டது..

“ஆமாமில்ல.. என்னை யாரும் நாலே முக்காலுக்கு வரச் சொல்லலைதான்.. நான்தான் ரோசம் கெட்டுப் போய் வந்து தொலைச்சேன்தான்..”

சுரேஷிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது.. அவன் இது போன்ற தளைகளுக்கெல்லாம் பழக்கப்படாதவன்.. தானே ராஜா.. தானே மந்திரி என்று இருப்பவன்.. அவனை திவ்யாவின் கண்ணீர் கட்டுக்குள் பிணைத்தது.. அவன் இளகினான்..

“இப்ப என்னத்துக்கு அழுகிறவ..?”

திவ்யாவின் கன்னத்தில் வழிந்த கண்ணீர் துளிகளை துடைக்க முற்பட்டான்.. அவளோ அவன் கையைத் தட்டி விட்டாள்.. அத்தோடு நிறுத்தாமல் ஒற்றைவிரலை உயர்த்தி எச்சரிக்கை வேறு செய்தாள்..

“தொட்டுத் தொட்டுப் பேசினா.. நடக்கிறதே வேற..”

சுரேஷின் வழக்கமான கோபம் அவன் மூக்கில் வந்து வக்கணையாய் உட்கார்ந்து கொண்டது..

“என்னடி நடக்கும்..?” முறைப்புடன் கேட்டான்..

‘ஆறு மணிக்கு வந்து நின்ன குத்த உணர்ச்சியே இல்லாம முறைக்கிறதப் பாரு..’ அவளுக்கு ஆங்காரமாக இருந்தது..

“வாடி.. போடின்னு கூப்பிடக் கூடாது..”

அவளது அடுத்த எச்சரிக்கையில் அவன் புருவங்கள் சுருங்கின..

“ஓ..” உதட்டைச் சுழித்து ஒரு மார்க்கமாக அவளைப் பார்த்தான்..

“வேற எப்படிக் கூப்பிடறதுங்க..?” வினயமாக அவளைக் கேட்டான்..

“மேடம்ன்னு கூப்பிடவா..?” அவனே எடுத்தும் கொடுத்தான்..

‘இவன் இருக்கானே..’ அவள் கோபத்தில் பேச்சு வராமல் தவித்தாள்..

“சொல்லுங்க மேடம்..” அவன் தூண்டியதில்..

“திமிரா..?” என்று வெடித்தாள் திவ்யா..

“திமிரா..? எனக்கா..? அதெல்லாம் உனக்குத் தாண்டி வரும்.. நான் காதலிக்கிறவள.. கட்டிக்கப் போகிறவள.. வாடி, போடின்னு தான் கூப்பிடுவேன்.. இஷ்டமில்லேன்னா முதல்லேயே சொல்லியிருக்கலாமில்ல..? இத்தன நாளா இந்தக் காட்டான் பேசறது இனிச்சுச்சுல்ல.. இப்ப மட்டும் கசக்குதாக்கும்..?”

அவன் கேள்வியில் திவ்யாவின் முகம் சிவந்து விட்டது..

“காட்டானா..?” அவள் விழித்தாள்..

‘நான் மனசுக்குள்ள நினைச்சது இவனுக்கு எப்புடித் தெரிஞ்சது..?’

“உன் மனசப் படிக்க எனக்குத் தெரியாதாக்கும்..?” அமர்த்தலாக கேட்டு வைத்தான் சுரேஷ்..

“அதான..! யாரு நாம..?” கிண்டலாக அவளும் கேட்டு வைத்தாள்..

“கட்டிக்கப் போற காதலனும்.. காதலியும்ன்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்.. வேற ஏதாவதா உன் மனசில தோணினா.. அதையும் சொல்லிரு..” இறுக்கமான முகத்துடன் அவனும் கேட்டான்..

“அதையும் சொல்லிருன்னா..?” சண்டைக் கோழியாய் சிலிர்த்து வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வந்தாள் திவ்யா..

“ஏய்ய்.. அடங்குடி..” ஒற்றை வார்த்தையில் அவளை எதிர் கொண்ட சுரேஷின் தெனாவெட்டில் திவ்யாவின் ரத்த அழுத்தம் எகிறியது..

“என்ன சொன்னீங்க..?” அவள் பாய்ந்தாள்..

“என்னத்தச் சொன்னேன்..?” அவன் அலட்டிக் கொள்ளவே இல்லை.

“யாரைப் பாத்து அடங்குடின்னு சொன்னீங்க..?”

“நிச்சயமா அந்த மஞ்சக்கலர் சுரிதாரப் பாத்துச் சொல்லலை..”

சுரேஷின் விரல் சுட்டிய திசையில் இருந்த மஞ்சள் கலர் சுரிதார் அவனைப் பார்ப்பதும்.. கூட இருந்த தோழியிடம் எதையோ கிசுகிசுப்பதும்.. மீண்டும் அவனைப் பார்ப்பதுமாக இருந்ததில் ஏற்கனெவே எகிறியிருந்த திவ்யாவின் ரத்த அழுத்தம் கொதி நிலையை அடைந்தது..

