Chapter 19
“அவங்களா..? அவங்க பிரண்ட்லி டைப்புடி கீர்த்தனா.. சிரிச்ச முகமா பேசிப் பழகுவாங்க.. சீனியர்ங்கிற பந்தாவே இருக்காது.. படிப்பு முதற்கொண்டு காலேஜோட கல்ச்சுரல் புரோகிராம் வரைக்கும் எல்லாத்திலயுமே பர்ஸ்ட்டா இருப்பாங்க.. ஆனா.. அதுக்கான ஹெட் வெயிட் கொஞ்சம்கூட இருக்காது.. நீ லக்கிதாண்டி..”
கீர்த்தனாவின் நண்பிகள் திவ்யாவைப் பற்றிய அவர்களின் அபிப்ராயத்தைச் சொன்னபோது கீர்த்தனாவுக்குப் பெருமையாக இருந்தது..
“என்னையேண்டி சொல்ற..? எங்க சின்னண்ணன்தான் லக்கி..”
“நாத்தனார்கிட்டப் பிரண்டைப் போலப் பேசிப் பழகற அண்ணி கிடைக்கிறதுக்கும் புண்ணியம் செய்திருக்கனும்டி ரம்யா.. எங்க அண்ணியும் இருக்காங்களே.. ம்ஹீம்.. அவங்க கையில கண்ணுக்குத் தெரியாத கத்தரிக்கோல் எப்பவும் இருக்கும்..”
கீர்த்தனாவின் தோழி விட்ட பெருமூச்சில்.. அவள் போன பின்பு அவளுடைய காலடி மணலை அள்ளிக் கொண்டாள் கீர்த்தனா..
“சுத்திப் போடனும் அண்ணா.. அம்புட்டுக் கண் வைச்சிட்டா..”
சுரேஷிடம் சொன்னதைப் போலவே வீட்டுக்குப் போனதும் அவளுக்கும் சுரேஷிற்கும் சேர்த்துச் சுற்றிப் போட்ட பின்புதான் அவள் மனதுக்கு அமைதியாக இருந்தது..
அந்த அளவுக்கு திவ்யாவைப் பிடித்துப் போனதினால்தான் சுரேஷின் லீலா வினோதங்களைப் பற்றி திவ்யாவிடம் சொல்லி வைத்தாள் கீர்த்தனா..
“ஆளு பாக்கத்தான் ‘ஜெண்டில்மேன்..’ உள்ளார பார்த்தீங் கன்னா.. இல்லாத பொறுக்கி வேலையை எல்லாம் செய்துக்கிட்டு இருப்பான்.. எதுத்த வீடு.. பக்கத்து வீடுன்னு தெருவில ஒரு வீட்டை விட மாட்டான்.. அதில இருக்கிற அம்புட்டு வயசுப் பொண்ணு களோட ஜாதகத்தயும் பிட்டுப் பிட்டு வைப்பான்.. இவன்தான் இப்படின்னா.. அதுக இவனுக்கு மேலே எட்டடி பாய்வாங்க..”
“என்ன செய்வாங்க..?”
“சைட்டுத்தான்.. வேற என்ன..? இவன்தான் கிட்ட வந்தா வள்ளுன்னு பிடுங்கி வைச்சு ‘ளொள்ளு’ பண்ணுவானே..”
“அப்படியா..?”
திவ்யாவுக்கு சிரிப்பு வந்தது.. என்ன கேட்டகிரி இவன் என்று நினைத்துக் கொண்டாள்.. அப்படி ஒருத்தியிடமும் சிக்காதவன் எதற்காக விருப்பத்துடன் வலை போட்டு அவளிடம் சிக்கிக் கொண்டான்..?
“அதுதாண்ணி எனக்கும் ஆச்சரியமா இருக்கு..” என்றாள் கீர்த்தனா..
“உங்க அண்ணனைப் பத்தின எல்லாமும் ஆச்சரியம்தான்..”
“ஆமாண்ணி.. எவளாவது ஒரு மார்க்கமா இவனப் பாத்து வைச்சா இவன் நக்கலா பல மார்க்கமா பாத்து வைப்பான்.. இவன் குணம் தெரிஞ்ச யாரும் கிட்டக்கூட வர மாட்டாங்க.. எட்டி நின்னுதான் வாய் கொடுப்பாங்க.. அதயும் இவன் கிழிக்கிற கிழியில வாயை மூடிக்கிட்டு ஓடியே போயிருவாங்க..”
“உங்க அண்ணனுக்கு செம கொழுப்பு.. வேற என்ன..?”
அதை ரசித்து திவ்யா சொன்ன விதத்தில் சுரேஷைத் திட்டுகிறாளா.. இல்லை.. கொஞ்சுகிறாளா என்று புரியாமல் விழித்தாள் கீர்த்தனா..
