Chapter 20
‘உனக்கு உன் மச்சான் எப்பத் திரும்பி வரப் போறான்னு தெரியணுமா..?’
கருவிக் கொண்டான் சோமசுந்தரம்.. சுரேஷைப் போன்ற கடைந்தெடுத்த போக்கிரிக்கு தங்க விக்கிரகம் போல ஒரு காதலி கிடைத்து விட்டதில் அவன் மனதில் வண்டி வண்டியாப் பொறாமை குவிந்திருந்தது.. அதன் அனல் தாங்காமல் அவன் பற்ற வைக்கும் வேலையை வெற்றிகரமாக செயல்படுத்த ஆரம்பித்தான்..
அவனால் சுரேஷிற்கு அழகான காதலி கிடைத்து விட்டதைக் கூடத் தாங்கிக் கொள்ள முடிந்தது.. அந்த அழகான காதலி சுரேஷிற்காக ஏங்கிய ஏக்கத்தை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை..
‘அடியேய் சுரேஷீ.. இருடி.. உன்னப் பத்தி உன் ஆளுகிட்ட சொல்ல வேண்டியதச் சொல்லிக் கோர்த்து விடறேன்..’
அவன் நம்பியாரைப் போலக் கையைப் பிசைந்தபடி தலையைச் சாய்த்துக் கருடபார்வை பார்த்ததில் திவ்யா பயந்து போய் பின் வாங்கினாள்..
“என்னண்ணா.. இப்புடி முழிக்கறிங்க..? சும்மாவே உங்க முகத்தப் பாத்தா பயமா இருக்கும்.. இதில இப்புடி வேற முழிச்சீங்கண்ணா.. மயக்கம் வந்துரும்போல படபடன்னு வருதுண்ணா.. நான் கிளம்பறேன்..”
அவசரமாக அவள் அங்கிருந்து ஓடிவிட யத்தனித்ததில் சோமசுந்தரம்.. நம்பியாரின் பில்ட்-அப்பை அவசரமாக கைவிட்டு பழைய நிலைமைக்குத் திரும்பினான்.
“அட இரும்மா.. சும்மா யோசிச்சா இப்புடியா பயப்படுவ..?”
“யோசிச்சீங்களா..? எதுக்கு..?” அப்பாவியாய் கேட்டாள் திவ்யா..
“என்னம்மா இப்புடிக் கேட்டுப்புட்ட..?” அவன் எகிறினான்..
‘அப்படி கேட்கக்கூடாத கேள்வியாக எதைக் கேட்டுப் புட்டேன்..’ திவ்யா திருதிருத்தாள்..
“நீ பாட்டுக்கு சுரேஷீக்கு எப்ப டிரெயினிங் முடியுமாம்ன்னு கேட்டு வைச்சிட்ட.. அதுக்கு எப்புடிப் பதில் சொல்றதுன்னு நான் யோசிக்க வேணாமா..?”
“இதில யோசிக்க என்னண்ணா இருக்கு..?”
“நிறைய இருக்கும்மா.. எல்லாத்தையும் உன்கிட்ட எப்புடிச் சொல்றதுன்னுதான் யோசிக்கறேன்ம்மா.. சொன்னா நீ தாங்குவியா..?”
சோமசுந்தரத்தின் குரூரமான கேள்வியில் மனம் பதைத்துப் போனாள் திவ்யா.. அவளால்தாங்க முடியாத எதைக் கூறப் போகிறான் அவன்..?
“என்னண்ணா..?” குரல் நடுங்கக் கேட்டாள் திவ்யா..
“என்னத்தன்னு சொல்லுவேன்ம்மா.. பயபுள்ள.. ஆளு பாக்கறதுக்கு டக்கடரா இருக்கானில்ல.. கூடவே நையாண்டிப் பேச்சு வேற.. பலாப்பழத்த ஈக்கூட்டம் மொய்க்கிறதப் போல இவனைச் சுத்தியும் பொம்பளப் புள்ளைக கூட்டம் மொய்க்கத்தான் செய்யும்..?”
“அண்ணா..?”
“அட.. இவனாவது கொஞ்சம் விலகி நிக்கலாமில்ல.. ஊஹீம்.. நம்மபய அதச் செய்ய மாட்டான்.. அவுக ஒரு பங்கு அப்பினா.. பதிலுக்கு இவன் பத்து மடங்கா அப்பித் தொலைப்பான்..”
அந்த ‘அப்பு’ என்ன அப்பு என்பதை மட்டும் வாகாக மறைத்து விட்டான் சோமசுந்தரம்.. சுரேஷிடம் பலமுறை ‘அப்பு’ வாங்கி கன்னம் பழுத்தவன் அவன்.. சுரேஷின் ‘அப்பு’ எத்தகையது என்பதைப் பற்றி அவனை விடத் தெளிவாகவும்.. விரிவாகவும் எவராலும் சொல்ல இயலாது என்ற மிகப்பெரும் உண்மையை அறியாதவளாக மருண்டாள் திவ்யா..
