Chapter 24

“அவளா சொன்னாள்..?

இருக்காது..

அப்படி ஏதும் நடக்காது..

நம்பமுடியவில்லை.. இல்லை..”

நேரம் காலம் தெரியாமல் பழைய பாடல் வந்து சுரேஷின் நெஞ்சில் எதிர்ரொலித்தது.. அவன் நம்ப முடியாமல் திவ்யாவை வெறித்தான்..

“ஏண்டி..? என்னைவிட வசதியானவனா.. பெரிய ஆபிசர் உத்தியோகம் பார்க்கிறவனா.. எவனாவது கிடைச்சிட்டானா..? கழட்டி விடப் பார்க்கறியா..?”

அவன் கேட்ட கேள்வியை சகிக்க முடியாமல் முகத்தைச் சுளித்தாள்.. விளக்கெண்ணையைக் குடித்ததைப் போல அவள் முகம் போன போக்கில் சுரேஷின் மனம் திருப்தி அடைந்தது..

“அது உங்க புத்தி..” என்று அவள் வெடித்ததில் அவன் முகம் மாறியது..

“என் புத்தியா..?” குரல் மாற விசாரித்தான்.

“ஆமா.. உங்க புத்திதான்.. என் மாமன் மக அத்தனையையும் சொல்லிட்டா..”

“எத்தனையையும் சொல்லிட்டா..?”

“நீங்க அவ நாத்தனாவ கை பிடிக்கக் காத்திருக்கிற நாயகன்னு சொல்லிப்புட்டா..”

‘மறுபடியுமா..?’

சுரேஷீக்கு அலுப்பாக இருந்தது.. யாராவது ஏதாவது போட்டுக் கொடுத்துப் புண்ணியம் கட்டிக் கொள்வது.. திவ்யாவும் அதை நம்பிக் கொண்டு சுரேஷிடம் சண்டை போடுவது.. இப்படியே தான் வாழ்நாள் முழுவதும் கழியப் போகிறதா..?

“உன்னைத் திருத்தவே முடியாதாடி..?”

“முதல்ல நீங்க திருந்தப் பாருங்க..”

“எதில இருந்து திருந்தச் சொல்ற..? புட்டியவிட்டா..? இல்ல.. குட்டிய விட்டா..?”

சுரேஷின் நக்கலில் அவனையே இமைக்காமல் பார்த்து வைத்தாள் திவ்யா.. அவளின் கண்ணீர் கலந்த விழிகளைக் கண்டதும் வெறுத்து விலக முடியாமல் சிறைபட்டுத் தொலைத்தான் சுரேஷ்..

அது முள்விலங்காக இருந்தாலும் அவள் போட்ட விலங்கென் பதால் அறுத்து நொறுக்கி எறிய அவனால் முடியவில்லை..

“உன் மாமா மக என்னதான் சொன்னா..? எல்லாத்தையும் சொல்லு..” பொறுமையாக விசாரித்தான்..

“அவ நாத்தனாவைத்தான் நீங்க கட்டிக்கப் போறிங்களாம்.. அவளோட வீட்டுக்காரர் அடிச்சுச் சொன்னாராம்..”

“யாரை அடிச்சுச் சொன்னான்..? உன் மாமன் மகளையா..?”

இந்த நிலையிலும் நக்கல் பேச சுரேஷால் மட்டும்தான் முடியும் என்பதில் திவ்யா பல்லைக் கடித்துக் கண் கலங்கினாள்..

“இப்ப என்ன அலுவலுக்கு வைகை டேம கண்ணில தொறந்து விடற..? அழுகிறதா இருந்தா உன்னக் காதலிச்ச பாவத்துக்கு நானில்ல அழுகனும்..? ரோசக்காரண்டி.. உன்னப் பொண்ணுக் கேட்டு வர வேணாம்.. என்னைக் கட்டிக்க உனக்குப் பிடித்த மில்லேன்னு உன் வாயாலே நீ சொல்ல நான் கேட்ட பின்னாலயும் உன்கூட உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கேன் பாரு.. என்னைச் சொல்லனும்.. எப்பேற்பட்ட ரோசக்காரனையும் இந்தப் பாழாப் போன காதல் ஒரு வழி பண்ணிருது..”