“அவன் அப்படித்தான்.. அப்பேற்பட்ட அழும்பு பிடிச்சவனக் காதலிச்சிருக்கீங்க.. பாத்து.. பத்திரமா இருந்துக்கங்க..”
திவ்யாவுக்குள் லேசான பயம் வந்தது.. எந்தக் கணிப்பிலும் அடங்காத சுரேஷ் அவளுடைய காதலுக்குள் அடங்குவானா என்ற அச்சத்தில் அவள் மனம் துடித்தாள்..
“ஏன் கீர்த்தனா.. உங்க அண்ணன் எதையுமே சீரியஸா எடுத்துக் மாட்டாரா..?” நடுக்கத்துடன் கீர்த்தனாவிடம் கேட்டாள்..
“உண்மையாச் சொல்லனும்னா.. எனக்கும் அது தெரியலை அண்ணி.. ஊரில இல்லாத ‘லந்து’ பண்றவன்.. இருட்டின பின்னாடி.. மொட்டை மாடியில பாய் விரிச்சுப் படிச்சு கண்ணதாசனோட பழைய பாட்டப் போட்டுக் கேட்டுக்கிட்டு இருப்பான்.. அப்ப அவன்கிட்டப் பேசப் போனா பழியாக் கோபப் படுவான்.. இவனா நம்ம ஜாலிலோ ஜிம்கானா சுரேஷ் அண்ணன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கும்..”
திவ்யாவின் மனதில் எவனோ ஒருவன் வாசிக்கிறான் என்ற பாடல் ஒலித்தது.. அதில் ஆழ்ந்து போன சுரேஷின் முகம் நினைவில் எழுந்து மலையளவு தைரியத்தை அவள் மனதுக்குள் கொடுத்தது..
அப்பேற்பட்ட ஆழ்ந்த ரசனையுள்ளவனா அவளது காதலை அலட்சியப் படுத்தி விடுவான்..?
“நான் ஏரிக்கரை மேலிருந்து..
எட்டு திசை பார்த்திருந்து..”
அவள் வாய் விட்டுப் பாடிக் கொண்டாள்.. மனம் சிறகைவிட லேசானதாக மாறியிருந்தது.. சுரேஷைப் பற்றிய இதமான நினைவுகளுடன் காலேஜை விட்டு வெளியே வந்தவளை எதிர் கொண்டான் சோமன் என்று சுரேஷால் விளிக்கப்படும் சோமசுந்தரம்..
“நீங்க.. நீங்க..” அவன் தந்தியடிக்க..
“நீங்க சோமன்தானே..?” என்று நெற்றியடியாக அவள் கேட்டு வைத்தாள்..
‘பயபுள்ள..! அவன் கூப்பிடற பேர.. அவனோட ஆளுகிட்டயும் போட்டுக் கொடுத்திருக்கான் போல..’ சோமசுந்தரம் காண்டானான்.
“அப்புடின்னு அந்த பயபுள்ள மட்டும்தான் சொல்லு வான்ம்மா.. என்னைப் பெத்த ஆத்தா, அப்பன் எனக்கு வைச்ச பேரே வேறம்மா..” பல்லைக் கடித்தபடி சொன்னான் அவன்..
“அடடா..! உங்களைப் பத்தின பேச்சு வர்றப்பல்லாம் அவரு ‘சோமன்..’ ‘சோமன்..’ அப்படின்னே சொல்லுவாரா.. அதனால உங்க பேரே அதான்னு நினைச்சுப்புட்டேண்ணா..” திவ்யா ஏகத்துக்கும் வருத்தப்பட்டாள்..
“அவன் சொன்னதுக்கு நீயென்னம்மா பண்ணுவ..”
“உங்க பேரு சோமன் இல்லைன்னா வேற என்னண்ணா..?”
திவ்யாவின் கேள்வியில் எனக்குப் பெயரே இல்லைம்மா என்று சொல்லி விடலாம் போல கடுப்புக் கிளம்பியது சோமசுந்தரத்திற்கு..
‘அவன்தான் அப்படின்னா அவன் காதலி அவனுக்கு மேலே நக்கலா பேசறாப்புலயே..’
“என்னண்ணா எதுவும் சொல்ல மாட்டேங்கறிங்க.. உங்க பேர உங்களாலேயே சொல்ல முடியலையா..?”
திவ்யா சந்தேகத்துடன் அவனைப் பார்த்த பார்வையில் அவனது பெயரைக் குறித்த பல அனுமானங்கள் இருந்ததில் டென்சனாகிப் போனான் சோமசுந்தரம்..
“ஏண்ணே.. பாவாடை.. கீவாடைன்னு பேரு வைச்சிட்டாங் களா..? இல்லே.. வேற ஏதாவது..?”
திவ்யாவின் கருணை மிகுந்த கேள்வி அவளது அடுத்த அனுமானங்கள் என்னவாக இருக்கக்கூடும் என்று அறிவுறுத்தியதில் சோமசுந்தரம் அதற்கு மேலும் தாமதிக்காமல் அலறியடித்துக் கொண்டு..