“அவளப் பாக்கத்தான் லேட்டா வந்தீங்களா..?” அவள் போர் முரசைக் கொட்டி விட்டாள்..

“யாருடி இவ..?” சுரேஷ் எரிச்சலடைந்தான்..

“ஓ..!” இப்போது திவ்யா உதட்டைக் குவித்து.. ‘ஓ’ போட்டாள்..

“என்ன..?” புருவங்களை உயர்த்தினான் சுரேஷ்..

“அம்புட்டுத் தூரத்துக்கு வந்தாச்சா..?” ஒரு தினுசாக கேட்டு வைத்தாள்..

“எம்புட்டுத் தூரத்தில வந்திருக்கேன்..” சுரேஷிற்குப் புரியவில்லை..

“ஐயாவுக்கு நான் யாருன்னு கூடத் தெரியலைல்ல..?”

“எவடி இவ..?”

திவ்யாவின் ஒரு தினுசான கேள்வியில் எரிச்சல் அதிகமான சுரேஷ் தான் கேட்டு வைத்தக் கேள்வியையே மாற்றிக் கேட்டு வைத்ததில் அங்கே ஒரு புயல் பூகம்பமானது..

“நான் எவன்னு உங்களுக்கு அடையாளம் சொல்லவா..?”

“ஏன்..? அந்த அடையாளத்தை நானே பாத்துக்க மாட்டேனா..?”

சுரேஷின் பார்வை மேய்ந்த மேய்ச்சலில் கையில் இருந்த புத்தகத்தால் அவன் மண்டையில் ஒரு போடு போட்டாள் திவ்யா..

“பார்வயப் பாரு.. அச்சு அசல் வில்லன் பார்வை..”

“அதாண்டி வசதி.. ரேப் பண்ண யோசிக்கவே வேணாம்.. கதாநாயகனா இருக்கிறதுதான் கஷ்டம்டி.. ஹீரோயின் பின்னாலே நாயைப் போல நாக்கத் தொங்கப் போட்டுக்கிட்டு ‘லோ.. லோ..’ன்னு சுத்தனும்.. அவ ‘ச்சீ.. போ.. நாயே..’ன்னு காறித் துப்பினாலும்.. துடைச்சுப் போட்டுட்டு ரோசம் கெட்டுப் போய் அவ முன்னாலே மண்டி போட்டு.. ஒத்த ரோசாவ நீட்டி.. ‘அம்மா.. தாயே.. எனக்குக் காதல் பிச்சை கொடும்மா’ன்னு கெஞ்சனும்.. கருமத்தில, அந்த ஒத்தை ரோசாவும் சிகப்பு ரோசாவா இருந்து தொலைக்கனும்.. வேற கலர்ல வாங்கிட்டு வந்திட்டா.. அதுவும் வம்பாப் போயித் தொலைச்சிரும்..”

“அதான.. சாருக்கு சிகப்பு ரோஜான்னா பிடிக்காதே.. மஞ்சள் ரோஜான்னாத்தானே வளர இஷ்டமாயிருக்கும்.. எந்தா சாரே..! யான் பறஞ்சது சரியல்லோ..”

அப்போதுதான் அவள் போட்டிருந்த சுரிதாரைப் பார்த்து வைத்தான் சுரேஷ்.. சிகப்பு வண்ணத்தில்.. வெள்ளைக் கற்கள் பதிக்கப்பட்ட காட்டன் சுரிதாரில் தேவதையைப் போல இருந்தாள் திவ்யா..

“அடியே மலையாள பகவதி..! உன்னைப் பிடிக்காதுன்னு எந்த மடையனாவது சொல்லுவானாடி..? பிடிச்சுத் தொலைச்சிருக் கிறதாலதான இப்புடி மண்டி போட்டுக்கிட்டு இருக்கிறேன்..”

அவளது கன்னத்தை அவன் வருடியதில் திவ்யாவுக்கு என்னென்னவோ மாற்றங்கள் ஏற்பட்டுத் தொலைத்தன.. மனத்தாங்கலுடன் அவன் கையைத் தள்ளப் போனாள்.. தள்ள முயன்றவளின் கையை கெட்டியாகப் பிடித்துத் தன் உதட்டில் ஒற்றி முத்தமிட்டான் சுரேஷ்.. திவ்யாவின் மேனி சிலிர்த்தது..

“ஊருக்குத்தாண்டி நான் தெனாவெட்டுக்காரன்..! உனக்கு நான் அடிமைடி.. கிளம்பறப்போ வேலை வந்துருச்சுன்னா நான் என்னடி பண்ணுவேன்..?”

இறைஞ்சிய அவன் வார்த்தைகளில் காத்துக் கிடந்த கடுப் பெல்லாம் பறந்து போக அவன் மார்பில் சாய்ந்த திவ்யாவிற்கு அவன்தான் அவளை அடிமையாக்கி வைத்திருக்கிறான் என்று தோன்றியது..

0

Subtotal