சுரேஷின் வார்த்தைகளில் இருந்த உண்மை திவ்யாவைச் சுட்டது..

“ஆமாம்.. தெரியாமத்தான் கேட்கிறேன்.. நீ என்ன கல்யாணம் பண்ணிக்காம சன்யாசினியாப் போகப் போறியா..?”

“அப்படிப் போகச் சொல்கிறீங்களா..?”

“ஆக.. அதுவும் இல்லைன்னு அம்மணியோட வெடுக்குன்ன பதிலில் இருந்தே தெரியுது.. அப்படின்னா அம்மணி எவனுக்குக் கழுத்த நீட்டப் போறீக..? எவன் உங்களப் பொண்ணு பாக்க வரப்போறான்..?”

சுரேஷின் கேள்வியில் திவ்யா துடித்த துடிப்பில் அவளை முரட்டுத்தனமாக இழுத்து அணைத்துக் கொண்டான் சுரேஷ்.. அவனுடைய அனைப்பில் அவளது துடிப்பு அடங்கி அமைதியாவதை கோபத்துடன் உணர்ந்தவன் ஆவேசத்துடன் அவளது முகத்தை நிமிர்த்தி விழிகளுக்குள் உற்றுப் பார்த்தான்..

“முடியலைல்ல.. என்னைத் தவிர்த்து வேற ஒருத்தன் உன்னைப் பொண்ணுப் பாக்க வருவான்ங்கிற பேச்சக்கூடக் கேட்க உன்னால முடியலைல்ல..? என்னால மட்டும் எப்புடிடீ அது முடியும்..?”

“அவ சொன்னாளே..”

“சும்மா அவ சொன்னா.. ஆட்டுக்குட்டி சொன்னான்னு மருகிக்கிட்டு இருந்தா நாலு அப்பு அப்பிருவேன்.. என்னைப் பத்தி யாரு சொன்னாலும் காதைக் கொடுத்துக் கேட்டிருவியா..? ஒரு வார்த்தை உண்மை என்னன்னு என்கிட்டக் கேட்டுத் தெளிவு பண்ணிக்க மாட்டியா..?”

“அது.. அது.. வந்து..”

“ஏண்டி தடுமாறுகிற..? இந்த ரோசக்காரன் மட்டும் மாறலைடி.. என்னை முதன் முதலாப் பார்த்தப்ப நிமிர்வாப் பேசின அந்தத் திவ்யாவும் மாறித்தான் போயிட்டாடி.. சரசரன்னு பட்டாசா வெடிச்ச அந்த திவ்யா எங்கே..? இப்படி யார் என்ன சொன்னாலும் கேட்டுக்கிட்டு சந்தேகப்படற இந்த திவ்யா எங்கே..? இரண்டு திவ்யாவுக்கும் இடையில மலையளவு வித்தியாசம் இருக்கேடி..”

திவ்யா உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. விழியோரம் நீர் வழிய.. 

“அந்த திவ்யா தொலைஞ்சு போயிட்டா.. இப்ப இருக்கிற திவ்யா சுரேஷின் மேல பைத்தியமா இருக்கிறவ.. அவன் மேல யார் கண்ணுவைச்சாலும் தாங்கிக்க முடியாதவ..” என்றாள்..

சுரேஷின் நாடி நரம்பெங்கும் பொங்கிய உணர்வலைகள் திவ்யாவின் எழும்புகளை நொறுக்கி இறுக்கி அணைத்துக் கொள்ள வைத்தன..

‘இந்தக் காதலை எப்படி நான் விட்டுக் கொடுப்பேன்..?’

எங்கோ பிறந்து வளர்ந்த ஒருத்தி.. அவனுக்காக ஊன் உருகத் துடிக்கிறாள்.. அவனைப் பேச்சுக்காகக் கூட மற்றவர்கள் சொந்தம் கொண்டாடுவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை யெனில் கொடுத்து வைத்தது சுரேஷ் அல்லவா..?

“முட்டாள்..” பிரியத்துடன் அவள் நெற்றியில் முத்தமிட்டவன்.