“இல்லைம்மா.. இல்லை.. நீ பாட்டுக்கு எதையாவது யூகம் பண்ணித் தொலைச்சிராதேம்மா.. எனக்கு அழகுப் பேரும்மா..” என்றான்..
“அழகுப் பேரா..?”
“ஆமம்மா.. ஆமாம்.. சோமசுந்தரம்ன்னா அழகுப் பேருதான.. சுந்தரன்னா.. அழகன்னு அர்த்தம்மா..”
இதைச் சிரித்தபடி சோமசுந்தரம் சொன்ன விதத்தில் திவ்யா விளக்கெண்ணையைக் குடித்ததைப் போல ஆகி விட்டாள்..
‘இவன் அழகனா..?’
ஏற இறங்க அவள் பார்த்த பார்வையே அவளது நினைவைச் சொல்லி விட்டதில்.. சோமசுந்தரம் மிளகாயைக் கடித்ததைப் போல ஆகிவிட்டான்..
‘அந்த சுரேஷ் மட்டும் மன்மதன்..! நான் மட்டும் சோமனா..?’
மனதில் கடுப்பை மறைத்துக் கொண்டு புன்னகை மன்னனாக முப்பத்திரண்டு பற்களையும் காட்டி இனித்தபடி.. பாச மழையைப் பொழிய ஆரம்பித்தான் சோமனாகப்பட்ட சோமசுந்தரம்..
“என்னம்மா அப்படிப் பாக்கிற..? அண்ணனுக்குப் பேர பொருத்தமா வைச்சிருக்காங்கன்னு பாக்கறியா..?” அவன் தழுதழுக்க..
“இல்லேண்ணா.. காக்கைக்கும் தன் குஞ்சு.. பொன் குஞ்சுங்கிற பழமொழியில எம்புட்டு உண்மையிருக்குன்னு பிரமிச்சுப் போயி பாக்கறேண்ணா..” என்று இரக்கமில்லாமல் சொன்னாள் திவ்யா..
சோமசுந்தரம் முகம் கருத்தான்.. அவனது மனதை மறைத்து திவ்யாவிடம் இயல்பாகப் பேச அவன் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது.. மனதை மறைத்துப் பேசுவது ஒரு கலை.. அதில் கை தேர்ந்தவனான சோமசுந்தரம்..
“தங்கச்சிக்கு ரொம்பத்தான் அறிவு..” என்று புளகாங்கிதப் பட்டுப் போனான்..
“அப்புறம்ண்ணா.. உங்க பிரண்டுக்கு எப்ப டிரெயினிங் முடியுமாம்..” சாதாரணமாகக் கேட்பதைப் போல கேட்டாள் திவ்யா.
அவள் விழிகளில் தெரிந்த எதிர்பார்ப்பையும்.. ஏக்கத்தையும் இனம் கண்டு கொண்ட சோமசுந்தரத்திற்கு பொறாமையாக இருந்தது..
“ஊருபட்ட போக்கிரிக்கு மாட்டியிருக்கிற ஃபிகரப் பாருடா.. செமக் கட்ட..”
இப்படி ஒருநாள் திவ்யாவைப் பற்றிக் கூட வேலை பார்த்த மற்றொரு நண்பனிடம் சோமசுந்தரம் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டு விட்ட சுரேஷ் அவனை புரட்டி எடுத்து விட்டான்..
“யதார்த்தமா பேசிப்புட்டேன் மாப்புள.. அதுக்காக இப்புடியாடா சட்டுன்னு மேல கைய வைப்ப..?” சோமசுந்தரம் சமாதானம் சொன்னபோது சுரேஷ் அவ்வளவு எளிதாக சமாதானமாகி விடவில்லை.. ஒற்றை விரலை உயர்த்தி சோமசுந்தரத்தை எச்சரித்தான்..
“நீ என்ன ஊருபட்ட போக்கிரின்னும் சொல்லு.. இல்ல.. ஊரு மேயறவன்னும் சொல்லு.. ஏய்ய்.. என்னைப் பத்தி எதை வேணும்னாலும் சொல்லிக்கடா.. ஆனா.. திவ்யாவப் பத்தி இன்னொரு தடவ ஃபிகரு.. செமக் கட்ட.. அப்படி இப்புடின்னு சொன்ன.. நான் மனுசனா இருக்க மாட்டேன்.. சொல்லிட்டேன்.. பாத்து சூதானமா பேசிப் பழகு.. இல்லேன்னா உடம்பில ஒரு எழும்புகூட மிஞ்சாது.. இந்த சுரேஷ யாருன்னு நினைச்சே..?”
சூதானமாகத்தான் இருந்தான் சோமசுந்தரம்.. அந்த சூதானம் சுரேஷ் கண்பார்வையிலிருந்து மறைந்திருந்ததில் காணாமல் போகவா என்று கேட்டு வைத்தது..