“என்னண்ணா இப்படிச் சொல்கிறீங்க..?”
“உண்மை எதுவோ அதைச் சொல்லித்தான ஆகனும்..? இந்த சோமசுந்தரத்துக்கு மறைத்துப் பேசத் தெரியாதே தங்கச்சி..”
திவ்யாவின் மருண்ட விழிகளில் அச்சம் வந்தது.. சுரேஷை கட்டிப் போடும் காதல்கயிறு அவளிடம் இருப்பதை உணராத அந்தப் பேதை மலங்க.. மலங்க.. விழித்தாள்..
“ம்ஹீம்.. உன் கதி இப்படியா ஆகனும்..?”
சோமசுந்தரம் விட்ட பெருமூச்சில் அவள் கதிகலங்கிப் போனாள்.. அந்தப் பெருமூச்சு.. அவளைப் போன்ற ஒரு பேரழகி அவனுக்குக் கிட்டாமல் சுரேஷிற்கு கிட்டித் தொலைத்து விட்டாளே என்ற ஆற்றாமையினால் எழுந்தது என்பதை அவள் அறியவில்லை..
“ஏண்ணா..? என் கதிக்கு என்ன..?”
“என்ன தங்கச்சி இப்புடிக் கேட்டுப்புட்ட..? இந்த டிரெயினிங்கயே எடுத்துக்க.. சுரேஷ் நினைச்சிருந்தா இந்த டிரெயினிங்கை ஒரு மாசத்திலேயே முடிச்சுப்புட்டு ஓடி வந்திருக்கலாம்.. ஆனா அவன் நினைக்க மாட்டான்.. அதுதாம்மா வன்கொடுமை..”
“நிஜமாவா சொல்கிறீங்க..?”
அவனைப் பார்க்க முடியாத தாபத்தில் மூன்று மாதங்களைக் கடக்க முடியாமல் தவித்துப் போயிருந்தவளுக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது..
அவளுக்கு இருக்கும் தவிப்பு அவனுக்கு இல்லையா..?
“அதெப்படிண்ணா..? டிரெயினிங் பீரியட் மூணுமாசம்ன்னு இருந்தா அதைக் கம்ப்ளீட் பண்ணித்தான ஆகனும்..?”
அவள் விவரமாக கேட்டு வைக்க.. இவ்வளவு விவரமாக இவள் இல்லையென்று யார் இங்கு அழுதது என்று கோபப்பட்டான் அவன்..
“ஏம்மா.. எங்க டிபார்ட்மெண்டப் பத்தி எனக்குத் தெரியுமா.. இல்ல உனக்குத் தெரியுமா..?”
சுரேஷிற்கும் அதைப் பற்றித் தெரியும் என்பது அவன் மனதில் உறுத்தினாலும்.. அந்த நொடியின் பற்ற வைக்கும் வேலையை மிக அற்புதமாக தொடர்ந்தான் அவன்..
“அவர்தாண்ணா அப்படிச் சொன்னார்..”
“அவன் சொல்லுவான்ம்மா.. ஏன் சொல்ல மாட்டான்..? கேக்கறது என்னோட கேணத் தங்கச்சியா இருந்தா.. அவன் கேப்பையில நெய் வடியுதுன்னு சரடு விடத்தான் செய்வான்..”
திவ்யாவை ‘அடக் கேணையே..’ என்று அவன் நினைத்துக் கொண்டிருப்பதை அறியாமல் அவள் கண் கலங்கினாள்..
“அழுகாதம்மா.. அட.. அழுகாதேன்னு சொல்றேனில்ல.. இந்த அண்ணன் இருக்கேம்மா தங்கச்சி..”
“நீங்க இருந்து என்ன பண்ண..? அவரில்ல என்கூட இருக்கனும்..?”
திவ்யா பட்டென்று சொல்லி விட அவன் முகம் மறுபடியும் கருத்துத் தொலைத்தது.. சுரேஷ் ‘மச்சக்காரன்..’ என்று மனதுக்குள் திட்டித் தீர்த்தான் சோமசுந்தரம்..
“அவன்தான் ஷில்பா கூட கோயம்புத்தூரில ஷில்பா பண்ணிக்கிட்டு இருக்கானே.. அம்புட்டுச் சீக்கிரமா மதுரைக்கு அவன் வந்துருவான்னா நினைக்கிற..?”
“ஷில்பா கூட ஷில்பாவா..?”
“அதை எப்புடிம்மா என் வாயால சொல்லுவேன்..?”