“என் மனசில நீ மட்டும்தாண்டி.. கட்டிக்கிட்டா உன்னை மட்டும்தான் கட்டிக்குவேன்.. வாழ்ந்தா உன்னோடுதான் வாழ்வேன்.. இதை ஏண்டி புரிஞ்சுக்க மாட்டேங்கிற..?”

“அவ உங்க அத்தை மகளாச்சே..”

“இருக்கட்டுமே.. அந்த சொத்தை மகளத்தான் கட்டிக்க முடியாதுன்னு நான் சொல்லிட்டேனே..”

“இப்ப மனசு மாறிட்டிங்களாம்.. வர மாட்டிங்கன்னு நினைச்ச உங்க அத்தை மகன் கல்யாணத்துக்கு முத ஆளா வந்து நின்னீங்களாம்.. எல்லாத்தையும் எடுத்துச் செஞ்சீங்களாம்..”

“அந்தக் கொடுமையை ஏண்டி கேட்கிற.. அவன் வீட்டுக் கல்யாணத்துக்கா நான் வந்தேன்..? பராக்குப் பார்த்துக்கிட்டுப் போனவன் கண்ணில பஸ்ஸில இருந்து இறங்கிக்கிட்டிருந்த நீ தென்பட்ட.. உன்னை ஓரம் கட்ட.. நான் அவன ஓரம் கட்டினேன்..”

“என் காதுபட உன் தங்கச்சியக் கட்டிக்கக் கசக்குமா என்னன்னு நீங்க சொல்லலை..? அந்த நினைப்பிலதான் நான் என்மாமன்மக பேசின பேச்ச நம்பினேன்..”

“போடி கூறுகெட்டவளே..! உன் மாமன் மகளக் கட்டிக் கிட்டவனுக்கு நீ தங்கச்சி முறைதான ஆகனும்..? அந்த முறையிலதான் சொன்னேன்.. உன்னைக் கட்டிக்க எனக்கு கசக்காதுடி.. இனிக்கும்.. என்னைக் கட்டிக்கத்தான் உனக்குக் கசக்குது..”

சுரேஷின் குத்தலான பேச்சில் முகம் வாடினாள் திவ்யா..

“இன்னொன்னும் சொன்னீங்களே..”

“எந்த ஒன்னச் சொன்னேன்..?”

“அன்னைக்கு கல்யாண வீட்டில பூமாலை கிடந்துச்சே.. அத நீ போட்டா என்ன.. உன் தங்கச்சி போட்டாஎன்னன்னு சொன்னதாச் சொன்னீங்களே.. அந்தத் தங்கச்சிய நீ முந்திட்டேன்னு சொன்னீங்களே..”

“யாருடி இவ.. என் கழுத்தில அவன் தங்கச்சிய விட்டு மாலையப் போடச் சொல்லப் போறேன்னு அவன் சொல்லி வைச்சான்.. உன் நினைப்பில.. அத நீ போட்டா என்ன.. உன் தங்கச்சி போட்டா என்னன்னு சொல்லி வைச்சேன்.. பயபுள்ள.. பறந்தடிச்சுக்கிட்டு ஓடிட்டான்.. நீ வந்து என் நினைப்ப போல மாலையப் போட்டுட்ட.. கல்யாணம்தான் முடிஞ்சிருச்சே.. இனி என்னத்துக்கு வெட்டியா பொண்ணுக்கேட்டு.. நாள் குறிச்சு.. தாலிகட்டின்னு பொழுதக் கழிக்கணும்.. நேரா..”

“நேரா..?”

“முதலிரவக் கொண்டாடிட்டா என்ன..?”

சுரேஷின் ஆலோசனையில் முகம் சிவக்க அவன் மார்பில் செல்லமாக குத்தினாள் திவ்யா..

“உங்க புத்தி இருக்கே.. அது இப்படித்தான் போகும்..”

மார்பில் குத்திய அவளின் கையைப் பிடித்து முத்தம் கொடுத்தவன் உரக்கச் சிரித்தான்.. கூடச் சேர்ந்து சிரித்தாள் திவ்யா.. இனைந்து ஒலித்த அந்தச் சிரிப்பில் அவர்களுக்கு இடையில் மலைபோல நின்ற மனத்தாங்கல் மறைந்து பனி போல ஓடிவிட்டது..