“வேற வழியில்லையேண்ணா.. வாயாலதான நீங்க சொல்லியாகனும்..?”
“ஷில்பான்னு ஒரு புள்ளயும் அவன்கூட கோயம்புத்தூருக்கு டிரெயினிங் போறேன் பேர்வழின்னு தொத்திக்கிட்டுப் போயிருக் கும்மா.. உன்கிட்ட இதைப்பத்தி சுரேஷ் சொல்லலையா..?”
ஏன் சொல்லவில்லை..? திவ்யாவின் மனதில் சந்தேகவித்து விழுந்தது.. அவன் டிரெயினிங் போவதாகத்தானே சொன்னான்.. கூட ஒரு ஷில்பா என்ற பச்சைக்கிளி அவன் தோளில் தொற்றிக் கொண்டு செல்வதை ஏன் அவன் சொல்லவில்லை..?
“உன் மூஞ்சியப் பாத்தாலே அவன் சொல்லலைன்னு தெரியுதே.. அவன் சொல்ல மாட்டான்ம்மா.. எப்புடிச் சொல்லுவான்..?”
பற்ற வைக்கும் வேலையைக் கச்சிதமாக செய்து முடித்து விட்டான் சோமசுந்தரம்.. திவ்யாவின் மனதில் சந்தேகம் என்னும் பெரு நெருப்பு பற்றிக் கொண்டது..
“பாத்து சூதானமா இருந்துக்கம்மா..”
சுரேஷ் சோமசுந்தரத்திற்கு விடுத்த எச்சரிக்கையை அப்படியே மனதில் வைத்து அத்தனை நாளாய் புகைந்து கொண்டிருந்தவன் திவ்யாவிடம் அதை இடம் மாற்றி விட்டான்..
“கோயம்புத்தூர் குளுகுளுன்ன ஊரும்மா.. பக்கத்தில கூப்பிடு தூரத்தில பிளாக்தண்டர்.. ஊட்டின்னு இருக்குதா.. இதுக ரெண்டும் வாரக்கடைசியில அங்கே சுற்றுலா போகுதுன்னு சொல்லிக் கிட்டாக.. பாவம்மா நீ.. அந்த வாரக் கடையில மதுரைக்கு ஒரு எட்டு வந்து போகனும்னு அவனுக்குத் தோணல பாத்தியா.. அவன் விழுந்தடிச்சுக்கிட்டு மதுரைக்கு ஓடிவர நீயென்ன ஷில்பாவாம்மா..?”
“நான் திவ்யாவாவே இருந்துட்டுப் போறேன்.. எந்த எடுபட்ட சிறுக்கியோட பேரும் எனக்கு வேணாம்..”
திவ்யா ரோசத்துடன் கூறிவிட்டு நடையைக் கட்டி விட்டாள்.. அந்த எடுபட்ட சிறுக்கியான ‘ஷில்பாவிற்கு திருமணமாகி.. ஆண் ஒன்று.. பெண் ஒன்று என இரண்டு குழந்தைகள் இருப்பதையும்.. அவளது கணவன் பிறந்த ஊர்.. அழகு மிகு கோயம்புத்தூர் என்பதையும்.. டிரெயினிங் பீரியட் ஏப்ரல் மாதத்தில் வந்திருப்பதால் அவள் குடும்பத்தோடு கோடை விடுமுறையைக் கழிக்க மாமியார் வீட்டில் முகாமிட்டிருக்கிறாள் என்பதையும் சுரேஷிம், அவளும் சென்றிருந்த டிரெயினிங்கில் வாரக் கடைசிகளிலும் பயிற்சி வகுப்பில் பங்கு கொண்டால் டிரெயினிங் பீரியட் குறையும் என்பதால் சுரேஷ் மட்டும் அந்த வகுப்புகளில் பங்கு பெற்று மூன்று மாதகால டிரெயினிங்கை.. இரண்டு மாதமாக குறைப்பதற்காக விடுமுறை நாள்களிலும் கோயம்புத்தூரிலேயே தங்கியிருந்தான் என்பதையும் சொல்லாமல் விட்டு விட்ட சோமசுந்தரமும் வெற்றிகரமாக அவன் வீட்டை நோக்கி நடையைக் கட்டினான்..’
அவன் சொல்ல மறந்த கதைகளைப் பற்றி அறியாத திவ்யா.. அவன் சொல்லி விட்டுப் போன கதைகளிலேயே மனம் உழல.. தூக்கமின்றி தவித்தாள்..
மூன்று மாத டிரெயினிங்கை இரண்டே மாதங்களில் முடித்து விட்டு அவளைக் காண ஓடி வந்த சுரேஷிடம் கண்கள் சிவக்க அவள் கேட்ட கேள்விகளில் கண் சிவந்தான் அவன்..