வாசலுக்கும்.. வீட்டுக்குமாக பரபரப்புடன் நடந்து கொண்டிருந்தாள் பொன்னுரங்கம்.. அவள் முகம் பூரித்திருந்தது.. அவளுடைய இளைய மகன் சுரேஷ்.. அவனைப் போலப் படித்து.. கவர்ன்மெண்ட் வேலை பார்க்கும் அழகான பெண்ணை சீர் வரிசைகளுடன் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறான்.. அன்று காலையில் மதுரை மாநகரில் திருமண மண்டபத்தில் 

ஊர் மெச்ச நடந்த கல்யாணத்திற்கு வந்திருந்தவர்கள்..

“பரவாயில்லையே பொன்னுரங்கம்.. உன் மகன் சிலுப்பின சிலுப்பலுக்கு ஊரில இல்லாத 

ரதியக் கட்டிக்கப் போறாப்புலயான்னு பேசிக்குவோம்.. இப்ப என்னடான்னா.. நாங்க பேசிக்கிட்டதப் போல ரதியத்தான் கட்டியிருக்காப்புல..” என்று ஒன்று போலச் சொல்லிச் சென்றதில் மகிழ்ந்து போயிருந்தாள்..

கீர்த்தனாவுக்கு சந்தோசம்.. சுமதிக்கு மட்டும் அவளை விடப் படித்த மருமகள் குடும்பத்திற்குள் இளைய மருமகளாக நுழைந்து விட்டதில் சின்னச் சடவு இருந்தது..

நல்ல நேரத்தில் வலது காலை எடுத்து வைத்து கிரகப்பிரவேசம் செய்து விட்டாள் திவ்யா… 

பெண்ணும் மாப்பிள்ளையும் பால், பழம் சாப்பிட்டு ஓய்வெடுத்தார்கள்.. அன்றைய இரவு அவர்களுக்கான முதலிரவு.. அறைக்குள் நுழைந்த திவ்யா.. சுரேஷைக் காணாமல் திகைத்த போது..

“நான் ஏரிக்கரை மேலிருந்து..

எட்டுதிசை பார்த்திருந்து..

ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன் காணல..”

என்ற பாட்டுச் சப்தம் கட்டிலின் அடியிலிருந்து கேட்டது.. ஆனந்தத்துடன் குனிந்து பார்த்தாள்.. 

அவளை உள்ளே இழுத்துக் கொண்ட சுரேஷ்.. அவள் காதில்..

“இப்படி முதலிரவு கொண்டாடினா திரில்லா இருக்கும்டி..” என்று முணுமுணுத்தான்..

“உங்க புத்தி.. இப்படித்தான் போகும்..” தலையில் அடித்துக் கொண்டாள் திவ்யா..

பரந்த அந்த வீட்டடி மனையைக் கையில் குழந்தையுடன் சுற்றிப் பார்த்த திவ்யா… 

அருகிலிருந்த மகளிர் கல்லூரியைக் கண்டதும் சுரேஷை முறைத்தாள்..

“எதுக்குடி முறைக்கிற..? என்னைப் போல இல்லாம என் பையனாவது எடுத்த எடுப்பிலேயே கவிழ்ந்திராம.. நின்னு.. நிதானிச்சு.. ஆயிரக் கணக்கான பொண்ணுகள சைட் அடிச்சு.. அதில ஒருத்திய தேத்தட்டுமேன்னு தொலை நோக்கு பார்வையில தாண்டி லேடிஸ் காலேஜ் பக்கமா வீட்டடி மனைய வாங்கிப் போட்டிருக்கேன்.. அது புரியாம இவ கத்தறா.. பாருடா உன் அம்மாவ..”

சுரேஷின் மகனும் பார்த்தான்.. அவனுடைய அம்மாவை இல்லை.. லேடிஸ் காலேஜ் வாசலை.. திவ்யா பல்லைக் கடித்தாள்..

“அப்படியே அப்பன் புத்தி.. மன்மதனுக்கு வாரிசு.. வந்தாச்சு..”

– முற்றும் –

0

Subtotal